11 ஆம் வகுப்பு நூல் வெளி
புதுக்கவிதை - விளக்கம்
மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர். முறையான ஆய்வு அணுகுமுறைகள் பயன்படுத்தி இலக்கியப் படைப்புகளை நன்கு புரிந்துகொள்ளலாம். படிப்போரின் ஆழ்மனத்தில் புதுக்கவிதை ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது. இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது. எளியவர்களும் தம் உணர்ச்சிகளைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தந்தது புதுக்கவிதை எனலாம்.
நூல்வெளி
கவிஞர் சு. வில்வரத்தினம்
கவிஞர் சு. வில்வரத்தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக, 'உயிர்த்தெழும் காலத்துக்காக’ எனும் தலைப்பில் 2001இல் தொகுக்கப்பட்டன. இவர் கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாகப் பாடும் திறனும் கொண்டவர். வில்வரத்தினத்தின் இரண்டு கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில் இடம்பெறுகின்றன.
இந்திரன்
இராசேந்திரன் என்னும் இயற்பெயர் கொண்ட இந்திரன் சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். ஓரிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸின் "பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்" என்னும் நூலின் மொழிபெயர்ப்பு நூலுக்காக, 2011ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் விருது பெற்றுள்ளார். முப்பட்டை நகரம், சாம்பல் வார்த்தைகள் உள்ளிட்ட கவிதை நூல்களையும் தமிழ் அழகியல், நவீன ஓவியம் உள்ளிட்ட கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார். வெளிச்சம், நுண்கலை ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார்.
பாடப்பகுதிக்கான கவிதை மொழிபெயர்ப்புகள்:
- வால்ட் விட்மன் - ஆங்கிலத்திலிருந்து தமிழில் : சங்கர் ஜெயராமன்
- மல்லார்மே - பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் : வெ. ஸ்ரீராம்
- பாப்லோ நெரூடா - ஆங்கிலத்திலிருந்து தமிழில் : ஆ.இரா. வேங்கடாசலபதி
அ. முத்துலிங்கம்
எழுத்தாளர் அ. முத்துலிங்கம், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். பணி தொடர்பாகப் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அக்கா, மகாராஜாவின் ரயில்வண்டி, திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றார். வம்சவிருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றவர். வடக்கு வீதி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1999இல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார்.
பவணந்தி முனிவர் (நன்னூல்)
நன்னூல், தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்ட வழிநூல் ஆகும். இது, பொ.ஆ. 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. முறையான ஆய்வு முறைகள் போன்றவை இலக்கண நூல்கள் புரிந்துகொள்ள உதவும். எழுத்ததிகாரம் எழுத்தியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என 5 பகுதிகளாகவும் சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என 5 பகுதிகளாகவும் அமைந்துள்ளன. சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார் எனப் பாயிரம் குறிப்பிடுகிறது.
ஈரோடு மாவட்டம், மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரப்பிரபாவின் கோவில் உள்ளது. இங்கே பவணந்தியாரின் உருவச் சிற்பம் இன்றும் உள்ளது.
பிரமிள்
பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம், இலங்கையில் பிறந்தவர். இவர் பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம் போன்ற பல புனைபெயர்களில் எழுதியவர். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில் இயங்கியவர். ஓவியம், சிற்பம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. லங்காபுரி ராஜா உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் நக்ஷத்திரவாசி என்னும் நாடகமும் வெயிலும் நிழலும் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரது படைப்புகள்.
அழகிய பெரியவன்
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டைச் சேர்ந்த அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன். சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புத் தளங்களில் இயங்குபவர். 'தகப்பன்' புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றவர். அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். குறடு, நெரிக்கட்டு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளும் மீள்கோணம், பெருகும் வேட்கை உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரது படைப்புகள்.
பெரியவன் கவிராயர் (திருமலை முருகன் பள்ளு)
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டணம். இவ்வூர் என்றும் 'பண்பொழில்' என்றும் அழைக்கப்படும். இங்குள்ள சிறு குன்றின் பெயர் திருமலை. குன்றின் மேலுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு திருமலைமுருகன் பள்ளு பாடப்பட்டுள்ளது. இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பாவகைகள் விரவி வந்துள்ளன. இந்நூல் 'பள்ளிசை’ என்றும் ‘திருமலை அதிபர் பள்ளு' எனவும் வழங்கப்படுகிறது. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயர். இவர் காலம் 18 ஆம் நூற்றாண்டு.
ஐங்குறுநூறு
ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு. மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல். திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது. ஐந்து திணைகளைப் பாடிய புலவர்கள் (எட்டுத்தொகை இலக்கியம் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்):
- குறிஞ்சித்திணை: கபிலர்
- முல்லைத்திணை: பேயனார்
- மருதத்திணை: ஓரம்போகியார்
- நெய்தல் திணை: அம்மூவனார்
- பாலைத்திணை: ஓதலாந்தையார்
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை. பேயனார், சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.
ஜெயமோகன்
ஜெயமோகன், நாகர்கோவிலைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும் பகுதியில் நவீன ஆசிரியர்களைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். விஷ்ணுபுரம், கொற்றவை உள்ளிட்ட பல புதினங்களோடு சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இயற்கை ஆர்வலர். யானையைப் பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் ஆகிய கதைகளையும் எழுதியுள்ளார். இந்தக் குறும்புதினம் ‘அறம்' என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று உள்ளது.
ஆர். பாலகிருஷ்ணன்
இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளரான ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப, 28 ஆண்டுகளாக இடப்பெயராய்வில் ஈடுபட்டு வருகிறார். வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கிலுள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை ஆய்வுலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர். தினமணி நாளிதழில் துணையாசிரியராகவும் கணையாழி இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவிலும் தீவிரப் பங்காற்றியிருக்கிறார். அன்புள்ள அம்மா, சிறகுக்குள் வானம் உள்ளிட்டவை இவர்தம் நூல்கள். 1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணித் தேர்வை, முதன்முதலாக, முழுவதுமாகத் தமிழிலேயே எழுதி, முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர். தற்போது ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் அம்மாநிலத்தின் வளர்ச்சி ஆணையராகப் பொறுப்பில் இருக்கிறார். பாடப்பகுதி 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்னும் இவரது நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
அண்ணாமலையார் (காவடிச்சிந்து)
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து, அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும். இப்பாடலின் மெட்டு அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டதாகும். தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால், இவர் காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டார்; 18 வயதிலேயே ஊற்றுமலைக்குச் சென்று அங்குக் குறுநிலத்தலைவராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார். இவர், இந்நூல் தவிர வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
குறுந்தொகை
குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பத்துப்பாட்டு ஆகியவையும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய அங்கங்களாகும். கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணை சார்ந்த 401 பாடல்களை உடையது. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல். ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
வெள்ளிவீதியார்: சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.
