இலக்கணக் குறிப்பறிதல்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெறவும்.
தமிழ் இலக்கணம்
இலக்கணம் ஐந்து வகைப்படும்:
- எழுத்திலக்கணம்
- சொல்லிலக்கணம்
- பொருளிலக்கணம்
- யாப்பிலக்கணம்
- அணியிலக்கணம்
எழுத்தின் வகைகள்:
எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்:
- உயிரெழுத்துகள்
- சார்பெழுத்துகள்
முதலெழுத்துகளின் வகைகள்:
முதலெழுத்துக்கள் இரண்டு வகைப்படும்:
- உயிரெழுத்துகள்
- மெய்யெழுத்துகள்
உயிரெழுத்துகளின் வகைகள்:
உயிரெழுத்துகள் இரண்டு வகைப்படும்:
- குற்றெழுத்துகள் (அ, இ, உ, எ, ஒ)
- நெட்டெழுத்துக்கள் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)
மெய்யெழுத்துகளின் வகைகள்:
மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும்:
- வல்லினம் (க், ச், ட், த், ப், ற்)
- மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்)
- இடையினம் (ய், ர், ல், வ், ழ், ள்)
ஆய்த எழுத்து
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, முற்றாய்தம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
சார்பெழுத்து அதன் வகைகள்:
முதல் எழுத்துக்களாகிய உயிர் எழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களையும் சார்ந்து இயங்கும் எழுத்துகள் சார்பெழுத்துகள் எனப்படும்.
சார்பெழுத்து பத்து வகைப்படும்:
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலுகரம்
- குற்றியலிகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஒளகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
"உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள பஃகிய இஉஐ ஔ மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத்தாகும்"
அளபெடை
"அளபெடை" என்பதற்கு "நீண்டு ஒலித்தல்" என்று பொருள். செய்யுளில் ஓசை குறையும் போது ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதே அளபெடை எனப்படும். அளவு எடுத்தல் என்பது பொருள். எழுத்தின் மாத்திரை அளவில் நீட்டி ஒலித்தல்.
மாத்திரை அளவு:
- உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில் - ஒன்று
- உயிர் நெடில், உயிர்மெய்நெடில் - இரண்டு
- மெய், ஆய்தம் - அரை
- உயிரளபெடை - மூன்று
- ஒற்றளபெடை - ஒன்று
அளபெடையின் வகைகள்:
அளபெடை இரண்டு வகைப்படும்.
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
1. உயிரளபெடை
உயிர் + அளபெடை - உயிரளபெடை. செய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெட்டெழுத்துகள் ஏழும் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) அளபெடுக்கும். அவ்வாறு அளபெடுக்கும் போது அளபெடுத்தமையை அறிய, அந்நெட்டெழுத்துகளுக்கு இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பக்கத்தில் எழுதப்படும்.
உயிரளபெடையின் வகைகள்:
உயிரளபெடை மூன்று வகைப்படும்.
- செய்யுளிசையளபெடை (அல்லது) இசைநிறையளபெடை
- இன்னிசையளபெடை
- சொல்லிசையளபெடை
செய்யுளிசையளபெடை
செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறையளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.
எ.கா:
"ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்"
இக்குறட்பாவில் 'உழார்' என்னும் சொல் 'உழாஅர்' என அளபெடுத்து வந்துள்ளது. உழார் என்பது இயல்பான சொல்.
எ.கா:
"கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு"
இக்குறட்பாவில் கெடா என்பது கெடாஅ என இறுதியிலும், விடா என்பது விடாஅர் என இடையிலும் அளபெடுத்துவந்துள்ளது.
மேலும் சில:
- உழாஅர்
- படாஅர்
- தொழூஉம்
- தூஉம்
- தருஉம்
- ஆஅதும்
- ஓஓதல்
- தொழாஅன்
- உறாஅமை
- பெறாஅ
உறாஅமை - செய்யுளிசை அளபெடை
இன்னிசையளபெடை
செய்யுளில் ஓசை குறையாத பொழுதும் செவிக்கு இனிய ஓசையைத் தரும் பொருட்டு உயிர்க்குறில் நெடிலாகி மேலும் அளபெடுப்பது இன்னிசையளபெடை ஆகும்.
