ஜெயகாந்தன் - அறிமுகம்
தமிழ் மக்களின் இலக்கிய ரசனையையும் சிந்தனையையும் பாதித்த எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனும் ஒருவர். இவர் நவீன இலக்கியம், கலை மற்றும் பத்திரிகை உலகில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர். தமிழ்ச் சிறுகதை உலகில், இன்றுள்ள காலக் கட்டத்தை ஜெயகாந்தனின் காலம் என்று குறிப்பிடும் அளவிற்கு ஜெயகாந்தன் கதைகள் இலக்கியத் தரமும், ஜனரஞ்சகமும் உடையனவாகத் திகழ்கின்றன.
பிறப்பும் வளர்ப்பும்
ஜெயகாந்தன் தென்னார்க்காடு மாவட்டம் கடலூரில் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாள் பிறந்தார். ஜெயகாந்தனின் தந்தை பெயர் தண்டபாணிப் பிள்ளை, தாயார் மகாலெட்சுமி அம்மாள். பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போதே மூவர்ணக் கொடி பிடித்து, பாரதியாரின் தேசிய எழுச்சி மிக்க பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவில் சென்றவர் அவர். ஜெயகாந்தன் பள்ளி சென்று கல்வி பயின்றவர் அல்லர். தம்முடைய பதினான்காவது வயதிலேயே சொந்த ஊரை விட்டுச் சென்னைக்கு வந்தார். சௌபாக்கியம் என்ற இதழில் ஆசிரியராக இருந்த பி.சி.லிங்கம் என்ற புலவரிடம் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டார். பின்பு, தமிழ்ப் புலவர் க. சொக்கலிங்கத்திடம் முறையாகப் பாடம் கேட்டுத் தம் மொழியறிவை வளர்த்துக் கொண்டார். கரிச்சான் குஞ்சு என்ற புனைபெயரில் கதைகள் எழுதும் மன்னார்குடி நாராயணசாமி என்ற வைதீக பிராமணரிடம் பழகிப் பிராமண மொழியைக் கையாளுவதில் வல்லமை பெற்றார். ஜெயகாந்தன் சிறுவனாக இருக்கும் போதே கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்ததனால் மார்க்சியச் சித்தாந்தக் கருத்தோட்டம் உடையவராக வளர்ந்தார்.
எழுத்துலக நுழைவு
ஜெயகாந்தன் எழுதிய முதல் சிறுகதை சௌபாக்கியம் என்ற இதழில் 1950இல் வெளிவந்தது. அது 'மாதர் நல இலாக்கா' நடத்திய பத்திரிகை ஆகும். பின்பு தொடர்ந்து வசந்தம் என்ற இதழிலும், விந்தன் நடத்திய மனிதன் இதழிலும், இஸ்மத் பாஷா ஆசிரியராக இருந்த சமரன் என்ற இதழிலும், மாஜினி நடத்திய தமிழன் இதழிலும், பின்னர் விஜய பாஸ்கரன் நடத்திய சரஸ்வதி இதழிலும் தொடர்ந்து எழுதினார். சரஸ்வதி இதழில் எழுதும் பொழுதுதான் இவர் எழுத்தாற்றல் வெளியுலகிற்குத் தெரிய வந்தது. அதன் பின்னர் வெகுஜன இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி என்பவற்றில் எழுதத் தொடங்கினார்.
எழுத்து வளர்ச்சி
தொடக்கத்தில் ஜெயகாந்தன் எழுத்துகள் தத்துவ நோக்குடையனவாகவும் பரிசோதனை முயற்சிகளாகவும் அமைந்தன. சரஸ்வதியில் வெளியான கதைகள் பாலுணர்ச்சி பற்றிப் பேசுவன. கண்ணம்மா, போர்வை, சாளரம், தாம்பத்தியம், தர்க்கம் போன்ற கதைகள் இதற்குத் தக்க சான்றுகளாகும். இவை தரமானவை என்றாலும் ஜனரஞ்சகமாக அமையவில்லை. அதற்கு அடுத்து வந்த காலக் கட்டத்தில், அவர் தம் எழுத்துகளை ஜனரஞ்சகமாக அமைத்துக் கொண்டார். ஜெயகாந்தன் தொடக்கக் காலத்தில் சிறுகதை படைப்பதிலேயே மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்திருக்கிறார். 1958ஆம் ஆண்டு, ஒருபிடி சோறு என்ற அவருடைய முதல் சிறுகதைத் தொகுதி வெளியானது. விந்தனின் தமிழ்ப்பண்ணை பதிப்பகம் அதை வெளியிட்டது. தி.ஜ.ர. அத்தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியுள்ளார். அத்தொகுதிக்குக் கண்ணதாசன் கவிதையில் புகழாரம் சூட்டியுள்ளார். சிறுகதை மன்னன் என்று சுட்டும் அளவிற்கு, சிறுகதைப் படைப்புகளில் தன் திறமையை வெளிக்காட்டிக் கொண்டுள்ளார்.
'தமிழ்நாட்டில் இன்றுவரை தோன்றியுள்ள மிகச் சிறந்த எழுத்தாளர்கள் சிலருள் ஜெயகாந்தன் ஒருவர்' என்று கு. அழகிரிசாமி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், காலம் செல்லச் செல்ல ஜெயகாந்தன் சிறுகதை எழுதுவதைக் குறைத்துக் கொண்டு நாவல் மற்றும் குறுநாவல் படைப்பில் ஆர்வம் காட்டலானார். ஆனாலும் அவர் படைத்த சிறுகதைகள் இன்றும் அவர் புகழ்பாடிக் கொண்டிருக்கின்றன.
கையாண்ட இலக்கிய வகைகள்
ஜெயகாந்தன் சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற இலக்கிய வடிவங்களைப் படைத்ததுடன் நின்றுவிடாமல், சுவை ததும்பும் கட்டுரைகளையும், ஆழமான அறிவுபூர்வமான கட்டுரைகளையும் படைத்துள்ளார். அவற்றில் சுயதரிசன சுயவிமரிசனக் கட்டுரைகளும் உண்டு. மேலும் அரசியல், சமூகம், கலை இலக்கியம் மற்றும் பத்திரிகை அனுபவம் என்று கட்டுரைகளின் பொருள் விரிந்து பரந்ததாக அமைந்துள்ளது. ஜெயகாந்தன் சில ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார். திரைப்படக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் சிறந்துள்ளார். ஜெயகாந்தன் சிறந்த மொழி பெயர்ப்புப் பணிகளையும் செய்துள்ளார். ராமன் ரோலண்ட் எழுதிய நூலை மகாத்மா என்ற பெயரிலும், புஷ்கின் எழுதிய நூலைக் கேப்டன் மகள் என்ற பெயரிலும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அவருடைய சிறுகதைகள் மற்றும் நாவல்கள் அனைத்திந்திய மொழிகளிலும், உலக மொழிகள் பலவற்றிலும் குறிப்பாக ஆங்கிலத்திலும், உக்ரைன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஜெயகாந்தன் தம் சிறுகதைத் தொகுப்புகளுக்கும் நாவலுக்கும் எழுதிய முன்னுரைகள் விமர்சனப் பார்வையில் அமைந்து சிறந்தன. அவை அனைத்தும் ஜெயகாந்தன் முன்னுரைகள் என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டு 1978 இல் வெளிவந்தன. ஜெயபேரிகை என்ற நாளிதழிலும், ஞானரதம், கல்பனா என்ற இலக்கிய இதழ்களிலும் இறுதியாக நவசக்தி நாளிதழிலும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.
