Skip to main content

வாக்கியம் அமைத்தல்

வாக்கிய வகைகளும் அமைக்கும் முறைகளும்

எழுத்தும் சொல்லும் வாக்கியத்திற்குக் கருவிகள். பன்னீராண்டு நிகழ்ந்த பஞ்சத்துக்குப் பின் நாடு மலிய மழை பெய்தது. பெய்த பின்றைப் பாண்டியன், "இனி நாடு நாடாயிற்று. ஆகலின். நூல் வல்லாரைக் கொணர்க" என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்கினான். ஏவலர் எழுத்ததிகாரம் வல்லாரையும் சொல்லதிகாரம் வல்லாரையும் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப் பட்டிலேம்" என்று மன்னனிடம் கூறிய போது, அவன், எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் பொருளதிகாரம் அறிவதன் பொருட் டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றி லேம் என்று கவன்றான்" என இறையனார் அகப்பொருள் கூறு கின்றது. அஃது உண்மைதானே! எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் பொருளதிகாரத்தை அறிவதற்குள்ள கருவிகள். அது போலவே எழுத்துப்பிழை, சொற்பிழை சந்திப்பிழை, சொற் பிரிப்புப்பிழை முதலியனவெல்லாம் வாக்கியத்தைப் பிழையின்றி எழுதுவதற்காகவே அறிந்து கொள்கிறோம். எழுத்தும் சொல்லும் வாக்கியத்திற்குக் கருவிகள் என்பது கூறாமலே நன்கு விளங்கும்.

வாக்கியத்தில் ஏற்படும் தவறுகள்

வாக்கியங்களை எழுதும்போது மாணவர்களும் செய்தியாளர்களும் இதழாசிரியர்களும் எழுத்தாளர் சிலரும் இலக்கணப் பயிற்சி இல்லாமையால் பற்பல தவறுகள் செய்யக் காண்கிறோம். ஒருமை பன்மை வினைமுற்றுப் பிழைகள் நாளிதழ்களில் மலிந்து இருக்கக் காணலாம்.

ஆங்கிலத்தில் இப்பிழையைச் செய்தால் நம்மவர்களே எள்ளி நகைப்பார்கள். ஆனால், தமிழில் "கட்டுப்பாடுகள் இனிக் கிடையாது' என்று எழுதினால் தவறு என்று நாம் கவலைப் படுவதில்லை. "கட்டுப்பாடுகள் இனிக்கிடையா" என்றிருக்க வேண்டும். சிலர் அப்படி எழுதுவதில் உயிரிருப்பதாகவும் கருதி விடுகின்றனர். பேச்சு மொழியில் தவறுகள் செய்கிறோம். கவலை யில்லை. எழுத்து மொழியில் தவறு செய்வது மொழிக்குச் செய்யும் தீமை என்றுதான் கூற வேண்டும்.

வாக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியவை

நாகரிக வளர்ச்சியின் சின்னம் உரைநடைப் பெருக்கம். செய்யுள் பண்டை மொழியின் சிறப்பு. இன்றைய மொழியின் சிறப்பு இக் காலத்துக்கு ஏற்றவாறு உரைநடை நூல் பெருகுவதே யாகும். விஞ்ஞான அறிவு பெருகப் உரைநடை நூல் களுக்குத் தேவையும் மதிப்பும் பெருகும். விஞ்ஞானம் வளர்ந் திருக்கும் இக் காலத்தில் உரைநடைதான் எழுத முடியுமேயன்றிச் சிறந்த செய்யுள் இயற்றுவது அரிதாகும். இன்று செய்யுளைப் படித்து இன்புறுவதற்குப் பலர் அஞ்சி நடுங்கி அலறுவது காண்கிறோம். பலர் செய்யுளை வெறுப்பதையும் கண்கூடாகப் பார்க் கிறோம். ஒரு சிலரே - செய்யுளின்பத்தில் பழகிய ஒரு சிலரே மனப்பண்பை வளர்ப்பதற்குச் செய்யுளைப் படிக்கின்றனர். இக்காலத்தில் அறிவு வளர்ச்சிக்குக் காரணமான உரைநடையில் அறிஞர்கள் கவனம் செலுத்துவது உரைநடையில் கவனம் செலுத்தும் இக்காலத்தில் நாம் உரைநடைக்கு அடிப்படை யாக உள்ள வாக்கியத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டுவது இன்றியமையாதது.