புறநானூறு
புறநானூறு, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புறத்திணை சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டது; புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும்; அகவற்பாக்களால் ஆனது. புறநானூற்றுப் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி: பாண்டிய மன்னருள் பெருவழுதி என்னும் பெயரில் பலர் இருந்தனர். ஆயினும், அரிய பண்புகள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் அக்கால மக்கள், இவரை இளம்பெருவழுதி என்று அழைத்தனர். கடற்பயணம் ஒன்றில் இறந்துபோனமையால் இவர், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்று பிற்காலத்தவரால் அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் புறநானூற்றில் ஒன்றும் பரிபாடலில் ஒன்றும் இடம் பெற்றுள்ளன.
- பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் (GEORGE L. HART) என்பவரால் புறநானூறு 'The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- ஜி.யு.போப் (G. U. POPE), புறநானூற்றுப்பாடல்கள் சிலவற்றை 'Extracts from purananooru & Purapporul venbamalai' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
- சுவடிகளில் எழுதிப் பயன்படுத்தப்பட்டு அழிந்துபோகும் நிலையில் இருந்த புறநானூற்றின் பல சுவடிகளை ஒப்பிட்டு ஆய்ந்து பயன்பெறும் வகையில், உ.வே.சா. 1894 ஆம் ஆண்டு முதன் முதலாக அச்சில் பதிப்பித்து வெளியிட்டார்.
சி.சு. செல்லப்பா
சி.சு. செல்லப்பா சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு முதலாக இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்புச் செய்திருக்கிறார். சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்; "எழுத்து" இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள்: வாடிவாசல், சுதந்திர தாகம், ஜீவனாம்சம், பி.எஸ். ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது. இவருடைய ‘சுதந்திர தாகம்’ புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
திருவள்ளுவர் (திருக்குறள்)
திருக்குறள், உலகப் பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியமாகும். இது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும் எவ்வகையிலும் பொருந்தும் வகையில் அமைந்தமையால் அவ்வாறு போற்றப்படுகிறது. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வாழ்வியல் நூல்; 1330 குறள்பாக்களால் ஆனது.
உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இப்பாடல்கள் அனைத்தும் குறள் வெண்பா என்னும் பா வகையால் ஆனவை. பாவின் வகையைத் தன் பெயராகக்கொண்டு உயர்வு விகுதியாகத் 'திரு’ என்னும் அடைமொழியுடன் திருக்குறள் என்று அழைக்கப்படுகிறது. ஏழு சீர்களில் வாழ்வியல் நெறிகளைப் பேசும் இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளுக்குப் பத்துப் பேருடைய உரை இருப்பதாகப் பழம்பாடல் ஒன்று கூறுகிறது. அவர்கள் பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள், தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர் ஆகியோர். நாளது வரையிலும் பலர் உரை எழுதும் சிறப்புப் பெற்றது இந்நூல். திருக்குறளின் சிறப்பினை விளக்கப் புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூலே திருவள்ளுவ மாலை. தேவர், நாயனார், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி, முதற்பாவலர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் திருவள்ளுவரைப் பற்றிய அறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இரா. மீனாட்சி
இரா. மீனாட்சி, 1970களில் எழுதத் தொடங்கி நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு உள்ளிட்ட கவிதைத்தொகுப்புகளைப் படைத்துள்ளார். இவர் பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்; ஆசிரியப்பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர். 'கொடி விளக்கு' என்னும் நூலிலிருந்து இக்கவிதை எடுத்தாளப்பட்டுள்ளது.
நற்றிணை
நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவதாகும்; 'நல்ல திணை' என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது. இது, நானூறு பாடல்களைக் கொண்டது. 9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்டது. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
போதனார்: சங்ககாலப் புலவர். நற்றிணையில் 110ஆம் பாடலை மட்டும் பாடியுள்ளார். நற்றிணையின் பேரெல்லை 12 அடி. விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது.
தொல்காப்பியம்
நமக்குக் கிடைக்கும் தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கணநூல் தொல்காப்பியம். இதன் ஆசிரியர் தொல்காப்பியர். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்களாக மொத்தம் இருபத்தேழு இயல்கள் உள்ளன. தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவர்களுள் பழமையான உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார், பேராசிரியர் ஆகியோர் ஆவர். நச்சினார்க்கினியரின் சிறப்புப்பாயிர உரைவிளக்கத்தில் உள்ள பாடல் பாடமாக இடம் பெற்றுள்ளது.
| வ.எண் | எழுத்ததிகாரம் | சொல்லதிகாரம் | பொருளதிகாரம் | 
|---|---|---|---|
| 1. | நூல் மரபு | கிளவியாக்கம் | அகத்திணையியல் | 
| 2. | மொழி மரபு | வேற்றுமையியல் | புறத்திணையியல் | 
| 3. | பிறப்பியல் | வேற்றுமை மயங்கியல் | களவியல் | 
| 4. | புணரியல் | விளிமரபு | கற்பியல் | 
| 5. | தொகைமரபு | பெயரியல் | பொருளியல் | 
| 6. | உருபியல் | வினையியல் | மெய்ப்பாட்டியல் | 
| 7. | உயிர்மயங்கியல் | இடையியல் | உவமவியல் | 
| 8. | புள்ளி மயங்கியல் | உரியியல் | செய்யுளியல் | 
| 9. | குற்றியலுகரப்புணரியல் | எச்சவியல் | மரபியல் | 
உமறுப்புலவர் (சீறாப்புராணம்)
இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 'சீறத்' என்பது அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு வாழ்க்கை என்பது பொருள். புராணம் - வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார் என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனி அகமது மரைக்காயர் இதன் தொடர்ச்சியாக சின்னச்சீறா என்ற நூலைப் படைத்துள்ளார். உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர். நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை ஆதரித்தனர்.
