சிற்றிலக்கிய வரலாறு
நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சோழராட்சிக் காலம் போன்று காப்பியங்களும் புராணங்களும் தோன்ற வில்லை. ஆயினும் பள்ளு, உலா, தூது, கலம்பகம் சிறு பிரபந்தங்களும், கோயில்களைப் பற்றிய சிறு தல புராணங்களும் தோன்றின. பிரபந்தம் என்பது வடமொழிச் சொல்; தமிழில் சிற்றிலக்கியங்கள் என்று வழங்கப்படுகின்றது. செய்யுள், யாப்பு எனும் சொற்களைப் போன்றே பிரபந்தம் என்ற சொல்லும் நன்கு கட்டப் பட்டது என்ற பொருளுடையதாகும். பிரபந்தங்கள் 96 என்பது வழக்கு. இதனை ஒட்டி வீரமாமுனிவர் தனது சதுரகராதியில் 'பிரபந்தம் 96 வகை' என்று குறிப்பிடுவர். இப்பிரபந்தங்களின் இலக்கணம் பற்றிப் பிற்காலத்தில் தோன்றிய பன்னிரு பாட்டியல், வச்சணந்தி மாலை என வழங்கும் வெண்பாப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் போன்ற பாட்டியல் நூல்கள் விரித்துரைக்கின்றன. ஆனால் இவற்றுள் கூறப்படாத சிற்றிலக்கியங்கள் சிலவற்றை இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
பாட்டியல் நூல்கள்
தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே
எனும் தொல்காப்பிய சூத்திரம் குறிப்பிடும் விருந்து என்னும் வனப்பு அறிஞர்களின் கற்பனை மற்றும் படைப்புத்திறனுக்கு ஏற்றவாறு புதிய புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. அவ்வகையில் தமிழிலுள்ள ஐம்பெரும் இலக்கணப் பிரிவுகளுள் ஒன்றாக விளங்கும் யாப்பு என்னும் இலக்கணவகையிலிருந்து கிளைத்தெழுந்த உட் பிரிவு பாட்டியல் என்னும் இலக்கணமாகும். பாட்டின் இயல்புகளை வரையறை செய்வதால் பாட்டியல் எனப் பெயர் பெற்றுள்ளது. இது தமிழில் வழங்கும் இலக்கிய வகைகளுக்கு இலக்கணம் கூறுகின்றது. அதிலும் சிறப்பாகச் சிற்றிலக்கிய வகைகளுக்கு இலக்கணம் வரையறுத்துள்ளது. பல்வகை வேறுபாடுகளோடு பல்கிப் பெருகிய பல்வேறு புதிய இலக்கியங்களின் வகை வரையறை இலக்கணத்தை செய்யும் முயற்சியில் முகிழ்த்தவையே இப்பாட்டியல் நூல்கள்.
பாட்டியல் நூல்களுள் காலத்தால் முற்பட்டது பன்னிரு பாட்டியல். முழுமையாகக் கிடைக்கும் பாட்டியல் நூல்களுள் ஒன்றான இது 62 பிரபந்த வகைகள் பற்றிக் குறிப்பிடுகின்றது. 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குணவீர பண்டிதரால் இயற்றப்பட்ட வெண்பாப் பாட்டியல் எழுந்தது. இது 55 பிரபந்தங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. 14-ஆம் நூற்றாண்டில் 53 வகை பிரபந்தங்கள் பற்றிக் குறிப்பிடும் நவநீதப் பாட்டியல் நவநீதநாடன் என்பவரால் இயற்றப்பட்டது. 16-ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரின் சிதம்பரப் பாட்டியலும், பிரபந்த மரபியலும் தோன்றின. 17ஆம் நூற்றாண்டில் வைத்தியநாத தேசிகரால் இலக்கண விளக்கம் இயற்றப் பட்டது. இது பாட்டியலை யாப்பின் ஒரு பகுதியாக ஏற்றுக் கூறியது. 18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவரின் தொன்னூல், சதுரகராதி ஆகியவை தோன்றின.
சதுரகராதியில் பாட்டியல் இலக்கணம், அகராதி முறையில் அமைந்துள்ளது. பிரபந்த மரபியல், பிரபந்த தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியவை 90 வகை பிரபந்தங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. சங்க காலத்தைச் 'சங்க காலம்' என்றும், இடைக்காலச் சோழர் காலத்தைக் 'காப்பிய காலம்' என்றும் அவ்வக்கால கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களின் மேலோங்கிய தன்மையால் சிறப்பித்துக் கூறுவதுபோல கி.பி 1350 முதல் ஆட்சிபுரிந்த நாயக்கர் காலத்தைச் 'சிற்றிலக்கிய காலம்' என்று கூறலாம்.
சிற்றிலக்கியங்கள் அகம் பற்றியன, புறம் பற்றியன, பத்தி பற்றியன எனப் பிரிவுகளாகப் பகுத்து பல நோக்கத்தக்கன. இவற்றுள் தலைமை வாய்ந்தவையாய்க் காணப்படுவன அந்தாதி, பிள்ளைத்தமிழ், பரணி, கோவை, உலா, மாலை, தூது, பள்ளு, குறவஞ்சி என்பனவாம். இச்சிற்றிலக்கியங்கள் எல்லாம் தொல்காப்பியம் கூறும் ‘விருந்து' எனும் வனப்பினுள் அடங்கும்.