வாக்கிய வரலாறு

தமிழ்மொழியில் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இறையனார் களவியல் உரையில் வாக்கியங்கள் நல்ல முறையில் அமைந்திருக்கக் காணலாம். அந்த உரை நடை, செய்யுள் நடை போல இருந்தாலும், வாக்கியங்களின் அமைப்புச் சிறந்திருக்கப் பார்க்கிறோம். கி.பி. 13, 14-ஆம் நூற்றாண்டுகளிலே வாழ்ந்த உரையாசிரியர்களால் வாக்கிய அமைப்பு வளர்ச்சியுற்றது எனலாம். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, மிகுந்த வளர்ச்சியுற்றுள்ள ஆங்கில மொழியின் கூட்டுறவால், தமிழில் வாக்கிய அமைப்புப் பண்பட்டு வரத் தொடங்கியது; இன்று நன்னிலையில் வளர்ந்துகொண்டு இவ்வளர்ச்சிக்கு ஆங்கில மொழியின் கூட்டுறவே காரணம்.

வாக்கியம் என்பது

வாக்கியத்தைப் பிழையின்றி எழுதுவதற்கு வாக்கியம் என்றால் என்ன என்பதைப் பற்றியும், வாக்கிய வகைகள் இவை என்பதைப் பற்றியும், வாக்கியங்கள் இன்னவாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாக்கியம் என்பது வடசொல் என்று கேட்கும்போது வியப் படையலாம். 'வாக்கியத்திற்குத் தமிழில் சொல் இல்லையா?' என்று ஒருவர் வாக்கியத்தைத் தமிழில் முற்றுச் சொற்றொடர் எனலாம். வாக்கியம் என்பதே பெரிதும் வழங்கி வந்திருப்பதால், நாம் அச்சொல்லை ஏற்றுக் கொள்வதால் தவறு இல்லை. முற்றுச் சொற்றொடர் என்றால் இன்று அது பலருக்கும் புரியாத புதிராக இருக்கும். வாக்கியம், உரைநடையில் மிக மிக இன்றியமையாத பகுதியாகும்.

வாக்கியம் என்பது ஒரே ஒரு முழுக்கருத்தைத் தெரிவிக்கும் சொற்கூட்டமாகும். ஒரு வாக்கியத்தில் இரு வேறு கருத்துகள் இருத்தல் கூடாது. ஒவ்வொரு வாக்கியத்திலும் எழுவாய். பயனிலை, செயப்படுபொருள் ஆகியவை இருக்கும். சில வாக்கியங்களில் எழுவாய் மறைந்து இருக்கும்.

  1. 'நாளை வா'
  2. 'இளமையிற் கல்'
  3. 'இரப்பவர்க்கு இட்டு உண்ணுங்கள்'

இவை வாக்கியங்களே. இவற்றில் எழுவாய்கள் இல்லை. முதலிரண்டு வாக்கியங்களில் நீ என்னும் எழுவாயும், மூன்றாவது வாக்கியத்தில் நீங்கள் என்னும் எழுவாயும் மறைந்து நிற்கின்றன. எழுவாய் தோன்றாமல் இருந்தால், அதனைத் தோன்றா எழுவாய் என்பர். செயப்படுபொருள் சில வாக்கியங்களில் இல்லாமலும் இருக்கும். கண்ணன் ஓடினான் என்னும் வாக்கியத்தில் செயப்படு பொருள் இல்லாமல் இருப்பதைக் காண்க. சில வாக்கியங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படுபொருள்களும் இருக்கும்.

ஆசிரியர், மாசிலாமணிக்குத் தமிழும் கணக்கும் கற்பித்தார். ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படுபொருள்கள் இருத்தலைக் காண்க.