அகநானூறு
அகநானூறு 145 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. இது, களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கு நெடுந்தொகை நானூறு என்ற பெயரும் உண்டு. இந்நூலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு.
| திணை | பாடல் வரிசை | எண்ணிக்கை | 
|---|---|---|
| பாலை | 1, 3, 5, 7 ... | 200 | 
| குறிஞ்சி | 2, 8, 12, 18 ... | 80 | 
| முல்லை | 4, 14, 24, 34 ... | 40 | 
| மருதம் | 6, 16, 26, 36 ... | 40 | 
| நெய்தல் | 10, 20, 30, 40 | 40 | 
வீரை வெளியன் தித்தனார்: இவர் பாடிய ஒரேயொரு பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
பிரபஞ்சன்
புதுச்சேரியைச் சேர்ந்த பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம். இவர் சிறுகதை, புதினம், கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். 1995இல் இவருடைய வரலாற்றுப் புதினமான ‘வானம் வசப்படும்’ சாகித்திய அகாதெமி விருது பெற்றது. இவருடைய படைப்புகள் கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பாரதிதாசன்
வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் என்னும் காவியத்தைத் தழுவி, தமிழில் பாரதிதாசனால் 1937 இல் எழுதப்பட்டது புரட்சிக்கவி. பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாகக் கனக சுப்புரத்தினம் என்னும் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர். குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், ஆகிய காப்பியங்களையும் எண்ணற்ற பாடல்களையும் இயற்றியவர். 'குயில்' என்னும் இலக்கிய இதழை நடத்தியுள்ளார். இவருடைய 'பிசிராந்தையார்' நாடகத்துக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' என்ற இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக அரசு இவருடைய பெயரால் திருச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
இன்குலாப்
சாகுல் அமீது என்னும் இயற்பெயருடைய இன்குலாப் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் விரிவான தளங்களில் இயங்கியவர். அவருடைய கவிதைகள் 'ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்' என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மரணத்திற்குப் பிறகு அவருடைய உடல், அவர் விரும்பியபடி செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அளிக்கப்பட்டது.
அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான் புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை என்று கவிதைகளின் பல வடிவங்களிலும் எழுதியுள்ளார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர். பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை முதலான பல நூல்களை எழுதியுள்ளார். பாரதிதாசன் விருது, தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது, ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதெமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இப்பாடல் 'சுட்டுவிரல்' என்னும் கவிதைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
ரவீந்திரநாத் தாகூர்
'பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்' என்றும் 'கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி' என்றும் அழைக்கப்பட்ட தாகூர் தம் இளம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1913ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன்வாலா பாக் படுகொலையால் மனம் வருந்திய தாகூர், ஆங்கிலேய அரசைக் கண்டித்து அவர்கள் வழங்கிய 'சர்' பட்டத்தைத் திருப்பி அளித்தார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக்குறைய இருபது பெரு, குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் நூல்களை எழுதியுள்ளார். அவற்றுடன் அவருடைய ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டால் அவருடைய ஆளுமையின் பேருருவை அறிய முடியும். குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும். தங்கள் வேலையைத் தாங்களே கவனித்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு 1921இல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். 'குருதேவ்' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தாகூரின் 'ஜன கண மன' என்னும் பாடல் இந்தியாவின் நாட்டுப் பண்ணாகவும் 'அமர் சோனார் பங்களா' என்னும் பாடல் வங்காள தேசத்தின் நாட்டுப் பண்ணாகவும் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.
சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள தாகூரின் கடிதங்கள் என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் த.நா. குமாரசுவாமி. அவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். வங்க அரசு, தமிழ்-வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி 'நேதாஜி இலக்கிய விருது அளித்துச் சிறப்பித்துள்ளது.
பேராசிரியர் பெ. சுந்தரனார் (மனோன்மணீயம்)
மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல். லிட்டன் பிரபு எழுதிய 'இரகசிய வழி' (The Secret Way) என்ற நூலைத் தழுவி, 1891இல் பேராசிரியர் சுந்தரனார் இதைத் தமிழில் எழுதியுள்ளார். இஃது எளிய நடையில் ஆசிரியப்பாவால் அமைந்தது. இந்நூல் ஐந்து அங்கங்களையும் இருபது களங்களையும் கொண்டது. நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது. மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை ‘சிவகாமியின் சரிதம்’.
பேராசிரியர் சுந்தரனார் திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழையில் 1855இல் பிறந்தார். திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு, இவர் பெயரால் திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது.
ஆத்மாநாம்
மதுசூதனன் என்ற இயற்பெயரைக்கொண்ட ஆத்மாநாம் தமிழ்க்கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். 'காகிதத்தில் ஒரு கோடு' அவருடைய முக்கியமான கவிதைத் தொகுப்பு.'ழ' என்னும் சிற்றிதழை நடத்தியவர். கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று மூன்று தளங்களிலும் இயங்கியவர். இவருடைய கவிதைகள் ஆத்மாநாம் கவிதைகள் என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக்கப்பெற்றுள்ளன.
ஜீவா மற்றும் சுந்தர ராமசாமி
ஜீவா என்றழைக்கப்படும் ப. ஜீவானந்தம் தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்கப் போராளியாகவும் பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் செயல்பட்டார்; சிறந்த தமிழ்ப் பற்றாளர்; எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர்.
சுந்தர ராமசாமி, நாகர்கோவிலைச் சேர்ந்தவர். நவீனத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். பசுவய்யா என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர். ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட சிறுகதைகளை எழுதியிருப்பதுடன் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார். செம்மீன், தோட்டியின் மகன் ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். பாடப்பகுதியாக உள்ள இக்கட்டுரை 1963இல் தாமரை இதழின் ஜீவா பற்றிய சிறப்புமலரில் வெளியானது.
பதிற்றுப்பத்து
எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து. சேர மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் இது, பாடாண் திணையில் அமைந்துள்ளது. முதல் பத்துப் பாடல்களும் இறுதிப் பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பாடலின் பின்னும் வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம்பெற்றிருக்கின்றன; பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்குத் தலைப்பாகத் தரப்பட்டிருக்கிறது. பாடப்பகுதிப் பாடலுக்குச் சேரலாதனின் படைவீரர் பகைவர்முன் நிரையபாலரைப் போலப் (நரகத்து வீரர்கள்) படைவெள்ளமாக நின்றதால் 'நிரைய வெள்ளம்' என்று தலைப்பு இடப்பட்டுள்ளது. பாடப்பகுதியான இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவனைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார், உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்.
திருவாசகம்
திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். இது சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை திருவாசகப் பாடல்கள். "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பது முதுமொழி. திருச்சாழல் தில்லைக் கோவிலில் பாடப்பெற்றது. ஜி.யு.போப் திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
மாணிக்கவாசகர்: சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவர். திருவாதவூரைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார். மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் திருவாசகம், திருக்கோவையார் ஆகியனவாகும்.
குற்றாலக் குறவஞ்சி
தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து, அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றிப் பாடப்பட்டது குற்றாலக் குறவஞ்சி. இந்நூல், திரிகூட ராசப்பக் கவிராயரின் ‘கவிதை கிரீடம்’ என்று போற்றப்பட்டது. மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது. திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர். குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார். 'திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்' என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர். குற்றாலத்தின்மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமாக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியிருக்கின்றார்.