எழுதிய நூல்கள்
ஜெயகாந்தன் 13 சிறுகதைத் தொகுதிகளும், 25-க்கும் மேற்பட்ட குறுநாவல்களும், 17 நாவல்களும், 25 கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.
- சிறுகதைத் தொகுதிகள்: ஒருபிடி சோறு (1958), இனிப்பும் கரிப்பும் (1960), தேவன் வருவாரா? (1961), மாலை மயக்கம் (1962), சுமை தாங்கி (1962), யுகசந்தி (1963), உண்மை சுடும் (1964), புதிய வார்ப்புகள் (1965), சுய தரிசனம் (1967), இறந்த காலங்கள் (1969), குருபீடம் (1971), சக்கரம் நிற்பதில்லை (1975), புகை நடுவினிலே (1990), உதயம் (1996). Game of Cards (1969) என்பது ஆங்கில மொழியில் வெளியான சிறுகதைத் தொகுதியாகும். ஜெயகாந்தனின் சிறுகதைகள் என்ற பெயரில் இவருடைய சிறுகதைகள் 15 அனைத்திந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, 1973இல் வெளியாகின. மனுஷ்யா (1989) என்ற பெயரில் இந்தி மொழியில் இவருடைய மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுதி வெளியாகி உள்ளது.
- நாவல்கள்: வாழ்க்கை அழைக்கிறது (முதல் நாவல்), பாரிஸுக்குப் போ, சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சுந்தரகாண்டம், ஜெய ஜெய சங்கர என்பன இவருடைய புகழ்பெற்ற நாவல்களாகும்.
- குறுநாவல்கள்: கைவிலங்கு, விழுதுகள், யாருக்காக அழுதான், ரிஷிமூலம், கோகிலா என்ன செய்துவிட்டாள், சினிமாவுக்குப் போன சித்தாளு, பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து போன்றவை இவருடைய குறுநாவல்களுள் சிலவாகும்.
- கட்டுரை நூல்கள்: ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள், ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள், ஒரு பிரஜையின் குரல், யோசிக்கும் வேளையில் என்பன இவருடைய கட்டுரை நூல்களுள் சிலவாகும்.
தனிப்பண்புகள்
ஜெயகாந்தனின் சமுதாயப் பார்வையில் மார்க்சியமும் ஆன்மிகமும் உண்டு. இரண்டு வேறுபட்ட தளங்களிலும் கிடைத்த அனுபவங்களை அவர் தம் கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் மார்க்சிய அரசியல் பார்வை உடையவராக இருந்தாலும் காங்கிரசையும் விரும்பியுள்ளார். லெனினைப் போற்றும் இவர், காமராஜரையும் போற்றுகிறார். பாரதி, காந்தி, விவேகானந்தர் ஆகியோர் எழுத்துகளில் நல்ல பரிச்சயம் உடையவர். ஓங்கூர் சாமியார் என்பவரோடு தொடர்பு கொண்டு, சிலகாலம் சித்தர் மரபில் பிடிப்புக் கொண்டிருந்தார். திரைப்படத் துறையிலும் நாட்டம் கொண்டு அதில் ஈடுபட்டு விருதுகளும் பெற்றுள்ளார். அத்துடன், அவர் உரத்த ஆளுமை, விரிவான வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றவராகவும் திகழ்கிறார். இடைவிடாத படைப்பாக்கம் உடையவராகத் தனித்திறன் பெற்று விளங்குகிறார். ஜெயகாந்தனின் ஆளுமையின் பெரும் பகுதி அவருடைய புற உலகத் தொடர்பால் கிடைத்தது. ஜெயகாந்தன், ஒரு முற்போக்கு எழுத்தாளராவார். மனிதனுக்கு மனிதன் கொண்டிருக்கும் நேசம், உள நெகிழ்வு, வாழ்க்கையில் ஒருவனுக்கு இருக்கும் பற்று, ஒருவரின் துயர் போக்க மற்றொருவர் பாடுபடுவது -இதுவே முற்போக்கு எழுத்துக்கு இலக்கணம் என்று மாலை மயக்கம் சிறுகதைத் தொகுதிக்கு அவர் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இவ்விலக்கணத்திற்கு அவர் மிகப் பொருத்தமானவராகத் திகழ்கிறார். புதுமைப்பித்தனுக்கு அடுத்து ஏற்புக்கும் மறுப்புக்கும் அதிக அளவு இலக்கானவர் இவர்தான்.
பரிசுகளும் விருதுகளும்
- 1964: ஜெயகாந்தனின்
உன்னைப் போல் ஒருவன்
திரைப்படம் இந்திய ஜனாதிபதியின் விருதினைப் பெற்றது. - 1972:
சில நேரங்களில் சில மனிதர்கள்
நாவல் சாகித்திய அக்காதெமி விருதினைப் பெற்றது. - 1978: அது திரைப்படமாக வெளிவந்தபோது சிறந்த திரைக்கதைக்கான தமிழக அரசின் விருதினைப் பெற்றது. அதே ஆண்டு அவரது
இமயத்துக்கு அப்பால்
என்ற நாவல் சோவியத் நாடு நேரு விருது பெற்றது. - 1979:
கருணை உள்ளம்
என்ற திரைப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த கதைக்கான தமிழ்நாடு அரசு விருதினைப் பெற்றது. - 1986:
ஜெய ஜெய சங்கர
நாவலுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலுக்கான விருதும்,சுந்தரகாண்டம்
நாவலுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜ சோழன் விருதும் கிடைத்தன. - சாகித்திய அக்காதெமி பெல்லோசிப்: கடந்த ஓரிரு ஆண்டுகளாக சாகித்திய அக்காதெமியின் உயர் சிறப்பிற்குரிய பெல்லோசிப் என்ற இடத்தையும் பெற்றுள்ளார்.
