Skip to main content

பத்துப்பாட்டு

எண்பாட்டுபொருள்அடியளவுபாடியவர்பாடப்பெற்றவர்
1திருமுருகாற்றுப்படைபுறம்317மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்குமரவேள்
2பொருநராற்றுப்படைபுறம்248முடத்தாமக் கண்ணியார்கரிகாலன்
3சிறுபாணாற்றுப்படைபுறம்269நல்லூர் நத்தத்தனார்ஓய்மாநாட்டு நல்லியங்கோடன்
4பெரும்பாணாற்றுப்படைபுறம்500கடியலூர் உருத்திரங்கண்ணனார்தொண்டைமான் இளந்திரையன்
5முல்லைப்பாட்டுஅகம்103நப்பூதனார்
6குறிஞ்சிப்பாட்டுஅகம்261கபிலர்ஆரிய அரசன் பிரகதத்தனுக்காக பாடியது
7பட்டினப்பாலைஅகம்301கடியலூர் உருத்திரங்கண்ணனார்கரிகாலன்
8நெடுநல்வாடைஅகப்புறம்188நக்கீரனார்பாண்டியன் நெடுஞ்செழியன்
9மதுரைக்காஞ்சிபுறம்782மாங்குடி மருதனார்தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
10மலைபடுகடாம்புறம்583பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்நன்னன் சேய் நன்னன்

அகவற்பாவால் அமைந்த பத்துப் பாடல்களின் சோவையாகும். பத்துப்பாட்டைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 8 பேர். இந்நூல் முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

திருமுருகாற்றுப்படை

  • அடி: 317
  • ஆசிரியர்: நக்கீரர்
  • பாட்டுடைத் தலைவன்: முருகன்

பத்துப்பாட்டில் முதலாவதாக அமைந்துள்ளது. ஏனைய ஆற்றுப்படையில் இருந்து வேறுபட்டது. பிற ஆற்றுப்படை நூல்கள் பொருட்செல்வம் கருதிக் குறுநில மன்னர்கள், வள்ளல்களிடம் ஆற்றுப்படுத்துவது, திருமுருகாற்றுப்படை அருட்செல்வம் கருதி முருகனிடம் ஆற்றுப்படுத்துவது.

  • யாப்பு: நேரிசை ஆசிரியப்பா
  • வேறுபெயர்: புலவராற்றுப்படை

பாட்டுடைத் தலைவன் பெயரால் வழங்கப்படும். பிற ஆற்றுப்படையில் இரண்டாம் வேற்றுமை தொக்கி வந்துள்ளது. இந்நூலில் ஏழாம் வேற்றுமை உருபு தொக்கி வந்துள்ளது. இந்நூல் ஆறு பகுதிகளை உடையது. அவை முருகனின் படைவீடுகளாகக் கூறப்படுகின்றன.

  1. திருப்பரங்குன்றம் (1 - 77 அடிகள் வரை)
  2. திருச்சீரலைவாய் (78 - 125 அடிகள் வரை)
  3. திரு ஆவினன்குடி (126-176 அடிகள் வரை)
  4. திருவேரகம் (177 - 189 அடிகள் வரை)
  5. குன்று தோறாடல் (190 - 217 அடிகள் வரை)
  6. பழமுதிர் சோலை (218 - 317 அடிகள் வரை)

இவற்றுள் குறைந்த அடி பாடிய தலம் திருவேரகம் (12 அடிகள்), அதிக அடி அளவு பாடிய தலம் பழமுதிர் சோலை. சங்க இலக்கியத் தொகை நூல்களில் இறைவனைப் பற்றிய முழுமுதல் நூலாய் விளங்குகிறது.

பொருநராற்றுப்படை

  • பாடியவர்: முடத்தாமக்கண்ணியார்
  • அடி: 248 அடிகள்
  • பாட்டுடைத் தலைவன்: கரிகால் பெருவளத்தான்

ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்ற மூவரில் ஏர்க்களம் பாடும் பொருநன் பற்றியதாகும். இவருடைய இயற்பெயர் 'கண்ணியார்' என்றும், இவருடைய கால் முடமாக இருந்தது பற்றி இவருடைய பெயருடன் முடம் என்பது இணைந்து முடத்தாமக் கண்ணியார் என்று அழைக்கப்படுகின்றார். இவர் கால் முடமான பெண்பாற் புலவர் என்று மா. ராச மாணிக்கனார் கூறுகின்றார்.

பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் வறுமையால் துன்புறும் மற்றொரு பொருநனைக் கரிகால் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. கரிகால் பெருவளத்தான் கொடைச்சிறப்புப் பற்றிச் சிறப்பாக பேசுகின்றது. இந்நூலில் பொருநன் செல்ல வேண்டிய வழிகள் பற்றிய செய்தி கூறப் பெறவில்லை.

சிறுபாணாற்றுப்படை

  • ஆசிரியர்: இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
  • அடி: 269
  • பாட்டுடைத்தலைவன்: ஓய்மாநாட்டு நல்லியக்கோடன்

இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என்ற மூவரில் யாழ்ப்பாணன் மற்றொரு யாழ்ப்பாணனை ஆற்றுப்படுத்துவது. "இன்இசை சீறியாழ் இடவயின் தழீஇ" என்ற அடியினைக் கொண்டு சிறுபாணாற்றுப்படை என்று கூறப்படுகிறது. விறலி, பாணர் பற்றிய செய்திகள் 38 அடிகளில் கூறப்பட்டுள்ளன. கடையேழு வள்ளல்களின் சிறப்பினைக் கூறுகின்றது. வறுமையைப் பற்றி இந்நூல் சித்திரித்துக் காட்டுகிறது. சிறுபாணன் செல்லக்கூடிய வழிகள் பற்றியும் வழியில் கிடைக்கும் உணவு வகைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.

note

இந்நூலில் ஐந்து வகையான யாழ்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அவை:

  1. சீறியாழ்
  2. பேரியாழ்
  3. சகோடயாழ்
  4. மகரயாழ்
  5. செங்கோட்டுயாழ்

தக்கயாகப் பரணி உரையாசிரியர் இதனைச் "சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை" என்று கூறுகின்றார்.

பெரும்பாணாற்றுப்படை

  • ஆசிரியர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  • அடி: 500 அடிகள்
  • பாட்டுடைத்தலைவன்: தொண்டைமான் இளந்திரையன்

பாடல் அடியின் அளவினைக் கொண்டும், "இடனுடை பேரியாழ் முறையுளி கழிப்பி" என்ற தொடரினைக் கொண்டும் பெரும்பாணாற்றுப்படை என்று கூறப்படுகிறது. 'பாணாறு' என்ற பெயரும் இந்நூலுக்கு உண்டு.

ஐந்திணைகளைப் பற்றிய வருணனைகளும், அந்நிலங்களில் வாழும் பலவகை இனத்தினரும் பரிசிலரை வரவேற்று விருந்தோம்பும் பண்பும் இந்நூலில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. காஞ்சிநகருக்குச் செல்லும் வழியின் இயல்புகள் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. யவணர்களோடு கொண்டிருந்த வாணிபத் தொடர்பினையும், அவர்கள் கொண்டுவந்த பாவைவிளக்கு, அன்னப்பறவை விளக்கு பற்றியும் அறிய முடிகிறது. பெண்களே உப்பு வண்டியை ஒட்டிச் சென்று உப்புவிற்று வந்துள்ளனர் என்ற செய்தியை அறியமுடிகிறது.

விருந்தோம்பல் பண்பு இந்நூலில் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

மன்னனுக்குச் சிறிதளவு இடமும், மக்களுக்குப் பேரிடமும் நல்கும் பெரும்பாணாற்றுப்படையைச் ‘சமுதாயப் பாட்டு’ எனலாம்.