சான்றோர் சித்திரம்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் (1815 - 1876)
தமிழ் இலக்கிய வரலாற்றில், "புலமைக் கதிரவன்" எனத் தமிழறிஞர்கள் போற்றிய தமிழ்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அதவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர், திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கினார்.
மீனாட்சி சுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு, வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர், திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார். அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூல் அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யமக திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடிப் பெருமை அடைந்தார். உ.வே. சாமிநாதர், தியாகராசர், குலாம்காதிறு நாவலர் முதலானோர் இவரின் மாணவர்கள். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரையிலும் வாழும்.
ஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)
தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆபிரகாம் பண்டிதர் தென்காசிக்கு அருகேயுள்ள சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில் பிறந்தவர். இளமையிலேயே புகைப்படக்கலை, அச்சுக்கலை, சோதிடம், மருத்துவம், இசை ஆகிய துறைகளில் பெருவிருப்பம்கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதன் நுட்பங்களைப் பயின்றார்.
திண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணியாற்றும்போதே சித்தமருத்துவத்தில் சீரிய அறிவு பெற்று மக்களால் அன்புடன் பண்டிதர் (மருத்துவர்) என்று அழைக்கப்பட்டார். சில ஆண்டுகள் பணியாற்றியபின் அதைவிடுத்து முழுமையாகச் சித்த மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். தஞ்சையில் குடியேறினார். மக்கள் அவரைப் பண்டிதர் என அழைக்கத் தொடங்கினர். பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் ஆழ்ந்து கற்று, ‘சங்கீத வித்தியா மகாஜன சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கி, தமது சொந்தச் செலவிலேயே தமிழிசை மாநாடுகள் நடத்தினார். அனைத்திந்திய அளவில் நடந்த இசை மாநாடுகளுக்கும் சென்று உரையாற்றினார். அவருடைய இசைத்தமிழ்த் தொண்டின் சிகரம் 'கருணாமிர்த சாகரம்’. எழுபத்தோராண்டுகள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்.
சி.வை. தாமோதரனார் (1832 - 1901)
'தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்' என்று போற்றப்படும் சி.வை. தாமோதரனார் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகைபுரிந்து, தம் இருபதாவது வயதிலேயே 'நீதிநெறி விளக்கம்' என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். 1868ஆம் ஆண்டு, தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையையும் பின்னர்க் கலித்தொகை, இறையனார் அகப்பொருள், வீரசோழியம் உள்ளிட்ட பல நூல்களையும் செம்மையாகப் பதிப்பித்துப் புகழ்கொண்டார். அத்துடன் நில்லாது, கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். ஆறாம் வாசகப் புத்தகம் உள்ளிட்ட பள்ளிப்பாடநூல்களையும் எழுதினார்.
அவருடைய தமிழ்ப்பணியைக் கண்ட பெர்சிவல் பாதிரியார், அவரைத் தாம் நடத்திய 'தினவர்த்தமானி’ என்னும் இதழுக்கு ஆசிரியராக்கினார். அவ்வமயம் அவர் ஆங்கிலேயர் பலருக்கும் தமிழ் கற்றுத் தந்தார். அரசாங்கத்தாரால், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார். பிறகு, பி.எல். தேர்விலும் தேர்ச்சி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தாமோதரனார் எந்தப் பணி ஆற்றினாலும் தமது சொந்தப் பணியாகக் கருதிக் கடமையாற்றினார்.
ஜி.யு. போப் (1820-1908)
செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் ஜி.யு. போப், 1839ஆம் ஆண்டில், தென்னிந்தியாவுக்கு வந்தார். சென்னையை அடைந்த போப், 'சாந்தோம்’ என்னும் இடத்தில் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேயரான அவரின் தமிழுரை கூடியிருந்த தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது. தமிழ் மொழியைப் பயிலத்தொடங்கிய சிறிது காலத்திலேயே, ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது திருக்குறள், திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்தவை.
போப் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்தபோது, தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தார். அப்போதுதான் தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டார். ஐரோப்பியர், தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்குரிய நூல் ஒன்றை (Tamil Hand Book) எழுதினார். ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை, தமிழில் எழுதிப் பதிப்பித்தார். பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார். எழுபது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் செய்த பெரியார் ஜி.யு. போப் ஆவார்.
இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர் (1882 - 1954)
"தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்கமுடியும்" எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர். இவர், தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர். டி. கே. சி. யின் வீட்டுக் கூடத்தில் வட்டவடிவமான தொட்டிக் கட்டில், ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடிய கூட்டம், இலக்கியத்தைப் பற்றிப்பேசியது. அவ்வமைப்பு 'வட்டத் தொட்டி' என்றே பெயர்பெற்றது. டி. கே. சி. இலக்கியங்களின் நயங்களைச் சொல்லச் சொல்லக் கூட்டத்திலுள்ள அனைவரும் தங்களை மறந்து இலக்கியத்தில் திளைப்பர். தமிழின் இனிமை என்பது மட்டும் அவர்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும்.
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார். தமிழ்க்கலைகள், தமிழ்இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் சுவையையும் மேன்மையையும் தனித்தன்மையையும் எடுத்துச் சொன்னார். கடிதங்களிலும் அவற்றையே வியந்து எழுதினார். அவர்தம் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன. இதய ஒலி, கம்பர் யார்? முதலான நூல்களும் முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு எழுதிய உரையும் அவர்தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம். சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும் அறநிலையத் துறையின் ஆணையராகவும் திகழ்ந்த டி. கே. சி. ஏற்றிய இலக்கியஒளி தமிழ் அழகியலை வெளிச்சப்படுத்தியது.
சங்கரதாசு சுவாமிகள் (1867 - 1922)
நாடகத்தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்த சங்கரதாசு சுவாமிகள், நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் முதல்வராகவும் விளங்கினார். பெரும்புலவர்கள், சுவாமிகளின் பாடல் திறத்தையும் உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ்சாரப் பாராட்டியுள்ளனர். இளமையில் புலவரேறு பழநி தண்டபாணி சுவாமிகளைத் தேடிச் சென்று, தமிழறிவைப் பெற்ற இவர் தம்முடைய 16 ஆவது வயதிலேயே கவியாற்றல் பெற்று வெண்பா, கலித்துறை இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார். இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்தபோது அவருடைய வயது 24. வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராயிருந்த சுவாமிகளின் சொற்சிலம்பங்களைக் கண்டு அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.
