குறில் நெடில் வேறுபாடு
தமிழ் மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் இலக்கணம் பெரிதும் துணைபுரிகிறது. அவற்றுள், எழுத்துகளின் ஒலிப்பு வேறுபாட்டை அறிவது அடிப்படையாகும். குறிப்பாக, குறில் மற்றும் நெடில் எழுத்துகளுக்கு இடையேயான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது, சொற்களின் பொருளைச் சரியாக உணர்ந்துகொள்ள உதவுகிறது.
தமிழ் மொழியின் இலக்கண வகைகள்
தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
எழுத்து
ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும், வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
உயிர் எழுத்துகள்
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் போன்ற எளிய செயல்பாடுகளால் ‘அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
இவை ஒலிக்கும் கால அளவைப் பொறுத்து இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
- குறில் (குற்றெழுத்து): குறுகி ஒலிக்கும் எழுத்துகள். இவை ஐந்து: அ, இ, உ, எ, ஒ.
- நெடில் (நெட்டெழுத்து): நீண்டு ஒலிக்கும் எழுத்துகள். இவை ஏழு: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ.
மாத்திரை
மாத்திரை என்பது எழுத்துகளை ஒலிப்பதற்கான கால அளவைக் குறிக்கும். ஒரு முறை கண் இமைக்கவோ அல்லது ஒரு முறை கை நொடிக்கவோ ஆகும் நேரமே ஒரு மாத்திரை எனப்படும்.
- குறில் எழுத்தின் மாத்திரை: 1
- நெடில் எழுத்தின் மாத்திரை: 2
- மெய் எழுத்தின் (புள்ளி வைத்த எழுத்து) மாத்திரை: 1/2
- ஆய்த எழுத்தின் மாத்திரை: 1/2
மெய்யெழுத்துகள்
மெய் என்பது 'உடம்பு' எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு தேவை. ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் ஆகும். இவை ஒலிப்பின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
- வல்லினம்: க், ச், ட், த், ப், ற்
- மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
- இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்
உயிர்மெய் எழுத்துகள்
மெய் எழுத்துகள் 18 உடன், உயிர் எழுத்துகள் 12 சேர்வதால் 216 உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
- மெய்யுடன் உயிர்க்குறில் சேரும்போது உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது.
- மெய்யுடன் உயிர்நெடில் சேரும்போது உயிர்மெய் நெடில் தோன்றுகிறது.
குறில் நெடில் பொருள் வேறுபாடு
குறில் நெடிலாக மாறும்போது சொல்லின் பொருள் மாறுபடும். இதைப் புரிந்துகொள்வது மொழிப் பிழைகளைத் தவிர்க்க உதவும்.
- கல் (குறில்) – கால் (நெடில்)
- குடை (குறில்) – கூடை (நெடில்)
- அடி (குறில்) – ஆடி (நெடில்)
- விடு (குறில்) – வீடு (நெடில்)
மயங்கொலி எழுத்துகள்
ஒலிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள எழுத்துகள் மயங்கொலிகள் எனப்படும். இவற்றில் குறில், நெடில் வேறுபாடும் அடங்கும்.
சொல் | பொருள் |
---|---|
அலை | கடல் அலை |
அளை | மோர் |
அழை | கூப்பிடு |
அரம் | வாளைத் தீட்டும் கருவி |
அறம் | தர்மம், நற்செயல் |
ஏரி | நீர்நிலை |
ஏறி | மேலே ஏறுதல் |
கூரை | வீட்டின் மேற்கூரை |
கூறை | புடவை |
தேர்வு நோக்கில் வினாக்கள்
1) குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக.
- a) இரை, ஈகை
- b) சிறகு, வளர்த்தல்
- c) உடல், ஊண்
- d) படம், பார்த்தல்
விடை: b) சிறகு, வளர்த்தல்
2) குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக: கனகம் – கானகம்
- a) செல்வம் – அரசன்
- b) காடு – தொடுதல்
- c) பொன் – காடு
- d) நங்கை – தங்கை
விடை: c) பொன் – காடு
3) குறில், நெடில் வேறுபாடுணாந்து பொருளறிக: அறு-ஆறு
- a) நதி – ஓர் எண்
- b) வெட்டுதல் – நதி
- c) வெட்டுதல் – அறுத்தல்
- d) அறுத்தல் – கட்டுதல்
விடை: b) வெட்டுதல் – நதி
4) பொருந்தா இணையைக் கண்டறிக.
- a) மடு – மாடு
- b) தடு – தாடு
- c) விடு – வீடு
- d) எடு – ஏடு
விடை: b) தடு – தாடு
5) குறில் நெடில் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்க: சிலை – சீலை
- a) சிற்பம் – புடவை
- b) புடவை – சிற்பம்
- c) கற்சிலை – ஓவியம்
- d) சிற்பம் – ஒழுக்கம்
விடை: a) சிற்பம் – புடவை