— தமிழண்ணல்

முல்லைப்பாட்டு

  • ஆசிரியர்: காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
  • அடி: 103 அடிகள்

பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல். பாட்டுடைத்தலைவன் யாரும் இல்லை. அடியில் சிறியதே தவிர, சுவையில் மிக நுட்பமானது. முல்லைத் திணையின் புறமான வஞ்சித்திணையின் இயல்பு பற்றியும் இணைத்துப் பாடப்பட்டுள்ளது. முதல் 23 அடிகளில் தலைவி ஆற்றியிருக்கும் நிலையினைப் பற்றியும், அடுத்த 55 அடிகளில் தலைவன் பாசறையில் இருப்பதைப் பற்றியும், அடுத்து 10 அடிகளில் தலைவியின் அவல நிலையும், இறுதியான அடிகளில் தலைவன் வினைமுற்றித் திரும்புவது பற்றியும் கூறப்பட்டுள்ளன.

note

எந்த நாட்டைப்பற்றிய வருணனையும் இதில் கூறப்படவில்லை. இதன் வேறு பெயர் 'நெஞ்சாற்றுப்படை' என்பர்.

மதுரைக்காஞ்சி

  • பாடியவர்: மாங்குடி மருதனார்
  • அடி: 782 அடிகள்
  • பாட்டுடைத் தலைவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

அடி அளவால் மிகப்பெரிய நூல். "மதுரையைப் பாடுமாற்றான் உணர்த்திய காஞ்சியாதலால்" மதுரைக்காஞ்சி எனப் பெற்றதாக நச்சினார்க்கினியர் கூறுகின்றார். இப்புலவர் பாடியதாக வேறு பாடல் எதுவும் இல்லை. இந்நூலில் 238 அடிமுதல் 699 அடிவரை மதுரை மாநகரின் சிறப்பையும் ஐவகை நிலக்காட்சிகளையும் கூறுகின்றது.

  • யாப்பு: வஞ்சி அடி கலந்த ஆசிரியப்பாவாலானது.

நெடுஞ்செழியனுக்கு உலக இன்பம், பொருட்செல்வம், இளமை, யாக்கை நிலையாமை பற்றி விரித்துக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு என்பன போன்று இதனையும் திணையால் 'காஞ்சிப்பாட்டு' என்றும் கூறுகின்றனர். பாட்டுடைத் தலைவன் பாடியதாக ஒரு புறப்பாடல் காணப்படுகிறது.

நெடுநல்வாடை

  • ஆசிரியர்: மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரர்
  • அடி: 188 அடிகள்
  • பாட்டுடைத்தலைவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
  • திணை: வாகைத்திணை, கூதிர்ப்பாசறை

அகமும் புறமும் இயைந்த நூலாகக் கூறப்படுகிறது. தலைவிக்குப் பிரிவுத்துன்பத்தால் வாடைக்காற்று நெடியதாகவும், பாசறையில் போர் மேற்கொண்ட வேந்தனுக்கு வெற்றி பெற நல்லதாகவும் அமைந்துள்ளது. அதனால் இந்நூல் 'நெடுநல்வாடை' எனப்பெயர் பெற்றது. முல்லைப்பாட்டு போன்று தலைவி படும் துன்பத்தையும், அதே காலத்தில் பாசறையில் தலைவன் கடமையில் மூழ்கி இருத்தலும் இரண்டு காட்சிகளைச் சித்திரித்துக் காட்டுகிறது. பாட்டின் முழு அமைப்பும் கொற்றவையை வழிபட்டு வேண்டுவதாக அமைந்துள்ளது. அளபெடை வண்ணம், தாஅவண்ணம், ஒழுகிசை வண்ணம், இயைபு வண்ணம், ஒரு உ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் போன்றவை நூல்முழுதும் அமைந்துள்ளன. வாடைக்காற்றின் தன்மையை இந்நூல் சிறப்பித்துக் கூறுவது போல் வேறெந்த நூலும் கூறவில்லை. இந்நூலில் ஓவியம் குறித்து 3 இடங்களில் பேசப்படுகிறது: புனையா ஓவியம், உருவப்புல் பூ, புதுவது இயன்ற படமிசை என்பன. இந்நூலைப் புறப்பாடலாக்கிய வரி, "வேம்பு தலையாத்த நோன்காழ்".