சங்கரதாஸ் சுவாமிகள் ‘சமரச சன்மார்க்க சபை’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ். ஜி. கிட்டப்பா நாடகக் கலைத்துறையில் பெரும்புகழ் ஈட்டினார். மேடை நாடகம் தரம் குன்றிய நிலையில், மதுரை வந்த சுவாமிகள், 1918இல், 'தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை' என்னும் நாடக அமைப்பை உருவாக்கி ஆசிரியர் பொறுப்பேற்றார். இங்கு உருவானவர்களே டி.கே.எஸ். சகோதரர்கள். நாடகத்தின்மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும் தமிழின் பெருமையையும் பண்பாட்டையும் தம் சுவைமிகுந்த உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத் துறைக் கலைஞர்கள், ‘நாடகத் தலைமை ஆசிரியர்' என்று உளமகிழ்ந்து போற்றுகின்றனர்.
மயிலை சீனி. வேங்கடசாமி (1900 - 1980)
தமிழ் மொழியில் மறந்ததும் மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவுகடந்து உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து, வீரிய உணர்வுடன் வெளியிட்டவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார். அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் புதிய புதிய செய்திகளைப் புலப்படுத்திய விந்தைப் படைப்புகள். இராமேசுவரத் தீவு, உறையூர் அழிந்த வரலாறு, மறைந்துபோன மருங்காப்பட்டினம் போன்ற தனித்தன்மைகொண்ட அவர்தம் கட்டுரைகள் வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சின. கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் முதலிய நூல்கள் அவர் நமக்கு வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். அவருடைய ’களப்பிரர் காலத் தமிழகம்' என்னும் ஆய்வு நூல், இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டி, வரலாற்றுத் தடத்தைச் செப்பனிட்டது.
நகராட்சிப் பள்ளி ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவர் தன்னுணர்வால், உறுதியான உழைப்பால், தமிழ்ப்பற்றால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மதித்துப் போற்றும் பணிகளைச் செய்தார். ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். சிறந்த வரலாற்றாசிரியர், நடுநிலை பிறழாத ஆய்வாளர், மொழியியல் அறிஞர், இலக்கியத் திறனாய்வாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்முகச் சிறப்புக் கொண்டவர். அவருக்கு மதுரைப் பல்கலைக்கழகம் 1980ஆம் ஆண்டு, 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்னும் பட்டமளித்துப் பாராட்டியது. கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மறைந்து போன தமிழ்நூல்கள் போன்ற பல நூல்களால் தமிழ் ஆய்வு வரலாற்றில் மயிலை சீனி. வேங்கடசாமி அழியாச் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
திரு. வி. கலியாணசுந்தரனார் (1883 - 1953)
"பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய்முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது. சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன; எரிக்கின்றன; இந்நோய்களால் குருதியோட்டங்குன்றிச் சவலையுற்றுக் கிடக்கிறாள். இள ஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள். இளஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்குரிய மருந்து. அவ்வொளி வீசி எழுங்கள்; எழுங்கள்" என்று இளமைவிருந்து நூலில் தமிழினைச் செழுமையுறச்செய்ய இளைஞர்களை அழைத்தவர் திரு.வி.க.
திரு.வி.க தம் தந்தையிடம் தொடக்கத்தில் கல்வி பயின்றார். வெஸ்லி பள்ளியில் படித்தபோது, நா. கதிரைவேலர் என்பவரிடம் தமிழ் படித்தார். பிறகு மயிலை தணிகாசலம் என்பவரிடம் தமிழோடு சைவ நூல்களையும் பயின்றார். தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படும் திரு.வி.க. பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், என் கடன் பணி செய்து கிடப்பதே, சைவத்திறவு, இந்தியாவும் விடுதலையும், பொதுமை வேட்டல், திருக்குறள் விரிவுரை முதலிய பல நூல்களை எழுதினார். சிறந்த மேடைப்பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய இவர் தேசபக்தன், நவசக்தி இதழ்களுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்; தமிழ் அறிஞர்களுள் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டவராக இருந்தார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். இலக்கியப்பயிற்சியும் இசைப்பயிற்சியும் பெற்றவர்.
தெரிந்து தெளிவோம்
சொல்லின் இடையில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவது மெய்ம்மயக்கம் எனப்படும். இது உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என இரண்டு வகைப்படும்.
உடனிலை மெய்ம்மயக்கம்: சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும். தமிழில் க், ச், த், ப் ஆகிய மெய்யெழுத்துகள் தம்முடன் மட்டுமே சேரும் உடனிலை மெய்ம்மயக்க எழுத்துகள் ஆகும்.
- எ.கா: பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்: சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும். தமிழில் ர், ழ் ஆகிய இரண்டு மெய்களும் தம் வரிசையுடன் சேர்ந்து வராமல் பிற மெய்யெழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும்.
- எ.கா: தேர்தல், வாழ்பவன், சூழ்க
க், ச், த், ப், ர், ழ் ஆகிய ஆறனையும் தவிர்த்த ஏனைய பன்னிரண்டு மெய்களும் உடனிலை மெய்ம்மயக்கமாகவும் வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் உள்ளன.
- எ.கா:
- ங் - அங்ஙனம், தங்கம்
- ஞ் - விஞ்ஞானம், மஞ்சள்
- ட் - பட்டம், காட்சி
- ண் - தண்ணீர், நண்பகல்
- ந் - செந்நெறி, தந்த
- ம் - அம்மா, அம்பு
- ய் - செய்யலாம், வாய்மை
- ல் - நல்லவன், செல்வம்
- வ் - இவ்விதம், தெவ்யாது
- ள் - உள்ளம், கொள்கை
- ற் - வெற்றி, பயிற்சி
- ன் - மன்னன், இன்பம்
 
ஈரொற்று மெய்ம்மயக்கம்: தனிச்சொற்களிலோ கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் ய், ர், ழ் ஆகிய மெய்கள் ஈரொற்றாய் வரும் (மூன்று மெய்களாக மயங்கி வரும்). இதனை ஈரொற்று மெய்ம்மயக்கம் என்பர்.
- ய்: காய்ச்சல், நாய்க்கால்
- ர்: உயர்ச்சி, தேர்க்கால்
- ழ்: வீழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி
கவிதை என்பது யாது; அது எவற்றைப் பற்றிப் பேசுதல் வேண்டும்; எப்பொழுது எந்த நிலையில் ஒரு கவிதையாக்கம் கவர்ச்சிகரமான கவிதையாக அமையும் என்பன பற்றி, அவற்றின் ஆக்கத்தில் ஈடுபடுவோருடைய கருத்து நிலைப்பாடுகள் கவிதை, கவிதையெனக் கொள்ளப்படுவதற்கான எடுத்துக்கூறல் முறைமைகள் ஆகியன யாவும் ஒருங்கு சேர்கின்றபொழுதுதான் மேலே கூறிய கவித்துவ உணர்வுச் செவ்வியலிலே மாற்றம் தெரிய வரும்.