தூது
தொல்காப்பியர் காலத்திலும் இலக்கியப் பிரிவாக விளங்கிய ஒன்று தூது எனும் சிற்றிலக்கியம். தன் கருத்தைப் பிறிதொருவருக்குத் தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக அனுப்புவது 'தூது'. இத்தூது அகத்தூது, புறத்தூது என இருவகைப்படும். புறத்தூதிற்குச் சிறந்த சான்றாகத் திகழ்வது புறநானூற்றில், அதியமான் சார்பாகத் தொண்டைமானிடம் சென்ற தூதாகும். அகத்தூதாவது - காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைவி தலைவனிடம் தூது அனுப்புவதாகும். பேசும் ஆற்றலும், கேட்கும் ஆற்றலும் அற்ற பொருட்களையும் தூதாக அனுப்புதல் வழக்கமாகும். இதனை இலக்கண அறிஞரும் ஏற்றுக் கொண்டனர்.
சொல்லா மரபின்அவற்றொடு கெழீஇச் செய்யா மரபில் தொழில் படுத் தடக்கியும்
என்று தொல்காப்பியமும்,
கேட்குந போலவும் கிளக்குந போலவும் இயக்குந போலவும் இயற்றுந போலவும் அஃறிணை மருங்கினும் அறையப் படுமே.
என்று நன்னூலும்,
பயில் தருங் கலிவெண்பாவினாலே உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும் சந்தியில் விடுத்தல் முந்துறு தூது
என்று இலக்கண விளக்கமும் கூறும்.
அகத் தூது
தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி, தனது காதல் துன்பத்தைத் தலைவனுக்கு உரைத்து வா என்றோ, தூது உரைத்து மாலை வாங்கி வா என்றோ உயர்திணை அல்லது அஃறிணைப் பொருளைத் தூதாக அனுப்புவது தலைவி அகத்தூது இலக்கணமாகும். அது பெரும்பாலும் தலைவனிடம் தூது அனுப்புவதாகவே அமைந்திருக்கும். மிக அரிதாகத் தலைவன் தலைவியிடத்துத் தூது அனுப்புவதும் அமைந்திருக்கும். 'விறலிவிடு தூது' என்ற தூது தலைவன் தன் மனைவியிடத்து அனுப்பும் தூதாகும். முன்பு அன்னம், மயில், கிளி, பூவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு எனும் பத்துமே தூதுவிடும் தகுதியுடைய பொருள்களாகக் கருதப்பட்டன. காலப் போக்கில் பணம், புகையிலை, நாரை, நெல், மான், செருப்பு என்பனவும் தூதுப் பொருள்களாக இடம் பெறத் தொடங்கின. ஆனால் இதுவரைத் தோழி அல்லது பாங்கி விடு தூது நூல் எதுவும் கிடைக்கவில்லை.
இலக்கியத்தில் தூது பெறும் இடம்
சிற்றிலக்கிய வகையாகச் சிறந்து வளர்ந்துள்ள தூது, புராண காப்பியங்களிலும் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது. நளவெண்பா அன்னத்தின் தூதினைச் சிறப்பாகக் கூறுகின்றது. இது அகத்தூது. இராமாயணத்தில் அனுமன் தூதும், அங்கதன் தூதும் இடம் பெற்றுள்ளன. பாரதத்தில் கண்ணன் தூதும், கந்த புராணத்தில் 'வீரவாகுத்தேவர்' தூதும் புறத்தூதிற்குச் சிறந்த சான்றுகளாகும். கலம்பகம், அந்தாதி ஆகிய சிற்றிலக்கியங்களிலும் ஓர் உறுப்பாகத் தூது இடம் பெற்றுள்ளது. பக்தி இலக்கியமும் தூதினைக் கையாண்டிருப்பதைத் திருஞான சம்பந்தர், மணிவாசகர் ஆகியவர்களின் பாடல்களில் காணலாம். வைணவப் பெரியாரான சடகோபரும் தனது திருவாய் மொழிப் பாசுரங்களில் தலைமகள் தூதுவிடும் துறையமைந்த பாசுரங்களில் பூவை, குயில், அன்னம், நாரை ஆகிய பொருட்களைத் தூது அனுப்புவது சிறந்து விளங்கக் காணலாம்.
சிறந்து விளங்கும் சில தூது நூல்கள்
கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் பாடிய ‘நெஞ்சுவிடு தூது’, பலபட்டடைச் சொக்கநாதப் புலவரின் 'அழகர் கிள்ளை விடு தூது’, சுப்ரதீபக்கவிராயரின் 'கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது’, கச்சியப்ப முனிவர் இயற்றிய வண்டுவிடுதூது, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமிர்தம் பிள்ளை என்பவரால் எழுதப்பட்ட 'தமிழ்விடு தூது' முதலியன. இவை தவிர ஆசிரியர் பெயர் தெரியாத நிலையில் 'தமிழ்விடு தூது' ஒன்று வழக்கிலிருந்து வருகிறது.
