Skip to main content

சந்தி விதிகள்

சிலர், விடியர்க்காலை எனவும், தகுந்தாப்போல் எனவும், நன்றாய்யிருக்கும் எனவும், நிலையில் யிருக்காது எனவும், எவ்வாறு யெனின் எனவும், போக யிருந்தார் எனவும் தவறாக எழுதுகின்றனர். விடியற்காலை என்றும், தகுந்தாற்போல் என்றும், நன்றாய் இருக்கும் என்றும், நிலையில் இருக்காது என்றும், எவ்வாறெனின் என்றும், போகவிருந்தார் என்றும் எழுதவேண்டும்.

பந்தக்கால் என்று திருமண அழைப்பில் எழுதுவதைக் காணலாம். இது பந்தல் + கால் = பந்தற்கால் என்றே வரும். பந்தக்கால் என்பதற்கு, பந்தம் கொளுத்தி வைப்பதற்குரிய கால் என்று பொருள்படும். இத் தவறுகளை நன்குணர்ந்து கொள்ள வேண்டுமெனில் சில புணர்ச்சி விதிகளை அறிந்து கொள்ள வேண்டுவது இன்றியமையாதது.

புணர்ச்சி (சந்தி)

புணர்ச்சி என்பது நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் ஒன்றுபடச் சேர்வது. இப்புணர்ச்சி இரு வகைப்படும்: ஒன்று இயல்பு புணர்ச்சி; மற்றொன்று விகாரப் புணர்ச்சி. நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது எந்த மாறுபாடும் அடையாமல் இயல்பாய் இருப்பது இயல்பு புணர்ச்சி எனப்படும்; மாறுபாடு அடைவது விகாரப் புணர்ச்சி எனப்படும்.

இயல்பு புணர்ச்சி

நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது மாற்றம் ஏதும் இன்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி ஆகும்.

  • கண்டு பேசினார்
  • என்று கூறினார்
  • வந்து தந்தார்
  • செய்து சொன்னான்
  • தெருவில் + ஓடினான் = தெருவிலோடினான்
note

நிலைமொழியின் ஈற்று மெய்யெழுத்துடன் வருமொழி முதலில் வரும் உயிர் எழுத்துச் சேர்ந்து வருவதையும் இயல்பு புணர்ச்சியாகவே கொள்ளவேண்டும். தெருவில் ஓடினான் என்று பிரித்து எழுதுவதே இக்காலத்தில் நல்லது. நன்றாய்+இருக்கும் என்னும் இரு சொற்கள் சேரும் போது நன்றாயிருக்கும் என்றே வரும்.

விகாரப்புணர்ச்சி

இரு சொற்கள் சேரும்போது மாற்றம் நிகழ்வது விகாரப்புணர்ச்சி எனப்படும். இது மூன்று வகைப்படும்.

  1. தோன்றல்: ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றுதல்.
  2. திரிதல்: ஓர் எழுத்து வேறோர் எழுத்தாக மாறுதல்.
  3. கெடுதல்: ஓர் எழுத்து மறைந்து போதல் (கெடுதல்).

தோன்றல் விகாரம்

  • வாழை + பழம் = வாழைப்பழம் (இங்கே 'ப்' தோன்றியது)
  • மெய் வருதல் முதலியவை தோன்றல் என்னும் விகாரம்.

திரிதல் விகாரம்

  • பல் + பொடி = பற்பொடி (இங்கே 'ல்' என்னும் மெய்யெழுத்து 'ற்' ஆக மாறியது)
  • அணில் + பிள்ளை = அணிற் பிள்ளை
  • ஒன்று வேறொன்றாய் மாறுதல் திரிதல் எனப்படும்.

கெடுதல் விகாரம்

  • மரம் + நாய் = மரநாய் (இங்கே 'ம்' என்னும் எழுத்துக் கெட்டது)
  • உள்ளது அழிந்து போதலைக் கெடுதல் என்பர்.

உடம்படு மெய்

வந்த + உடன் வந்தவுடன் என்று சேர்த்தெழுத வேண்டும். வந்த என்னும் சொல்லின் ஈற்றில் 'அ'கர ஒலி இருக்கிறது. வருமொழியாகிய உடன் என்பதன் முதல் எழுத்து 'உ'கரம். இந்த இரண்டு உயிர் ஒலிகளையும் ஒன்று படுத்தும் 'வ்' என்னும் மெய் யெழுத்தையே உடம்படுமெய் என்கிறோம். 'வ்' என்றும், 'ய்' என்றும் இரண்டுவகை உடம்படு மெய்கள் உள்ளன.