எழுவாயைத் தழுவியும் செயப்படுபொருளைத் தழுவியும் பயனிலையைத் தழுவியும் அடைமொழிகள் இருப்பதுமுண்டு; இல்லாமலிருப்பதுமுண்டு. இவ்வடைமொழிகள் வாக்கியத்தின் முழுக்கருத்தை விளக்குவதாகவே இருக்கும். பத்துத் திங்கள் சுமந்து ஈன்றெடுத்த தாயும் ஒழுக்கம் கெட்ட மகனை மிகவும் விரும்பமாட்டாள். இந்த வாக்கியத்தில் அடைமொழிகள் வந்திருத்தலைக் காண்க. 'பத்துத் திங்கள் சுமந்து ஈன்றெடுத்த' என்னும் தொடர் 'தாயும்' என்னும் எழுவாய்க்குரிய தொடர்; 'கெட்ட' என்னும் தொடர் 'மகன்' என்னும் செயப்படு பொருளுக் குரியது; 'மிகவும்' என்பது 'விரும்பமாட்டாள்' என்னும் பயனிலைக் குரிய அடைமொழி.

தெளிவாகக் கருத்தைத் தெரிவிப்பதே வாக்கியத்தின் நோக்கமாக இருத்தல் வேண்டும் என்பதை ஒருவரும் மறத்தலாகாது. பொருள் மயக்கமும் வாக்கியத்தில் வருதல் கூடாது "இங்குச் செய்யப்படும் பண்டங்கள் நெய்யில் செய்யப்பட்டவை அல்ல" என்று சிற்றுண்டிச்சாலை அறிவிப்பில் பலரும் கண்டு இருக்கலாம். இஃது ஏமாற்றும் வாக்கியம்; மயக்கும் வாக்கியமு மாகும். 'செய்யப்பட்டவை" என்னும் சொல் வரைக்கும் வேறு நினைக்கின்றோம். "அல்ல” என்னும் சொல்லைப் படித்த பின்னரே உண்மையை உணருகிறோம். இப்படி எழுதுவது வாணிகத் தந்திரம். "எண்ணெயில்" அல்லது "டால்டாவில்" செய்யப் பட்டவை என்றிருந்தால் பொருள் தெளிவாக இருக்கும். "நீங்கள் சொல்லுவது பச்சைப்பொய்" என்று சொல்லாமல் நாகரிகமாய்க் கூறும் பொருட்டு "நீங்கள் கூறுவது உண்மைக்கு மாறானது" என்று சொல்கிறோம். இவ்வாறு கூறுவது வேறு; மயக்கும் வாக்கியம் வேறு.

தமிழ்மொழியில் வாக்கியம் பிழையில்லாமல் இருக்கலாம். அதில் கருத்து முடியாமல் இருப்பதுண்டு. இப்படிக் கருத்து முடியாமல் மற்றொரு கருத்தைத் தழுவி நிற்கும் எச்சக் கருத்துள்ள வாக்கியமும் உண்டு. 'நானும் வருகிறேன்' என்பது இந்த வகையான வாக்கியம். உம்மையால் இத்தன்மை உண்டாகிறது. இதனை எச்ச வாக்கியம் எனலாம். இத்தகைய வாக்கியம் தமிழில் மிகமிக அருகி வரும்.

வாக்கிய வகைகள்

கருத்து வகை

கருத்தைப் பொறுத்து ஒருவகையாகவும், அமைப்பை ஒட்டி மற்றொரு வகையாகவும் வாக்கியங்களைப் பிரிக்கலாம். கருத்தைக் கொண்டு செய்தி (Statement) வாக்கியம் என்றும், வினா (Interrogation) வாக்கியம் என்றும், விழைவு (Desire) வாக்கியம் என்றும், உணர்ச்சி (Exclamation) வாக்கியம் என்றும் பிரிப்பது ஒரு வகை. விழைவு வாக்கியமானது வாழ்த்தையோ கட்டளையையோ வேண்டுகோளையோ சபித்தலையோ தெரிவிக்கும்.