தமிழ்விடு தூது
இதன் ஆசிரியர் யார் என்பதும், இவரது காலம் எது என்பதும் தெரியவில்லை. ஆனால் நூலின் கருத்தினைக் கொண்டுநோக்கும்பொழுது இதன் ஆசிரியரின் தமிழ்ப் பற்றும், பக்தியும் புலனாவதோடு, சைவத்தையும், தமிழையும் தனது இரு கண்களாகக் கொண்டிருந்த உண்மையும் புலனாகின்றது.
தமிழ் வளர்த்த மதுரையில் குடிகொண்டிருக்கும் சொக்க நாதர் மீது காதல் கொண்ட தலைவி, தன் காதலைச் சொக்கருக்கு எடுத்துரைக்கத் தமிழைத் தவிர வேறெதனைத் தேர்ந்தெடுக்க முடியும்? இவ்வாறு தமிழ் வளர்த்த மதுரைவாழ் தலைவனிடத்துத் தமிழைத் தூதாக அனுப்புவதே 'தமிழ்விடுதூது'. தலைவி தமிழின் பெருமையையும் சிறப்பையும் விளக்கிக் கூறும் இப்பாடல்கள்,
உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்
என்பது போன்ற பிற்காலத் தமிழறிஞர்களின் பாடல்களுக்கெல்லாம் அடிப்படையாய் அமைந்தது எனலாம். தமிழின் பெருமையைக் கூறுமுகமாகத் தமிழின் வரலாற்றையே இதில் வடித்துக் கொடுத்துள்ளார்.
அந்தாதி
அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். அதாவது ஒரு பாடலின் ஈற்றடி சொல், அசை, சீர், எழுத்து ஆகியவற்றுள் ஒன்று அடுத்த பாடல் அல்லது அடியின் தொடக்கமாக வரப் பாடுவது. இது சொற்றொடர் நிலை என்றும் கூறப்படும். ஒலியந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, நிரோட்டயமக அந்தாதி போன்ற பலவகை அந்தாதிகள் காணப்படுகின்றன. வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகியவற்றால் இயற்றப்படுவது அந்தாதி என்பதை,
கலித்துறை வேண்டிய பொருளில் பண்பாய் உரைப்பது அந்தாதித் தொகையே
என வரும் பன்னிரு பாட்டியல் நூற்பாவினால் அறியலாம். இதில் இன்ன பொருள்தான் பாடவேண்டும் என்ற வரையறை இல்லை. பெரும்பாலும் விருத்தமே இதன் யாப்பு வடிவ மாகும். சங்க இலக்கியங்களாகிய ஐங்குறு நூற்றில் பதினெட்டாம் பத்தும், பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. அந்தாதியின் பழமையைப் புலப்படுத்தும். பக்தி இலக்கிய காலத்தில் அந்தாதிப் பாடல்கள் பல தோன்றின. திருவாசகம், தேவாரம், திவ்வியப் பிரபந்தங்களில் அந்தாதி அமைப்பைக் காணலாம். 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதியே முதல் அந்தாதி நூல் என்பர். கி.பி. 5, 6 நூற்றாண்டுகளில் இவ்விலக்கிய வகை முகிழ்ந்து மலர்ந்து மணம் பரப்பியது. முதலாழ்வார்கள் மூவரும் பாடிய மூன்று நூற்றந்தாதிகளும் திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதியும் வைணவ இலக்கியத்தில் சிறந்து விளங்கும் அந்தாதிகளாகும். சேரமான் பெருமாள் நாயனாரின் பொன் வண்ணத்தந்தாதி, நம்பியாண்டார் நம்பிகள் பாடிய திருத் தொண்டர் திருவந்தாதி, பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய திருவரங்கத்தந்தாதி, கம்பரின் சடகோபரந்தாதி, சரசுவதி அந்தாதி, வரதுங்கராம பாண்டியன் பாடிய குட்டித் திருவாசகம் எனப் போற்றப்படும் திருக்குருவைப் பதிற்றுப் பத்தந்தாதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் மட்டுமே எட்டு அந்தாதிகள் இயற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இன்னும் பக்தர்களால் பெரிதும் பக்தியுடன் ஓதப்பட்டு வருவது அபிராமிபட்டரின் அபிராமியந்தாதி. கவிச் சக்கரவர்த்தி என்று போற்றப்படும் கம்பரையே சிந்திக்க வைத்த ஏற்றப்பாட்டான நாடோடிப் பாடல்,
மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே
என்று கூறப்படுகிறது. இதனைத் தனியந்தாதிக்கு எடுத்துக் காட்டாகக் கூறுவர்.
பிள்ளைத் தமிழ்
குழவி மருங்கினும் கிழவதாகும்
என்னும் தொல்காப்பிய நூற்பா, பிள்ளைத் தமிழ் இலக்கியத் தோற்றத்திற்குச் சான்றாக விளங்குகின்றது.
