Skip to main content

7 ஆம் வகுப்பு நூல் வெளி

நாமக்கல் கவிஞர்

இப்பாடலின் ஆசிரியரை, நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர். இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர். மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது.

TNPSC Syllabus Wise MCQs 👇Try our Test Hub 👑

உடுமலை நாராயணகவி

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி. இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர். இவரது பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

சுரதா

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்'. எனவே தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும். உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர். அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இப்பாடல் தேன் மழை என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது. இப்பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி' ஆகும்.

தெரிந்து தெளிவோம்

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்

கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.

தெரிந்து தெளிவோம்

தமிழில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய எழுத்துச் சாரியைகளைப் பயன்படுத்துகிறோம்.

  • குறில் எழுத்துகளைக் குறிக்க: 'கரம்' (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்
  • நெடில் எழுத்துகளைக் குறிக்க: 'கான்' (எ.கா.) ஐகான், ஒளகான்
  • குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க: 'காரம்' (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம்
  • ஆய்த எழுத்தைக் குறிக்க: 'கேனம்' (எ.கா.) அஃகேனம்
தெரிந்து தெளிவோம்

"பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்"
- மு. வரதராசனார்

தெரிந்து தெளிவோம்

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும். தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது. தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.

தெரிந்து தெளிவோம்

இக்காலத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சான்றோர்களின் உரைகள் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாகப் பேச்சுமொழியும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்

கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது. படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன.

தெரிந்து தெளிவோம்
  • 'வ்' என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
  • மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

ராஜமார்த்தாண்டன்

ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர். கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர். ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர். சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். இவரது அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலில் உள்ள கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் (திருக்குறள்)

திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று கூறுவர். இவர் முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் போன்ற சிறப்புப் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார். தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பகுப்புகளைக் கொண்டது. இதில் அறம்-38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன. இதற்கு தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.

வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்

கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன. அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நம் பாடப்பகுதி நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

காவற்பெண்டு

காவற்பெண்டு சங்க காலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார். இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது. இந்நூலில் 86-ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்
  • தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) ஆகும்.
  • கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வனவியல் (B.Sc. Forestry), முதுநிலை வனவியல் (M.Sc. Forestry) ஆகிய படிப்புகள் உள்ளன.
தெரிந்து தெளிவோம்: ஜாதவ் பயேங் பெற்ற பட்டங்கள்
  • 2012: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்திய வனமகன் (Forest Man of India) என்னும் பட்டத்தை வழங்கியது.
  • 2015: இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
  • கௌகாத்தி பல்கலைக்கழகம் 'மதிப்புறு முனைவர்' பட்டம் வழங்கியுள்ளது.
தெரிந்து தெளிவோம்: முத்துராமலிங்கத்தேவர் சிறப்புப் பெயர்கள்

தேசியம் காத்த செம்மல், வித்யா பாஸ்கர், பிரவசன கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்தசமய மேதை.

தெரிந்து தெளிவோம்: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
  • பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவர் தோன்றி மறைந்த அக்டோபர் முப்பதாம் நாள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழா எடுக்கப்படுகிறது.
  • தமிழகச் சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் அரசு சார்பாகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்திய நாடாளுமன்ற வளாகத்திலும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசால் 1995 இல் தபால் தலை வெளியிடப்பட்டது.
  • அவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாள்கள் 20,075. சுதந்திரப் போராட்டத்திற்காகச் சிறையில் கழித்த நாள்கள் 4000. தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினைச் சிறையில் கழித்த தியாகச் செம்மல் முத்துராமலிங்கத்தேவர் ஆவார்.

இரா.பி. சேதுப்பிள்ளை

இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர். இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர். செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர். இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும். ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம் - ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார். வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்: இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி

இம்மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்.

  • இடக்கரடக்கல்: நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல்.
  • மங்கலம்: மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல்.
  • குழூஉக்குறி: பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல்.

மருதன் இளநாகனார்

மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே. மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார். அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர். இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்: எட்டுத்தொகை நூல்கள்
  • நற்றிணை
  • குறுந்தொகை
  • ஐங்குறுநூறு
  • பதிற்றுப்பத்து
  • பரிபாடல்
  • கலித்தொகை
  • அகநானூறு
  • புறநானூறு

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர். இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

தெரிந்து தெளிவோம்: பத்துப்பாட்டு நூல்கள்
  • திருமுருகாற்றுப்படை
  • பொருநராற்றுப்படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • முல்லைப்பாட்டு
  • மதுரைக்காஞ்சி
  • நெடுநல்வாடை
  • குறிஞ்சிப்பாட்டு
  • பட்டினப்பாலை
  • மலைபடுகடாம்
தெரிந்து தெளிவோம்

"கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று வாக்கர் என்னும் ஆங்கிலேயர் கூறியுள்ளார்.

