Skip to main content

புதுமைப்பித்தனின் படைப்புலக வாழ்வு

புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் பற்றி அறியும் முன்னர் அவரது படைப்புச் சார்பான வாழ்வை அறிந்து கொள்வது மிக இன்றியமையாதது ஆகும். புதுமைப்பித்தனின் படைப்புகளில் அவரது வாழ்வியல் தாக்கம் அதிகம் வெளிப்பட்டுள்ளது. அவர் தம் வாழ்க்கையில் அனுபவித்த வறுமை, நிராசை, நம்பிக்கை, வறட்சி ஆகியவற்றைத் தம் கதைகளில் அப்படியே பதிவு செய்துள்ளார். அவை சமுதாய விமரிசனமாகக் கதைகளில் வெளிப்படுகின்றன.

TNPSC Syllabus Wise MCQs 👇Try our Test Hub 👑

பிறப்பும் வளர்ப்பும்

1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் சொக்கலிங்கம் பிள்ளைக்கும் பர்வதம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிறந்த ஊர் திருநெல்வேலி. பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் விருத்தாசலம். எட்டு வயதிலேயே தாயை இழந்த விருத்தாசலம் மாற்றாந்தாயின் கொடுமையை அனுபவித்துள்ளார். படிப்பில் ஆர்வம் இல்லாத அவர் மிகுந்த சிரமத்துடன் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

திருநெல்வேலியில் உள்ள இந்துக் கல்லூரியில் பயின்று 1931இல் தம் இருபத்தைந்தாவது வயதில் பி.ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் பொழுது ஆங்கில நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நாள்தோறும் புதிது புதிதான துப்பறியும் நாவல்களை விரும்பிப் படித்தார். இரவு நெடுநேரம் வரை கண்விழித்துப் படிக்கும் பழக்கம் உள்ள அவர், தாமும் கதை எழுத வேண்டும் என்ற உந்துதலைப் பெற்றார்.

விருத்தாசலத்திற்கு அரசுப் பணி கிடைக்கவில்லை. அக்கால வழக்கப்படி கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், அவரது தந்தை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். மனைவியின் பெயர் கமலாம்பாள். திருமணத்திற்குப் பின்னரும் புதுமைப்பித்தன் பொறுப்பில்லாமல் இருந்து வந்தார். ஆனால் நூல்களைத் தேடிப் படிப்பதில் இருந்த ஆர்வம் அவருக்குச் சற்றும் குறையவில்லை. வேலை இல்லாததாலும் அதற்கான முயற்சி இல்லாததாலும் தம் தந்தையின் கோபத்திற்கும் மாற்றாந்தாயின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆட்பட்டார். அதனால் மனைவியைப் பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டுத் தாம் மட்டும் சென்னை வந்தார்.

இறுதிக் காலம்

புதுமைப்பித்தன் பத்திரிகைப் பணியில் தொடர்ந்து இருந்து வந்தாலும் அதில் அவருக்குப் போதுமான வருமானம் இல்லை. அதனால் திரைப்படத் துறையில் புகுந்தார். 1946இல் அவ்வையார் படத்திற்கு வசனம் எழுதினார். பின்பு வேறு சில படங்களுக்கு வசனம் எழுதியவர், திரைப்படத் தயாரிப்புத் துறையில் இறங்கினார். வசந்தவல்லி என்ற படம் எடுத்து 1947இல் ராஜமுக்தி என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் படத்தயாரிப்புக் குழுவினருடன் புனா நகருக்குச் சென்ற போது காசநோயால் பாதிக்கப்பட்டார். 1948இல் திருவனந்தபுரம் வந்தார். மனைவியையும் ஒரே மகள் தினகரியையும் பார்த்தார். அவ்வாண்டு ஜூன் 30ஆம் நாள் நோயின் கடுமையால் இறந்தார்.

புதுமைப்பித்தனின் இறுதிக் காலம் மிகத் துன்ப மயமானதாக இருந்தது. வறுமை, நோய் இவற்றின் பிடியில் சிக்கித் தவித்த அவர் நம்பிக்கை நிராசை, விரக்தி என்று மனத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தார். எழுத்து அவரை வாழவைக்கவில்லை என்பதே உண்மை.

எழுத்துலக நுழைவு

சென்னையில் டி.எஸ். சொக்கலிங்கமும், வ. ராமசாமி என்னும் வ.ரா.வும் மணிக்கொடி என்ற இதழை நடத்திக் கொண்டிருந்தனர். அப்பத்திரிக்கைக்குப் புதுமைப்பித்தன் கதைகள் எழுதத் தொடங்கினார். பின்பு அறிஞர் ராய சொக்கலிங்கம் காரைக்குடியில் நடத்திய ஊழியன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணி ஏற்றுக்கொண்டார். அந்த அலுவலகச் சூழல் ஒத்துக் கொள்ளாததால் அந்தப் பணியை விட்டு விட்டு மீண்டும் சென்னை வந்தார்.