ஊரோடு தோற்றமும் உரித்தென மொழிப
எனும் தொல்காப்பிய நூற்பா, தொல்காப்பியனார் காலத்திலேயே பிள்ளைத்தமிழ் நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பதை உணர்த்தும். இவ்வாறு தொல்காப்பியர் காலத்திலேயே சிற்றிலக்கிய விதை விதைக்கப்பட்டு விட்ட போதிலும், அதனைச் சிறப்பாகத் தழைத்து வளரச் செய்த பெருமை பக்தி இலக்கியங்களுக்கே உரியதாகும். பிற்காலத்தில் பெருவழக்குப் பெற்றுச் சிறந்த இச்சிற்றிலக்கிய வகையினைத் தோற்றுவித்தவர். பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வாரே ஆவார். இவர் கண்ணனைக் குழந்தையாக எண்ணித் தாலாட்டுப் பாடல்களைப் பாடியுள்ளார். இப்பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் கழி நெடிலாசிரியச் சந்த விருத்தங்களால் ஆனவையாகும்.
பிள்ளைத் தமிழ் இலக்கணம்
புலவர்கள் தாம் விரும்பும் தெய்வத்தையோ, அரசனையோ, வள்ளலையோ, சான்றோரையோ குழந்தையாகப் பாவித்துப் பாடப்படுவது பிள்ளைத் தமிழ் எனப்படும். இதனைப் பிள்ளைக்கவி என வெண்பாப்பாட்டியலும், பிள்ளைப்பாட்டு என பன்னிருபாட்டியலும் கூறுகின்றன. இது குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல் இருபத்தோராம் திங்கள் வரை ஒரு பருவத்திற்கு இரண்டு திங்கள் என வகுத்துக் கொண்டு, பத்துப் பருவங்களில் வைத்துப் பாடப்படுவது.
பிள்ளைப்பாட்டே தெள்ளிதின் கிளப்பின் மூன்று முதலாமூவேழ் அளவும் ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே
என்று பன்னிரு பாட்டியல் கூறும். இதில் ஒரு பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் 100 பாடல்கள் பாடப்படும். இவ்விலக்கியம் ஆண்பாற்பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரு வகைப்படும்.
சாற்றரியகாப்புதால் செங்கீரை சப்பாணி மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய அம்புலியே யாய்ந்த சிறுபறையே சிற்றிலே பம்பு சிறு தேரொடும் பத்து
என்னும் (வெண்பாப்பாட்டியல் செய்யுளியல்-7) பாடலின் மூலம் (காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாராணை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர்) எனப் பத்து பிரிவுகள் அடங்கியது என்பது புலனாகும். இப்பத்துப் பருவங்களும் அடங்கியது ஆண்பாற் பிள்ளைத் தமிழ் ஆகும். இப்பத்துப் பருவவங்களுள் முதல் ஏழு பருவங்கள் பெண்பாற்பிள்ளைத் தமிழுக்குப் பொதுவாகும். கடைசி மூன்று பருவங்களான சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பனவற்றிற்குப் பதிலாகக் கழங்கு, அம்மானை, ஊசல் என்னும் மூன்று பருவங்களைச் சேர்த்துக் கூறுவது மரபு. இதனை,
பின்னைய மூன்றும் பேதையர்க் காகா ஆடும் கழங்கம் மானை ஊசல் பாடுங் கவியால் வகுத்து வகுப்புடன் அகவல் விருத்தத் தாற் கினையனவாம்
என்னும் இலக்கண விளக்கப் பாட்டியல் மூலம் அறியலாம்.
பிள்ளைத் தமிழ் அமைப்பு
காப்புப் பருவம்
முதற்பருவமான காப்புப் பருவத்தில் பாட்டுடைத் தலைவனைக் காத்தருளுமாறு இறைவனை வேண்டுவர். பெரும்பாலும் திருமலைக் காப்புக் கடவுளாகக் கூறுவது மரபு. இது குழந்தையின் 3-ஆம் மாதத்திற்குரியது.
தாலப்பருவம்
தால்-நாக்கு. குழந்தையின் 5-ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் குழந்தையை நாவசைத்து ஒலி எழுப்புமாறு வேண்டுவர்.
செங்கீரை
செங்கீரை - ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி இரு கைகளையும் ஊன்றிக் கீரை அசைவது போல் ஆடுதல். 7 ஆம் மாதத்திற்குரியதான இஃது குழந்தையைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுவது.
சப்பாணி
இது 9 ஆம் மாதத்திற்குரியது. இது குழந்தையை இரு கைகளையும் கொட்டுமாறு வேண்டுவது.
முத்தம்
இப்பருவம் 11ஆம் மாதத்திற்குரியது. இது குழந்தையை முத்தம் கொடுக்கும்படியாகத் தாயும் பிறரும் வேண்டுவது.
வருகை அல்லது வாரானை
குழந்தையின் 13-ஆம் மாதத்தின் நிகழ்ச்சியைக் கூறும் இப்பருவத்தில் குழந்தையைத் தளர்நடையிட்டு வருக என அழைப்பது.
அம்புலி
15-ஆம் மாதத்திற்குரிய இப்பருவத்தில் நிலவைப் பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பர். இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் எனும் நான்கு வழிகளால் பாடுவர். இப்பருவம் பாடுதற்குக் கடினமான பருவம் என்பர். இதனால் புலவர்கட்கு 'அம்புலி புலியாம்' எனும் வாக்கு எழுந்துள்ளது.
