கிறித்தவ இலக்கிய வரலாறு
கிறிஸ்துவமும் தமிழும், கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டு, அயல் நாட்டுக் கிறிஸ்தவர்கள் - தத்துவ போதகர், வீரமா முனிவர், போப்பையர் (G.U. Pope), கால்டுவெல், சீகன்பால்கு ஐயர், எல்லிஸ் துரை, கிரேனியஸ். தமிழ்க் கிறிஸ்தவர்கள் - முத்துசாமிப் பிள்ளை, தஞ்சை அபிரகாம் பண்டிதர், வேதநாயகம் பிள்ளை, வேதநாயக சாஸ்திரி, H.A. கிருட்டினப்பிள்ளை, சாமுவேல் பிள்ளை.
தமிழகம் சங்ககாலத்திற்கும் முற்பட்ட காலத்திலிருந்தே யவனர் எனும் ஐரோப்பிய நாட்டவருடன் வாணிக உறவு கொண்டு விளங்கியதைச் சங்க இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. யவனரைத் தொடர்ந்து இசுலாமியர் அரபு நாடுகளிலிருந்து வாணிபம் செய்து பெரும் செல்வம் குவித்தனர். இதுகண்டு போர்ச்சுக்கல், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், ஃபிரான்சு போன்ற பிற ஐரோப்பிய நாட்டவரும் தமிழகத்தோடு தொடர்புகொள்ள விழைந்தனர். இவர்கள் வெறும் வணிகத் தொடர்போடு நில்லாமல் தம் சமயத்தையும் பரப்ப முற்பட்டனர். சமயப் பிரசாரத்திற்காகக் கிறிஸ்துவ மதப் பாதிரிமார்களையும் உடன் அழைத்து வந்தனர். பாதிரிமார்கள் கிறிஸ்தவத்தைப் பரப்பும் தொண்டினைச் செய்தனர்.
சங்ககாலத்தில் சிறந்திருந்த சைவ, வைணவ சமயங்கள், சங்கம் மருவிய காலத்தில் களப்பிரர் வருகையால் சிறப்புக் குன்றிப்போக, சமண பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. மீண்டும் பக்தி இயக்கத்தினால் பல்லவர்கால முதல் நாயக்கர் காலம் வரை சைவ, வைணவ சமயங்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது. இசுலாமியர் ஆட்சியால் இசுலாம் சமயமும் பரவியது. அடுத்து ஐரோப்பியர் வருகையால் கிறிஸ்தவம் பரவி வேரூன்றியது. வாணிகத்திற்காக வந்தவர்கள் நாட்டை ஆளவும் தலைப்பட்டனர். அதிலும் ஆங்கிலேயர் சாதுரியமாக இந்தியாவையே அடிமைப்படுத்தி ஆளத் தலைப்பட்டனர். தமக்கு ஆளுகைக்கு உட்பட்ட இந்தியாவில் தம் சமயத்தைப் பரப்ப முயன்றனர். சிறப்பாகத் தமிழகத்தில் தம் பணியைச் செய்தனர். இப்பணியில் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதலில் தமிழைப் பயின்றனர். பயிலப்பயில் பைந்தமிழின் இனிமையில் தம்மை மறந்து மனதைப் பறிகொடுத்து தமிழ்த் தொண்டு செய்யத் தலைப்பட்டனர். ஐரோப்பியர் வருகையால் தமிழ் பெற்ற நலன்கள் பல. இவ்வைரோப்பியர் தம்மை மறந்த நிலையில் தமிழுக்குத் தொண்டு செய்கிறோம் என்பதை அறியாமல் தமிழுக்குத் தொண்டு செய்தனர். ஆனால் ஐரோப்பியப் பாதிரிமார்களால் மதமாற்றம் செய்யப் பெற்ற தமிழ்க் கிறிஸ்தவர்கள் அறிந்தே தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று உணர்ந்தே தொண்டு செய்தனர்.
இவ்வாறாகக் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் தமிழ்த்தொண்டு செய்து அழியாப் புகழ் பெற்றனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் - ராபர்ட்-டி-நொபிலி (Robert-de-Nobili), வீரமாமுனிவர், சீகன்பால்கு ஐயர், எல்லீஸ்துரை, கால்டுவெல் போன்ற அயல்நாட்டவரும், H.A கிருட்டினப்பிள்ளை, வேதநாயகம் பிள்ளை, வேதநாயக சாஸ்திரி, சாமுவேல் பிள்ளை போன்ற உள்நாட்டுக் கிறிஸ்தவர்களும் ஆவர்.
