பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்கு
தமிழ் மொழியில், நாம் அன்றாடம் பேசும்போது பயன்படுத்தும் மொழி நடைக்கும், நூல்களிலும் பிறவற்றிலும் எழுதும்போது பயன்படுத்தும் மொழி நடைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இவற்றை முறையே பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்கு என்று கூறுகிறோம்.
TNPSC Syllabus Wise MCQs 👇Try our Test Hub 👑
பேச்சு வழக்கு
- நாம் ஒருவருக்கொருவர் பேசும்போது இயல்பாகப் பயன்படுத்தும் சொற்கள், தொடர்கள் ஆகியவை பேச்சு வழக்கு எனப்படும்.
- இது பெரும்பாலும் எளிமையாகவும், சொற்களைச் சுருக்கியும் ஒலிக்கும்.
- இடம், சமூகம், தொழில் ஆகியவற்றைப் பொறுத்து பேச்சு மொழி மாறுபடும். இதனை வட்டார வழக்கு என்பர்.
எழுத்து வழக்கு
- இலக்கண விதிகளுக்கு உட்பட்டு, பிழையின்றி எழுதப்படுவது எழுத்து வழக்கு.
- இது நூல்கள், இதழ்கள், கடிதங்கள், அரசு ஆவணங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
- எழுத்து வழக்கு பெரும்பாலும் அனைவருக்கும் பொதுவானதாகவும், நிலையானதாகவும் இருக்கும்.
பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு ஒப்பீடு
தேர்வில் கேட்கப்படும் பொதுவான சில சொற்களின் பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்கு வடிவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பேச்சு வழக்கு | எழுத்து வழக்கு | பேச்சு வழக்கு | எழுத்து வழக்கு |
---|---|---|---|
சாப்டான் | சாப்பிட்டான் | ஊறவச்சு | ஊறவைத்து |
படிச்சான் | படித்தான் | தெறந்து | திறந்து |
போய்ட்டு | போய்விட்டு | ஒசந்த | உயர்ந்த |
வந்தியா? | வந்தாயா? | புல்லு | புல் |
பாத்தியா? | பார்த்தாயா? | தலகாணி | தலையணை |
இந்தா | பிடித்துக்கொள் | வேர்வை | வியர்வை |
கெளம்பு | புறப்படு | வூடு | வீடு |
தண்ணி | தண்ணீர் | வெளக்கு | விளக்கு |
எண்ணை | எண்ணெய் | கவுறு | கயிறு |
ஒருவள் | ஒருத்தி | கத்தாழை | கற்றாழை |
சுவத்தில் | சுவரில் | துடங்கு | தொடங்கு |
பதட்டம் | பதற்றம் | பயந்தாங்குள்ளி | பயங்கொள்ளி |
சிலவு | செலவு | செவ்வாக்கெழம | செவ்வாய்க்கிழமை |
அருகாமையில் | அருகில் | வாங்கியாந்தான் | வாங்கி வந்தான் |
தேர்வு நோக்கில் முக்கியத்துவம்
போட்டித் தேர்வுகளில், ஒரு பேச்சு வழக்குச் சொல்லுக்கு இணையான எழுத்து வழக்குச் சொல்லைக் கண்டறிவது போன்ற வினாக்கள் கேட்கப்படுகின்றன. பிழையின்றி எழுதுவதற்கும், ஒரு தொடரின் சரியான பொருளை உணர்வதற்கும் பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்குக்கு இடையேயான வேறுபாட்டை அறிவது மிக அவசியம்.