  1. செய்தி வாக்கியம்

    • முயற்சி திருவினையாக்கும்.
    • மழை பெய்தால் நெல் விளையும்.
  2. வினா வாக்கியம்

    • இது யாருடைய வீடு?
    • நேற்று நீ வந்தாயா?
  3. விழைவு வாக்கியம்

    • நம் நாடு நீடு வாழி! (வாழ்த்து)
    • நாளைக்குப் பாடம் படித்து வா. (கட்டளை)
    • எனக்கு இந்நூலைத் தருக. (வேண்டுகோள்)
    • நீ ஒழிக. (சபித்தல்)
  4. உணர்ச்சி வாக்கியம்

    • தமிழ் இறந்தபின் தமிழ்மண் மட்டும் இருந்தென்ன!
    • தலைவ, வருக வருகவே!

அமைப்பு வகை

அமைப்பை ஒட்டி வாக்கியத்தைத் தனி வாக்கியம் (Simple Sentence) எனவும், தொடர் வாக்கியம் (Compound Sentence) எனவும், கலவை வாக்கியம் (Complex Sentence) எனவும் பிரிப்பது மற்றொரு வகை. தமிழில் தனி வாக்கியமானது சிறு வாக்கிய மாகவும் இருக்கும்; பல பக்க அளவிற்கு வரக்கூடிய நெடும் பெருவாக்கியமாகவும் இருக்கலாம். வினையெச்சத்தின் உதவியாலும் உம்மையின் உதவியாலும் இராமாயணக் கதையை ஒரு நெடும் பெருந் தனி வாக்கியமாக எழுதலாம். இக் காலத்தில் நெடும் பெருந் தனி வாக்கியத்தை யாரும் எழுதுவது இல்லை. அப்படி எழுதினாலும் யாரும் அதனைப் படித்துப் பொருள் கொள்வது கடினமாகும். தமிழில் தொடர் வாக்கியம் என்பது இல்லை; என்றாலும், ஆங்கில முறையைத் தழுவிக் கருத்துத் தொடர்பை ஒட்டியும் எழுவாயைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டும் அரைப்புள்ளியின் உதவியால் தொடர் வாக்கியத்தை எழுதுகிறோம். கலவை வாக்கியம் தமிழில் உண்டு. இவ்வாக்கிய வகைகள் பெரிதும் ஆங்கில வாக்கிய இலக்கணத்தை ஒட்டியவை.

தனி வாக்கியம்

ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ ஒரே பயனிலையைப் பெற்று வருவது தனி வாக்கியமாகும்.

  • இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றினார். (இஃது ஒரே எழுவாய் ஒரே பயனிலையைப் பெற்று வந்த தனி வாக்கியம்.)
  • இளங்கோ சிலப்பதிகாரத்தையும், சாத்தனார் மணிமேகலையையும், திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியையும் இயற்றினார்கள். (இது பல எழுவாய்கள் ஒரே பயனிலையைப் பெற்று வந்த தனி வாக்கியம்.)

முன்னே குறிப்பிட்டவாறு தனி வாக்கியத்தைச் சிறு வாக்கியமாகவும் நெடும் பெருந்தனி வாக்கியமாகவும் எழுதலாம். ஆனால், வாக்கியம் சிறிதாகவும் அளவாகவும் இருந்தால்தான், கருத்துத் தெளிவும் உணர்ச்சி வேகமும் உண்டாகும். கதைக்கும் நிகழ்ச்சிக் குறிப்புக்கும் சிறு வாக்கியங்களே சிறந்தவை.

தொடர் வாக்கியம்

ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள், அதனால், இதனால் என்னும் சுட்டு முதற் காரணக்கிளவிகளாலோ, ஆகையால், ஏனென்றால் என்னும் காரணக்கிளவிகளாலோ, எனினும், இருப்பினும் போன்ற சொற்களாலோ இணைந்துவரினும், கருத்துத் தொடர்பால் இணைக்கப்பட்டுவரினும், அவ்வாறு வருவதைத் தொடர் வாக்கியம் எனலாம். வேறுவிதமாகக் கூறினால், ஒவ்வொன்றும் தனித்தனியாக இயங்கக் கூடியதாயிருப்பினும், கருத்துத் தொடர்பால் இணைக்கப்பட்டிருப்பின், அதனைத் தொடர் வாக்கியம் என்று சொல்லலாம். ஒரே எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவதும் தொடர் வாக்கியமாகும். பலர்க்குத் தொடர் வாக்கியம் என்பது இப்படியிருக்கும் என்று விளங்கா திருப்பதால் சில எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்பட்டுள்ளன.