தத்துவ போதகர் (1577-1656)
இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர் 1606-ல் தமிழகம் வந்தார். இயேசுசபைக் குருவான இவரது இயற்பெயர் இராபர்ட்-டி-நொபிலி (Robert-de-Nobili) ஆகும். உயர்குல இந்துக்களைக் கிறிஸ்தவராக்கும் நோக்கத்தோடு வந்ததால், தனது நடை உடை பாவனைகளிலும் மாற்றம் தேவை என்பதை உணர்ந்து, அந்தணர்களைப் போன்று தானும் உடையுடுத்துப் பூணூல் அணிந்து வாழத் தொடங்கினார். மதுரையில் சபை நிறுவி 45 ஆண்டுகள் சமயப்பணி புரிந்தார். தத்துவ போதகர் எனத் தம் பெயரை மாற்றிக் கொண்டு தமிழ்நாட்டுத் துறவி போல் வாழ்ந்து வந்தார். மதச் சார்புடைய வடமொழி கலந்த பல தமிழ் உரைநடை நூல்களை இயற்றினார். மதுரையில் வாழ்ந்த இவர் 1656-ல் மைலாப்பூரில் மறைந்தார். தமிழ் உரை நடையைச் செப்பம் செய்த சிறப்புக்குரியவர்.
இயற்றிய நூல்கள்
- சேசுநாதர் சரித்திரம்
- மந்திரமாலை
- தத்துவக் கண்ணாடி
- புனர்ஜென்ம ஆட்சேபம்
- ஞானதீபிகை
- நீதிச் சொல்
- ஞானோபதேச காண்டம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட உரைநடை நூல்கள் எழுதியுள்ளார். ஆனால் இவற்றுள் பல அச்சேறாத காரணத்தால் அழிந்துபட்டன.
- தமிழ் போர்ச்சுக்கீசிய அகராதி ஒன்றும் தொகுத்துள்ளார். இவர் ஒரு முறை துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளுடன் சமயவாதம் செய்ததாகவும் தெரிகிறது.
வீரமாமுனிவர் (1680-1746)
இவரும் இத்தாலி நாட்டவரே. இவரது இயற்பெயர் கான்ஸ்டண்டின் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi). இவர் கி.பி. 1700-ல் தமிழகம் வந்து மதுரையில் தங்கி அங்கு சுப்ரதீபக் கவிராயரிடம் 20 ஆண்டுகள் தமிழ் பயின்றார். தமிழோடு தெலுங்கு, வடமொழி ஆகிய மொழிகளையும் பயின்றார். தனது முப்பதாவது வயதில் தமிழ்நாடு வந்து ஏறக்குறைய 37 ஆண்டுக் காலம் தமிழகத்தில் மதப்பணி புரிந்த ஏசுசபைக் குரு ஆவார். இத்தாலி நாட்டவரான இவர் தனது தாய் மொழியான இத்தாலி மொழியோடு ஏனைய கிரேக்கம், ஃப்ரென்ச், இலத்தீன், எபிரேயம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். சந்தா சாகிப் அவர்களால் பெரிதும் பெருமைப்படுத்தப்பட்டவரான இச்சான்றோர் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுகள் அநேகமாகும்.
எழுத்துச் சீர்திருத்தம்
'எ' கர ‘ஓ’ கரக் குற்றெழுத்துக்கள் மேலே புள்ளி யிட்டும் நெட்டெழுத்துக்கள் புள்ளி இடாமலும் எழுதப் பட்டு வந்தன. இதனால் வந்த தடுமாற்றத்தை மாற்ற இவரே 'எகர', 'ஓ' கரங்களுக்குக் கீழே கோடிட்டும், சுழித்தும் 'ஏ' நெட்டெழுத்துக்களை உருவாக்கித் தந்தார்.