சிற்றில்
17-ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண்குழந்தை சென்று சிதைப்பதாகக் கூறப்படும்.
சிறுபறை
19-ஆம் மாதத்திற்குரிய இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி விளையாடுதலைக் குறிக்கும்.
சிறுதேர்
21-ஆம் மாதத்திற்குரிய இதில் குழந்தை சிறுதேர் உருட்டி விளையாடுதல் குறிப்பிடப்படும். இம் மூன்று பருவங்களும் ஆண்பாற்பிள்ளைத் தமிழுக்கே உரியன.
பெண்பாற் பிள்ளைத் தமிழ் பருவங்கள்:
- நீராடல்: குழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டுதல்.
- அம்மானை/கழங்கு: கழங்கினை மேலே வீசி ஆடும்படி வேண்டுதல்.
- ஊசல்: ஊஞ்சலில் ஆடும்படிக் குழந்தையை வேண்டுதல்.
பிள்ளைத்தமிழ் நூல்கள்
கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரால் இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது பாடப்பட்டுள்ள ‘குலோத்துங்கன் பிள்ளைத் தமிழே’ முதல் பிள்ளைத் தமிழ் நூலாகக் கிடைத்துள்ளது. இது சோழர்களின் வரலாற்றினைக் கூறும் சிறந்த இலக்கியமாகும்.
கி.பி 17 ஆம் நூற்றாண்டில் குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஆகிய இரண்டும் பக்தி வரலாற்றில் பெரும்புகழ் படைத்தவையாகும்.
கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் பகழிக்கூத்தர் எழுதிய திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் 'பிள்ளைத் தமிழ்' ஆயினும் 'பெரிய தமிழ்' என்று பாராட்டப்படும் பெருமையுடையது. 'கத்தும் தரங்கம் எடுத்தெறிய' எனும் பாடலில் செந்தில் 'முத்தந் தனக்கு விலையில்லை' என்று போற்றிப் பாடும் திறம் கற்போர் நெஞ்சை நெகிழ்விப்பதாகும். சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, அலங்காரம் முதலிய சுவைகள் ஒருசேர அமையப் பெற்ற அரிய நூல் இது.
19-ஆம் நூற்றாண்டில் அழகிய சொக்கநாதர் பாடிய காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ், முகைதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ், திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ், சுந்தரமூர்த்தி பிள்ளைத்தமிழ், மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் போன்ற பிள்ளைத்தமிழ் நூல்களும் பிற்காலத்தில் தோன்றியுள்ளன.
தற்காலத்தில் பாரதிதாசன் பிள்ளைத் தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ், காமராசர் பிள்ளைத்தமிழ் என பிள்ளைத்தமிழ் நூல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
ஐந்தாண்டுக்காலம் இளமையாயிருந்து பின் திருச்செந்தூர் முருகன் திருவருளால் பேசும் திறன் பெற்ற தெய்வக் கவியான குமரகுருபரர் மதுரை மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடியருளினார். இதனைத் திருமலைநாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார். அவ்வமயம் மீனாட்சி அம்மையே அர்ச்சகர் மகள் வடிவில் சிறு குழந்தையாக வந்து மன்னன் மடியில் வீற்றிருந்து இந்நூலைக் கேட்டு தன் கழுத்திலிருந்த முத்து மாலையை எடுத்துப் புலவருக்குப் பரிசாக அளித்ததாகக் கூறுவர். அம்மையின் இச் செயலுக்குக் காரணமாக விளங்கியது வாரானைப் பருவத்தில் காணப்படுகின்ற ‘தொடுக்கும் கடவுட் பழப்பாடல்’ எனத் தொடங்கும் பாடலே என்பர்.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
இந்நூலும் குமரகுருபரர் பாடியருளியதே ஆகும். தன் ஆசிரியரான மாசிலாமணி தேசிகரின் விருப்பப்படி சிதம்பரம் செல்லப் புறப்பட்ட வழியில் வைத்தீஸ்வரன் கோயிலில் எழுந்தருளியுள்ள முத்துக் குமரனைக் கண்டு மனம் பறிகொடுத்து அவர் மீது "முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' பாடினார். இதில் முத்துக்குமரன் தந்தை சிவபெருமானுடன் விளையாடும் போது செய்யும் குறும்புகளாக ஆசிரியர் கூறுவது களிப்பூட்டுவதாக உள்ளது.
மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்துகில் மடித்தலம் நனைப்ப அம்மை மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி எம்பிரான் மார்பினில் குரவையாடி முழவுமுதிர் துடியினில் சிறுபறை முழக்கியனல் மோலிநீர்பெய்தவித்து முளைமதியை நெளியரவின் வாய் மடுத்து இளமானின் முதுபசிக்கு அறுகருத்தி விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு துகந்தெழ மிகப் புழுதியாட்டயர்ந்து விரிசடைக் காட்டினின் றிருவிழிகள் சேப்பமுழு வெள்ளநீர்த் துளையம் ஆடிக் குழவு முதிர் செவ்விப் பெருங்களி வரச்சிறு குறும்பு செய்தவன் வருகவே குரவுகமழ் தருகந்த புரியில் அருள் குடிகொண்ட குமரகுருபரன் வருகவே
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் போன்ற சிறந்த தமிழ்ச் சான்றோர்களை உருவாக்கிய நல்லாசிரியரான மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அம்பிகையின்மேல் பிள்ளைத்தமிழ் நூல்களும், முருகன்மேல் ஏழு பிள்ளைத்தமிழும், பாடியுள்ளதோடு இறையடியாரது வரலாற்றினை உரைத்த தொண்டர் தம் தொண்டரான சேக்கிழார் பெருமான் மீது ஒரு பிள்ளைத் தமிழ் பாடி பிள்ளைத் தமிழ் வரலாற்றில் ஒன்பது பிள்ளைத் தமிழ் நூல்கள் பாடிய சிறப்பிடத்தைப் பெற்றார்.