ஞானபீட விருது
2005ஆம் ஆண்டில் இந்திய இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதும் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் எழுத்தாளர் அகிலனுக்குப் பிறகு இவ்விருதினைப் பெறும் சிறப்பிற்குரியவராகத் திகழ்கிறார். இவ்வாறு ஜெயகாந்தன் தமிழக அளவிலும், இந்திய அளவிலும், ஆசியக் கண்ட அளவிலும் பல விருதுகளைப் பெற்றுச் சிறந்துள்ளார். 1980, 1983, 1984 ஆம் ஆண்டுகளில் சோவியத் ரஷிய நாட்டின் அழைப்பின் பேரில் ரஷியப் பயணம் மேற்கொண்ட சிறப்பும் இவருக்கு உண்டு.
ஜெயகாந்தனின் சிறுகதைகள்
ஜெயகாந்தன் சிறுகதை எழுதிய காலக் கட்டத்தை இலக்கிய விமர்சகர்கள் மூன்றாகப் பகுத்துக் காண்கின்றனர்.
- முதல் காலக்கட்டம்: வசந்தம், மனிதன், சமரன், தமிழன் இதழ்களில் எழுதிய பத்தாண்டுக் காலமாகும். இக்காலக் கட்டத்து எழுத்துகளில் ஏழை எளிய மக்கள் கதைப்பாத்திரங்களாகத் திகழ்கின்றனர்.
- இரண்டாம் காலக்கட்டம்: 1956 முதல் 1960 வரை சரஸ்வதியில் எழுதிய காலமாகும். இக்காலக்கட்டத்தில் தத்துவ நோக்கு மிகுந்துள்ள கதைகளையும், பரிசோதனை முயற்சிகளாக அமைந்த கதைகளையும் எழுதியுள்ளார். பாலுணர்ச்சி அவருடைய கதைகளில் முக்கியமாக இடம்பெற்றிருந்தது.
- மூன்றாவது காலக்கட்டம்: ஆனந்தவிகடன் போன்ற வெகுஜன இதழ்களுக்கு எழுதிய காலமாகும். இக்காலக்கட்டத்தில் ஜனரஞ்சகக் கதைகள் தோற்றம் பெற்றன. அவை ஜெயகாந்தனின் வாழ்வியல் கண்ணோட்டத்தையும், சித்தாந்தத்தையும் விளக்கி நிற்கின்றன.
கதைக் கருக்கள்
ஜெயகாந்தன் கதைகளுள் காணப்படும் கருக்கள் போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசிப் பார்க்கும் நிகழ்வுகளை, சமுதாயத்தின் புற்றுநோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கும் புத்தம்புது முறைகளை, மனித உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது தங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் விதத்தில் அமைந்துள்ளன.
எனது கதைகள் பொதுவாகப் பிரச்சினைகளின் பிரச்சினைகளைப் பேசுகின்றன. வஞ்சிக்கப்பட்டவர்களிடமும், தண்டிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள ஆன்மாவைக் கண்டறிந்து அதைக் கருப்பொருளாக்கிக் கொண்டுள்ளேன்.
முன்பே சுட்டியபடி, அவருடைய கதைகள், பெரும்பாலும் ஏழை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையையே கருப்பொருளாகக் கொண்டிருந்தன. ஓர் ஆப்பக்காரிக்கு அவளுடைய மகனால் ஏற்படும் தொல்லைகளை விளக்குவதாகப் பொறுக்கி
என்ற கதை அமைந்துள்ளது. பிச்சைக்காரியின் தன்மானத்தைக் கருவாகக் கொண்டது வேலை கொடுத்தவர்
என்ற கதையாகும். ரிக்சாக்கார பாலன்
, டிரெடில்
- என்ற கதைகள் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வியல் போராட்டங்களைக் கருவாகக் கொண்டிருந்தன. அடுத்து வந்த கதைகள் அதாவது சரஸ்வதி இதழில் வந்த கதைகளான தாம்பத்தியம்
, திரஸ்காரம்
, பௌருஷம்
, பால்பேதம்
என்பன பாலியல் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்ட கதைகளாகும். எனவே அவை எழுதப்பட்ட காலங்கள் தொட்டுக் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகின.
அடுத்த நிலையில் ஜெயகாந்தன் எழுதிய கதைகளுக்கு மத்திய தரப் பிராமணக் குடும்பத்தில் காணப்படும் சிக்கல்கள் கதைப்பொருளான. கற்பு, விதவை நிலை, மறுமணம், விவாகரத்து என்ற சமுதாயச் சிக்கல்களையும், ஒருபிடி சோறு
, உண்மை சுடும்
போன்ற கதைத் தொகுதிகளில் உள்ள கதைகள் மார்க்சிய அரசியல் சித்தாந்தங்களைக் கதைக் கருக்களாகக் கொண்டுள்ளன. அதற்கு அடுத்து வந்த கதைகளில் தனிமனித வாழ்வியல் சிக்கல்கள் கருவாக அமைந்துள்ளன. இவ்வாறு ஜெயகாந்தனின் சிறுகதைக் கருக்கள் காலந்தோறும் மாறுபட்டனவாகத் திகழ்கின்றன.
பல்லாண்டுக் காலமாக விழுது விட்டு வளர்ந்து விட்ட சாதியத்தை அசைத்துப் பார்க்கும் ஒரு பெரும் புரட்சிக் கருவினைக் கொண்டது ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்
என்ற கதை. கீழ்க் குலத்திலே பிறந்த அம்மாசிக் கிழவனிடத்திலே ஒரு பிராமண மாது தன் குழந்தையை ஒப்படைத்துவிட்டு இறந்து விடுவதாகவும், அம்மாசியே அவளுக்கு ஈமக் கடன்கள் செய்துவிட்டுக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் கதை அமைகிறது. உணர்வுகளுக்கு முன்னால் ஜாதி நிற்காது என்பதே இக்கதையின் கருவாகும். ஜெயகாந்தன், மாறிவரும் சமுதாயப் போக்கிலும், கால வேகத்திலும் சாதியப் பிரிவுகள் அழிய வேண்டும் என்ற நோக்கோடு இக்கதையைப் படைத்துள்ளார்.
ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம்
கதைக் கருவும், அதன் முடிவும் தமிழகமெங்கும் பலத்த சர்ச்சைக்குரியதாக அமைந்தன. இக்கதை, 1966இல் ஆனந்தவிகடனில் வெளியானது. இக்கதையின் கரு புரட்சிகரமானது என்று மக்கள் மத்தியில் எண்ணம் நிலவியிருந்தது. ஆனால், அக்கரு யதார்த்தமான உண்மையைப் பேசுவது என்கிறார் ஜெயகாந்தன். அக்கதையின் நாயகி, (பெயர் சூட்டப்படவில்லை) ஒரு கல்லூரி மாணவி. உலகியல் அறிவு இல்லாத அவள். கல்லூரி முடிந்த மாலை நேரத்தில், மழை பெய்யும் சூழலில், தோழிகள் அனைவரும் சென்று விட்ட நிலையில், வேறு வழியில்லாது தன்னைக் காரில் அழைத்துச் செல்ல அழைக்கும் 'அவன்' காரில் ஏறுகிறாள். காரில் அவனால் அவள் சீர்குலைக்கப்படுகிறாள். வீட்டிற்கு அலங்கோலமாக, தான் ஒருவனால் கெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாத அப்பாவியாக வரும் மகளிடம், தாய் முதலில் கோபம் கொண்டாலும், பின்பு அவளின் கள்ளமற்ற மனத்தைப் புரிந்து அவளை நீராட்டித் தூய்மைப்படுத்துகிறாள்.
உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமாக இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி ... நீ நம்பு ... நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம். நீ சுத்தமாயிட்டே. ஆமா- தெருவிலே நடந்து வரும் போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டுப் பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார்? எல்லாம் மனசுதான்டி - மனசு சுத்தமா இருக்கணும் ... ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாததூளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா, ஆனா அவமனசாலே கெட்டுப் போகலை. அதனாலே தான் ராமரோட பாததூளி அவமேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா .. வீணா உன்மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு .. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு ... உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே ...
என்று தேற்றுகிறாள். மறுபடியும் அவள் எதுவும் நடக்காதது போல் கல்லூரிக்குச் செல்கிறாள் என்பதோடு கதை முடிகிறது. இக்கதை, சமுதாயத்தில் எதிர்ப்பு அலைகளை எழுப்பிய போது ஜெயகாந்தன், 'நான் தீர்க்கமாகச் சொல்கிறேன் அவள் கெட்டுப் போனவள் அல்லள்; அவள் மனதிலே களங்கமில்லை. மனம் என்பது முதிர்ந்து எது சரி எது தப்பு என்று இதுபோன்ற காரியங்களில் தீர்மானிக்க முடியாத போது, அவளை இந்த மூடச் சமூகம் காலில் போட்டு மிதித்து விட அனுமதிக்க மாட்டேன். அறிவும் மனமும் முதிராத நிலையில், உடல் மட்டும் முழு வளர்ச்சியுற்ற நிலையில் நேர்ந்து விட்ட விபத்துக்கு ஓர் ஆத்மாவை நிரந்தரமாகத் தண்டிப்பது நியாயமாகாது, நாகரிகமாகாது' என்று தான் படைத்த பாத்திரத்திற்காக வாதாடுகிறார்.
பாத்திரங்களைப் படைப்பது பெரிதல்ல. அவற்றின் மீது பாசமும் வைத்து வதைபட வேண்டும். அந்தப் பரிவு உணர்ச்சி இருப்பதால் காகிதத்தில்தானே கிறுக்குகிறோம் என்று பொறுப்பில்லாமல் படைக்க இயலாது. செய்யாத குற்றத்திற்குத் தண்டனையாக ஒரு பாத்திரத்தை எரித்து விட முடியாது.
என்று ஜெயகாந்தன் கூறுவதிலிருந்து, அவர் தன் பாத்திரங்களை எத்தனை பொறுப்புணர்ச்சியுடன் படைத்துள்ளார் என்பதையும் உடன் விளங்கிக் கொள்ள முடிகிறது.
இக்கதையை விமர்சித்த பலர், 'அவளுக்கு' மரணம்தான் தீர்வு. அதை விடுத்து ஜெயகாந்தன் அவளைத் தூய்மைப்படுத்துவதாகப் பேசுவது சரியல்ல என்று கருத்துரைத்த போது, 'பிரச்சினைகளுக்கெல்லாம் மரணம்தான், தற்கொலைதான் அல்லது கொலைதான் தீர்வு என்றால், இலக்கியத்தை, அறிவை, சட்ட திட்டங்களை, சமூக நெறிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அவர்கள் அரிவாளைத் தூக்கிக் கொள்ளட்டும். அதை மறுத்து ஒரு பெண்ணைப் பெற்றவள் அவளுக்குப் புதிய ஞானம் தந்து, புதிய வலிமையும் தந்து அவளை வாழ வைக்கிறாள் என்று நான் எழுதியது மனிதாபிமானத்தையும், சமூக வளர்ச்சியையும் சார்ந்ததுதான்' என்கிறார்.
கதை மாந்தர்கள்
ஜெயகாந்தன் கதைகளில் கூலிக்காரர்கள், ஆலைத் தொழிலாளிகள், சேரி மக்கள், விபச்சாரிகள், பிச்சைக்காரிகள், சிறு வியாபாரிகள் என்று பெரும்பாலும் வாழ்வு மறுக்கப்பட்ட சமூகத்தினரே கதை மாந்தர்களாக அறிமுகப்படுத்தப் படுகின்றனர். சோற்றுக் கூடைக்காரி ஆண்டாளு, முறைவாசல் செய்யும் பொன்னம்மாள், ஆயா வேலை செய்யும் முத்தாயி, பிச்சைக்காரி ருக்கு, ஹோட்டல் சர்வர் பாண்டியன், ரிக்சாக்கார ஆறுமுகம், குமாஸ்தா கம்பாசிட்டர் ஏழுமலை, டிரெடில்மேன் விநாயக மூர்த்தி, தலைச்சுமைக்காரர் மருதமுத்து கருமான் கந்தன் போன்ற மிகச் சாதாரண மக்களே பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். சமுதாயத்தில் கேட்பார் அற்றுக் கிடக்கும் இவர்களை ஜெயகாந்தன் உண்மையான அனுதாபத்தோடு அணுகுகின்றார்.
நான் எப்படித் தரிசிக்கிறேனோ அதை அப்படியே எனது நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.