ஒற்றைக் கொம்பு என வழங்கப்படுகின்ற ெ
எழுத்து ஒன்றே முதலில் பழக்கத்தில் இருந்தது. இக்கொம்பெழுத்துக்களின் மீது புள்ளி வைத்து (கெ
, செ
, டெ
) எழுதினால் குற்றெழுத்துக்களாகவும், புள்ளி பெறாமல், கெ
, செ
, டெ
என்று எழுதப்படின் நெட்டெழுத்துக்களாகவும் கொள்ளப்பட்டன. இதனால் ஏற்பட்ட குழப்பத்தையும் இவரே நீக்கினார். குற்றெழுத்துக்களுக்குக் கொம்பிடும் போது புள்ளி இடாமலும், கொம்பின் மேலே சுழித்து ே
என்று எழுதுவதன் மூலம் நெடிலையும் வேறுபடுத்திக் காட்டினார். இம்முறையே இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது என்பது இவரின் தமிழ்த் தொண்டிற்குச் சிறந்த சான்றாகும்.
இலக்கண நூல்
ஐந்திலக்கண நூலான 'தொன்னூல் விளக்கம்' என்னும் இலக்கண நூலை யாத்தளித்தார். இதன் சிறப்பு நோக்கி இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்று அனைவரும் பாராட்டிக் கூறினர்.
உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் காணப்படும் தமிழ் மொழி இலக்கணத்தை முறையே 'கொடுந்தமிழ்', 'செந்தமிழ் இலக்கணம்' என்று எழுதி அதனை இலத்தீன் மொழியிலும், ஆங்கில மொழியிலும் மொழி பெயர்த்தளித்துள்ளார். இவரது இவ்வாராய்ச்சித் திறம் G.U. போப் அவர்களால் பெரிதும் பாராட்டப் பட்டுள்ளது. டாக்டர். கால்டுவெல் ஒப்பிலக்கண ஆராய்ச்சிக்கு இவரது இம்முயற்சி பெரிதும் துணை புரிந்துள்ளது.
மொழிபெயர்ப்பு நூல்
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்துள்ளார். இது உலகப் புகழ் பெற்ற மொழிபெயர்ப்பாக விளங்குகின்றது.
அகராதி நூல்கள்
சதுரகராதி எனும் அகராதி நூலை வெளியிட்டுப் பிற்கால அகராதி நூல்களுக்கெல்லாம் வழிகாட்டினார். இதில் பெயர், பொருள், தொகை, தொடை எனும் நான்கு அதிகாரங்களை அமைத்துச் சதுரகராதி என்று பெயரிட்டழைத்தார்.
- தமிழ் இலத்தீன் அகராதி: இந்நூலில் 900 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் தந்துள்ளார். போர்த்துகீசியம்-தமிழ்-இலத்தீன் அகராதி ஒன்றும் எழுதியுள்ளார். இவரது இவ்வகராதிகள் போர்த்துகீசியர் மற்றும் இத்தாலியரும் தமிழைக் கற்கப் பேருதவி புரிந்தன.
உரைநடை நூல் - பராமார்த்த குரு கதை
நயமும், நகைச்சுவையும் நிரம்பிய இந்நூல் சிறந்த கதை இலக்கியமாகும். தமிழில் முதன்முதலாகத் தோன்றிய தலைசிறந்த ஏளன (Satire) இலக்கியமாக இது திகழ்கின்றது. கற்றோரும், மற்றோரும் ஒருசேரப் போற்றும் பெருமைக்குரியது. இந்நூல் தெலுங்கு, கன்னடம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய அயல்மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளமை இதன் பெருமையைப் புலப்படுத்தும். மேலும் வேதியர் ஒழுக்கம், வேதவிளக்கம், பேதகம் மறுத்தல், லூத்தர் இனத்தியல்பு போன்ற பல உரைநடை நூல்கள் எழுதி உரைநடைத் தமிழை வளர்த்தார்.
செய்யுள் நூல்கள் - தேம்பாவணி
சேக்கிழாரின் பெரியபுராணம் போல, கம்பர் சிநதாமணி போன்று கிறிஸ்துவமதச் சார்புடைய காப்பியம் ஒன்று செய்ய விழைந்தார். இதன் விளைவே இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரின் வரலாற்றைக் கூறும் 'தேம்பாவணி" ஆகும். கம்பரது கவிநலம் செறிந்த இந்நூலைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினார். அவ்வமயம் இந்நூலின் சிறப்பும் பெருமையும் கண்டு மகிழ்ந்த சான்றோர் இவருக்கு 'வீரமாமுனிவர்' என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தனர்.
தேம்பாவணி நூல் மூன்று காண்டங்களையும் 3615 விருத்தப் பாக்களையும், 36 படலங்களையும் கொண்ட காவியமாகும். இக்காப்பியத்தின் கவிச்சுவையிலும், கருத்துச் சுவையிலும் மனம் பறிகொடுத்த சான்றோர் பலர் இதனைப் பலபடப் பாராட்டியுள்ளனர்.
கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் 'சாரமாம் தேம்பாவணி யினைத் தொடினும், தமிழ் மணம் கமழும் என்கரமே' என்று பாராட்டியுள்ளார்.
திரு பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் - 'சீவக சிந்தாமணிக்கு இணையான காவியமாகும் இது' என்று போற்றுகின்றார்.
பிஷப் கால்டுவெல் அவர்கள் - 'தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த நான்கு காவியங்களுள் தேம்பாவணியும் ஒன்று' - என்று கூறுகின்றார்.
- திருக்காவலூர்க் கலம்பகம்: திருக்காவலூரில் எழுந்தருளியுள்ள தேவமாதாவின் மீது பாடப்பட்ட இன்பம் செறிந்த நூலாகும். இதில் 101 பாக்கள் அடங்கியுள்ளன.
- கித்தேரி அம்மாள் அம்மானை: போர்த்துகீசிய நாட்டு வேதசாட்சியான கித்தேரி அம்மாள் மீது பாடப்பட்டுள்ள இந்நூல், இனிய எளிய நடையில் பாமரரும் படித்தின்புறக் கூடிய தன்மையதாக அமைந்துள்ளது.
- அடைக்கல நாயகி வெண்பா: தஞ்சையை ஆட்சிபுரிந்து வந்த மராட்டிய மன்னனால் துரத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த திருக்காவலூர் தேவ மாதாவின் பேரில் பாடப்பட்டதாகும்.
- தமிழ்ச்செய்யுள் தொகை: இது தமிழிலுள்ள நயமான நீதி நூல்களின் தொகுப்பு ஆகும்.
- பிற நூல்கள்: இவை தவிர, தேவாரப் பதிகம் போன்று கருணாகரப் பதிகம் எனும் நூலையும், அன்னை அழுங்கல் அந்தாதி என்ற நூலையும் எழுதிச் செய்யுள் துறையிலும் பெருந் தொண்டாற்றியுள்ளார்.
'தேம்பாவணி தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மாலையாகத் திகழ்கின்றது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது; தொன்னூல் பொன்னூலாக இலங்கின்றது; சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது; வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களில் ஒருவராக விளங்குகிறார்' என்று சொல்லின் செல்வர் திரு ரா.பி.சே. இவரைப் பாராட்டியுள்ளார்.
போப்பையர் (1820-1870) (Rev. G.U.Pope)
ஆங்கில நாட்டைச் சேர்ந்த இவர் திருநெல்வேலி, தஞ்சாவூர், உதகமண்டலம் முதலிய இடங்களில் தங்கித் தமிழ்த் தொண்டு புரிந்தார். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பள்ளிக் கூடங்களையும், சமயப்பள்ளி (Mission) களையும் நிறுவினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணி புரிந்து மேலை நாட்டவர்க்கும் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தினார்.
- திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை முழுவதுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இவரது திருவாசக மொழிபெயர்ப்பினைக் கண்ட பேராசிரியர் சூலியன் வின்சன் அவர்கள், 'இருவினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தை யெல்லாம் வருவிளை யாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர்' என்று பாராட்டியுள்ளார்.
- புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களில் சில பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
- தமிழ்ச் செய்யுள்கள் பலவற்றைத் திரட்டி, 'தமிழ்ச் செய்யுள் கலம்பகம்' என்னும் நூலாக வெளியிட்டார்.
- 'இங்கிலாந்து தேச சரித்திரம்' எனும் சிறந்த உரைநடை நூலை எழுதியுள்ளார்.
- Elementary Tamil Grammar, Poets of the Tamil Lands, Extracts from Purananooru & Purapporul Venbamalai, The Lives of the Tamil Saints போன்ற இலக்கிய நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
- மணிமேகலைக் கதையை ஆங்கிலத்தில் உரை நடையாக எழுதியுள்ளார்.
- Royal Asiatic Quarterly, The Indian Magazine போன்ற ஆங்கில இலக்கிய இதழ்களில் தமிழின் பெருமையை விளக்கும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
ஆங்கில நாட்டில் பிறந்தவராயினும் தமிழ் மாணவனாகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்த பெரியார், தனது கல்லறையிலும் 'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று குறிக்கச் செய்தார். தமிழில் மொழிபெயர்ப்புத் துறைக்கு அடிக்கல் நாட்டியவர் இவரே. Royal Asiatic Society இவருக்கு 'வேத சாஸ்திரி' எனப் பட்டம் வழங்கியது.