உயிரீற்றுக்கு முன் உயிர் முதல் மொழி வருமிடத்து அவ்விரண்டு உயிரொலிகளையும் விட்டிசைக்காது ஒன்றுபடுத்தி ஒலித்தல் அரிதாகலின் அவற்றை உடன்படுத்தற்கு இடையே ஒரு மெய்யெழுத்துத் தோன்றுகின்றது. அதுதான் உடம்படு மெய் என்பது.

வகர உடம்படு மெய் (வ்)

அ, ஆ, உ, ஊ, ஓ என்னும் உயிரொலிகளுள் ஏதாவது ஒன்று நிலைமொழியின் கடைசியில் இருக்க, வருமொழி முதலில் பன்னிரண்டு உயிரெழுத்துகளுள் எது வந்தாலும் வகர மெய் (வ்) தோன்றும்.

  • போன + உடன் = போனவுடன்
  • மா + இலை = மாவிலை
  • திரு + ஆரூர் = திருவாரூர்
  • பூ + எழுத்து = பூவெழுத்து
  • கோ + இல் = கோவில்
note

வந்தவுடன், போனவுடன் என்று பிரித்தெழுதுதலே கூடாது; சேர்த்தே எழுதுதல் வேண்டும். வர + இல்லை என்னும் சொற்களை வரவில்லை என்றுதான் எழுதவேண்டும்.

யகர உடம்படு மெய் (ய்)

நிலைமொழியீற்றில் இ, ஈ, ஐ ஒலிகளுள் ஏதாவது ஒன்று இருக்க, வருமொழி முதலில் பன்னிரண்டு உயிரெழுத்துகளுள் எது வந்தாலும் யகர உடம்படு மெய் (ய்) தோன்றும்.

  • கூலி + ஆள் = கூலியாள்
  • தீ + ஆல் = தீயால்
  • கை + எழுத்து = கையெழுத்து

'ஏ' முன் இருமையும்

'ஏ' ஒலியுடைய சொல்லானது பெயர்ச் சொல்லாயின் வகர உடம்படுமெய்யும், இடைச் சொல்லாயின் யகர உடம்படுமெய்யும் பெற்று வரும்.

  • தே + ஆரம் = தேவாரம் (தே-கடவுளுக்குச் சூட்டப்படும்; ஆரம் - பாமாலை)
  • கறியே + இல்லை = கறியேயில்லை

உடம்படுமெய் வரவேண்டிய மற்றும் வரக்கூடாத இடங்கள்

  • வரவேண்டிய இடங்கள்: தொகைச் சொற்களில் உடம்படுமெய் வரவேண்டும் (உ.ம்: பூவரசு, மாவிலை, தெருவோரம்).
  • வரக்கூடாத இடங்கள்: வியப்பு, துன்பம், மெச்சிப்பேசுவது ஆகிய இடங்களில் உடம்படுமெய் தேவையில்லை (உ.ம்: ஆ! ஆ! என்ன செய்தாய்!).

சுட்டெழுத்து மற்றும் வினா எழுத்து புணர்ச்சி

உயிர் வரின் 'வ்' தோன்றி இரட்டித்தல்

  • அ + உயிர் = அவ்வுயிர்
  • இ + எழுத்து = இவ்வெழுத்து
  • எ + அணி = எவ்வணி?
note

இந்த 'வ' உடம்படு மெய் அன்று என்றறிக.

யகரம் வரின் 'வ்' தோன்றுதல்

  • அ + யானை = அவ்யானை
  • இ + யானை = இவ்யானை
  • எ + யானை = எவ்யானை?

பிறவற்றின் பின் அந்தந்த எழுத்தே வருதல்

  • அ + நூல் = அந்நூல்
  • இ + மாதர் = இம்மாதர்
  • எ + மாதம் = எம்மாதம்?
  • அ + செடி = அச்செடி
  • இ + குதிரை = இக்குதிரை
  • எ + படை = எப்படை?
  • அ + வீடு = அவ்வீடு
  • இ + வேளை = இவ்வேளை
  • எ + விதம் = எவ்விதம்?
  • அ + ஞாலம் = அஞ்ஞாலம்

விரிவான சந்தி விதிகள்

தமிழில் பிழையற எழுதுவதற்கும், பாடல்களைப் படித்து இன்புறுதற்கும் சில சந்தி முறைகளை நன்கறிந்து கொள்வது இன்றியமையாதது.