ஏழைகள் என்றவுடன் செல்வர்களின் கையை எதிர்பார்க்கும் பாத்திரங்களை அவர் படைக்கவில்லை. அதே சமயம் அவருடைய ஏழை மக்கள் ஆசா பாசமற்ற அப்பாவிகள் அல்லர். விருப்பும் வெறுப்பும், வேதனையும் ஆத்திரமும், வெட்கமும் தன்மதிப்பும் உள்ள மக்கள் அவர்கள். ஜெயகாந்தனின் அத்தனைப் பாத்திரங்களும் உயிர்ச் சித்திரங்கள். நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களை ஜெயகாந்தன் தன் பேனா முனையால் அழுத்தமாகப் படைத்துக் காட்டுகிறார். இதுவரைக்கும் அலட்சியமாக அவர்களை நோக்கிய நம் கண்கள் இப்பொழுது அகல விரிந்து காண்கின்றன. தாம் கதைகள் எழுதுகிறபோது கூடு விட்டுக் கூடு பாய்ந்து அக்கதைப் பாத்திரங்களாகவே தாம் ஆசிவிடுவதாகவும், தாம் அனுபவிக்கும் உணர்ச்சிகளை அப்படியே அவர்கள் மூலம் வெளிக்கொணர்வதாகவும் கூறுகிறார். (சரஸ்வதி இதழ், அக்டோபர் 1957).
ஏழைத் தொழிலாளிகள் மட்டுமன்றி நடுத்தரப் பிராமணக் குடும்பத்தினரும், பங்களாக்களில் வாழும் மேல்தட்டு மக்களும் கூடப் பாத்திரங்களாக இவருடைய பிற்காலக் கதைகளில் இடம் பெறுகின்றனர். ஜெயகாந்தனின் கதைப் பாத்திரங்கள் அதிகமாகப் பேசுகின்றன. அதாவது, பாத்திரங்கள் மூலம் ஆசிரியரே வாழ்வியலை விமர்சனம் செய்கிறார். இது சில சமயம் கதையின் கலைத் தன்மையைச் சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. சமூகப் பொருந்தாமையால் மனச்சிக்கலுக்கு ஆளாகித் தவிப்போரும், வாழ்க்கையில் போராடித் தோற்பவர்களும் என்று மேலும் பல குணச்சித்திரங்களை இவருடைய படைப்புகளில் காண முடியும்.
வினாக்கள்
- ஜெயகாந்தனின் முதல் கதை வெளியான இதழ் எது?
- ஜெயகாந்தன் பாலுணர்ச்சி பேசும் கதைகளை எந்தக் காலக்கட்டத்தில் எழுதினார்?
- ஜெயகாந்தன் பணியாற்றிய இதழ்கள் யாவை?
- ஜெயகாந்தன் பெற்ற மிகப்பெரிய விருது யாது?
- ஜெயகாந்தன் சிறுகதை எழுதிய காலத்தைத் திறனாய்வாளர்கள் எவ்வாறு வகைப்படுத்துவர்?
படைப்பாக்க உத்திகள்
ஜெயகாந்தன் 'கலை கலைக்காகவே' என்ற நோக்கம் உடையவர் அல்லர். 'கலை வாழ்க்கைக்காக' என்ற நோக்கமுடையவர். ஒருபிடி சோறு, இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, சுமைதாங்கி, உண்மை சுடும், சுயதரிசனம் என்ற தொகுதிகளில் உள்ள சிறுகதைப் படைப்புகளில் முக்கியமாக வாழ்வியல் போராட்டங்கள், வர்க்க முரண்பாடுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. ஏழைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் இறைவனால் உருவாக்கப்படுவன அல்ல, மனிதனால் விளைவன என்று வர்க்கப் பேதத்தைத் தம்முடைய கதைகளில் அடையாளம் காட்டுகிறார். ஜெயகாந்தன், தம் படைப்பாக்க நோக்கிற்கேற்பத் தம் நடையையும், படைப்பாக்க உத்திகளையும் அமைத்துக் கொண்டுள்ளார்.
நடை
ஜெயகாந்தனின் நடை கருத்தாழம் மிக்கது; விறுவிறுப்பானது; வேகமானது; கவர்ச்சியான உணர்ச்சித் துடிப்புள்ள தம் நடையின் மூலம், அவர் வாழ்வின் அவஸ்தைகளை - முக்கியமாக அவலங்களை மனத்தில் பதியும் முறையிலே சித்திரித்துள்ளார். அதாவது, இவருடைய நடை, படிப்பவரிடத்து அவர் ஏற்படுத்த விரும்பிய உணர்வை ஏற்படுத்தி விடுகின்றது. ஜெயகாந்தன் நடை உரத்துப் பேசும் நடை. ஆனாலும், அதில் ஓர் இனிமை இருக்கிறது. மிக வலுவாய் முடுக்கிவிட்ட தந்தியில், கனமான வில்லிழுப்பால் வரும் நாதம் போல் மிடுக்காய்ச் செல்கிறது அவருடைய நடை. தந்தி அறுந்துவிடுமோ என்று நாம் அஞ்சாத பேருறுதி அதற்கு இருக்கிறது. ஜெயகாந்தன் பலரும் பயன்படுத்தத் தயங்கும் சொற்களைத் தம் நடையின் ஊடே அங்கங்கே எடுத்தாண்டுள்ளார். அவர், பல இடங்களில் பேச்சுத் தமிழை எடுத்தாண்டுள்ளார். அதைப் பற்றி அவர் கூறும் போது,
பிறந்த குழந்தையின் உயிர்தான் சுத்தம்; உடம்பு அழுக்கு. அதுமாதிரி என்னிடம் பிறக்கிற கதைகள் இலக்கியச் சுத்தம் உடையவை. மொழிச் சுத்தம் உடையவை அல்ல. என் கதைகள் நஞ்சுக் கொடியோடு, நாற்ற உதிரக் காட்சியோடு, உரத்த குரலுடன் பிறக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.
ஜெயகாந்தன் கையாளும் தொடர்கள் மிக நீண்டவை. அந்த நீண்ட தொடர்கள் சொல்லப்படும் செய்திகளுக்கு ஒரு செறிவையும், குவி மையத்தையும் கொடுத்து வாசகர்களைக் குறிப்பிட்ட நோக்கு நிலைக்கு இழுத்துச் செல்ல உதவுகின்றன. ஜெயகாந்தன் நடையின் மற்றொரு சிறப்பு தர்க்க வாத முறையாகும். காரண காரிய முறைப்படி அமைந்த வேகமான நடையில் இடையிடையே பொறி பறப்பது போன்ற சிந்தனைகளும், புதுமையாகப் புகுத்தப்பட்ட சொற்பிரயோகமும் 'இது ஒரு தனி நடை' எனப் பிரகடனப் படுத்துகின்றன.