கால்டுவெல் (1815-1891)
அயர்லாந்து நாட்டினரான இவர் 1838-ல் சமயத் தொண்டாற்றத் தமிழகம் வந்தார். தனது தமிழ்ப் பணியைத் திருநெல்வேலியில் தங்கித் தொடங்கினார். மதுரையிலும் திருநெல்வேலியிலும் அரிய தமிழ்ப் பணியோடு சமயப் பணியும் புரிந்தார். 'திருநெல்வேலி சரித்திரம்' என்னும் ஆங்கில நூலையும், 'நற்கருணைத் தியானமாலை', 'தாமரைத் தடாகம்', 'பரதகண்ட புராதனம்' முதலிய தமிழ் நூல்களையும் இயற்றியுள்ளார். இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, ஜெர்மானியம், துளு போன்ற பல மொழிகளைக் கற்றறிந்த மொழியறிஞர்.
இவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' (A Comparative Grammar of the Dravidian Family of Languages) என்னும் நூல் இவரது புகழை உலகிற்குப் பறைசாற்றி வருகின்றது. இதில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலான திராவிட மொழிகள் அனைத்தும் ஓரினத்தைச் சார்ந்தவை என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.
திருநெல்வேலியில் இடையன்குடியில் தங்கித் தான் ஒருவராகவே ஒரு லட்சம் பேரைக் கிறிஸ்துவராக்கி வரலாறு படைத்த பெருமைக்குரியவர். இவ்வாறு சமயப்பணியும், இலக்கியப் பணியும் புரிந்த இவரே, தமிழகத்தில் இன்று வளர்ந்து செழித்துள்ள மொழியியல் ஆராய்ச்சிக்கு வித்திட்ட வித்தகராவார். இவரது ஒப்பிலக்கணப் பணிக்காகச் சென்னைப் பல்கலைக் கழகமும் ராயல் ஏசியாடிக் சொசைடியும் இணைந்து 'இலக்கிய வேந்தர்', 'வேத விற்பன்னர்' என்னும் பட்டங்களை வழங்கின.
சீகன் பால்கு ஐயர் (Ziegenbalg) (1683-1719)
ஜெர்மன் நாட்டு டேனிஷ் மிஷனைச் சேர்ந்த இவர் 1709-ல் தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தார். அங்கு எல்லப்பா என்பவரிடம் தமிழ் பயின்றதுடன் அங்கேயே தங்கி தன் மதப் பணியைச் சிறப்புறச் செய்து வந்தார். இவரே தமிழ்நாட்டில் முதன் முதலாக புரோட்டஸ்டண்டு கிறிஸ்துவ மதத்தைப் போதித்த குரு ஆவார்.
தமிழகத்தில் முதன் முதலாக ஒரு அச்சுக் கூடம் நிறுவியவர் இவரே. இதன் மூலம் ஏழை எளியவரும் படித்துப் பயன் பெறத்தக்க வகையில் அச்சுப் புத்தகங்களை அச்சிட்டுக் கொடுத்தார். அவ்வமயம் காகிதத் தட்டுப்பாடு ஏற்பட அதையும் சரிகட்ட பொறையாறு எனுமிடத்தில் பெரும் பொருட்செலவில் ஒரு காகிதத் தொழிற்சாலையும் நிறுவினார். இவ்வாறு இந்தியாவிலேயே முதன்முதலில் காகிதத் தொழிற்சாலை நிறுவிய பெருமைக்குரியவர் இவர். கிறிஸ்தவ வேதமான பைபிளைத் தமிழ்ப்படுத்தியுள்ளார். தமிழ்/இலத்தீன் ஆகிய இரு மொழிகளுக்கும் பொதுவாக வழங்கும் பல சொற்களை விளக்கும் தமிழ் இலத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு (Comparative Study of Tamil and Latin Grammar) என்னும் ஆய்வு நூலையும், தமிழ் இலத்தீன் அகராதி ஒன்றும் எழுதியுள்ளார்.
