Skip to main content

6 ஆம் வகுப்பு நூல் வெளி

நூல் வெளி (ஔவையார்)

இந்நூலின் ஆசிரியர் ஔவையார். இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.

TNPSC Syllabus Wise MCQs 👇Try our Test Hub 👑

நூல் வெளி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

தெரிந்து தெளிவோம்: காமராசரின் சிறப்புப் பெயர்கள்
  • பெருந்தலைவர்
  • கருப்புக் காந்தி
  • படிக்காத மேதை
  • ஏழைப்பங்காளர்
  • கர்மவீரர்
  • தலைவர்களை உருவாக்குபவர்
தெரிந்து தெளிவோம்: காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகள்
  1. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  2. நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
  3. காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
  4. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
  5. சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  6. கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  7. ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தெரிந்து தெளிவோம்: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்
தளம்உள்ளடக்கம்
தரைத்தளம்சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
முதல் தளம்குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
இரண்டாம் தளம்தமிழ் நூல்கள்
மூன்றாம் தளம்கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
நான்காம் தளம்பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
ஐந்தாம் தளம்கணிதம், அறிவியல், மருத்துவம்
ஆறாம் தளம்பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
ஏழாம் தளம்வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
எட்டாம் தளம்கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு
தெரிந்து தெளிவோம்
  • ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.
  • சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
தெரிந்து தெளிவோம்: நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் சிலர்
  • அறிஞர் அண்ணா
  • ஜவஹர்லால் நேரு
  • அண்ணல் அம்பேத்கர்
  • காரல் மார்க்ஸ்
தெரிந்து தெளிவோம்: திருவள்ளுவர் ஆண்டு

தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.

திருவள்ளுவர் கி.மு (பொ.ஆ.மு) 31இல் பிறந்தவர். எனவே, திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31ஐக் கூட்டிக்கொள்ள வேண்டும். (எ.கா.) 2018 + 31 = 2049.

தெரிந்து தெளிவோம்

வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

நூல் வெளி (ஆசாரக்கோவை)

ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

நூல் வெளி (தாலாட்டு)

தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று. தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

தெரிந்து தெளிவோம்: அறுவடைத் திருநாள்
  • ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
  • பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாடப்படுகிறது.
  • குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது.
தெரிந்து தெளிவோம்: மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள்
  1. அர்ச்சுனன் தபசு
  2. கடற்கரைக் கோவில்
  3. பஞ்சபாண்டவர் ரதம்
  4. ஒற்றைக்கல் யானை
  5. குகைக்கோவில்
  6. புலிக்குகை
  7. திருக்கடல் மல்லை
  8. கண்ணனின் வெண்ணெய்ப் பந்து
  9. கலங்கரை விளக்கம்
தெரிந்து தெளிவோம்: சிற்பக் கலை வடிவமைப்புகள்

சிற்பக் கலை வடிவமைப்புகள் நான்கு வகைப்படும்.

  • குடைவரைக் கோயில்கள்
  • கட்டுமானக் கோயில்கள்
  • ஒற்றைக் கல் கோயில்கள்
  • புடைப்புச் சிற்பங்கள்

இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்.

நூல் வெளி (நாட்டுப்புறப் பாடல்)

உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர். ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும். இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

நூல் வெளி (முடியரசன்)

முடியரசனின் இயற்பெயர் துரைராசு. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர். இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

தெரிந்து தெளிவோம்: நெய்தல் திணை
  • நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
  • மக்கள் : பரதவர், பரத்தியர்
  • தொழில் : மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
  • பூ : தாழம்பூ
தெரிந்து தெளிவோம்
  • சொற்களில் ண, ன இடம்பெறும் வகை:
    • 'ட' என்னும் எழுத்துக்கு முன் 'ண்' வரும். (எ.கா.) கண்டம், வண்டி, நண்டு
    • 'ற' என்னும் எழுத்துக்கு முன் 'ன்' வரும். (எ.கா.) மன்றம், நன்றி, கன்று
  • 'உ' என்ற சுட்டெழுத்து:
    • அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட 'உ' என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எ.கா.) உது, உவன்

நூல் வெளி (தாராபாரதி)

தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர். புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும். இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

நூல் வெளி (தாயுமானவர்)

இப்பாடலை எழுதியவர் தாயுமானவர். திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர். இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது. இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர். இப்பாடல்கள் 'கண்ணி' என்னும் தலைப்பில் உள்ளன. 'கண்ணி' என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

தெரிந்து தெளிவோம்: சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகம்

தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி உமணர் போகலும் நற்றிணை - 183

பாலோடு வந்து கூழொடு பெயரும் குறுந்தொகை - 23

பொன்னொடு வந்து கறியொடு பெயரும் அகநானூறு - 149

தெரிந்து தெளிவோம்: வேலுநாச்சியார்
  • வேலுநாச்சியாரின் காலம்: 1730-1796
  • வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு: 1780.
  • ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார்.
தெரிந்து தெளிவோம்: மேற்கோள்கள்

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" வள்ளலார்

"வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை" அன்னை தெரசா

நூல் வெளி (தேசிக விநாயகனார் - கவிமணி)

தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர். ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

நூல் வெளி (பாரதிதாசன்)

பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கிப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவரைப் பாவேந்தர் என்றும் போற்றுவர்.