அக்கினிப் பிரவேசம் கதையில், கதைநாயகி மழையில் நனைந்து, பேருந்து நிறுத்தத்தில் நிற்பதை வர்ணிக்கும் போது இவருடைய நடை வழக்கமான நடையிலிருந்து வேறுபட்டுள்ளது. ...புதிதாய் ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்பொழுது மழையில் நனைந்து ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும், பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில் அப்படியே தூக்கிக்கொண்டு போய்விடலாம் போலக் கூடத் தோணும்.
இப்படி இந்நடை இலக்கியப் பாங்காக அமைந்துள்ளது. சென்னையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இவருடைய பல கதைகளில் சென்னைப் பேச்சுத் தமிழ் இடம்பெற்றுள்ளது. பார்ப்பனக் குடும்பத்தைப் பற்றிய கதைகளில் பார்ப்பனத் தமிழ் இடம்பெற்றுள்ளது.
சில இடங்களில் ஜெயகாந்தன் நடையில் தத்துவப் பாங்கும் உள்ளது. சான்றாக ஒன்றைக் காணலாம். 'ஆயிரம் விழுதுகள் இருக்கட்டுமே, ஒரு மூலமரம் தழைக்க முடியுமா' என்றும், 'பாவம் மனிதர்கள்! சாவு வரும் வரை, அதற்குள் செத்து விடமாட்டோம் என்று நம்பி, சாவு விரித்த வலையில் நடந்து கொண்டே செல்கிறார்கள். பிறகு என்றோ ஒரு நாள் மரணம் என்னும் மாய நிழலாட்டத்தின் கீழே சிக்கி மறைந்து விடுகிறார்கள்' என்றும் ஆலமரம் கதையில் நிலையாமைத் தத்துவத்தைப் பேசியுள்ளார்.
முரண்
ஜெயகாந்தன் கதைகளில் முரண் என்ற உத்தி பரவலாகக் காணப்படுகிறது. அதாவது, எந்த ஒரு வாழ்வியல் பிரச்சினையையும் உடன்பாடு, எதிர்மறை என்ற இரு நோக்குகளில் தம் கதைகள் மூலம் பார்த்துள்ளார் ஜெயகாந்தன். ஒருவருக்கு உடன்பாடாக இருக்கும் ஒன்று இன்னொருவர் வாழ்க்கைக்குப் பொருந்தாது போய்விடும். அவரவருக்கு எந்தக் கருத்தோட்டம் ஏற்புடையதோ, அதன்படி வாழ்வது அவரவர்களுக்குப் பொருந்தும். அதை வற்புறுத்தச் சமுதாயத்தில் யாருக்கும் உரிமை இல்லை. ஒருமித்த கண்ணோட்டம் என்பதை மனிதர்களிடையே காணுதல் இயலாது என்பதைத் தம் சில படைப்புகளின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார் ஜெயகாந்தன்.
இருளைத் தேடி
என்ற கதையில் இருவேறு பெண்களைப் படைத்துள்ளார். ஒரு பெண் இருளில் தொழில் நடத்துபவள். மற்றொரு பெண் இருளில், ஒளி நிறைந்த மின் விளக்கு முன்னால் நிர்வாணமாக நிற்பவள். அவளைப் பார்த்துப் பல ஆண்கள் சித்திரம் வரைவர். இதை அவள் ஒரு தொழிலாக மட்டுமன்றிக் கலைப்பணியாகவும் நினைக்கிறாள். இரண்டு பெண்களும் இருளில் தொழில் செய்தாலும் இருவரின் நோக்கங்களும் வேறு என்று காட்டுகிறார் ஜெயகாந்தன். இவை, ஒரே கதைக்குள் படைக்கப்பட்ட இரு முரண்பட்ட பாத்திரங்களாகும்.
ஜெயகாந்தன் இரு மாறுபட்ட அல்லது முரண்பட்ட கதைக் கருக்களைத் தேர்ந்தெடுத்துக் கதைப்படுத்துவதும் உண்டு. அதற்கு யுகசந்தி
, உடன்கட்டை
, ஆளுகை
, பிம்பம்
என்ற கதைகளைச் சான்றுகளாகச் சுட்டலாம். யுகசந்தி
கதையில், விதவை மறுமணத்தை வற்புறுத்தும் ஜெயகாந்தன். அதே தொகுதியில் உடன்கட்டை
கதையில், மணமகன் திருமணத்திற்கு முன் இறக்க, கதைநாயகி அவனுக்காக விதவைக் கோலம் பூணுவதாகக் காட்டுகிறார். இரண்டு கதைகளையும் அடுத்தடுத்துப் படிக்கும் வாசகர்கள், ஆசிரியர் எக்கருத்துத் தளத்தில் இயங்குகிறார் என்று புரிபடாமல் திணறுவர். யாருக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை அப்படியே செய்ய விடுவதுதான் நல்லது. கணவனை இழந்த பெண் மறுமணம் செய்ய விரும்பினாலும் கைம்மைக் கோலம் பூண்டாலும் அது அவளுடைய தனிப்பட்ட அல்லது மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். சமூகம், அவர்கள் மீது தன் கருத்தைத் திணிக்கக் கூடாது என்பதே ஜெயகாந்தனின் வாதம்.
அதேபோல், பிம்பம்
, ஆளுகை
என்ற கதைகள் சமூக முரண்களுக்குக் காட்டுகளாக அமைகின்றன. பிம்பத்தில்
, கணவனை இழந்த பெண் 10 ஆண்டுகளாகியும் அவனை மறக்க இயலாது மறுமணம் செய்துகொள்ள மறுப்பதும், ஆளுகையில்
, மனைவியை இழந்த ஆண் ஒரே மாதத்தில் மறுமணம் செய்து கொள்வதும் சுட்டப்படுகிறது. இதுவும் அவரவர் மனப்பக்குவத்தையும் தேவையையும் குறித்த ஒன்று என்று ஜெயகாந்தன் சுட்டிக் காட்டுகிறார். இப்படி வாழ்வியல் முரண்களை, முரண் உத்தியாகத் தம் கதைகளில் அவர் பதிவு செய்துள்ளார்.
ஜெயகாந்தனின் சமுதாயப் பார்வை
ஜெயகாந்தன் மக்களுக்காக மக்களைப் பற்றி எழுதுபவர். இவருடைய எழுத்துகள் பொழுதுபோக்கு எழுத்துகள் அல்ல.
என் கதைகள் இருந்து பொழுதைக் கழிக்கவும், உயிர் சுமந்து நாட்களைப் போக்கவுமான பொழுதுபோக்கு இலக்கியம் அல்ல.