- தமிழின் கவிதையியல் நூலில் கா. சிவத்தம்பி
அளவில் சிறுகதையைவிட நீளமாகவும் புதினத்தைவிடச் சிறியதாகவும் இருக்கும் கதை குறும்புதினம். இதனைக் குறுநாவல் என்றும் சொல்வர். சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் என்று கொள்ளலாம்.
- உவமை: கவிஞர், தெரியாத பொருள் ஒன்றைத் தெளிவாக விளக்குவதற்குத் தெரிந்த பொருளை உவமையாகப் பயன்படுத்துவர். வெளிப்படையாகப் பொருள்கூறினால் உவமை.
- உள்ளுறை உவமம்: உவமைக்குள் மற்றொரு பொருளைக் குறிப்பாக உணர்த்தினால் உள்ளுறை உவமை. உள்ளுறை உவமம் கவிதைப் பொருளோடு சேர்ந்து இருக்கும்.
- இறைச்சி: குறிப்புப் பொருளுக்குள் மேலும் ஒரு குறிப்புப் பொருள் அமைந்திருக்குமானால் அதற்கு இறைச்சி என்று பெயர். இறைச்சிப் பொருள் கவிதைப்பொருளின் புறத்தே குறிப்புப் பொருளாய் அமையும்.
மொழியின் இயக்கத்திற்கும் நிறுத்தம் உண்டு. வண்டிகள் சாலை விதிகளுக்கு ஏற்ப இயங்கவும் நிறுத்தவும் குறிகள் உள்ளமை போலச் சொற்றொடர் நிறுத்தங்களுக்கும், குறிகள் என்னும் அடையாளங்கள் உண்டு. அவற்றிற்கு நிறுத்தக்குறிகள் என்பது பெயர்.
ஒரு தொடரையோ பத்தியையோ படிக்கும்போது, பொருள் உணர்வுக்கு ஏற்ப, நிறுத்திப் படிக்க வேண்டிய இடத்தில் நிறுத்தியும் சேர்த்துப் படிக்க வேண்டிய இடத்தில் சேர்த்தும் வியப்பு, அச்சம், வினா முதலிய உணர்வுகள் வெளிப்படும் இடங்களில் அவற்றை வெளிப்படுத்தியும் படிக்க வேண்டியது படிப்பவர்தம் கடமையாகும். நிறுத்தக்குறிகளை இடாமல் எழுதுவதோ இடம் மாற்றி இக்குறிகளை இடுவதோ தொடரின் பொருளையே மாற்றிவிடும். சிலவேளைகளில் முற்றிலும் பிழையான பொருளைத் தந்துவிடும்.
வியப்புக்குறி (!): வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும், நேர்கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும், அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி வருதல் வேண்டும்.
- எ.கா: எவ்வளவு உயரமானது! வா! வா! வா!
விளிக்குறி (!): அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் விளிக்குறி பயன்படுத்த வேண்டும்.
- எ.கா: அவையீர்!
மேற்கோள்குறி (' ', " "):
- ஒற்றை மேற்கோள்குறி: ஓர் எழுத்தோ, சொல்லோ, சொற்றொடரோ தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைப்பெயர், நூற்பெயர், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ஒற்றைக்குறி வருதல் வேண்டும்.
- இரட்டை மேற்கோள்குறி: நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும் இரட்டைக்குறி வருதல் வேண்டும்.
ஒரு மூல மொழிப் பிரதியின் உள்ளடக்கத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு. தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொள்ளலாம்.
தெரியுமா?
மார்ச் 20 - உலகச் சிட்டுக்குருவிகள் நாள்.
ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவதை மதிப்புக் கூட்டுப்பொருள் என அழைக்கின்றனர். எடுத்துக்காட்டு: பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரித்து விற்பதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும்.
பள்ளு 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது உழத்திப் பாட்டு எனவும் அழைக்கப்படும். தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சாரும்.
யானை டாக்டர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தின் முக்கியமான காட்டியல் வல்லுநர்களில் ஒருவர். யானைகளுக்காகத் தம் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். உலகப்புகழ் பெற்ற அறிவியல் இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வேணுமேனன் ஏலீஸ் விருதினை 2000ஆம் ஆண்டில் பெற்றார். தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப் புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசின்மூலம் செயல்படுத்தியவர்.
ரெவரெண்ட் பெல் என்ற ஸ்காட்லாந்து பாதிரியார் தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்விமுறையைக் கண்டு வியந்தார். இம்முறையில் அமைந்த ஒரு பள்ளியை ஸ்காட்லாந்தில் 'மெட்ராஸ் காலேஜ்' என்னும் பெயரில் நிறுவினார். அங்கு இக்கல்விமுறை மெட்ராஸ் சிஸ்டம், பெல் சிஸ்டம் மற்றும் மானிடரி சிஸ்டம் என்றும் அழைக்கப்பட்டது.
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் சாமுவேல் பெப்பிசு ஆவார். அவரைப் போலவே ஆனந்தரங்கரும் 06.09.1736 முதல் 11.01.1761 வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார். இந்நாட்குறிப்பு இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும். இதனால், ஆனந்தரங்கர் இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்படுகிறார்.
சாழல் என்பது பெண்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு. ஒருத்தி வினா கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும். இறைவன் செயல்களையும் அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது திருச்சாழல் வடிவமாகும். மக்கள் வழக்கில் ஒருவர் விடுகதை சொல்லியும் அதற்கு மற்றொருவர் விடை கூறியும் விளையாடுவது இன்றைக்கும் வழக்கில் உள்ளது.
பட்டிமன்றம் ஒரு சுவையான விவாதக்களம். அது தமிழில் பழங்காலம் தொட்டே அறிமுகமான அறிவார்ந்த பேச்சுக்கலை வடிவம். "பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்று மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது.