குறிஞ்சிப்பாட்டு

  • பாடியவர்: கபிலர்
  • அடி: 261 அடிகள்
  • திணை: குறிஞ்சி
  • துறை: அறத்தொடு நிற்றல்
  • வேறுபெயர்: 'பெருங்குறிஞ்சி'

சங்க இலக்கியப் புலவர்களின் இயற்கை அறிவிற்கும் பாடும் திறத்திற்கும் ஓர் ஒப்புயர்வற்ற சான்றாக விளங்குவது இந்நூலாகும். ஆரிய அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ் அறிவித்ததற்காக இந்நூலைக் கபிலர் பாடியதாகக் கூறப்படுகிறது.

note

இப்பாடலில் 99 வகையான மலர்கள் பற்றித் தொகுத்துக் கூறப்படும் தனிச்சிறப்பினை உடையது.

இதனை ஓர் உளவியல் பாட்டாகும் என்றும் 'காப்பியப் பாட்டு' எனலாம்.

— தமிழண்ணல்

பரிபாடல் தவிர்த்த பிற நூல்களில் எல்லாம் இந்நூல் ஆசிரியர் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன. அதிகமான பாடல் பாடியவரும் இவரே. அதிகமாகப் பாடப்பட்ட திணை குறிஞ்சித் திணையே.

பட்டினப்பாலை

  • பாடியவர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  • அடி: 301 அடிகள்
  • பாட்டுடைத்தலைவன்: கரிகால் பெருவளத்தான்
  • யாப்பு: இடையிடையே ஆசிரியவடிகள் விரவி வந்த வஞ்சி நெடும்பாட்டாகும்.

கடல்சார்ந்த இடம் என்பதால் இந்நூல் நெய்தல் நில மக்களின் வாழ்க்கையை அதிகமாகக் கூறுகிறது. காவிரிப் பூம்பட்டினத்தின் சிறப்பினைக் கூறுகின்றது. ஏறத்தாழ ஏழே அடிகளில் பாலைத்திணைக்குரிய செலவழுங்கல் துறை இப்பாடலில் இடம்பெற, ஏனையனவெல்லாம் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பினையும் திருமாவளவன் சிறப்பினையும் கூறுவதாக உள்ளன. இப்பாடலைக் கேட்ட மன்னன் மகிழ்ச்சியுற்றுப் புலவரின் வறுமை தீரப் பதினாயிரம் பொன்னைப் பரிசளித்ததாகக் கலிங்கத்துப் பரணி ஆசிரியர் குறிக்கின்றார். பாலைத்திணையின் மறுதலையாகிய புறத்திணைக்கூறே பாட்டின் பெரும்பகுதியாய் அமைந்துள்ளது.

மலைபடுகடாம்

  • பாடியவர்: இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
  • அடி: 583 அடிகள்
  • பாட்டுடைத்தலைவன்: நன்னன் சேய் நன்னன்
  • யாப்பு: ஆசிரியப்பா
  • வேறுபெயர்: கூத்தராற்றுப்படை

"மலைபடுகடாஅம் மலியும்பல் இசைப்ப" என்ற தொடரே இதற்குத் தலைப்பாக விளங்குகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம் என்னும் மூன்று நிலங்கள் கூறப்பட்டுள்ளன.

note

பல்வேறு இசைக்கருவிகள் பற்றி இந்நூல் கூறுகிறது. அவற்றுள் சில:

  1. ஆகுளி
  2. குழல்
  3. குறுந்தூம்பு
  4. கோடு
  5. தட்டை
  6. நெடுவங்கியம்
  7. பதலை
  8. பாண்டில்
  9. முழவு
  10. எல்லரி

மலையின்கண் ஏற்படும் ஓசைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மகளிர்கள் எழுப்பும் ஓசைகள், ஆண்கள் எழுப்பும் ஓசைகள், விலங்குகள் எழுப்பும் ஓசைகள், பொதுவாக எழும் பல ஓசைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பேரியம் பற்றி தனியாகச் சிறப்பித்துக் கூறியுள்ளார். இந்நூலில் விறலியரின் தோற்றம் பற்றியும், நன்னனின் அரண்மனை முற்றம், நாடு பற்றியும், அவனுடைய கொடைச்சிறப்புப் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.