  1. அக்பர் பேரரசர் மட்டுமல்லர்; ஆட்சித் திறமையும் மிக்க பேரறிஞர்.
  2. உண்மைத் துறவி விரும்பினால் ஒருவேளை உணவு உண்பார்; விரும்பாவிட்டால் சில நாள்கள் உண்ணாமலும் விரதம் இருப்பார்.
  3. நான் மதுரைக்குப் போனேன்; போனதும், எனக்குக் கடுமையான காய்ச்சல் கண்டதால், உடனே சென்னைக்குத் திரும்பி விட்டேன்.
  4. அம்மாணவன் பாடங்களை ஒழுங்காய்ப் படிப்பதில்லை; அதனால், தேர்வில் வெற்றி பெறவில்லை.
  5. வெயில் கடுமையாய் இருந்தது; எனினும், நாங்கள் அந்த வெயிலில் வெளியே சென்றோம்.
  6. உன்னிடம் இரண்டு இலக்கண நூல்கள் உள; அவற்றுள் ஒன்றை எனக்குக் கொடு.
  7. கதிரவன் தோன்றியது; ஆகையால், பனி மறைந்தது.
  8. சீடர்கள் குதிரையைக் கண்டு பிடித்தார்கள்; ஆனால், அதைக் கண்டு துயருற்றார்கள்; ஏனென்றால், அதன் கால் முடமாகி இருந்தது.
  9. கண் களவு கொள்ளும் சிறு நோக்கு, காதலுக்குச் செம்பாக மன்றூ; மிகப் பெரிது.
  10. அவன் செய்தது எவருக்கும் நன்மை செய்யாது; தீமையே செய்யும்.
  11. அரசன் அரியணையில் இருந்தான்; அவளோடு அரசியும் இருந்தாள்.
  12. காமராசரது நற்றொண்டை நாடும் மறவாது; நற்றமிழரும் மறவார்.
  13. தென்னைக்குக் கிளைகள் கிடையா; மட்டைகளே உண்டு.
  14. பயனிலை வினைமுற்றாக இருக்கலாம்; பெயர்ச் சொல்லாக இருக்கலாம்; வினாவாகவும் இருக்கலாம்.
  15. இவ்வூரில் நன்செய் நிலமும் உண்டு; புன்செய் நிலமும் உண்டு.
  16. பொறுமைக் குணம் பெண்களுக்கு மட்டும் வேண்டுவது அன்று; ஆண்களுக்கும் வேண்டுவதுமாகும்.
  17. இக்குற்றம் கண்டிக்கப்பட வேண்டுவது மட்டுமன்று; தண்டிக்கபட வேண்டுவதுமாகும்.
  18. நான் வருவேன் என்றேன்; வந்துவிட்டேன்.
  19. எதையும் செய்; ஆனால், நன்றாகச் செய்.
  20. நான் ஒன்றை நினைக்கிறேன்; ஆனால், மற்றொன்றைச் செய்கிறேன்.
  21. சிறுவன் நாயின்மேல் கல்லெறிந்தான்; கல் பட்டிருந்தால் அவனை அது கடித்திருக்கும்.
  22. அவன் இன்று வருவான்; இல்லாவிட்டால் நாளைக்கு வருவான்.
  23. குமரனுக்குப் படிக்க விருப்பமும் இல்லை; வாழ்வில் சிறந்து விளங்க எண்ணமும் இல்லை.
  24. என் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து என்னிடம் விட்டவனுக்கு நன்றியும் கூறினேன்; அன்பளிப்பாக ஐம்பது ரூபாயும் கொடுத்தேன்.
  25. அவன் ஓட்டப் பந்தயத்தில் ஓடினால் வெற்றிபெற மாட்டான்; தோற்றுப் போவதைக் குறைவாகவும் கருதமாட்டான்.
  26. அம்மன்னன் அந்நாட்டின் மீது படையெடுக்கவுமில்லை; அதனைக் கைப்பற்ற விரும்பவுமில்லை.