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்
முதற்பொருளும் உரிப்பொருளும்
| திணை | நிலம் | பெரும்பொழுது | சிறுபொழுது | உரிப்பொருள் | 
|---|---|---|---|---|
| குறிஞ்சி | மலையும் மலை சார்ந்த நிலமும் | கூதிர், முன்பனி | யாமம் | புணர்தலும் புணர்தல் நிமித்தமும் | 
| முல்லை | காடும் காடு சார்ந்த நிலமும் | கார் | மாலை | இருத்தலும் இருத்தல் நிமித்தமும் | 
| மருதம் | வயலும் வயல் சார்ந்த நிலமும் | ஆறு பெரும் பொழுதுகளும் | வைகறை | ஊடலும் ஊடல் நிமித்தமும் | 
| நெய்தல் | கடலும் கடல் சார்ந்த நிலமும் | ஆறு பெரும் பொழுதுகளும் | எற்பாடு | இரங்கலும் இரங்கல் நிமித்தமும் | 
| பாலை | சுரமும் சுரம் சார்ந்த நிலமும் | இளவேனில், முதுவேனில், பின்பனி | நண்பகல் | பிரிதலும் பிரிதல் நிமித்தமும் | 
கருப்பொருள்
| கருப்பொருள் | குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை | 
|---|---|---|---|---|---|
| தெய்வம் | சேயோன் | மாயோன் | வேந்தன் | வருணன் | கொற்றவை | 
| மக்கள் | பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறவர், கானவர் | குறும்பொறை நாடன், தோன்றல், இடையர், ஆயர் | ஊரன், மகிழ்நன், உழவர், கடையர் | சேர்ப்பன், புலம்பன், நுளையர், பரதர் | விடலை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர் | 
| புள் | கிளி, மயில் | காட்டுக்கோழி | நாரை, மகன்றில், அன்னம் | கடற்காகம் | புறா, பருந்து, கழுகு | 
| விலங்கு | சிங்கம், புலி, கரடி, யானை | மான், முயல் | எருமை, நீர்நாய் | சுறாமீன் | செந்நாய் | 
| ஊர் | சிறுகுடி | பாடி | பேரூர், மூதூர் | பாக்கம், பட்டினம் | குறும்பு | 
| நீர் | அருவி நீர், சுனைநீர் | குறுஞ்சுனை, கானாறு | ஆற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர் | உவர்நீர்க் கேணி | நீரில்லாக் குழி, கிணறு | 
| பூ | வேங்கை, காந்தள், குறிஞ்சி | முல்லை, பிடவம், தோன்றி | தாமரை, குவளை | நெய்தல், தாழை | குராஅம்பூ, மராம்பூ | 
| மரம் | சந்தனம், தேக்கு, அகில், மூங்கில் | கொன்றை, காயா, குருந்தம் | மருதம், வஞ்சி, காஞ்சி | புன்னை, ஞாழல் | பாலை, உழிஞை, ஓமை | 
| உணவு | மலைநெல், தினை, மூங்கிலரிசி | வரகு, சாமை, முதிரை | செந்நெல், வெண்ணெல் | உப்பும் மீனும் விற்றுப் பெற்ற பொருள் | வழியிற் பறித்த பொருள் | 
| பறை | தொண்டகப் பறை | ஏறுகோட்பறை | நெல்லரிகிணை, மணமுழவு | மீன்கோட் பறை, நாவாய்ப் பம்பை | துடி | 
| யாழ் | குறிஞ்சி யாழ் | முல்லையாழ் | மருதயாழ் | விளரியாழ் | பாலையாழ் | 
| பண் | குறிஞ்சிப் பண் | சாதாரிப் பண் | மருதப் பண் | செவ்வழிப்பண் | பஞ்சுரப்பண் | 
| தொழில் | வெறியாடல், தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல் | சாமை, வரகு விதைத்தல், களைகட்டல் | வயலில் களை கட்டல், நெல்லரிதல் | உப்பு உண்டாக்கல், விற்றல், மீன் பிடித்தல் | போர் செய்தல், சூறையாடல் | 
பிற குறிப்புகள்
நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு சொற்கள்
- கயம்
- வேழம்
- களிறு
- பிளிறு
- களபம்
- மாதங்கம்
- கைம்மா
- வாரணம்
- அஞ்சனாவதி
- அத்தி
- அத்தினி
- அரசுவா
- அல்லியன்
- அனுபமை
- ஆனை
- இபம்
- இரதி
- குஞ்சரம்
- வல்விலங்கு
- கரி
- அஞ்சனம்
திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள்
- சீரகச்சம்பா
- சீதாபோகம்
- ரங்கஞ்சம்பா
- மணல்வாரி
- அதிக்கிராதி
- முத்துவெள்ளை
- புழுகுச்சம்பா
- சொரிகுரும்பை
- புத்தன்வாரி
- சிறைமீட்டான்
- கார்நெல்
- அரியநாயகன்
- கருங்சூரை
- பூம்பாளை
- குற்றாலன்
- பாற்கடுக்கன்
- கற்பூரப்பாளை
- காடைக் கழுத்தன்
- மிளகுச் சம்பா
- பனைமுகத்தன்
- மலைமுண்டன்
- திருவரங்கன்
- குருவைக் கிள்ளை
- முத்துவெள்ளை
திராவிட இடப்பெயர்கள்
தமிழ் மொழியில் 'கோட்டை' என்ற சொல், காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பைக் குறிக்கிறது. திராவிட வேர்ச்சொல் அகராதி, கோட்டை என்ற சொல்லோடு தொடர்புடைய பல்வேறு திராவிட மொழிச் சொற்களைக் கீழ்வருமாறு பட்டியலிடுகிறது.
| மொழி | சொல் | 
|---|---|
| தமிழ் | கோட்டை, கோடு | 
| மலையாளம் | கோட்ட, கோடு | 
| கன்னடம் | கோட்டே, கோண்டே | 
| தெலுங்கு | கோட்ட | 
| துளு | கோட்டே | 
| தோடா | க்வாட் | 
தமிழகத்தில் விடுதலைக்கு முன் கல்வி வளர்ச்சி
| ஆண்டு | நிகழ்வு | 
|---|---|
| 1826 | சென்னை ஆளுநர் சர். தாமஸ் மன்றோ ஆணைக்கிணங்கப் பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்டது. | 
| 1835 | சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. | 
| 1854 | பொதுக்கல்வித் துறை நிறுவப்பட்டு முதல் பொதுக்கல்வி இயக்குநர் (DPI) நியமிக்கப்பட்டார். | 
| 1857 | சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. | 
| 1859 | 1794இல் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம், 1859இல் கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது. | 
| 1910 | தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்டது. | 
| 1911 | பள்ளியிறுதி வகுப்பு - மாநில அளவிலான பொதுத்தேர்வில் நடைமுறைக்கு வந்தது. | 
ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள்
- 480 காசு: 1 ரூபாய்
- 60 காசு: 1 பணம்
- 8 பணம்: 1 ரூபாய்
- 24 பணம்: 1 வராகன்
- 1 பொன்: 1/2 வராகன்
- 1 வராகன்: 3 அல்லது 3.2 ரூபாய்
- 1 மோகரி: 14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்
- 1 சக்கரம்: 1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்
சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற கவிதை நூல்கள்
- 1968: வெள்ளைப் பறவை - அ. சீனிவாச ராகவன்
- 1978: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்
- 1982: மணிக்கொடி காலம் - பி. எஸ். ராமையா
- 1999: ஆலாபனை - அப்துல் ரகுமான்
- 2002: ஒரு கிராமத்து நதி - சிற்பி. பாலசுப்பிரமணியம்
- 2004: வணக்கம் வள்ளுவ! - ஈரோடு தமிழன்பன்
- 2006: ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு. மேத்தா
- 2009: கையொப்பம் - புவியரசு
- 2017: காந்தள் நாட்கள் - இன்குலாப்
உலகச் சிறுகதை ஆசிரியர்கள்
19ஆம் நூற்றாண்டில் சிறுகதைகள் முழுவீச்சில் வெளிப்படத் தொடங்கின.
