Skip to main content

நாட்டுப்புற இலக்கிய வரலாறு

நாட்டார் வழக்காற்றியல், நாட்டாரியல் அல்லது நாட்டுப்புறவியல் (folklore) என்பது நாட்டுப்புற மக்களிடையே காணப்படக்கூடிய பழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும், சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொண்டு இயலும் இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள், கலைகள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். நாட்டார் வழக்காற்றியல் வாய்மொழி இலக்கியம், பொருள்சார் பண்பாடு, நாட்டார் நிகழ்த்து கலைகள், நாட்டார் சமயம், சடங்கு மற்றும் நம்பிக்கைகள் என நான்கு வகைப்படும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டார் வழக்காற்றியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டார் வழக்காற்றியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. வில்லியம் ஜான் தாமஸ் என்பவரே இத்துறையில் முன்னோடியாவார். பேராசிரியர் நா. வானமாமலை நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.

TNPSC Syllabus Wise MCQs 👇Try our Test Hub 👑

கலைச்சொற்கள் பட்டியல்

  • நாட்டுப்புற வழக்காறு - Folklore
  • நாட்டுப்புறவியல் - Folkloristics
  • நாட்டுப்புற இலக்கியம் - Folk Literature
  • நாட்டுப்புறப் பாடல் - Folk Song
  • நாட்டுப்புறக் கலை - Folk Art
  • நாட்டுப்புற நம்பிக்கைகள் - Folk Beliefs

"நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பரவியுள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்" என்கிறார் முனைவர் சு.சக்திவேல் (நாட்டுப்புற இயல் ஆய்வு : பக்கம் : 22).

எனவே நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்டது. நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமைப்பாட்டிற்குப் பல வகையினைக் காண முடியும். அவை:

  1. நாட்டுப்புறப் பாடல்கள்
  2. நாட்டுப்புறக் கதைகள்
  3. நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்
  4. நாட்டுப்புறப் பழமொழிகள்
  5. விடுகதைகள்
  6. புராணங்கள்

இனி இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புறப் பாடல்கள் முன்னைப் பழமைக்கும் பழமை, பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குகின்றன. இப்பாடல்கள் இனியவை, எளியவை, எழுதப்படாதவை, வாயில் பிறந்து, செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெறுபவை. இப்பாடல்கள் என்று பிறந்தவை, எவரால் பாடப்பெற்றவை என்று உறுதியாக அறுதியிட்டுச் சொல்ல முடியாத பெருமையினைக் கொண்டவை. இப்பாடல்கள் எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று எதுகை, மோனை, இயைபு, இரட்டைக் கிளவி என்ற யாப்பிலக்கணத்தின் கட்டுக் கோப்பில் அமைந்துள்ளன.

நாட்டுப்புறப் பாடல் வகைப்பாடு

நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல், நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன. முனைவர் சக்திவேல் சூழல் அடிப்படையில் எட்டாகப் பிரித்து, அவற்றில் உட்பிரிவுகளையும் வகைப்படுத்தியுள்ளார்.

தாலாட்டுப் பாடல்கள்

தாலாட்டுப் பாடல் என்பது தாய்மை உணர்வின் வெளிப்பாடாகும். அப்பாடல்களில் வெளிப்படும் உணர்வுகளின் தன்மையினை நான்கு கூறுகளாகப் பிரித்துள்ளார்.

  • குழந்தை பற்றியன.
  • குழந்தைக்குரிய பொருள்கள் பற்றியன.
  • குழந்தைகளின் உறவினர் பெருமை பற்றியன.
  • குழந்தை சாய்ந்தாடும் போது குழந்தையைத் தன் கால்களில் தாங்கி தான் மல்லாந்து படுத்துப் பாடும் பாடல் ஆகும்.

"சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சந்தனக்கிளியே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சுந்தரக்கிளியே"

என்று தந்தை பாடுவான்.

"கைவீசம்மா கைவீசு கடைக்கு போகலாம் கைவீசு மிட்டாய் வாங்கலாம் கைவீசு மெதுவாய் தின்னலாம் கைவீசு"

என குழந்தையின் கையைப்பிடித்து வீசி வீசிப் பாடும் உடற்பயிற்சி பாடல் ஆகும்.

