Skip to main content

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும். பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர். இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

புதுக்கவிதைக்கான இலக்கணம்

புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து' எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே

என்று உரைத்தார் நன்னூலார்.

கவிஞர் மு. மேத்தா புதுக்கவிதைக்கான இலக்கணத்தை இவ்வாறு எடுத்துரைப்பார்:

இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை

புதுக்கவிதையின் தோற்றம்

புதுக்கவிதையின் தோற்றத்துக்கு பின்வருவன அடிப்படைக் காரணங்களாகும்:

  • உரைநடையின் செல்வாக்கு
  • மரபுக்கவிதையின் செறிவின்மை
  • அச்சு இயந்திரம் தோன்றியமை
  • மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள்

ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு 'புதிதாக்கு' (Make It New) என ஒரு கட்டளைச் சொல் தொடரைப் பிறப்பித்தார்.

சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை

என்றார் பாரதி.

Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர், ரிம்போ, மல்லார்மே, ஜெர்மனியின் ரில்கே, அமெரிக்காவின் வால்ட் விட்மன், இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில் 'வசன கவிதை' என்றும் பின்னர் 'லகு கவிதை', 'விடுநிலைப்பா' என்றும், “கட்டிலடங்காக் கவிதை" என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.

புதுக்கவிதை

பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கிய வடிவம் என்பது செய்யுள் வடிவமாகவே இருந்தது. இந்நூற்றாண்டில் மேலைநாட்டில் பழைய யாப்பு உருவத்திலிருந்து விலகி, இயைபுத் தொடை (Rhyme) முதலியன இன்றி உரைநடைச் சாயலில் புதிய கவிஞர்கள் கவிதை படைக்கத் தொடங்கினர். 1892இல் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் "புல்லின் இலைகள்" என்ற தலைப்பில் வெளியிட்ட பன்னிரண்டு கவிதைகளைக் கொண்ட தொகுப்பு, யாப்பு மரபைப் புறக்கணித்து ஃப்ரீவெர்ஸ் (Free verse) என்னும் வசன கவிதையாக அமைந்தது. அவர்தம் பாடுபொருளும் பிறர் இதுவரையில் பேசாப் பொருளாக அமைந்தது. இவரை அடியொற்றி எமர்சன், கார்ல் சான்ட்பெர்க், லின்ட்ஸே, வாலெஸ் ஸ்டீவன்ஸன், ஸ்டீவன் கிரேன், அமி லோவல் போன்ற எண்ணற்ற கவிஞர்கள் வசன கவிதை படைக்கலாயினர்.

பிரெஞ்சு நாட்டிலும், ரிம்பாடு என்னும் இளங்கவிஞர், 1886ஆம் ஆண்டு "ஒளி வெள்ளம்" என்னும் தலைப்பில் வெர்ஸ் லிப்ரே என்ற கட்டற்ற கவிதைகளைப் படைத்தார். இவரையடுத்து 1889-இல் வியல் கிரிப்பின் என்பவர் கட்டற்ற கவிதை என்ற அறிவிப்புடன் தம் கவிதைகளை வெளியிட்டார்.

இத்தாலி, ஸ்பானிஷ், செர்மன், ருஷ்ய மொழிகளின் இலக்கண மரபுகளிலும் நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்படத் தொடங்கின. பிரெஞ்சு நாட்டினரின் சர்ரியலிசம், இத்தாலியக் கவிஞர்களின் ப்யுச்சரிசம், ஜெர்மானியரின் எக்ஸ்பிரஷனிசம் என்பன அவ்வந்நாடுகளின் மரபுக்கவிதை நிலை கடந்து வசன கவிதைகளைத் தோற்றுவிக்கலாயின.

'விட்மனின் பாடலில் எதுகை, மோனை, தளை எதுவுமே இருக்காது; வசன நடை போலவே இருக்கும்; கவிதையைப் பொருளில் காட்ட வேண்டுமே யொழியச் சொல்லடுக்கில் காட்டுவது பயனில்லை எனக்கருதி வசன நடையிலேயே அவர் எழுதிவிட்டார்' என்பார் மகாகவி பாரதியார். மரபுக் கவிதையில் வல்லவரும் தம் பல்வேறு பாடல்களை அதிலேயே படைத்தவருமாகிய பாரதியார் வசன கவிதையில் விருப்புற்றவராகத் தாமும் "காட்சிகள்" என்னும் தலைப்பில் பல வசன கவிதைகளைப் படைத்துள்ளார்.