- அமெரிக்கா: எட்கர் ஆலன்போ, ஓ ஹென்றி, நதானியல் ஹாதர்ன், வாசிங்டன் இர்விங். (ஓ ஹென்றியின் கதைகளில் வரும் கடைசித் திருப்பம் உலகப்புகழ் பெற்றது).
- பிரான்ஸ்: போம்பெவல், மாப்பசான், மெரிமீ, பால்சாக். (புதுமைப்பித்தன், தமிழகத்தின் மாப்பஸான் என்று அழைக்கப்படுகிறார்).
- ரஷ்யா: ஆண்டன் செகாவ், துர்கனேவ், கோகல். (செகாவ் சிறுகதை வடிவத்தை மிகச்சிறந்த கலைவடிவமாக்கினார். கோகலின் ‘மேலங்கி' என்னும் சிறுகதை எண்ணற்ற எழுத்தாளர்களை உருவாக்கியதாகக் கருதப்படுகிறது).
படைப்பு முகம் (பல்வேறு எழுத்தாளர்கள்)
- சார்வாகன் (1929 - 2015): மருத்துவம், இலக்கியம் ஆகிய இரண்டு துறைகளிலும் சாதித்தவர். பழைமையைக் கேள்விக்குள்ளாக்கும் அங்கத எழுத்துக்குச் சொந்தக்காரர்.
- ஜெயகாந்தன் (1934-2015): 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர். ஞானபீட விருது (2002), சாகித்ய அகாதெமி, பத்மபூஷன் விருதுகளைப் பெற்றவர்.
- ஆர். சூடாமணி (1931-2010): நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் பெண்களின் நிலையையும் எழுதியவர். உளவியல் எழுத்தாளர் எனப் போற்றப்படுகிறார்.
- சோ. தர்மன் (சோ. தர்மராஜ் - 1952): கரிசல் மண்ணின் வேளாண் வாழ்வியலை எழுதும் இவரது படைப்புகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல் கூரான அங்கதத்துடன் வெளிப்படுகிறது.
- கே. பாலமுருகன் (1982): மலேசியத் தமிழ் எழுத்தாளர். தற்கால சமூக வாழ்க்கைச் சூழல்களைப் புதிய உத்திகளில் சொல்லி வருபவர்.
- தாமரைச்செல்வி (1953): போரின் அவலம், போர்ச்சூழல் முதலானவற்றை எதார்த்தமாகச் சித்திரிப்பதில் தனி முத்திரை பதித்தவர்.
- சத்யஜித் ரே (1921-1992): உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர். குழந்தைகளுக்கான கற்பனை மற்றும் துப்பறியும் கதைகளையும், அறிவியல் புனைகதைகளையும் எழுதியுள்ளார்.
- எஸ். ராமகிருஷ்ணன் (1966): நவீனத் தமிழ் இலக்கியத்தின் பிரபலமான எழுத்தாளர். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எனப் பல தளங்களில் இயங்குபவர்.
- ஹெச்.ஜி. ரசூல் (1959 - 2017): பெண்கள் மீதான ஒடுக்குமுறை சார்ந்த கருத்துகளைத் தகர்த்தெறிந்தவர்.
- இளங்கோ கிருஷ்ணன் (1979): நுண்கதை வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்த முயற்சி செய்பவர்களுள் ஒருவர்.
- ஜெயந்தன் (1937 - 2010): பெ. கிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்டவர். 'நினைக்கப்படும்' என்ற நாடகம் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.
பட்டிமன்றம் vs வழக்காடு மன்றம்
| பட்டிமன்றம் | வழக்காடு மன்றம் | 
|---|---|
| நடுவர், இருதரப்பிலும் மூன்றுபேர் எனப் பேசுவர். | நடுவரை நீதியரசர் என்போம். வழக்குத் தொடுப்பவர், மறுப்பவர் என மூவரைக் கொண்டு வழக்காடுவர். | 
| பேசுபவரை நடுவர் மட்டுமே குறுக்கிட முடியும். | நடுவரும் வழக்கை மறுப்பவரும் வழக்குத் தொடுப்பவரைக் குறுக்கீடு செய்யலாம். | 
| ஒரு தலைப்பில் மூவர் கருத்துகளை முன்வைப்பர். | ஒருவரே மூன்று நிலைகளில் வழக்கை முன்வைப்பர். | 
| நடுவர், ஓர் அணிக்கு ஏற்புடைய தீர்ப்பை வழங்கலாம் அல்லது தன் கருத்தைத் தீர்ப்பாகக் கூறலாம். | நீதியரசர், வாதிடுகின்ற இருவரின் கருத்துகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவார். | 
Related Articles
Tamil Literary References (Nool Veli Collection)
- 10 ஆம் வகுப்பு நூல் வெளி - 10th Standard Nool Veli - 10th standard literary references
- 9 ஆம் வகுப்பு தமிழ் - நூல் வெளி 9th Tamil Nool Veli - 9th grade author works
- 8 ஆம் வகுப்பு தமிழ் நூல் வெளி - 8th Tamil Nool Veli - 8th standard literary references
- 7ஆம் வகுப்பு நூல் வெளி - 7th Std Author and Book Notes - 7th standard author collection
Tamil Grammar and Literary Analysis
- English Grammar Fundamentals: Verbs, Question Tags & Sentence Patterns - Systematic grammar analysis techniques
- அணியிலக்கண நூல்கள் (Thandiyalangaram) - Grammar books on rhetoric
- புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும் - Famous Books and Authors - Renowned literary works
Classical Tamil Literature
- எட்டுத்தொகை இலக்கியம் - Ettuthokai Literature - Eight anthologies
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - Pathinen Keelkanakku Books - Eighteen minor works
- பத்துப்பாட்டு - Pattuppattu Introduction - Ten idylls collection
Systematic Study Methods
- TNPSC English - Vocab (Homonyms, Collocations) & Prose Analysis - Pattern recognition methods
- Data Interpretation (தரவு விளக்கம்) - Analytical reasoning techniques
- Percentage (சதவீதம்) - Systematic problem-solving skills
- Ratio and Proportion (விகிதம் மற்றும் விகிதாச்சாரம்) - Comparative analysis methods