அந்தச் சமயத்தில் வார இதழாக வந்து கொண்டிருந்த மணிக்கொடி பொருளாதார நெருக்கடியால், மாதமிருமுறை வரும் கதை இதழாக வெளிவரத் தொடங்கியது. பி.எஸ். ராமையா மணிக்கொடியின் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றிருந்தார். அப்பொழுது மணிக்கொடி இதழின் வளர்ச்சிக்குப் புதுமைப்பித்தனும் துணை நின்றார்.

1936இல் மணிக்கொடி இதழ் நின்ற பிறகு, புதுமைப்பித்தன் தினமணி நாளிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகச் சேர்ந்தார். தினமணியில் செய்திகளை மொழிபெயர்க்கும் பணிகளில் ஈடுபட்டார். தினமணி ஆண்டு மலர்களில் கதைகள் எழுதித் தம் எழுத்துத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டார். ஏழரை ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு அங்கிருந்து 1944 இல் சொக்கலிங்கம் ஆசிரியராக இருந்த தினசரி நாளிதழின் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.

பல வகைப் படைப்புகள்

புதுமைப்பித்தன் சிறுகதை எழுத்தாளர் மட்டும் அல்லர். அரசியல் கட்டுரைகள், விமரிசனக் கட்டுரைகள், கதைகள், நாடகங்கள், திரை உரையாடல்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்று பல வகைப் படைப்புகளையும் தந்தவர் ஆவார். தினமணி ஆசிரியராக இருந்த போது அவர் நூல் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். அன்னையிட்ட தீ அவரது முற்றுப் பெறாத நாவல். புதுமைப்பித்தன் உலகச் சிறுகதைகளை மொழி பெயர்த்துள்ளார். அவை உலகத்துச் சிறுகதைகள் என்ற பெயரில் வெளிவந்தன. இத்தாலியச் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் வாழ்க்கை வரலாற்றை பாசிஸ்ட் ஜடாமுனி என்ற பெயரில் வெளியிட்டார். ஜெர்மானியச் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் வாழ்க்கை வரலாற்றைக் கப்சிப் தர்பார் என்ற பெயரில் எழுதியுள்ளார். ஆனால் அதன் இறுதிப் புதுமைப்பித்தன் பக்த குசேலர், வாக்கும் வக்கும் என்ற நாடகங்களையும் எழுதியுள்ளார். மேலும் அவர் தம் மனைவிக்கு எழுதிய கடிதங்களும் அண்மையில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.

இப்படி, புதுமைப்பித்தன் பல்வேறு இலக்கிய வகைகளில் தடம் பதித்துள்ளார் என்றாலும், சிறுகதைப் படைப்புகள் தாம் அவரைப் பாராட்டுக்குரியவராக்கின.

புதுமைப்பித்தன் சொவி என்னும் புனைபெயரில் அரசியல் கட்டுரைகளையும், புபி என்னும் புனைபெயரில் சிறுகதைகளையும் ரசமட்டம் என்னும் பெயரில் விமரிசனக் கட்டுரைகளையும், வேளூர் வே. கந்தசாமிக் கவிராயர் என்னும் பெயரில் கவிதைகளையும் எழுதியுள்ளார். மேலும் உத்தன், நந்தி, கபாலி சுக்ராச்சாரி என்னும் பல பெயர்களில் எழுதியுள்ளார் என்றாலும் புதுமைப்பித்தன் என்ற பெயர்தான் நிலைத்தது.

ஆற்றல்கள்

புதுமைப்பித்தன் உலக இலக்கியத் தேர்ச்சி பெற்றவர். அப்டன் சிங்களேர், கால்ஸ் வொர்த்தி, இப்சன், ப்ராங்க் ஹாரிஸ், பெர்னார்ட்ஷா போன்ற மேனாட்டு ஆசிரியர்களை நன்கு கற்றிருந்தார். ஆன்டன் செக்காவ், எட்கர் ஆலன்போ, மாப்பஸான், தாமஸ் மான், காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ் என்னும் உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகளை நன்றாகப் படித்திருந்தார். மாப்பஸானின் கதைகளைத் தழுவிச் சில கதைகளையும் எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். பழமை புதுமை என்ற இரண்டையும் கையாண்டு எழுதும் முறையைப் புதுமைப்பித்தன் தம் பாணியாக வைத்துக் கொண்டிருந்தார். கதைக்கரு, நடை இரண்டிலும் தனித்தன்மையை நிலைநாட்டியுள்ளார்.

கூரிய சமூகப் பார்வை, சிந்தனை ஆழம், தீவிரத் தன்மை உடைய வெளிப்பாடு, எதிர்க்கத் தயங்காத போர்க்குணம், அடங்காமை, புதுமை செய்யத் துடிக்கும் இயல்பு, எழுத்தின் மீது ஆழ்ந்த பற்று, தம்மைப் பற்றிய விமரிசனக் கண்ணோட்டம், நகைச்சுவை என்று பல குணங்களின் ஒட்டு மொத்தக் கலவைதான் புதுமைப்பித்தன்.

❤️ Love our study material?

Help us keep creating quality educational resources for TNPSC aspirants. Your support keeps this platform free for everyone!