திரிதல் (மாறுதல்) விதிகள்

  1. ம் -> ங், ஞ், ந் ஆகும் (க, ச, த முன்மட்டும்)

    • மனம் + களித்தான் = மனங்களித்தான்
    • மரம் + சாய்ந்தது = மரஞ்சாய்ந்தது
    • பணம் + தேடி = பணந்தேடி
  2. ண் -> ட் ஆகும் (க, ச, ப முன்மட்டும்)

    • மண் + குடம் = மட்குடம்
    • மண் + சட்டி = மட்சட்டி
    • மண் + பாண்டம் = மட்பாண்டம்
  3. ண் முன் 'த' -> 'ட' ஆகும்

    • தண் + தமிழ் = தண்டமிழ்
    • மண் + தலம் = மண்டலம்
  4. ன் -> ற் ஆகும் (க, ச, ப முன்மட்டும்)

    • பொன் + குடம் = பொற்குடம்
    • பொன் + சங்கிலி = பொற்சங்கிலி
    • பொன் + பாடகம் = பொற்பாடகம்
  5. ன் முன் 'த' -> 'ற' ஆகும்

    • அவன் + தான் = அவன்றான்
    • பொன் + தோடு = பொற்றோடு
  6. ள் -> ட் ஆகும் (க, ச, ப முன்மட்டும்)

    • கள் + குடியன் = கட்குடியன்
    • முள் + செடி = முட்செடி
    • முள் + பழம் = முட்பழம்
  7. ள் முன் 'த' -> 'ட' ஆக, 'ள்' -> 'ட்' ஆகும்

    • முள் + தாள் = முட்டாள்
  8. ள் முன் 'ந' -> 'ண' ஆக, 'ள்' -> 'ண்' ஆகும்

    • எள் + நெய் = எண்ணெய்
    • தெள் + நீர் = தெண்ணீர்
  9. ல் -> ற் ஆகும் (க, ச, ப முன்மட்டும்)

    • கல் + கம்பம் = கற்கம்பம்
    • கல் + சுவர் = கற்சுவர்
    • நெல் + பயிர் = நெற்பயிர்
    • பந்தல் + கால் = பந்தற்கால்
  10. ல் முன் 'த' -> 'ற' ஆக, 'ல்' -> 'ற்' ஆகும்

    • கல் + தூண் = கற்றூண்
    • நல் + தாள் = நற்றாள்
    • நல் + தமிழ் = நற்றமிழ்
  11. ல் முன் 'ந' -> 'ன' ஆக, 'ல்' -> 'ன்' ஆகும்

    • நல் + நெறி = நன்னெறி
    • புல் + நுனி = புன்னுனி
    • கல் + நெஞ்சம் = கன்னெஞ்சம்
  12. 'ல்' முன் 'ம' -> 'ன' ஆகும்

    • மேல் + மேல் = மேன்மேல்
    • கல் + மனம் = கன்மனம்
  13. 'ள்' முன் 'ம' -> 'ண' ஆகும்

    • நாள் + மலர் = நாண்மலர்
    • முள் + மலை = முண்மலை
  14. 'ன்' முன் 'ந' -> 'ன' ஆகும்

    • பொன் + நாடு = பொன்னாடு
    • தன் + நலம் = தன்னலம்
  15. 'ண்' முன் 'ந' -> 'ண' ஆகும்

    • தண் + நீர் = தண்ணீர்
    • கண் + நோய் = கண்ணோய்
    • விண் + நாடு = விண்ணாடு

கெடுதல் விதிகள்

  1. குற்றியலுகரம் கெடுதல் நிலைமொழியின் கடைசியில் குற்றியலுகரம் இருந்து, வருமொழி முதலில் உயிரெழுத்து வந்தால் நிலைமொழியீற்றிலுள்ள குற்றியலுகரம் கெட்டுப்போக, நிலைமொழியீற்று மெய்யும் வருமொழி முதலில் இருக்கும் உயிரும் சேர்ந்து விடும்.

    • எவ்வாறு + எனின் = எவ்வாறெனின்
    • வேறு + இல்லை = வேறில்லை
    • மரபு + ஆகும் = மரபாகும்
    • அங்கு + அங்கு = அங்கங்கு
    • உழுது + உண்டு = உழுதுண்டு
    • என்று + என்றும் = என்றென்றும்
    • காசு + ஏது = காசேது?
    • ஒப்பு + இல்லை = ஒப்பில்லை
    • எழுந்து + இரு = எழுந்திரு
    • நாடு + அற்றோர் = நாடற்றோர்
  2. முற்றியலுகரம் கெடுதல் சில சொற்களில் முற்றியலுகரத்துக்கும் இப்படியே வரும்.