தெரிந்து தெளிவோம்: வாயில் - வாசல்

இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம். இது இலக்கணப் போலியாகும். வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும்.

தெரிந்து தெளிவோம்

கடல் ஆமைகள் இனப்பெருக்கத்துக்காகத் தகுந்த இடம் தேடி நீண்ட தூரம் பயணம் செய்கின்றன. அவை செல்லும் வழியைச் செயற்கைக்கோள்கள் மூலம் தற்போது ஆராய்ந்துள்ளனர். அவ்வழியில் உள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டு இருந்ததை அறிய முடிகிறது. எனவே பழந்தமிழர்கள் ஆமைகளை வழிகாட்டிகளாகப் பயன்படுத்திக் கடல் பயணம் செய்து இருக்கலாம் என்னும் கருத்தும் உள்ளது.

தெரிந்து தெளிவோம்

நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழர்கள் அயல் நாடுகளுக்குக் கப்பல்களில் சென்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். பிற்காலச் சோழர்களில் இராசராச சோழனும், இராசேந்திர சோழனும் பெரிய கப்பற்படையைக் கொண்டு பல நாடுகளை வென்றனர் என்பதை வரலாறு பகர்கிறது.

ஜூல்ஸ் வெர்ன்

அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன். இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர். எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார். அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில் என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் மொழிபெயர்ப்பின் சுருக்கம் நமக்குப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன்

கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன். இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது. பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

நாலடியார்

நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது நானூறு வெண்பாக்களால் ஆனது. இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர். திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை "நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்னும் தொடர் மூலம் அறியலாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி

திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி. நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் இவர். வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது. இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

சுப்ரபாரதிமணியன்

இக்கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன். இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்; கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார். பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்

  1. - பசு
  2. - கொடு
  3. - இறைச்சி
  4. - அம்பு
  5. - தலைவன்
  6. - மதகுநீர் தாங்கும் பலகை
  7. கா - சோலை
  8. கூ - பூமி
  9. கை - ஒழுக்கம்
  10. கோ - அரசன்
  11. சா - இறந்துபோ
  12. சீ - இகழ்ச்சி
  13. சே - உயர்வு
  14. சோ - மதில்
  15. தா - கொடு
  16. தீ - நெருப்பு
  17. தூ - தூய்மை
  18. தே - கடவுள்
  19. தை - தைத்தல்
  20. நா - நாவு
  21. நீ - முன்னிலை ஒருமை
  22. நே - அன்பு
  23. நை - இழிவு
  24. நோ - வறுமை
  25. பா - பாடல்
  26. பூ - மலர்
  27. பே - மேகம்
  28. பை - இளமை
  29. போ - செல்
  30. மா - மாமரம்
  31. மீ - வான்
  32. மூ - மூப்பு
  33. மே - அன்பு
  34. மை - அஞ்சனம்
  35. மோ - மோத்தல்
  36. யா - அகலம்
  37. வா - அழைத்தல்
  38. வீ - மலர்
  39. வை - புல்
  40. வெள - கவர்
  41. நொ - நோய்
  42. து - உண்

தேனரசன்

தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும். மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். பாடப்பகுதியிலுள்ள கவிதை பெய்து பழகிய மேகம் என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

காளமேகப்புலவர்

காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன். மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார். திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. அந்நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்: ஓவியம் தொடர்பான பெயர்கள்
  • ஓவியம்: ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
  • ஓவியம் வரைபவர்: கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்
  • ஓவியக் கூடம்: எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை
தெரிந்து தெளிவோம்
  • ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் இராஜா இரவிவர்மா. இவரது ஓவியமுறைகள் பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன.
  • நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் கொண்டையராஜு. நாட்காட்டி ஓவியங்களைப் ‘பசார் பெயிண்டிங்’ என்றும் அழைப்பர்.
தெரிந்து தெளிவோம்

புனையா ஓவியங்கள் பற்றி நம் இலக்கியங்கள் கூறும் செய்திகள்:

  • "புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்" - நெடுநல்வாடை
  • "புனையா ஓவியம் புறம் போந்தன்ன" - மணிமேகலை
தெரிந்து தெளிவோம்

ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.


"இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்


துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்"


- பரிபாடல் (19:54-55)

தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருவதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இங்குத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன. தலைசிறந்த ஓவியங்களும் தொன்மையான இசைக் கருவிகளும் சிற்பங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

பழமொழி நானூறு

பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது. பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இது நானூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது. இந்நூலின் ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

நாட்டுப்புறப் பாடல்

நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர். பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார். அந்நூலில் உள்ள உழவுத்தொழில் பற்றிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்

செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தமிழக அரசால் கி.பி. (பொ.ஆ.) 1981 இல் தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ப்பல்கலைக்கழகம். இது தஞ்சாவூரில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது "தமிழ்நாடு" எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது. இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய வேண்டும் என்பதே இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம்.

இங்குக் கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல்புலம் ஆகிய ஐந்து புலங்களும் இருபத்தைந்து துறைகளும் உள்ளன. இப்பல்கலைக்கழகம் தமிழ்மொழி ஆய்வுகள் செய்வது மட்டுமன்றி, சித்த மருத்துவத்துறை மூலம் பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் மருத்துவத் தொண்டு செய்து வருகிறது. இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப்பயிற்சியை இப்பல்கலைக்கழகமே வழங்குகிறது. இங்கு மிகப்பெரிய நூலகம் ஒன்று அமைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்குக் கல்வி கற்று வருகின்றனர்.

உ.வே.சா நூலகம் - சென்னை

கி.பி. (பொ.ஆ.) 1942 இல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன. இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.

கீழ்த்திசை நூலகம் - சென்னை

இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1869ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன. கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்களும் இடம்பெற்றுள்ளன. இது தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகின்றது.

கன்னிமாரா நூலகம் - சென்னை

கி.பி. (பொ.ஆ.) 1896 இல் தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகம் தமிழ்நாட்டின் மைய நூலகம் ஆகும். இஃது இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்நூலகத்தில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்குப் பாதுகாக்கப்படுகிறது. இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகின்றது.

வள்ளுவர் கோட்டம் - சென்னை

திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னைக் கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் கி.பி.(பொ.ஆ.) 1973 இல் தொடங்கி 1976 இல் முடிக்கப்பட்டன. இது திருவாரூர்த் தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டு அதனை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்று கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்பகுதி இருபத்தைந்து அடி நீளமும் இருபத்தைந்து அடி அகலமும் உடையது. தேரின் மொத்த உயரம் 128 அடி. இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு நான்கு சக்கரங்கள் தனிக்கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. கடைக்கோடி இரண்டு சக்கரங்கள் பெரியனவாகவும் நடுவில் இரண்டு சக்கரங்கள் சிறியனவாகவும் உள்ளன. தேரின் மையத்தில் உள்ள எண்கோண வடிவக் கருவறையில் திருவள்ளுவரின் சிலை கவினுற அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்கம் ஒன்றும் உள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன. அறத்துப்பால் கருநிறப் பளிங்குக் கல்லிலும் பொருட்பால் வெண்ணிறப் பளிங்குக் கல்லிலும் இன்பத்துப்பால் செந்நிறப் பளிங்குக் கல்லிலும் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் திருக்குறளின் கருத்துகளை விளக்கும் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் சிலை - கன்னியாகுமரி

இந்தியாவின் தெற்கு எல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு அருகில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து முப்பது அடி உயரப் பாறை மீது இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.(பொ.ஆ.) 1990ஆம் ஆண்டு இப்பணி தொடங்கியது. பொதுமக்கள் பார்வைக்காக 2000ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் அன்று திறந்துவைக்கப்பட்டது. பாறையிலிருந்து சிலையின் உயரம் மொத்தம் 133 அடி. இது திருக்குறளின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கிறது. அறத்துப்பாலின் அதிகாரங்களை உணர்த்துவது போல் பீடம் முப்பத்தெட்டு அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் சிலை தொண்ணூற்றைந்து அடி உயரம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது.

பீடத்தின் உட்புறத்தில் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. மண்டபத்தின் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள 3,681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவர் சிலை மொத்தம் ஏழாயிரம் டன் எடை கொண்டது. திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்குப் படகு வசதி செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். தமிழின் பெருமைமிகு அடையாளமாக இச்சிலை உயர்ந்து நிற்கிறது.

உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை

மதுரை மாநகரின் தல்லாகுளம் பகுதியில் காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது சுமார் எண்பத்தேழு ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் மனத்தைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கி.பி. (பொ.ஆ.) 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இக்கட்டடம் கட்டப்பட்டு கி.பி. (பொ.ஆ.) 2016 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. இதனுள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கக் கூடங்கள், ஆய்வரங்கங்கள், நூலகம், பார்வையாளர் அரங்கம் ஆகியன கவினுற அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறச் சுற்றுச்சுவர்களில் 1330 குறட்பாக்களும் இடம்பெற்றுள்ளன.