உண்ணாத குழந்தைக்கு நிலவைக்காட்டி:

"நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா மலை மேல ஏறிவா மல்லிகைப்பூ கொண்டுவா"

என்ற பாடல் குழந்தையை உண்ண வைக்கப் பாடுவதாகும்.

குழந்தைப் பாடல்கள்

குழந்தைப்பாட்டுகள் குழந்தை உள்ளத்தைப் புலப்படுத்துவனவாக அமைந்திருக்கும். அதில் பொருள் அமைவதைவிட ஓசை நிறைவுகளே அதிகமாகக் காணப்படும். இப்பாடல்களை மேலும்:

  1. குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள்.
  2. (குழந்தைப் பாடல்கள்) மற்றவர்கள் பாடுவது.
  3. சிறுவர் பாடல்கள் என்றும் பிரித்துப் பார்க்கலாம்.

காதல் பாடல்கள்

காதல் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம்:

  1. காதலர்களே பாடுவது.
  2. காதலர்கள் அல்லாதவர்கள் தொழில் செய்யும் போது பாடுவது.

ஆனால் பெரும்பாலும் நாட்டுப்புறக் காதல், தொழில் செய்யுமிடங்களில் தான் பிறக்கிறது. வண்டிக்காரன் பாடும் தெம்மாங்குப் பாடல்களில் காதல் சுவையைக் காணலாம். உறவில் இன்பம் காண்பதும், பிரிவில் வேதனையடைவதும் பாடலின் பொருளாக அமையும்.

தொழில் பாடல்கள்

மனிதர்கள் கூடித் தொழில் செய்யும்போது அக்கூட்டுறவில் பிறப்பவை தொழில் பாடல்கள். தொழில் பாடல்களிலே அன்பு மலர்வதையும், பாசம் பொங்குவதையும், உழைப்பின் ஆர்வத்தையும், நன்மையில் நாட்டத்தையும், தீமையில் வெறுப்பையும் காணலாம். தொழில் பாடல்கள் தொழிலாளர்களது இன்ப துன்பங்களையும், நெஞ்சக் குமுறல்களையும், ஆசாபாசங்களையும், விருப்பு, வெறுப்புகளையும் வெளியிடுகின்றன. தொழில் பாடல்களை ஏலோலங்கிடி தில்லாலங்கடி பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, ஏற்றப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என்றெல்லாம் வழங்குவர்.

கொண்டாட்டப் பாடல்கள்

மனிதன் தன் மகிழ்ச்சியினை ஆடியும் பாடியும் பலரோடு கலந்து கொண்டாடுகிறான். அவ்வெளியீட்டில் தொன்மையான கலைச் சிறப்பையும் மக்களது பண்பாட்டின் சிறப்பினையும் அறியமுடியும். மனிதனின் உழைப்பிற்குப்பின், அவனது மனமானது ஆடல், பாடல்களில் ஈடுபடுகிறது. இப்பாடல்களை அகப்பாடல், புறப்பாடல் என்று பிரிக்கலாம்.

அகப்பாடல்

சமூகத்திலுள்ள பலரும் இணைந்து குழுவாகப் பாடப்படுவது. பூப்புச் சடங்குப் பாடல், திருமணம், பரிகாசம், நலுங்கு, ஊஞ்சல், வளைகாப்புப் பாடல்கள் போன்றவற்றைக் கூறலாம்.

புறப்பாடல்

பலரும் கலந்தாடும் கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களில் பாடப்படும் பாடல்களைப் புறப்பாடல்கள் எனலாம்.

பக்திப் பாடல்கள்

ஆதி காலத்தில் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். இயற்கையின் சக்திகளைத் தெய்வங்களாகக் கருதி வழிபட்டனர். அதிலிருந்து விழாக்களும், பண்டிகைகளும், பலிகளும் தோற்றம் பெற்றன. இவ்வழிபாடுகளை மூன்று நிலைகளில் மக்களிடையே காணமுடியும்.

