Skip to main content

இசுலாமிய இலக்கிய வரலாறு

சங்ககால முதலே அராபியரின் தொடர்பு தமிழகத்தில் நிலவி வந்துள்ளது. அரபு நாடுகளும், தமிழகமும் வாணிபத்தால் இணைந்திருந்தன. அரபு நாட்டில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் தோன்றி இசுலாம் மதத்தைத் தோற்றுவித்தார். அரபு நாட்டவர் தமிழகம் வந்து இசுலாத்தைப் பரப்பினர். இசுலாம் தமிழக மக்களையும் ஈர்த்தது. மதம் மாறினாலும் மொழி மாறாது தமிழுக்குத் தொண்டு செய்து வந்தனர். அராபியரின் செல்வாக்கினால் தமிழர்களின் சொல்வாக்கிலும் பல அராபிய, உருதுச் சொற்கள் கலந்து இணைந்து விட்டன. சபாஷ், சலாம் போன்ற சொற்களை அருணகிரிநாதர், குமரகுருபரர் போன்றோரின் பாடல்களில் காணலாம். இவை தவிர, வக்கீல், தாலுகா, ஜில்லா, முன்சீப் போன்ற 400க்கும் மேற்பட்ட பிற மொழிச் சொற்கள் தமிழில் கலந்து தமிழாகவே மாறிப் போய்விட்டன.

கி.பி. 12-ஆம் நூற்றாண்டு முதலே முகமதியர் தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தனர். வீரபாண்டிய வேந்தனின் படைத் தளபதியாகத் திகழ்ந்தவர் முகமதியரே. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர் வலிமை இழந்தபோது முகமதியர் தமிழகத்தில் புகுந்து பாண்டியரின் தலைநகரான மதுரையைக் கைப்பற்றினர். இவ்வரசியல் மாற்றம் முகமதியப் புலவர்களுக்குச் சாதகமாக இருந்தது. இசுலாமியப் புலவர்கள் பலர் தோன்றினர். இசுலாமிய நூல்களையும் தமிழாக்கினர். பதினேழாம் நூற்றாண்டு முதல் இசுலாமிய இலக்கியம் தழைத்து ஓங்கி வளர்த்துள்ளது.

முகமதியர்களும் பிற சமயத்தவரைப் போலவே புராணங்களும், சிற்றிலக்கியங்களும், படைத்துள்ளதோடு தாயுமானவர் போன்று தத்துவ நூல்களும் (பாமர யங்களும், புதிய இலக்கியங்களும்) படைத்துள்ளனர். இவ்வாறு நூல் படைத்த புலவர்களைப் போற்றிப் பாதுகாத்த புரவலர் சீதக்காதி வள்ளலாவார்.

உமறுப்புலவர்

கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் பிறந்த உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணம் 'நெஞ்சையள்ளும் சீறா' என்று போற்றப்படுகின்றது. இவர் எட்டயபுரம் அரசவைக் கவிஞரான கடிகை முத்துப்புலவரிடம் பாடம் கேட்டவர். தனது 16 ஆம் வயதிலேயே வாலைவாரிதி எனும் செருக்குமிக்க வட நாட்டுப் புலவருடன் வாதிட்டு வென்று, தன் ஆசிரியருக்குப் பின் எட்டயபுர சமஸ்தானப் புலவரானார். இரகுநாத சேதுபதியிடம் அமைச்சராய் விளங்கிய வள்ளல் சீதக்காதியால் ஆதரிக்கப்பட்டு, முகமது நபியின் 'வாழ்க்கை வரலாறு' எனும் பொருள்படும் சீறாப்புராணத்தைப் பாடியருளினார். முகமது நபியின் வாழ்க்கை வரலாறு உரைக்கும் இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம் எனும் மூன்று காண்டங்களையும் 5026 செய்யுட்களையும் கொண்டது. நாட்டுப்படலம், நகரப்படலம் எனும் சிறந்த படலங்களை அமைத்துக் கற்பனைத் திறனும் வருணனை அழகும் பொருந்த கம்பர், திருத்தக்க தேவரின் கருத்துக்கள், சொற்களைக் கையாண்டு கற்போர்க்கு இதயம் களிக்கும் வண்ணம் இதனைப் படைத்துள்ளார். இது சீதக்காதி வள்ளலின் மறைவிற்குப் பின் அவரது நண்பர் அப்துல் காசிம் மரைக்காயர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.

வண்ணக்களஞ்சியப் புலவர்

நாகூரைச் சேர்ந்த ஹமீது இப்ரகீம் எனும் இயற்பெயர் கொண்ட வண்ணக்களஞ்சியப் புலவரால் முகைதீன் புராணம் இயற்றப்பட்டது. சந்தப்பாக்களும் வண்ணப் பாக்களும் பாடுவதில் வல்லமை பெற்றுத் திகழ்ந்ததால் வண்ணக் களஞ்சியப் புலவர் என வழங்கப்பட்டார். நாகூர் தர்க்காவில் வாழ்ந்த சாது ஒருவரின் அருமை பெருமைகளை விளக்கி, முகையதீன் புராணம் என்னும் இந்நூலை எழுதி, நாகூரில் அரங்கேற்றினார். இந்நூலின் இனிமையில் மகிழ்ந்த அன்பர் இவர் விரும்பிய தன் மகளை இவரைத் தேடிப் பிடித்து மணமுடித்து வைத்தார்.

சுலைமான் நபியின் கதையைக் கூறும் 'இராசநாயகம்' என்னும் 2240 பாக்கள் கொண்ட காவியச் சுவை ததும்பும் நூலையும் 'தீன் விளக்கம்' என்னும் புராணமும் இயற்றியுள்ளார்.