எல்லிஸ் துரை (Francis Whyte Ellis)
இவர் தமிழிலும், வடமொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்று விளங்கிய ICS பட்டம் பெற்று சென்னை நகரக் கலெக்டராகப் பணிபுரிந்து வந்தார். அரியதும் சிறந்ததுமான தமிழ்ச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாப்பதில் பேரார்வம் உடையவராய்த் திகழ்ந்தார். திரு முத்துசாமிப் பிள்ளை அவர்களைக் கொண்டு ஏடு சேர்க்கும் பணியைச் செவ்வனே செய்து வந்தார். இவரைக் கொண்டே தமிழ்த் தொண்டில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிடச் செய்தார். மேலும் வீரமா முனிவரின் தேம்பாவணியை முயன்று தேடி வெளியிடச் செய்தார்.
திருக்குறளின் முதல் 13 அதிகாரங்கட்குப் பண்டைத் தமிழ் நூல்களிலிருந்து பல மேற்கோள்கள் காட்டி ஆங்கிலத்தில் அரிய உரை ஒன்று எழுதியுள்ளார். ராமச்சந்திரக் கவிராயரிடம் கல்வி பயின்ற சிறந்த கல்வியாளரான இவர், வள்ளுவருக்கு, வள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசு வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். வீரமாமுனிவரின் நூல்களுக்கு மறு பதிப்பு போட்டார். தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீருக்காகப் பல கிணறுகள் தோண்டி அதில் 'வான்சிறப்பு' எனும் அதிகாரத்திலிருந்து குறள்களை வெட்டி வைத்தார்.
இரேனியஸ் (1790-1838)
இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். டாக்டர். போப் அவர்களால் சிறந்த தமிழறிஞர் எனப் பாராட்டப் பெற்றவர். ரூத்தன் மிஷனைச் சேர்ந்த இவர் பாளையங் கோட்டையில் தங்கி சமயத் தொண்டாற்றினார். சிறந்த தமிழ் இலக்கண நூல் ஒன்று எழுதியுள்ளதாகத் தெரிகிறது. வேத உதாரணத் திரட்டு என்னும் உரைநடை நூலும் எழுதியுள்ளார். மக்களுக்குத் தன்னால் இயன்ற அளவில் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்துள்ளதாகத் தெரிகிறது.
தமது தமிழ்த்தொண்டினால் தலைசிறந்து விளங்கி தமிழிலக்கிய வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ள இவர்களைத் தவிர ஏரியல், லாசரஸ், ராட்லர், பெர்சிவல் போன்ற வேறுபலரும் தமிழ்த்தொண்டு புரிந்துள்ளனர். இவர்களுள் பெர்சிவல் சேகரித்த சொற்களைக் கொண்டு வின்சுலோ என்பார் சாந்தலர் என்பவரின் துணையுடன் பதிப்பித்துள்ள 67,000 சொற்கள் அடங்கிய பேரகராதி குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்க் கிறிஸ்தவர்கள்
முத்துசாமிப்பிள்ளை
சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைவராக இருந்தவர். எல்லீசரின் வேண்டுகோளுக்கிணங்க, பழஞ்சுவடிகளைச் சேகரித்துக் கொணர்ந்ததோடு, தமிழ்த்தொண்டில் தலைசிறந்து விளங்கிய இத்தாலியப் பெருந்தகையான வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார்.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
கருணாமிர்த சாகரம் எனும் நூலை எழுதியுள்ளார். இது இசைப் பேரிலக்கணம் என்று போற்றப்படுகின்றது.
வேதநாயகம் பிள்ளை (1826-1889)
திருச்சிக்கருகிலுள்ள குளத்தூரில் பிறந்த இவர், மாயூரத்தில் மாவட்ட முனிசீப்பாகப் பணி புரிந்தார். நேர்மையான குணமும், நிர்வாகத் திறமும் கொண்டவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மனதுக்கினிய நண்பர். 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்னும் நாவலை எழுதித் தமிழ்நாவல் துறைக்கு வித்திட்டவர். இதுவே தமிழில் தோன்றிய முதல் நாவல் இலக்கியமாகக் கருதப்படுகிறது.