எ.கா:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கெடுப்பதும், எடுப்பதும் என்று ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காகக் குறில் நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசையளபெடை எனப்படும்.
மேலும் சில எ.கா:
- உள்ளதூஉம்
- அதனினூஉங்கு
சொல்லிசையளபெடை
செய்யுளில் ஓசை குன்றாத பொழுதும் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.
எ.கா:
குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு.
இக்குறட்பாவில் 'தழி' என்றிருப்பினும் செய்யுளின் ஓசை குறைவதில்லை. 'தழீ' என்பது தழுவுதல் எனப் பொருள் தரும் பெயர்ச்சொல்லாகும். அச்சொல் 'தழீஇ' என அளபெடுத்தால் 'தழுவி' என வினையெச்சச் சொல்லாயிற்று.
"இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலை நெடில் அளபெடும் அவற்றவற் றினக்குறள் குறியே" நன்னூல் - 91
எடுத்துக்காட்டுகள்
-
அளபெடை:
- எழீஇ - சொல்லிசை அளபெடை
- கடாஅ யானை, சாஅய் தோள் - இசைநிறை அளபெடைகள்
- அதனினூஉங்கு - இன்னிசை அளபெடை
- தழீஇ - சொல்லிசை அளபெடைகள்
- தழீஇக்கொள்ள - சொல்லிசை அளபெடை
- உறீஇ - சொல்லிசை அளபெடை
- தாங்குறூஉம், வளர்க்குறூஉம் - இன்னிசை அளபெடைகள்
-
அசைநிலை மற்றும் பிரிநிலை:
- செய்கோ - ‘ஓ’ காரம் அசை நிலை
- ஞான்றே - 'ஏ’ காரம் அசை நிலை
- தானே - ஏகாரம் பிரிநிலை
- கள்வனோ - ஓகாரம் பிரிநிலை
-
வினா மற்றும் எதிர்மறை:
- விளைசெயம் ஆவதோ - ஓகாரம் எதிர்மறை
- குன்றமோ, பேயதோ, பூதமோ, ஏதோ - ஓகாரங்கள் வினாப்பொருள்
- யானோ அரசன் - ஓகாரம் எதிர்மறை
- அருவினை என்ப உளவோ - ஓகாரம் எதிர்மறை
-
தேற்றப்பொருள் (Emphasis):
- யானே கள்வன் - ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது.
- செல்வர்க்கே - ஏகாரம் பிரிநிலைப் பொருளில் வந்தது
- சீவகற்கே - ஏகாரம் தேற்றேகாரம்
- காயமே, கண்ணே - ஓகாரங்கள் தேற்றேகாரங்கள்
- புண்ணோ, இகழ் உடம்போ, மெய் - ஓகாரம் எதிர்மறைகள்
2. ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்வதற்குச் சொல்லிலுள்ள மெய்யெழுத்து அளபெடுத்தலை ஒற்றளபெடை என்று அழைக்கிறோம்.
எ.கா:
- எங்ங்கிறை வனுளனென்பாய்.
- வெஃஃகுவார்க் கில்லை வீடு
இத்தொடரில் 'ங்' என்பதும் 'ஃ' என்பதும் இருமுறை வந்துள்ளன. இவ்வாறு ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்து மெய்யும், ஆய்தம் ஒன்றும் ஆகப் பதினோர் எழுத்துகளும் ஒரு குறிலை அடுத்தும் இருகுறில்களை அடுத்தும் செய்யுளில் இனிய ஓசை வேண்டி அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பதற்கு ஒற்றளபெடை எனப்படும்.
"ஙஞண நமன வயலள ஆய்தம் அளபாம் குறிலிணை குறிற்கீழ் இடைகடை மிகலே யவற்றின் குறியாம் வேறே" நன்னூல் - 92
குற்றியலுகரம்
குற்றியலுகரம் - குறுமை + இயல் + உகரம் (கு, சு, டு, து, பு, று)
- ஒரு மாத்திரையளவு ஒலிக்க வேண்டிய உகரம் அரை மாத்திரையளவாகக் குறைந்தொலிப்பது குற்றியலுகரமாகும்.