பெருங்காப்பியம் கண்ட சேக்கிழார் பெருமானின் புலமைச் சிறப்பிலும் பக்திச் செழிப்பிலும் மனம் பறி கொடுத்த பிள்ளையவர்கள் பெருஞ்சுவை பயக்கும் சேக்கிழார் பிள்ளைத் தமிழை இயற்றியுள்ளார். இதில் சேக்கிழார் பெரியபுராணம் பாடிய நோக்கம், அப் புராணத்தைக் கேட்டு மகிழ்ந்த அநபாய சோழன் அவருக்குச் செய்த மரியாதை, சேக்கிழார் பிறந்த குன்றத்தூரின் வளம் ஆகிய அனைத்தும் அழகுற விளக்கப் பட்டுள்ளன. பிறப்பு இறப்பற்றவராதலின் சிவபெருமானுக்குப் பிள்ளைத்தமிழ் பாடப்படுவதில்லை.
கலம்பகம்
பல்வகை வண்ணமும், மணமும் கொண்ட மலர்களால் கட்டப்பட்டக் கதம்பம் போன்று பல்வகை உறுப்புக்களைக் கொண்டு, அகம், புறமாகிய பொருட்கூறுகள் கலந்து வர பல்வகைச் சுவைகள் பொருந்தி வருவதால் 'கலம்பகம்' எனப் பெயர் பெற்றது என்பர். இது தெய்வங்களையோ, மக்களுள் சிறந்து விளங்குபவரையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பல்வகை உறுப்புக்களைப் பெற்று வருவதாகும்.
இதனைக் கலம் + பகம் எனப்பிரித்து - கலம் என்றால் 12 என்றும், பகம் என்றால் அதில் பாதி அதாவது 6 என்றும் கொண்டு கலம் (12) + பகம் (6) = கலம்பகம் (18) எனக்கொண்டு, 18 உறுப்புக்களையுடையது கலம்பகம் என்பது ஒரு சாரார் கூற்று. கலம்பகத்தின் இலக்கணத்தைப் பன்னிரு பாட்டியல் தெளிவாகக் கூறும் இதன் உறுப்புக்கள் - புய வகுப்பு, தவம், வண்டு, அம்மானை, மதீங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், தூது, குறம், பிச்சியார், கொற்றியார் ஆகும். இவற்றுள் புற வகுப்பு, களி, மறம் ஆகியவை புறப் பொருள் உறுப்புக்கள் எனவும் ஏனையவை அகப் பொருள் உறுப்புக்கள் எனவும் கூறப்படும். ஆனால் இவ்வுறுப்புக்கள் நூல்தோறும் மிக்கும் குறைந்தும் வருகின்றன. அந்தாதித் தொடையால் 100 பாடல்கள் வரை பாடப்படும் இந்நூலில் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பாக்களும், தாழிசை, துறை, விருத்தங்களும், மடக்கும் ஆகிய பல்வகை யாப்புகள் விரவி வரும்.
எண்ணிக்கை: கலம்பகத்தின் செய்யுள் தொகை கடவுளர்க்கு 100, முனிவர்க்கு - 95, அரசர்க்கு - 90, அமைச்சர்க்கு - 70, வணிகர்க்கு - 50, வேளாளர்க்கு - 30 எனும் அளவில் அமைய வேண்டும் என்பது விதி. இந்த அளவினை மீறி - திருக்கலம்பகம் - 110 செய்யுட்களைக் கொண்டு விளங்குகின்றது. ஆளுடைப் பிள்ளைக் கலம்பகம் - 49 செய்யுட்களையே பெற்று விளங்குகிறது.
கலம்பகங்கள் (அகம், புறம் ஆகிய துறைகள் கலந்து வர அமையப்பெற்றபோதிலும்) அவற்றுள் அகத்திணைச் செய்திகள் பெரும்பான்மையினதாகவும், புறத்திணைச் செய்திகள் சிறுபான்மையினதாகவும் இடம் பெறுதல் இயல்பு.