நூல் வெளி (கலீல் கிப்ரான்)

கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர். இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

நூல் வெளி (எஸ். ராமகிருஷ்ணன்)

எஸ். ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இக்கதை தாவரங்களின் உரையாடல் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

தெரிந்து தெளிவோம்

குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது. கைலாஷ் சத்யார்த்தி

நூல் வெளி (பெருஞ்சித்திரனார்)

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.

நூல் வெளி (இளங்கோவடிகள் - சிலப்பதிகாரம்)

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.

தெரிந்து தெளிவோம்: சொற்கள் முதலில் ஆளப்பட்ட இலக்கியங்கள்
சொல்இலக்கியம்மேற்கோள்
தமிழ்தொல்காப்பியம்தமிழென் கிளவியும் அதனோ ரற்றே
தமிழ்நாடுசிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்)இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்
தமிழன்அப்பர் தேவாரம்

ஒலித்துப் பார்த்து உணர்வோம்

  • வல்லினம்: க், ச், ட், த், ப், ற் - ஆகிய ஆறும் வன்மையாக ஒலிக்கின்றன.
  • மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன் - ஆகிய ஆறும் மென்மையாக ஒலிக்கின்றன.
  • இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள் - ஆகிய ஆறும் வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன.
தெரிந்து தெளிவோம்: தாவர இலைப் பெயர்கள்
தாவரம்இலைப் பெயர்
ஆல், அரசு, மா, பலா, வாழைஇலை
அகத்தி, பசலை, முருங்கைகீரை
அருகு, கோரைபுல்
நெல், வரகுதாள்
மல்லிதழை
சப்பாத்திக் கள்ளி, தாழைமடல்
கரும்பு, நாணல்தோகை
பனை, தென்னைஓலை
கமுகு (பாக்கு)கூந்தல்
தெரிந்து தெளிவோம்: தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்
  • மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம்
  • இஸ்ரோ அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை
  • இஸ்ரோவின் தலைவர் சிவன்
தெரிந்து தெளிவோம்: இந்தியாவின் பறவை மனிதர் - டாக்டர் சலீம் அலி

இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி. தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார். அதனால், அவர் 'இந்தியாவின் பறவை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.

தெரிந்து தெளிவோம்: கப்பல் பறவை (Frigate bird)

சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate bird). இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும். இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள்

வ.எண்சொல்இடம்பெற்ற நூல்
1.வேளாண்மைகலித்தொகை 101, திருக்குறள் 81
2.உழவர்நற்றிணை 4
3.பாம்புகுறுந்தொகை-239
4.வெள்ளம்பதிற்றுப்பத்து-15
5.முதலைகுறுந்தொகை-324
6.கோடைஅகநானூறு-42
7.உலகம்தொல்காப்பியம், கிளவியாக்கம் - 56, திருமுருகாற்றுபடை -1
8.மருந்துஅகநானூறு-147
9.ஊர்தொல்காப்பியம், அகத்திணையியல் -41
10.அன்புதொல்காப்பியம், களவியல் 110
11.உயிர்தொல்காப்பியம், கிளவியாக்கம்- 56
12.மகிழ்ச்சிதொல்காப்பியம், கற்பியல்-142, திருக்குறள் 531
13.மீன்குறுந்தொகை 54
14.புகழ்தொல்காப்பியம், வேற்றுமையியல் 71
15.அரசுதிருக்குறள் 554
16.செய்குறுந்தொகை 72
17.செல்தொல்காப்பியம், புறத்திணையியல் 75
18.பார்பெரும்பாணாற்றுப்படை, 435
19.ஒழிதொல்காப்பியம், கிளவியாக்கம் 48
20.முடிதொல்காப்பியம், வினையியல் 206

நூல் வெளி (பாரதியார்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர். எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய பல நூல்களை இயற்றி உள்ளார். பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

நூல் வெளி (திருவள்ளுவர் - திருக்குறள்)

திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்களைக் கொண்டுள்ளது. "திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நூல் வெளி (நெல்லை சு.முத்து)

தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

தெரிந்து தெளிவோம்: சோபியா ரோபோ

உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் 'சோபியா'. மேலும் ஐக்கிய நாடுகள் சபை 'புதுமைகளின் வெற்றியாளர்' என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை.

தெரிந்து தெளிவோம்: தானியங்கி

மனித முயற்சிகளுக்கு மாற்றாகத் தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும். இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப் போலச் செயல்களை நிறைவேற்றும் என்று பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தானியங்கிகளுக்கு விளக்கம் தருகிறது.

தெரிந்து தெளிவோம்: பறவைகள் பற்றிய உண்மைகள்
  • ஆர்டிக் ஆலா: உலகிலேயே நெடுந்தொலைவு (22,000 கி.மீ) பயணம் செய்யும் பறவையினம்.
  • பறவை பற்றிய படிப்பு: ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY) எனப்படும்.
  • உலகச் சிட்டுக்குருவிகள் நாள்: மார்ச் - 20

Tamil Literature and Cultural Heritage

Language and Grammar Foundations

Academic and Study Skills

Cultural and Social Studies

❤️ Love our study material?

Help us keep creating quality educational resources for TNPSC aspirants. Your support keeps this platform free for everyone!