    • வரவு + ஏற்பு = வரவேற்பு
    • கதவு + அடைப்பு = கதவடைப்பு
    • செலவு + ஆயிற்று = செலவாயிற்று
    note

    குறிப்பு: குற்றியல் உகரம் வடமொழியாய் இருந்தால் கெடாது. சம்பு + ஐ = சம்புவை என்றே வரும். (சம்பு-சிவன் என்று பொருள்படும் வடசொல்.)

  3. 'ம்' கெடுதல்

    • குளம் + நெல் = குளநெல்
    • அறம் + வினை = அறவினை
    • மரம் + உரி = மரவுரி
  4. 'ள்' கெட்டு 'த' -> 'ட' ஆதல் 'ள்' முன் 'த' வரின் 'ள்' கெட்டு, 'த'கரம் 'ட'கரம் ஆகும்.

    • நாள் + தோறும் = நாடோறும்
    • அவர்கள் + தாம் = அவர்கடாம்
    • துகள் + தீர் = துகடீர்

இரட்டித்தல் விதிகள்

தனிக்குறில் அல்லாத நெடிற்றொடர், உயிர்த் தொடர் குற்றியலுகர ஈற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின், ஈற்று உகரம் கெட்டு, конечный மெய் இரட்டிக்கும்.

  • வீடு + சுவர் = வீட்டுச்சுவர்
  • வயிறு + வலி = வயிற்றுவலி
  • தமிழ்நாடு + போக்குவரத்து = தமிழ்நாட்டுப் போக்குவரத்து
  • ஆறு + நீர் = ஆற்றுநீர்
  • கயிறு + கட்டில் = கயிற்றுக்கட்டில்
  • மூடு + பூச்சி = மூட்டுப்பூச்சி
  • குருடு + கண் = குருட்டுக்கண்
  • ஓடு + வீடு = ஓட்டுவீடு
  • நாடு + பற்று = நாட்டுப்பற்று

சிறப்பு புணர்ச்சி விதிகள்

திசைப்பெயர்ப் புணர்ச்சி

  • தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
  • தெற்கு + மேற்கு = தென்மேற்கு
  • தெற்கு + நாடு = தென்னாடு
  • தெற்கு + மொழி = தென்மொழி
  • தெற்கு + கடல் = தெற்குக்கடல்
  • மேற்கு + காற்று = மேல்காற்று
  • மேற்கு + கடல் = மேல்கடல்
  • மேற்கு + ஊர் = மேலூர்
  • கிழக்கு + காற்று = கீழ்காற்று
  • கிழக்கு + கடல் = கீழ்கடல்
  • கிழக்கு + திசை = கீழ்த்திசை
  • வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
  • வடக்கு + மேற்கு = வடமேற்கு
  • வடக்கு + மலை = வடமலை
  • வடக்கு + நாடு = வடநாடு

எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி

  • ஒன்று + ஆயிரம் = ஓராயிரம்
  • இரண்டு + ஆயிரம் = ஈராயிரம்
  • மூன்று + ஆயிரம் = மூவாயிரம்
  • மூன்று + காலம் = முக்காலம்
  • மூன்று + நூறு = முந்நூறு
  • நான்கு + ஆயிரம் = நாலாயிரம்
  • நான்கு + நூறு = நானூறு
  • நான்கு + கவி = நாற்கவி
  • ஐந்து + ஆயிரம் = ஐயாயிரம்
  • ஐந்து + நூறு = ஐந்நூறு
  • ஐந்து + பால் = ஐம்பால்
  • ஆறு + ஆயிரம் = ஆறாயிரம்
  • ஆறு + வகை = அறுவகை
  • ஏழு + வகை = எழுவகை
  • எட்டு + நூறு = எண்ணூறு
  • எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம்
  • ஒன்பது + பத்து = தொண்ணூறு (90)
  • ஒன்பது + நூறு = தொள்ளாயிரம்
note

1000-ல் 100 தள்ளி எடுத்தது தொள்ளாயிரம் எனப்பட்டது. இக்காலத்தில் தொளாயிரம் என்றும் வழங்குவதுண்டு.

  • பத்து + ஒன்று = பதினொன்று
  • பத்து + இரண்டு = பன்னிரண்டு

இதர புணர்ச்சிகள்

  • என் + தன் = என்றன்
  • எம் + தம் = எந்தம்
  • தன் + நலம் = தன்னலம்
  • தம் + நலம் = தந்நலம்
  • என் + நாடு = என்னாடு (எனது நாடு)

இங்கு எளிமையாகக் கூறப்பட்ட சந்தி முறைகளை நன்கு மனத்தில் பதிய வைத்துக் கொண்டால், உண்மையாகத் தமிழ் மொழியைப் பிழையற எழுதுவது மட்டுமன்றித் தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டு இன்புறலாம்.