கலம்பக நூல்கள்
கலம்பகம் எனும் இலக்கியத்தின் தோற்றமே கி.பி. 9 ஆம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது என்பர். கலம்பக இலக்கியங்களிலேயே காலத்தால் முற்பட்டது நந்திக் கலம்பகமாகும். இதனைத் தொடர்ந்து பல கலம்பக நூல்கள் தோன்றியுள்ளன. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் என்பது சம்பந்தர் மீது நம்பியாண்டார் நம்பிகள் பாடியதாகும். இது கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடியது திருவரங்கக் கலம்பகம்; 'கலம்பகத்திற்கு இரட்டையர்' என்று சிறப்பிக்கப்படுகின்ற இரட்டையர் பாடியவை திருவாமாத்தூர்க் கலம்பகமும் தில்லக் கலம்பகமும். மதுரை சோமசுந்தரக் கடவுள் மீது குமரகுருபரர் பாடியது மதுரைக் கலம்பகம், வீரமாமுனிவர் பாடியது - திருக்காவலூர்க் கலம்பகம். மேலும் திருவெங்கைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம், அழகர் கலம்பகம், திருக் கலம்பகம் என்று பல்வேறு கலம்பக நூல்களும் தோன்றியுள்ளன.
நந்திக் கலம்பகம்: தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்தி வர்மனைப் பாராட்டிப் போற்றுவதே நந்திக் கலம்பகமாகும். இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும். இந் நந்திவர்மனின் காலம் கி.பி 825 – 850 எனப்படுவதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டே ஆகும். இதன் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனைவளமும் செறிந்த இனிய நூல். நந்தி வர்மனின் மாற்றாந்தாய் மக்கள் இவனைக் கொல்ல முயன்றபோது என்ன செய்வது என்று யோசித்ததில், அறம் வைத்துப் பாட முடிவு செய்தனர். அறம் வைத்துப் பாடப் பெற்ற நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்திவர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறி கொடுத்து நூல் முழுவதையும் கேட்க விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தணியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் துறந்தான் என்று கூறப்படுகிறது. 'நந்தி, கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்', என்னும் சோமேசர் முதுமொழி வெண்பா வரிகளும், 'கள்ளாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டு, காயம் விட்ட தெள்ளாறை நந்தி' என்னும் தொண்டைமண்டலச் சதகப்பாடல் வரிகளும் இக்கருத்தை வலியுறுத்துவனவாக உள்ளன. இதற்கேற்ப நூலிலும் பல வகைக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இந்நூலில் 144 பாடல்கள் காணப்படுகின்றன. ஆனால் அரசர் மீது பாடப்பெறும் கலம்பகம் 100 பாடல்களுடையதாக இருத்தல் வேண்டும் என்பது நியதி. எனவே இதில் உள்ள அதிகப்படியான 44 பாடல்களும் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்டதாக இருத்தல் வேண்டும் என்று கருதப்படுகிறது.
ஈட்டு புகழ் நந்தி பாண நீ எங்கையர் தம் வீட்டிருந்து பாடவிடிவளவும் - கேட்டிருந்தோம் அன்னை பிறர் நரி யென்றார் தோழி நீ என்றேன்
இது பரத்தை வீட்டுக்குச் சென்று திரும்பிய தலைவன், பாணன் ஒருவனைத் தூதுவனாகத் தலைவியிடம் அனுப்பிய போது பாணனின் தூதுரை கேட்டுச் சினம் கொண்ட தலைவி, அவனை இழித்துரைப்பதாக அமைந்துள்ளது.
தமிழுக்காகத் தன்னுயிரீந்த நந்தியின் பிரிவினைத் தாளாது கையறுநிலையாகப் பாடப்பட்டுள்ள பாடல் புலவரின் புலமைக்குச் சான்றாகத் திகழ்வதோடு நந்தியின் சிறப்பையும் செப்புவதைக் காணலாம்.
வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல்புகுந்ததுன் கீர்த்தி கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள் தேனுறு மலராள் அரியிடம் செந்தழல் அடைந்ததுன் தேகம் நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தயா பரனே!
திருவரங்கக் கலம்பகம்: வைணவ சமயத்தைச் சார்ந்த நூல்களில் இது சிறந்து விளங்குவதாகும். இதன் ஆசிரியர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஆவார். இந்நூலின் காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் கலம்பகம், அந்தாதி, ஊசல், மாலை போன்ற எட்டு நூல்களை எழுதியுள்ளார். இவ்வெட்டினையும் தொகுத்து அஷ்டப் பிரபந்தம் என்று இயம்புகின்றனர். 'அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்' என்னும் வழக்கு இதன் பெருமையை விளக்கும். அஷ்டப்பிரபந்த நூல்களுள் ஒன்றே இத்திருவரங்கக் கலம்பகமாகும். இக்கலம்பகத்தின் பாடல்கள் திருமாலிடம் ஆசிரியர் கொண்டிருந்த மாறாக் காதலை விளக்குவனவாகும்.
குறவஞ்சி இலக்கியம்
மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலவாழ் மக்கள் குறவர் எனப்பட்டனர். பெண்கள் குறத்தியர் எனப்பட்டனர். குறிஞ்சிநிலப் பெண் குறத்தியின் செயல் தலைமை பெற்றுத் திகழ்வதால் இந்நூல் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது. குறம் + வஞ்சி = குறவஞ்சி ஆயிற்று. குறக்குலத்துப் பெண் என்பது இதன் பொருள்.