  1. இயற்கை வழிபாட்டுப் பாடல்கள்.
  2. சிறுதெய்வப் பாடல்.
  3. பெருந்தெய்வப் பாடல்.

சான்று : இயற்கை வழிபாட்டுப் பாடல்

சந்திரரே சூரியரே சாமி பகவானே இந்திரரே வாசுதேவா இப்பமழை பெய்யவேணும் மந்தையிலே மாரியாயி மலைமேலே மாயவரே இந்திரரே சூரியரே இப்பமழை பெய்யவேணும்

இப்பாடலில் தொன்று தொட்டு வரும் இயற்கை வழிபாட்டைக் காணலாம். நிலா, மழை, ஒளி, பாம்பு, பசு ஆகியவற்றை நாட்டுப்புற மக்கள் வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடும்போது இத்தகைய இயற்கைப் பாடல்களைப் பாடுகின்றனர்.

ஒப்பாரிப் பாடல்கள்

இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் பாடல்களை ஒப்பாரி என்பர். இறந்தவர்களின் இழப்பை எண்ணி, இறந்தவர்களையும் தம்மையும் ஒப்புச் சொல்லி அதாவது ஒப்பிட்டுப் பாடுவது ஒப்பாரியாகும். இறந்தவரின் பெருமையும் அவரது குணநலன்களும் பிறரால் போற்றப்பட்ட முறையும், ஒப்பாரி பாடுகின்றவர்கள் இறந்தவரை நேசித்த முறையும், தன்னுடைய நிலைமை, குடும்பத்தின் நிலைமை, ஈமச் சடங்குகள் பற்றிய விவரங்களும் அப்பாடல்களில் கூறப்படுவதுண்டு.

பன்மலர்ப் பாடல்கள்

ஒரே பாடலில் ஒன்றுக்கு மேற்பட்ட தன்மை இருப்பின் அப்பாடல் பன்மலர்ப்பாடல் எனப்படும்.

நாட்டுப்புறக் கதைகள்

நாட்டுப்புற மக்களிடையே கதை கூறுவது என்பது பொதுவான பண்பாகும். மக்கள் தங்களது வாழ்வியல் நீதிகளுக்காகவும், பொழுது போக்கிற்காகவும் கதைகளை உரைத்தனர். இன்றளவும் உரைத்து வருகின்றனர். நாளையும் கதையினைக் கூறுவார்கள். ஏனென்றால் கதையினைக் கேட்பவரும் அந்தந்தக் கதைகளோடு தங்களையும் இணைத்துக் கதை கேட்கின்றனர்.

கதைகளின் வகைகள்

முனைவர் சு. சக்திவேல் நாட்டுப்புறக் கதைகளை 6 வகையாகப் பிரிக்கின்றார்.

  1. மனிதக் கதைகள்
  2. மிருகக் கதைகள்
  3. மந்திர - தந்திரக் கதைகள்
  4. தெய்வீகக் கதைகள்
  5. இதிகாச புராணக் கதைகள்
  6. பல்பொருள் பற்றிய கதைகள்

கதைகளின் சிறப்புக் கூறுகள்

இக்கதைகளின் முக்கிய நோக்கம் மக்களுக்கு அறக்கோட்பாட்டை உணர்த்துவதே ஆகும். வளரும் குழந்தைகளுக்கு அது நீதி போதனைக் களஞ்சியமாகத் திகழ்கிறது. வாழ்க்கைப் பிரச்சனை, ஆசை, துன்பம், சாதிப் பூசல், காதல், ஒழுக்கம், வேதனை, முட்டாள்தனம், பொறாமை, மன உணர்வெழுச்சி, கள்ள நட்பு, மந்திரம், புத்திசாலித்தனம், நீதி முதலியவற்றைக் கூறுவதாக அமையும். மொத்தத்தில் இக்கதைகள் பயன்பாட்டு இலக்கியம் ஆகின்றன. சமூக வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன. பண்பாட்டுக் கூறுகளை மீட்டுருவாக்கம் செய்கின்றன. பழங்காலச் சமுதாயச் செய்திகளையும், சமகாலச் செய்திகளையும் இவற்றால் அறிய முடிகின்றது.

நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்

தனிமனித வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை - பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் - கதையினைப் போன்று அதே சமயம் பாடலாகப் பாடுவது கதைப் பாடலாகும். காப்பியத்தில் தன்னிகரில்லாத் தலைவனின் வளப்பம் மிகுந்த செயல்பாடுகள் எழுதப்படுகின்றன அல்லவா? அதைப் போல நாட்டுப்புறக் கதைப்பாடலில் கதைத் தலைவனின் வீர தீரச் செயல்கள் பாடப்படும். கதைப் பாடல்கள் வரலாறுகள் அல்ல. அவை வீரக் காவியங்கள், மனிதப் பண்பின் உயர்ந்த அம்சங்களைப் போற்றுபவை என்கிறார் நா. வானமாமலை (ஐவர் ராசாக்கள் கதை. ப.53). இவை கதைப்பாடல்களின் இயல்புகள் என்றே கூறலாம்.

கதைப் பாடலின் தன்மை

கதைப் பாடலில் கீழ்க்காணும் முக்கியக் கூறுகள் காணப்படுகின்றன.

  1. கதையில் நிகழ்ச்சிப் போக்கு உண்டு. (Action)
  2. பாத்திரங்கள் வாயிலாக விளக்கப் பெறும். (Characters)
  3. கதைக் கரு உண்டு (Theme)
  4. வீரப்பண்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பெறும். (Prominence of Heroism)
  5. உரையாடல் (Dialogue) உண்டு.
  6. திரும்பத் திரும்ப வரல் (Repetition)

கதைப் பாடலின் அமைப்பு

கதைப் பாடலின் அமைப்பில் நான்கு முக்கியப் பகுதிகள் உள்ளன. அவையாவன:

  1. காப்பு அல்லது வழிபாடு.
  2. குரு வணக்கம்
  3. வரலாறு
  4. வாழி

சான்று : கதைப் பாடல்கள்

  • முத்துப்பட்டன் கதை
  • நல்லதங்காள் கதை
  • அண்ணன்மார் சுவாமி கதை

கதைப் பாடலின் வகைகள்

முனைவர் சு. சக்திவேல் கதைப் பாடல்களை மூன்றாக வகைப்படுத்துகிறார்.

  1. புராண, இதிகாச தெய்வீகக் கதைப் பாடல்கள்
  2. வரலாற்றுக் கதைப் பாடல்கள்
  3. சமூகக் கதைப் பாடல்கள்

நாட்டுப்புறப் பழமொழிகள்

பழமொழி என்ற சொல்லே மிகப் பழமையானவற்றை உணர்த்துவதாகும். பலரது அறிவையும் ஒருவரது நுண்ணுணர்வையும் அதிலிருந்து பெறுகின்றன. அறிவின் சுருக்கமே பழமொழி எனலாம். பழமொழிகள் மக்களது வாழ்வுடன் வாழ்வாகப் பின்னிப் பிணைந்துள்ளன. மக்களின் வாழ்வில் நாளும் பழக்கத்தில் உள்ள மொழி, எதுகை மோனையுடன் ஒரு கருத்தினைக் கூறுதல், விளக்கம் செய்யும் தன்மையினைக் கொண்டதே பழமொழியாகும். இவை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் மிக்கவைகளாகும்.

பழமொழியின் இயல்புகள்

  1. பழமொழியின் முக்கிய இயல்பு, சுருக்கம், தெளிவு, பொருத்தமுடைமை.
  2. அறவுரையையும், அறிவுரையையும் கொண்டிருக்கும்.
  3. ஒவ்வொரு பழமொழியும் விளக்கக் கூறு (Descriptive element) ஒன்றினைப் பெற்றிருக்கும்.
  4. பழமொழி ஒரு சொல்லில் அமைவதில்லை.

பழமொழி வகைப்பாடு

முனைவர் சு. சக்திவேல் தமிழ்ப் பழமொழிகளை ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார்.