45 அதிகாரங்களைக் கொண்ட, அரிய நீதிகளை உள்ளடக்கிய 'நீதிநூல்' ஒன்றும் எழுதியுள்ளார். கவிதை நூலான இது 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த அறநூல் என்று போற்றப்படுகின்றது. இவரது நண்பரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் 'நிகரில் ஞானச் சோதி நூல்' என்று இதனைப் பாராட்டி இருப்பது இதன் சிறப்பிற்குப் போதுமான சான்றாகும். இவரியற்றிய 'சர்வசமய சமரசக் கீர்த்தனம்' எனும் இசைத் தமிழ் நூல், எல்லாச் சமயத்தவரும் சமரச மனப்பான்மையோடு வாழ வேண்டும் என்ற இவரது நோக்கத்தின் பிரதிபலிப்பே ஆகும். 'பெண்மதி மாலை' என்னும் நூல் பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாங்கில் அமைந்துள்ளது. இவை தவிர தேவமாதா அந்தாதி முதலான பல நூல்களை எழுதியுள்ளார். மொத்தம் 13 தமிழ் நூல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாடல், வசனம், கீர்த்தனங்களை எளிய இனிய நடையில் எழுதி பாரதிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். நகைச்சுவை நிரம்பிய நூல்களும் எழுதியுள்ளார்.
வேதநாயக சாஸ்திரி
திருநெல்வேலியில் பிறந்தவர். ஏசு நாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு 'பெத்லகேம் குறவஞ்சி' என்ற நாடக நூலை இயற்றியுள்ளார். இந்நூலின் சிறப்புணர்ந்த சென்னை நகரத்தார் இவரைப் பெரிதும் பாராட்டினர். இதனால் மனம் நெகிழ்ந்து மகிழ்ந்த இவர் 'சென்னைப் பட்டணப்பிரவேசம்' என்ற நொண்டி நாடகத்தை இயற்றினார். மேலும் ஞான ஏற்றப்பாட்டு, ஞானக்கும்மி, ஞானத்தச்சன் நாடகம், பராபரன்மாலை, அதியானந்தம் போன்ற பல நூல்களையும் எழுதியுள்ளார்.
H.A. கிருட்டினப்பிள்ளை
திருநெல்வேலியில், ரெட்டியார் பட்டியில், வேளாளர் மரபில் 1827-ல் பிறந்தவர். மகாவித்துவான் திருப்பாற்கடல் நாதக் கவிராயரிடம் தமிழ் கற்றார். தமிழ்ப் புலமை மிக்க வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் தமிழ்ப் பண்டிதராகப் பணிபுரிந்தார். சூழ்நிலையின் காரணமாக தனது 30-ஆவது வயதில் கிறிஸ்தவராக மதம் மாறி Henry Alfred என்று பெயர் மாற்றமும் பெற்றார். அதனால் இவர் H.A கிருட்டினப் பிள்ளை என்றே வழங்கப்பட்டார்.
ஆங்கிலத்தில் John Bunyan என்பார் எழுதிய 'The Pilgrim's Progress' எனும் நூலைத் தழுவி, 'இரட்சணிய யாத்திரிகம்' என்னும் நூலை இயற்றினார். ஐந்து பருவங்களையும் ஏறக்குறைய 4000 பாக்களையும் கொண்டது இந்நூல். இந்நூலின் சிறப்பால் இவர் 'கிறித்துவக் கம்பர்' என்றும், 'மகாவித்துவான்' என்றும் போற்றப்படுகின்றார். இதன் சிறப்பை டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களும் பாராட்டியுரைத்துள்ளார். மேலும் இவர், இரட்சண்ய சமய நிர்ணயம், இரட்சண்ய மனோகரம், இரட்சண்ய குறள் போன்ற பல நூல்களும் வெளியிட்டுள்ளார்.
சாமுவேல் பிள்ளை
'தொல்காப்பிய நன்னூல்' என்னும் நூல் இயற்றியுள்ளார். இதில் தொல்காப்பியத்திற்கும், நன்னூலுக்கு முள்ள ஒற்றுமை வேற்றுமைகள் விளக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பியர்களான இவர்களது வருகையால்தான் அச்சுப் பொறி அறிமுகமானது; நெருடல் மிக்க நிகண்டுகள் அறிவு பூர்வமான அகராதிகளாக உருமாறின; எளிமை மிகுந்த உரைநடைத் தமிழ் வளர்ந்தது; எழுத்துச் சீர்திருத்தம் ஏற்பட்டது; கதைகள், கட்டுரைகள், நாவல்கள், நாடகங்கள் போன்ற இலக்கியப் பிரிவுகள் அறிமுகமாகி வளர்ச்சி கண்டன; இதழ்கள் தோன்றின. எனவே இவ்வைரோப்பியரான கிறித்தவர்களின் வருகையால்தான் தமிழ் மறுமலர்ச்சி கண்டது என்றே கூறவேண்டும்.