கலவை வாக்கியம்

கலவை வாக்கியம் என்பது பல வாக்கியங்கள் கலந்து ஒரு வாக்கியமாக அமைவது. இதில் ஒன்று முதன்மை வாக்கியமாக இருக்கும்; மற்றது சார்பு வாக்கியமாக இருக்கும். சிலவற்றில் ஒன்று முதன்மை வாக்கியமாகவும் மற்றவை சார்பு வாக்கியங்களாகவும் இருக்கும்.

வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது என்றும், சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்த்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றும் அறிஞர் அறிவுரை கூறுவர்.

சேவகன் வந்து கள்வர்கள் பொருள்களைத் திருடிச் சென்றார்கள் என்றும், பிடிப்பதற்குள் அவர்கள் ஓடி விட்டார்கள் என்றும் கூறியதும், நான் அத்திருடர்களைப் பிடிப்பதற்கு விரைந்து வந்து வண்டியில் சென்றேன்.

முதல் வாக்கியத்தில் இருக்கும் "அறிஞர் அறிவுரை கூறுவர்" என்பது முதன்மை வாக்கியம்; "வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது" என்பதும் "சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்த்து வாழ்க்கையை நடத்த வேண்டும்" என்பதும் சார்பு வாக்கியங்கள். இரண்டாவது வாக்கியத்தில் உள்ள "நான் அத்திருடர்களைப் பிடிப்பதற்கு விரைந்து வந்து வண்டியில் சென்றேன்" என்பது முதன்மை வாக்கியம்; மற்றவை சார்பு வாக்கியங்கள். கலவை வாக்கியங்களில் பலவகை உண்டு.

தொடர் கலவை வாக்கியம்

இப்போது நான்காவது வகை வாக்கியம் ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. 'ரீடர்ஸ் டைஜஸ்ட்’ நிறுவனம் வெளியிட்ட 'மிக நன்றாக எழுதுக: மிக நன்றாகப் பேசுக' (Write Better; Speak Better) என்னும் ஆங்கிலப் பெருநூல் ஒன்று புதிதாகத் தொடர் கலவை வாக்கியம் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இத்தகைய வாக்கியம் தமிழிலும் எழுதுவதைக் காண்கிறோம்.

  1. திறனாய்வாளர்கள் நன்கு புகழ்ந்திருக்கிறார்கள் என்று கூறுமளவு வெற்றி பெற்றுள்ள பெரும்பாலானவாகிய நவீனங்கள் பொதுமக்களால் புறக்கணிக்கப்படுகின்றன; அவற்றுள் பல திரைப்படமாக்க ஹாலிவுட் நிறுவனத்துக்கு விற்ற உரிமையை மீட்டுக் கொண்டிருப்பினும், விற்பனை வகையில் தோல்வியுற்றிருக்கின்றன.
  2. அங்கு வந்தவள் என் தங்கை என்றும், அவளை அங்கிருந்த மாணவன் 'கேலி' செய்தான் என்றும் அறிந்ததும், நான் அந்த மாணவனிடம் சென்று, 'நீ அப்பெண்ணை எப்படிக் 'கேலி' செய்யலாம்?" என்று கேட்டு வைதேன்; காவற்கூடத்துக்கு அவனை இழுத்துச் சென்று காவலரிடம் ஒப்படைத்தேன்.
  3. திருவள்ளுவர் முதல் முதலாக நீதிக்கருத்துகளைக் குறட் பாவில் அமைத்துத் திருக்குறளை இயற்றினார் என்று கருதுவதனால், அவரை அறிஞர்கள் முதற் பாவலர் என்று குறிப்பிடுவது பலரும் அறிந்த செய்தி என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை, நீங்களே அறிவீர்கள்.

கலவை வாக்கியங்களிலும் தொடர்வாக்கியம் கலந்து வருவதால் இத்தகைய வாக்கியங்கள் தொடர் கலவை வாக்கியங்கள் எனப்படும்.