  1. அளவு அடிப்படை (Size Basis)
  2. பொருள் அடிப்படை (Subject Basis)
  3. அகரவரிசை அடிப்படை (Alphabetical Basis)
  4. அமைப்பியல் அடிப்படை (Structural Basis)
  5. பயன் அடிப்படை (Functional Basis)

விடுகதைகள்

விடுகதை என்பது ஏதாவது ஒரு கருத்தைத் தன்னிடம் மறைத்துக் கொண்டு கூறுவது. இதனை அறிவுத்திறத்தோடு ஆராய்ச்சி செய்யும் பொழுது, குறைந்த பட்சம் சிந்தனை செய்யும் பொழுதுதான் புலப்படும். மேலும் 'விடுகதை' என்ற நாட்டுப்புற வழக்காற்றில் ஈடுபாடும் விருப்பும் உடையவர்களால் விடுகதையிலுள்ள 'புதிருக்கு' (புரியாத நிலையிலுள்ளது) விடையினைக் கூறமுடியும். இவ்வாறு விடுகதை என்பது:

  1. அறிவு ஊட்டும் செயல்
  2. சிந்தனையைத் தூண்டுதல்
  3. பயனுள்ள பொழுது போக்கு

என்ற வகையில் அமைந்து மக்களின் வாழ்வில் இடம் பெற்றுள்ளது.

விடுகதையின் வகைகள்

விடுகதைகளை, பயன்பாட்டு அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கின்றார் டாக்டர் ச. வே. சுப்ரமணியம் அவர்கள். அவை:

  1. விளக்க விடுகதைகள் (Descriptive Riddles)
  2. நகைப்பு விடுகதைகள் (Witty question Riddles)
  3. கொண்டாட்ட விடுகதைகள் (Ritualistic Riddles)
  4. பொழுதுபோக்கு விடுகதைகள் (Recreative Riddles)

விடுகதையை அமைப்பியல் ஆய்வின் அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்தலாம். அவை:

1) உருவகமில்லாதது (Literal)

'சிவப்புச் சட்டிக்குக் கறுப்பு மூடி'

  • இது குன்றி மணியைக் குறிக்கும்.

2) உருவகமுடையது (Metaphorical)

'காய்ந்த மாடு சந்தைக்குப் போகுது'

  • இது கருவாட்டினைக் குறிக்கிறது.

இவ்வாறு விடுகதைகளும் பழமொழிகளும் மக்களின் வாழ்வில் பயனுள்ள வகையில் பொழுதைக் கழிப்பதற்கும், சிந்திப்பதற்கும் துணை நின்று உள்ளன. இன்றும் விடுகதை, பழமொழி இவற்றை, தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட வானொலியின் பண்பலை ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில், நிலையத்தார் வானொலி கேட்பவர்களிடம் தொலைபேசி வழிக் கேட்பதையும் கேட்க முடியும். நாட்டுப்புற வழக்காறும் நாகரிகம் மிகுந்த மக்களின் வாழ்க்கையில் மக்கள் தொடர்புச் சாதனங்களில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

புராணங்கள்

புராணக் கதைகள் மனித மனத்தின் அடித்தளத்தில் உள்ள எண்ணங்களை மையமாகக் கொண்டவை. அத்தகைய புராணக்கதைகள் அன்று முதல் இன்றுவரை வாழ்ந்து வருகின்றன. அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தில் மனித வாழ்வில் அனுபவித்த முரண்பாடுகள், விந்தைகள், சிக்கல்கள் ஆகியவற்றுக்குத் தீர்வாகப் புராணக்கதைகள் இருந்துள்ளன. சடங்குகள் தான் புராணங்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன. சமயத்தின் ஆழ்ந்த நோக்கு, அடிப்படைக் கருத்துகள் புராணங்களில் தோய்ந்து கிடக்கின்றன.

புராணங்களின் வகைகள்

தமிழிலுள்ள புராணங்களை மக்களிடையேயுள்ள:

  1. வாய்மொழிப் புராணங்கள் (Oral Puranas)
  2. எழுத்திலக்கியப் புராணங்கள் (தல புராணங்கள்)

என்று பகுத்து ஆராயலாம்.

❤️ Love our study material?

Help us keep creating quality educational resources for TNPSC aspirants. Your support keeps this platform free for everyone!