பாரதியைத் தொடர்ந்து ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் போன்றோர் புதுக்கவிதை படைக்கலாயினர். புதுக்கவிதைகள், பத்திரிகைகளில் வெளியிடப் பெற்றுப் படிப்படியாகச் செல்வாக்குப் பெற்றன என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

குறிப்பிடத்தக்க புதுக்கவிதை நூல்கள்

பாரதியார் தொடங்கிப் புதுக்கவிதைக் கவிஞர் பலர் நல்ல பல படைப்புகளை நல்கியுள்ளனர்.

  1. பாரதியார் - வசன கவிதை
  2. ந. பிச்சமூர்த்தி - காட்டு வாத்து, வழித்துணை
  3. அப்துல் ரகுமான் - பால்வீதி, சுட்டுவிரல்
  4. வாலி - அவதார புருஷன், பாண்டவர் பூமி
  5. மீரா - கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
  6. நா. காமராசன் - கறுப்பு மலர்கள், நாவல்பழம்
  7. மேத்தா - கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம்
  8. வைரமுத்து - இன்னொரு தேசிய கீதம், திருத்தி எழுதிய கொடிமரத்தின் வேர்கள்
  9. சிற்பி - சர்ப்ப யாகம்
  10. அறிவுமதி - நட்புக்காலம்

புதுக்கவிதையின் வளர்ச்சி

வால்ட் விட்மனின் "புல்லின் இதழ்கள்" என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால் "காட்சிகள்" என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் "வசன கவிதை" என்பதாகும். பாரதி வழியில் ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.

புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்

  1. மணிக்கொடிக் காலம்
  2. எழுத்துக்காலம்
  3. வானம்பாடிக்காலம்

ஆகிய காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப் பொலிவூட்டின.

1. மணிக்கொடிக்காலம்

மணிக்கொடிக்காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன. இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைப்பர். இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான ந. பிச்சமூர்த்தி, க. நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடி காலத்துக் கதா நாயகர்களாக விளங்கினர்.

2. எழுத்துக்காலம்

எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன. ந. பிச்சமூர்த்தி ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், ஆகியோர் ஒன்றுசேர்ந்து சி.சு.செல்லப்பா, க. நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்தனர்.

3. வானம்பாடிக் காலம்

வானம்பாடி, தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி, முல்லை ஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கணேஷ், மு. மேத்தா, தமிழன்பன், ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்களாவர்.

சில புதுக்கவிதைச் சான்றுகள்

நல்ல காலம் வருகுது உன் கையிலா கடிகாரம்? நல்ல காலம் வருகுது கடிகாரத்தின் கையில் தெருவிலே நிற்கிறான் நீ! குடுகுடுப்பைக் காரன்!

உத்திமுறைக் கவிதை

மரபுக் கவிதைக்கு அணியிலக்கணம் போல, கருத்தை உணர்த்துவதற்குப் புதுக்கவிதையிலும் சில உத்திமுறைகள் கையாளப்படுகின்றன. படிமக் குறியீடு, தொன்மக் குறியீடு, அங்கதம் என்பன புதுக்கவிதைகளில் காணலாகும் உத்திமுறைகளாகும்.

படிமம்

அறிவாலும் உணர்ச்சியாலும் ஆன ஒரு மன பாவனையை ஒரு நொடிப் பொழுதில் தெரியக் காட்டுவதுதான் படிமம் என்பார் வெ.இராம. சத்தியமூர்த்தி. ஐம்புல உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வகையில் இது அமையும்.

ஆகாயப் பேரேட்டில் பூமி புதுக்கணக்குப் போட்டது

என்பது மேத்தாவின் கருத்துப் படிமம். மேலும் அவர்,

பூமி உருண்டையைப் பூசணித் துண்டுகளாக்குவதே மண்புழு மனிதர்களின் மனப்போக்கு

எனக் காட்சிப் படிமத்தையும் அமைத்துக் காட்டியுள்ளார்.

தொன்மம்

புராணக் கதைகளைப் புதுநோக்கிலும், முரண்பட்ட விமரிசன நிலையிலும் கையாண்டு கருத்துகளை உணர்த்துவது தொன்மம் ஆகும். துஷ்யந்தன் தன் காதலின் சின்னமாகச் சகுந்தலைக்கு மோதிரம் பரிசளிக்கிறான். அந்த மோதிரம் தொலைந்த நிலையில் அவள் பல துன்பங்களை அனுபவிக்கின்றாள். அத்தொன்மத்தை "உன்னுடைய பழைய கடிதங்கள்" என்னும் கவிதையில் மேத்தா கவிதையாக்குகின்றார்.