உலகத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் அமைப்பான சங்கத்தமிழ்க் காட்சிக்கூடம் தனிக்கட்டடத்தில் இயங்கி வருகிறது. தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடல் புராணக் காட்சி இதன் நுழைவாயிலில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள காட்சிக்கூடத்தில் வள்ளல்கள், புலவர்கள் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் உள்ளன. தொல்காப்பியர், ஒளவையார், கபிலர் ஆகியோரின் முழுஉருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இதன் சுற்றுச் சுவர்களில் சங்க இலக்கியக் காட்சிகள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மூன்றாம் தமிழ்ச்சங்கம் அமைந்த மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடமும் சங்கத்தமிழ்க் காட்சிக்கூடமும் தமிழின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன.

சிற்பக் கலைக்கூடம் - பூம்புகார்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார். இந்நகரைப் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும் பட்டினப்பாலையிலும் இடம்பெற்றுள்ளன. இங்கு மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பின்னர் ஏற்பட்ட கடல்கோளினால் பூம்புகார் நகரம் அழிந்துவிட்டது. இந்நகரத்தின் பெருமையை உலகறியச் செய்ய கி.பி.(பொ.ஆ.) 1973 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது. கண்ணகியின் வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மாதவிக்கும் ஒரு நெடிய சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல்மன்றம் ஆகியன அமைந்துள்ளன. இலஞ்சிமன்றத்திலும் பாவைமன்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதைச் சுற்றி எட்டுச் சிறிய கற்றூண்களும் எட்டு மனித உருவங்களும் தற்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாய் நிற்கின்றன.

தெரிந்து தெளிவோம்

அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.


"மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று


ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை"


- (நாட்டுப்புறப்பாடல்)

தெரிந்து தெளிவோம்

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழரின் தொன்மைக்கும் நாகரிகச் சிறப்புக்கும் சான்றாக விளங்கும் தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன. இவ்வூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல்பாடலாகும்.

தெரிந்து தெளிவோம்: அந்தாதி

ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர். (அந்தம் - முடிவு, ஆதி - முதல்). இவ்வாறு அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

தெரிந்து தெளிவோம்: பன்னிரு ஆழ்வார்கள்

திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார். பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.

டி.கே.சி (டி.கே. சிதம்பரநாதர்)

டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர்; தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்; இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர். இவர் தமது வீட்டில் 'வட்டத்தொட்டி' என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார். இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரை இவரது இதய ஒலி என்னும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

முனைப்பாடியார்

முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்
  • தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன.
  • பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.
தெரிந்து தெளிவோம்: திருக்குறள்

"ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம்


பேரறி வாளன் திரு." (குறள். 215)


விளக்கம்: உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும்.

"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றால் செல்வம்


நயனுடை யான்கண் படின்." (குறள். 216)


விளக்கம்: நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பயன் தரும் மரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.

குன்றக்குடி அடிகளார்

மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர். திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர். நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட சில இதழ்களையும் நடத்தியுள்ளார். ஒப்புரவு நெறி என்னும் தலைப்பில் அடிகளார் கூறியுள்ள கருத்துகள் நம் பாடப் பகுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

கண்ணதாசன்

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார். காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார். இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும். இந்நூலில் உள்ள மலைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

ஜென் கதைகள்

ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருள். புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள். இவர்கள் பெரும்பாலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தமது சிந்தனைகளைச் சிறு நிகழ்ச்சிகள், எளிய கதைகள் ஆகியவற்றின் மூலம் விளக்கினர். ஜென் கதைகளுள் ஒன்று இங்குப் படக்கதையாகத் தரப்பட்டுள்ளது.

சே. பிருந்தா

சே. பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர். மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். இக்கவிதை மகளுக்குச் சொன்ன கதை என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

பாவண்ணன்

பாவண்ணன் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார். கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பிரயாணம் என்னும் நூலில் உள்ள பயணம் என்னும் சிறுகதை இங்குத் தரப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்: காயிதே மில்லத் முகமது இஸ்மாயில்
  • "தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்." - அறிஞர் அண்ணா
  • "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்." - தந்தை பெரியார்

Tamil Literature and Heritage

Language and Grammar Foundations

Historical and Cultural Context

Academic Study Resources

❤️ Love our study material?

Help us keep creating quality educational resources for TNPSC aspirants. Your support keeps this platform free for everyone!