அவர் கதைகள் - அவரே சொல்வது போல - சமுதாயத்தை வெளிப்படுத்திக் காட்டும் கருவியாய், கண்ணாடியாய், ஓவியமாய், கேலிச் சித்திரமாய் அமைந்திருக்கின்றன. சமுதாயத்தில் அடக்கப்பட்டவர்கள், சுரண்டப் பட்டவர்கள், அநீதிக்கு உள்ளானவர்கள் ஆகியோர் பக்கம் சார்ந்து தன் படைப்புகளைத் தந்துள்ளார் ஜெயகாந்தன். இவர்களையெல்லாம் தம் கதைப்பாத்திரங்களாகப் படைத்து, அவர்களுக்கு இலக்கிய அந்தஸ்து தந்துள்ளார். அதன் மூலம் அவர்களுடைய பிரச்சினைகளை மக்கள் முன் எடுத்துரைத்துச் சிந்திக்க வைக்கின்றார். சமூகத்தில் உள்ள பழைய பழக்கவழக்கங்களையும், சமூக முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ள கருத்துகளையும் வன்மையாகத் தன் கதைகள் மூலம் கண்டித்துள்ளார்.
மனித நேயம்
ஜெயகாந்தனின் மனிதநேயம் பரந்துபட்டது. ஆண்மை நீக்கப்பட்ட காளை மாடுகளையும், நகராட்சி வண்டியில் பிடித்துச் செல்லப்பட்ட தெரு நாயையும் தம் மனித நேய எழுத்தில் அழியாத ஓவியமாய்ப் படைத்துக் காட்டியுள்ளார். பால்பேதம்
, இதோ ஒரு காதல் கதை
என்பவை இரண்டும் மாட்டைப் பற்றியும், தோத்தோ
, நிக்கி
ஆகியவை இரண்டும் நாயைப் பற்றியும் எழுதப்பட்ட கதைகளாகும். இவற்றில், ஆதரவு இல்லாத தனிமை ஊடுருவி இருக்கிறது. இக்கதைகளில் எல்லாம் மாட்டையும், நாயையும் மட்டுமே பேசியிருப்பதாகக் கருத முடியாது. அவற்றை விடக் கேடான நிலையில் வாழும் மனிதனைப் பற்றியே பேசியுள்ளார்.
டிரெடில்
என்ற கதையின் நாயகன் விநாயக மூர்த்தி ஓர் அச்சகத் தொழிலாளி. அவன் இயந்திரத்திடம் பழகிப் பழகி இயந்திர கதியிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறான். அவன் தன் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அச்சகமே தன் உறைவிடமாக, உயிர் மூச்சாகக் கொண்டிருக்கிறான். அவனுக்குத் திருமணம் நிச்சயமானது. ஆனால், சக்திக்கு மீறிய உழைப்பு அவனைத் திருமண வாழ்விற்குப் பொருந்தாதவனாக்கி விடுகிறது. அதனால் திருமணம் நின்று விடுகிறது. இக்கதையில், ஜெயகாந்தன் ஒரு தொழிலாளியின் அந்தரங்கப் பிரச்சினையை மனித நேயத்தோடு கண்டு உணர்ந்து எழுதியுள்ளார்.
போர்வை
என்ற மற்றொரு கதையில் வரும் கோபாலன் மன வக்கிரம் பிடித்தவன். அவன் ராஜம் என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தான். சரசா என்ற பெண் குளிக்கும் போது ரகசியமாகப் பார்க்கிறான். இப்படிப்பட்ட கீழ்மையான குணம் உடைய அவன், நிர்வாணமான பைத்தியக்காரியைப் பார்க்கும்போது, தலைகுனிந்து, தன் வேட்டியைக் கழற்றி அவளிடம் கொடுத்து அவள் நிர்வாணத்தை மறைக்க முயல்கிறான். கயவனாக இருந்தாலும் அவனிடமும் மனிதாபிமானம் இருக்கிறது என்று காட்டுகிறார் ஜெயகாந்தன். இதுபோன்றே, ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்
, எத்தனைக் கோணம் எத்தனைப் பார்வை
என்ற கதைகளையும் மனிதாபிமானத்தை மையமாக வைத்துப் படைத்துள்ளார்.
பெண் விடுதலை
பெண்களைப் பற்றிய ஜெயகாந்தன் சிந்தனைகளை அவரது படைப்புகள் முழுவதிலும் பார்க்க முடியும். ஜெயகாந்தன் பார்வையில் இந்தியப் பெண்கள் வனத்துச் சீதைகள். அதாவது, சிறைப்பட்டவர்கள். பெண் என்பவள் சமூகத்தின் கைதி மாதிரிக் கண்காணிக்கப்படுகிறாள். இரண்டு பக்கமும் அறியாமை அவதூறு என்கிற வேலியைப் பற்றிக் கொண்டு, அதன் வழியே இப்பக்கம் அப்பக்கம் திரும்பாமல் நடந்து செல்ல அவள் அனுமதிக்கப்படுகிறாள். கொஞ்சம் சுயேச்சையாக அவள் விலகி நடந்தாலும் அந்த முட்கம்பிகள் அவள் மீது கீறிவிடும். கீறிவிடும் என்ற பயமுறுத்தல் சதா சர்வகாலமும் அவளை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. கீறிக்கொண்டு விட்டால் இந்தச் சமூகமாகட்டும், அவள் சார்ந்த குடும்பமாகட்டும் புண்ணை ஆற்ற வேண்டும் என்று நினைப்பதே இல்லை. மாறாக, அவளையே பலியாக்கும். அக்கினிப்பிரவேசத்தில்
, கதைநாயகியைத் தூய்மைப்படுத்த விரும்புகிறாள் அவள் தாய். ஆனால் உறவும் சமூகமும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எனவே அவள் தனக்குள் சிதைந்து, விடுதலைக்கு வழியில்லாமல், இடையில் கிடைக்கும் சிறு விடுதலையையும் பிறர் தட்டிப் பறிக்க, இறுதியில் புனித கங்கையில் தன்னை மூழ்கடித்துக் கொள்கிறாள் (சில நேரங்களில் சில மனிதர்கள்
, கங்கை எங்கே போகிறாள்
ஆகிய நாவல்கள்).
அக்கினிப் பிரவேசம் தொடங்கி வைத்த பிரச்சினைகள் பெண் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமல்ல; அவை வரலாற்றுப் பிரச்சினைகளும், பண்பாட்டுப் பிரச்சினைகளும் ஆகும். மேலும் அனைத்து மதங்களும், கோட்பாடுகளும் பெண்களை அடிமைப்படுத்த முனைகின்றன என்பதை பிம்பம்
, ஆளுகை
என்ற கதைகள் மூலம் ஜெயகாந்தன் நிறுவியுள்ளார். பெண்களைச் சுய சிந்தனை உடையவர்களாக, தமக்குச் சரி என்று பட்டதைத் தைரியமாகச் செய்பவர்களாக அறிவாற்றல் உடையவர்களாக வேறு சில சிறுகதைகளில் படைத்துள்ளார்.