நானும் சகுந்தலைதான் கிடைத்த மோதிரத்தைத் தொலைத்தவள் அல்லள் மோதிரமே கிடைக்காதவள் (ஊர்வலம்)

எனக் காதலியின் பரிதாப நிலையைச் சகுந்தலையினும் மோசமான நிலைக்காட்பட்டதாகக் காட்டியுள்ளார் கவிஞர்.

அங்கதம்

அங்கதம் என்பது முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையையும் தீச்செயல்களையும் கேலி பேசுவதாக அமைவதாகும்.

கல்வி இங்கே இதயத்தில் சுமக்கும் இனிமையாய் இல்லாமல் முதுகில் சுமக்கும் மூட்டையாகிவிட்டது (ஒரு வானம் இரு சிறகு)

என்பது மேத்தாவின் அங்கதக் கவிதையாகும்.

note

இவ்வுத்தி முறைகள் குறித்து மேலும் விரிவாக நான்காம் பாடம் விவரிக்கும்.

சுப்பிரமணிய பாரதி

சின்னசுவாமிக்கும் லக்குமி அம்மையாருக்கும் மகனாகப் சுப்பிரமணியம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர். இவர் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டவர். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைத்து வருகின்றனர். தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலைமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்துக் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்க மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். முதன் முதலாகப் பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமையாக்கப்பட்டது.

  • பெயர்: சுப்பையா (எ) சுப்பிரமணியன்
  • பிறப்பு: டிசம்பர் 11, 1882
  • இடம்: எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா.
  • பணி: செய்தியாளர்
  • மற்ற பெயர்கள்: பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்திதாசன்.
  • படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு மற்றும் பல.
  • சமயம்: இந்து சமயம்
  • பெற்றோர்: சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்.
  • மனைவி: செல்லம்மாள்.
  • இறப்பு: செப்டம்பர் 11, 1921
  • இறப்பிடம்: சென்னை, இந்தியா.

பாரதிதாசன்

இவர் புதுச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாகப் பாரதிதாசன் என தம் பெயரை மாற்றிக்கொண்டார். எழுச்சி மிகு எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவ ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

  • பெயர்: கனக. சுப்புரத்தினம்
  • பிறப்பு: ஏப்ரல், 29, 1891.
  • இடம்: புதுவை.
  • புனைப்பெயர்: பாரதிதாசன்.
  • கல்வி: புலவர்.
  • பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
  • குறிப்பிடத்தக்க படைப்பு: பாண்டியன் பரிசு.
  • இறப்பு: ஏப்ரல் 21, 1964.
  • இறப்பிடம்: சென்னை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

  • பெயர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  • பிறப்பு: ஜூலை 27, 1876
  • இடம்: தேரூர், கன்னியாக்குமரி மாவட்டம்
  • பெற்றோர்: சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி
  • மனைவி: உமையம்மை
  • பட்டம்: கவிமணி
  • பணி: கவிஞர்
  • குறிப்பிடத்தக்க படைப்பு: ஆசிய ஜோதி, மலரும் மாலையும்.
  • இறப்பு: செப்டம்பர் 26, 1954.

நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.

  • பெயர்: வெ. இராமலிங்கம் பிள்ளை
  • பிறப்பு: அக்டோபர் 19, 1888
  • இடம்: மோகனூர், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு
  • பெற்றோர்: வெங்கடராமன், அம்மணியம்மாள்
  • குறிப்பிடத்தக்க படைப்புகள்: மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியன
  • பணி: கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
  • இறப்பு: ஆகஸ்ட் 24, 1972.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

இவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்திப் பாடியவர். இவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

  • பெயர்: அ. கல்யாணசுந்தரம்
  • பிறப்பு: ஏப்ரல் 13, 1930
  • இடம்: செங்கப்படுத்தான்காடு
  • மனைவி: கௌரவம்மாள்
  • பணி: கவிஞர்
  • இறப்பு: அக்டோபர் 8, 1959

கண்ணதாசன்

கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

  • பெயர்: முத்தையா
  • பிறப்பு: ஜூன் 24, 1927
  • இடம்: சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
  • புனைப்பெயர்: காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
  • பணி: கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
  • இறப்பு: அக்டோபர் 17, 1981.

ந. பிச்சமூர்த்தி

ந. பிச்சமூர்த்தி அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். பிச்சமூர்த்தி தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். பிச்சமூர்த்தி இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இவரது அனைத்துப் படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

  • பெயர்: ந. பிச்சமூர்த்தி
  • பிறப்பு: நவம்பர் 8, 1900
  • இறப்பு: டிசம்பர் 4, 1976.