- தனி நெடிலுடனோ பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம் (கு, சு, டு, து, பு, று) தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். இதனையே குற்றியலுகரம் என்பர்.
- எ.கா: பசு - காசு, படு - பாடு, அது - பந்து
- மேற்கண்ட சொற்களில் 'பசு, படு, அது' போன்ற சொற்களில் உள்ள உகரம் இதழ் குவிந்து நன்கு ஒலிக்கப்படுகிறது (ஒரு மாத்திரை). ஆனால் 'காசு, பாடு, பந்து' போன்ற சொற்களில் உள்ள கு, சு, டு, து போன்றவற்றின் உகரம் குறைந்து ஒலிக்கப்படுகிறது (அரை மாத்திரை). இதுவே குற்றியலுகரம் ஆகும்.
- தனி ஒரு குற்றெழுத்தை அடுத்து வரும் உகர எழுத்துகள் தனக்குரிய ஒரு மாத்திரை அளவாகவே ஒலிக்கிறது. (எ.கா: அது, பசு, படு, பொது)
- சொல்லுக்கு முதலிலும் இடையிலும் வரும் 'உகரம்’ தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்காது.
- சொல்லுக்கு இறுதியில் வரும் வல்லின மெய்களை (க்,ச்,ட்,த்,ப்,ற்) ஊர்ந்த உகரம் (கு, சு,டு,து,பு,று) மட்டுமே தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும்.
சொல்லின் இறுதி எழுத்தாக நிற்கும் குற்றியலுகரத்திற்கு முன் உள்ள எழுத்தை நோக்க குற்றியலுகரம் ஆறு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
குற்றியலுகரத்தின் வகைகள்:
குற்றியலுகரம் ஆறு வகைப்படும்:
- நெடில்தொடர்க் குற்றியலுகரம்
- ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
- உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- வன்தொடர்க் குற்றியலுகரம்
- மென்தொடர்க் குற்றியலுகரம்
- இடைத்தொடர்க் குற்றியலுகரம்
1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும். (தனி நெடில் என்பது உயிர் நெடிலாகவும் உயிர்மெய் நெடிலாகவும் இருக்கலாம்) எ.கா: பாகு, காசு, தோடு, காது, சோறு
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும். எ.கா: எஃகு, அஃகு, கஃசு
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
தனி நெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த் தொடர்க்குற்றியலுகரம் ஆகும். எ.கா: அழகு, முரசு, பண்பாடு, எருது, மரபு, பாலாறு (இச்சொற்களில் கு, சு, டு, து, பு, று ஆகியவற்றுக்கு முன் உள்ள எழுத்துகள் (ழு, ர, பா, ரு, லா) உயிர்மெய் எழுத்துகளாக உள்ளன.)
நெடில் தொடர் குற்றியலுகரம் அமைந்த சொல், நெடிலை உடைய இரண்டு எழுத்து சொல்லாக மட்டுமே வரும். உயிர்த்தொடர் குற்றியலுகரம் இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்துக்களை உடைய சொல்லாக வரும்.
4. வன்தொடர் குற்றியலுகரம்
வல்லின மெய்யெழுத்தைத் (க், ச், ட், த், ப், ற்) தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். எ.கா: பாக்கு, தச்சு, தட்டு, பத்து, உப்பு, புற்று
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
மெல்லின மெய்யெழுத்தைத் (ங், ஞ், ண், ந், ம், ன்) தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். எ.கா: பாங்கு, பஞ்சு, வண்டு, பந்து, அம்பு, கன்று
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இடையின மெய்யெழுத்தைத் (ய், ர், ல், வ், ழ், ள்) தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும். எ.கா: மூழ்கு, செய்து, சால்பு, சார்பு
"நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலி இடைத் தொடர்மொழி இறுதி வன்மையூ ருகரம் அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே" நன்னூல் - 94