பௌருஷம்
என்ற கதையில், முறைப் பெண்ணைத் தாலி கட்டிப் பட்டணத்துக்கு அழைத்துச் சென்ற ரிக்சாக்காரக் கணவன், மனைவியை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றபோது, அவள் புருஷனின் கன்னத்தில் அடித்துவிட்டு, ஊருக்குத் திரும்பி வந்து, முன்பு தன்னை நேசித்த ஒருவனை அடைகிறாள். தன்னைக் கெடுக்க நினைத்த கணவனை,
அவனும் ஒரு ஆம்பிளையா? அவன் ஆம்பளையா இருந்தா இல்லே அவனுக்கு நான் பொண்டாட்டியா இருக்க?
என்று ஆவேசத்தோடு கூறுகிறாள்.
கற்பு நிலை
என்ற கதையில், ராஜம் என்ற பெண்ணை மணந்த சங்கரன், வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொள்கிறான். அவன், நெடுநாள் கழித்து ராஜம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, அவளுடைய தங்கை மீனா, திருமணம் ஆகாமலே விதவைக் கோலத்தில் இருப்பதைப் பார்க்கிறான். அதைக் கண்டு அதிர்ந்த சங்கரன், 'இது என்ன கோலம்' என்று கேட்க, தனக்குத் திருமணம் பேசப்பட்டு, கணவனாக வரப்போகிறவன் திடீரென்று இறந்து விட்டதால், தான் கன்னியாகவே விதவைக் கோலம் ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறாள். மேலும், பேச்சோடு பேச்சாக அவனது தகாத செய்கையைச் சுட்டிக் காட்டுகிறாள்.
என்ன பண்றது. புருஷாளெல்லாம் உங்கள மாதிரி இருக்கிறதாலே, பெண்களுக்கு இதுதான் கெதி. கன்னியாகவே விதவையாகிடணும். என் வாழ்க்கை வீணாகியதென்று வருத்தப்படறேளே, முப்பத்து முக்கோடித் தேவர்கள் சாட்சியாய், அக்னி சாட்சியாய், தாங்கள் தாலி கட்டினேளே அந்தப் பொண்டாட்டியின் வாழ்க்கை பற்றி யோசித்தேளோ?
என்று குத்தலாகச் கேட்கிறாள். திருமணம் என்ற சடங்கோ, சாஸ்திரமோ, சாதியோ, சட்டமோ ஓர் ஆணின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கவில்லை. ஒரு பெண்ணின் ஆன்மீக வாழ்க்கைக்கும் உத்திரவாதம் இல்லை என்ற கருத்தை இக்கதை மூலம் தெரிவிக்கின்றார் ஜெயகாந்தன். இவ்வாறு, ஆணாதிக்கப் போக்கை எதிர்த்துப் பெண்களையே தம் கதைகளில் வாதிட வைத்துள்ளார்.
பணத்தின் ஆதிக்கம்
மனித வாழ்வில் பணம் எவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் மனித வாழ்க்கை எங்ஙனம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஜெயகாந்தன் பல கதைகளில் படைத்துக் காட்டியுள்ளார். என்னை நம்பாதே
, சலிப்பு
, பித்துக்குளி
, விளக்கு எரிகிறது
, தர்க்கம்
ஆகிய சிறுகதைகள் இதற்குச் சான்றுகளாகும். விளக்கு எரிகிறது
என்ற சிறுகதையில், எழுத்தாளர் மருதநாயகத்தின் கற்பனையைப் பணம் எந்த அளவு சிதைக்கிறது என்பதை நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்.
என்னை நம்பாதே
என்ற சிறுகதையில், கணவன் எப்படியும் சாகத்தான் போகிறான் என்று தெரிந்தவுடன், அவனுக்கு மேற்கொண்டு வைத்தியம் செய்து காசைச் செலவு செய்வதைவிட, அவன் இறந்தவுடன் தான் அனாதையாக நிற்கப்போவதை நினைத்து மனைவி கணவனுக்குத் தெரியாமல் சேமிக்கத் தொடங்குகிறாள். அதே சமயம், சாகக் கிடக்கும் கணவனும், தான் வாழப்போவது சிலநாள்தானே. அதனால் பணத்தையெல்லாம் மருத்துவருக்குக் கொடுக்காமல் தன் அன்பு மனைவியின் பிற்கால வாழ்க்கைக்குப் பயன்படட்டும் என்று அவளுக்குத் தெரியாமல் சேர்த்து வைக்கிறான். இப்படி, செத்துக் கொண்டிருப்பவனை விட, வாழ இருப்பவளின் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவல நிலைக்கு மனிதனைப் பணம் தள்ளுகிறது என்பதை இக்கதை வழி ஜெயகாந்தன் எடுத்துக் காட்டுகிறார்.
தொகுப்புரை
தமிழ்ச் சிறுகதைப் படைப்பில் ஜெயகாந்தனின் பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புடையது. மேலும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அக்கினிப் பிரவேசம்
சிறுகதை எழுப்பி விட்ட விமர்சன அலைகள், அந்தக் கதையின் தொடர்ச்சியாக வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள்
, கங்கை எங்கே போகிறாள்
என்ற இருபெரும் மகத்தான நாவல்களின் பிறப்பிற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த இலக்கிய அனுபவம் ஜெயகாந்தனுக்கு ஏற்பட்டது போல் வேறு எந்த எழுத்தாளருக்கும் ஏற்படவில்லை. மொத்தத்தில், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஜெயகாந்தன் பதித்துள்ள தடம் ஆழமானதும் அகலமானதும், தனித்துவம் வாய்ந்ததும் சிறப்பானதும் ஆகும்.
வினாக்கள்
- இருநாவல்களின் எழுச்சிக்கு வித்திட்ட ஜெயகாந்தனின் சிறுகதை எது?
- பெண் விடுதலை பேசும் சிறுகதை ஒன்றின் பெயரினைக் குறிப்பிடுக.
- பணத்தின் ஆதிக்கம் பற்றிப் பேசும் கதை ஒன்றின் பெயரினைக் குறிப்பிடுக.
- ஜெயகாந்தன் 'கலை கதைக்காகவே' என்ற கோட்பாடு உடையவரா? அல்லது 'கலை வாழ்க்கைக்காக' என்ற கோட்பாடு உடையவரா?