கவிஞர் மீரா

மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

  • திறனாய்வு: மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு
  • கவிதை: மீ.இராசேந்திரன் கவிதைகள், மூன்றும் ஆறும், மன்னர் நினைவில், கனவுகள்+ கற்பனைகள்= காகிதங்கள், ஊசிகள், கோடையும் வசந்தமும், குக்கூ
  • கட்டுரைகள்: வா இந்தப் பக்கம், எதிர்காலத் தமிழ்க்கவிதை, மீரா கட்டுரைகள்.
  • சிறப்புகள்: தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, பாவேந்தர் விருது, சிற்பி இலக்கிய விருது, தமிழ்ச் சான்றோர் பேரவை விருது.

அப்துல் ரகுமான்

தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கியவர். புதுக்கவிதைத்துறையில் தம் வெளியீடுகளின் வாயிலாக நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் "பால்வீதி" என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக்கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். "ஆலாபனை" கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

  • பெயர்: அப்துல் ரகுமான்
  • பிறப்பு: நவம்பர் 9, 1937
  • இடம்: மதுரை கிழக்குச் சந்தைப்பேட்டை
  • மற்ற பெயர்: அருள்வண்ணன்
  • கல்வி: கலை முதுவர், முனைவர்
  • பணி: பேராசிரியர்
  • பெற்றோர்: மஹி என்னும் சையத் அஹமத் - ஜைனத் பேகம்.

மு. மேத்தா (முகமது மேத்தா)

இவர் பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார். உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்து மு. மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு "கண்ணீர்ப் பூக்கள்". காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு. மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா” என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.

நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன் மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை

போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும். "வானம்பாடி" என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு. மேத்தாவும் ஒருவர்.

  • பெயர்: முகமது மேத்தா
  • பிறப்பு: செப்டம்பர் 5, 1945
  • இடம்: பெரியகுளம்
  • பணி: கவிஞர், பாடலாசிரியர்.

வைரமுத்து

வைரமுத்து, புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை ஆறு முறை பெற்றுள்ளார். 'பொன்மாலைப் பொழுது' எனும் திரைப்படத்தில் கவிதை எழுதியுள்ளார்.

  • பெயர்: வைரமுத்து
  • பிறப்பு: ஜூலை 13, 1953
  • இடம்: வடுகபட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
  • பணி: கவிஞர், பாடலாசிரியர்
  • குறிப்பிடத்தக்க விருதுகள்: சிறந்த பாடலாசிரியருக்கான குடியரசுத் தலைவர் விருதை 6 முறை (1985, 1993, 1994, 1999, 2002, 2010) பெற்ற பெருமைக்குரியவர், பத்ம ஸ்ரீ.

சிற்பி. பாலசுப்ரமணியன்

சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.

  • பெயர்: பொ. பாலசுப்பிரமணியம்
  • பிறப்பு: ஜூலை 29, 1936
  • இடம்: பொள்ளாச்சி, கோவை மாவட்டம்
  • கல்வி: முனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம், 1987), முதுகலை, தமிழ்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1956), இடைநிலை (திருச்சி ஜமால் முகமது கல்லூரி, 1953), பள்ளி (தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப்பள்ளி, பாலக்காடு, 1951)
  • பணி: கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், இதழாளர், பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாளர், சாகித்திய அகாதெமி ஒருங்கிணைப்பாளர்.
  • பெற்றோர்: கி. பொன்னுசாமி, கண்டியம்மாள்.

வினாக்கள்

  • புதுக்கவிதையின் முன்னோடி யார்?
  • புதுக்கவிதையின் தந்தை யார்?
  • புதுக்கவிதை வளர்த்த இதழ்கள் யாவை?
  • ந. பிச்சமூர்த்தி பணியாற்றிய இதழ் யாது?
  • மு. மேத்தா எந்த நூலுக்காகச் சாகித்ய விருது பெற்றார்? (ஆகாயத்துக்கு அடுத்த வீடு / 2009)
  • காந்தள் நாட்கள் எனும் நூலுக்காகச் சாகித்ய விருது பெற்றவர் யார்? (இன்குலாப் / 2017)
  • எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் என்றவர் யார்?
  • ஈரோடு தமிழன்பன் எந்த நூலுக்காகச் சாகித்ய விருது பெற்றார்? (வணக்கம் வள்ளுவ / 2004)
  • ஹைக்கூ, லிமரிக் கவிதை வடிவினை அறிமுகப்படுத்தியவர் யார்? (ஈரோடு தமிழன்பன்)
  • வைரமுத்து பெற்ற விருதுகள்?
  • புதுக்கவிதை வளர்த்த இயக்கங்கள் பற்றி விளக்குக.