குறவஞ்சி இலக்கணம்
இறப்பு நிகழ் வெதிர் வென்னுமுக் காலமும் திறம்பட வுரைப்பது குறத்திப்பாட்டே
என்பது குறவஞ்சிக்குப் பன்னிரு பாட்டியல் கூறும் இலக்கணம் ஆகும். இக்குறவஞ்சி இலக்கியம் 'குறத்திப் பாட்டு' என்றும் வழங்குவதாயிற்று. பின்னாளில் இது தரவு, கொச்சகம் முதலியவற்றுடன் சிந்து, கண்ணி ஆகிய பாவினங்களும் கலந்துவருமாறு பாடப்பெறும்.
நூல் அமைப்பு
அரசனையோ, தெய்வத்தையோ தலைவனாகக் கொண்டு இது பாடப்படும். தலைவன் உலா வரல், தலைவி பந்தடித்து விளையாடுதல், உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொள்ளுதல், காதல் மேலீட்டால் வருந்தும் தலைவி திங்கள், தென்றல் முதலியவற்றைப் பழித்தல், குறத்தி வருதல், குறத்தி தனது மலைவளம் கூறல், தலைவியின் கையைப் பார்த்து நீ விரும்பிய கணவனை அடைவாய் என்று குறிகூறுதல், குறி கேட்டு மகிழ்ந்த தலைவி, குறத்திக்குப் பரிசளித்தல், குறவன் குறத்தியைத் தேடி வருதல், குறத்தியின் அணிகலன்களைக் கண்டு ஐயுறல், குறத்தி ஐயம் தெளிவித்தல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகக் குறவஞ்சி நூல் அமையும்.
சேரி மொழியும், செந்தமிழ் வழக்கும் கலந்து வர, நாடகப் பாங்குடன் அமைந்துள்ள இசை, நாடகத் தமிழ்க் காப்பியமான இதற்குக் காப்பியத் தலைவன் தலைவி பெயரை ஒட்டியும், தலைவனது ஊரை ஒட்டியும், பெயரிடுவது மரபு. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி தலைவனின் பெயராலும், திருக்குற்றாலக் குறவஞ்சி, திருவாரூர்க் குறவஞ்சி, பெத்லகேம் குறவஞ்சி முதலியன தலைவனின் ஊர்ப் பெயராலும் பெயர் பெற்றன. இவை தவிர கும்பேசர் குறவஞ்சி, அர்த்த நாரீசுவரக் குறவஞ்சி, மீனாட்சியம்மை குறம் போன்ற பல குறவஞ்சி நூல்கள் தோன்றியுள்ளன. குறவஞ்சி நூலின் தோற்றம் பற்றிக் குமரகுருபரரின் மீனாட்சியம்மை குறத்திலே காணலாம்.
திருக்குற்றாலக் குறவஞ்சி
குற்றாலத்திற்கருகிலுள்ள மேலகரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவரது காலம் 18-ஆம் நூற்றாண்டாகும். குற்றாலக் குறவஞ்சி அரங்கேற்றம் செய்யப்பட்ட போது 'குறவஞ்சிமேடு' எனும் நிலப்பகுதியை இனாமாக அளித்ததுடன், மிகுதியான பொருளும் பரிசளித்துப் பாராட்டினார். இதன் ஆசிரியர் இதனைத் 'குறவஞ்சித் தமிழ்', 'குறவஞ்சி நாடகம்' எனும் பெயர்களால் வழங்குவர். இதுவே குறவஞ்சி நூல்களுள் தலைசிறந்த நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலாசிரியர் குற்றாலத் தலபுராணம், குற்றால மாலை போன்ற வேறு நூல்களும் இயற்றியுள்ளார்.
இந்நூலில் எளிய இனிய சொற்களையும், எதுகை மோனை எழிலையும், கற்பனை வளத்தையும், கவிதைச் சுவையையும் சுவைத்து மகிழலாம். இதன் கதைத் தலைவனாக திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கும் குற்றாலநாதர் விளங்க 'வசந்தவல்லி' எனும் வஞ்சிக் கொடியாள் தலைவியாக வருகிறாள். இதில் குற்றால நாதரின் சிறப்பு, குற்றாலமலையின் வளமும், எழிலும், வசந்தவல்லி பந்தடித்தல், குறத்தி மலை வளங்கூறல், குறத்தி குறிகூறல், குறவன் குறத்தி உரையாடல் ஆகிய பகுதிகளும் இன்பம் தருவனவாக அமைந்துள்ளன. இதன் ஆசிரியர் எண்களை வைத்துச் சொற்சிலம்பம் செய்திருப்பதைக் காணலாம். முருகனைப் பற்றிப் பாடும் பொழுது பன்னிரண்டில் தொடங்கி, ஒன்று முடிய எண்கள் இடம் பெறுமாறு பாடிஇருப்பதும்,
அஞ்சு தலைக்குள் ஆறுதலை வைத்தார் - எனது மனதில் அஞ்சு தலைக்கோர் ஆறுதலை வையார்
என்று வரும் பகுதியும் எண்களை வைத்து சொல்லின்பம் படைத்துள்ள பகுதிகளாகும்.
வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
என்பது பள்ளிப் பருவப் பிள்ளைகள் முதல் பாடிக்களிக்கும் திருக்குற்றால மலையின் வளமுரைக்கும் பாடலாகும்.