எழுவாய் முதலியன அறிதல்

  • எழுவாய் என்பது தலைமையான கருத்து எழுவதற்கு இடமாக இருப்பது.
  • பயனிலை என்பது எழுவாயின் பயனைத் தன்னிடத்தே நிலைத்திருக்கச் செய்வது.
  • செயப்படுபொருள் என்பது செயற்படுதற்கு உரியதாக உள்ள பொருள்.

'கந்தன் திருக்குறள் படித்து வருகிறான்'.

இதில் எழுவாயாக இருப்பது கந்தன் என்னும் சொல்.

பறவை கூடு கட்டுகிறது என்னும் வாக்கியத்தில் பறவை என்பது எழுவாயாகும்.

முதலில் பயனிலையைக் கண்டு பிடித்து. யார் என்று கேட்டால், உயர்திணை எழுவாயைக் கண்டு பிடிக்கலாம்: எது என்று கேட்டால், அஃறிணை எழுவாயைக் கண்டு பிடிக்கலாம்.

  • கந்தன் - உயர்திணை எழுவாய்.
  • பறவை - அஃறிணை எழுவாய்.

என்ன செய்தான் கந்தன் என்று கேட்டாலும், பறவை என்ன செய்தது என்று கேட்டாலும், அந்த அந்த எழுவாய்க்கு உரிய செயப்படுபொருளைக் கண்டுபிடித்து விடலாம்.

  • முதல் வாக்கியத்துக்கு உரிய செயப்படுபொருள் 'திருக்குறள்'
  • பறவை கூடு கட்டுகிறது என்னும் வாக்கியத்தில் உள்ள செயப்படுபொருள் 'கூடு' என்பது.

சில வாக்கியங்களில் செயப்படுபொருள் இல்லாமலும் இருக்கும்.

இராமன் நடந்தான்.

ஆசிரியர் ஒருவர், 'மாரியல்லது காரியம் இல்லை' என்னும் வாக்கியத்தைச் சொல்லி, ஒரு மாணவனை நோக்கி, "எழுவாய் கூறு" என்றாராம்; எழுந்திருப்பாய் என்று பொருள் உண்டாகு மாறும், எழுவாய் கூறு என்று பொருள் தரும்படியாகவும் இரு பொருள் கொடுக்கும்படி கூறினாராம். மாணவனுக்கு எழுவாயைக் கண்டு சொல்லத் தெரியவில்லை. உடனே அவர் பயனிலை என்றாராம்; நீ பயன் இல்லை என்றும், பயனிலையாவது சொல் என்றும் இரு பொருள் தருமாறு சொன்னாராம். 'இல்லை' என்பது பயனிலை. எது இல்லை? காரியம் இல்லை. ஆதலால், 'காரியம்' என்பது எழுவாயாகும்.

பயனிலை என்பது வேறு வினைமுற்று என்பது வேறு. முற்று வினையே வினைமுற்றாகும். பயனிலை என்பது பெயராக வும் இருக்கலாம்; வினாவாகவும் இருக்கலாம்; வினைமுற்றாகவும் இருக்கலாம்.

தமிழில் பெயர், வினைமுற்று, வினா என்பவை பயனிலையாக வரும் என்றறிக.

  1. அவன் கண்ணன், அது சேவல். (கண்ணன், சேவல் என்பவை பெயர்ப் பயனிலை.)
  2. தலைவர் பேசுகிறார். கோழி கூவிற்று. (பேசுகிறார், கூவிற்று என்பவை வினைப் பயனிலைகள். இங்கு வினைமுற்றுகள் பயனிலைகளாக வந்துள்ளன.)
  3. அவன் யார்? அது யாது? (இங்கு யார், யாது என்னும் வினாப் பெயர்கள் பயனிலைகளாக வந்துள்ளன.)

இனி எழுவாய் பற்றியும் பயனிலை பற்றியும் சிறிது விரிவாகக் காண்போம்.

எழுவாய் பற்றி

  1. உயர்திணை எழுவாயுடன் ஆனவன், ஆனவள், ஆனவர், என்பவன், என்பவள், என்பவர் என்னும் சொல்லுருபுகளையும்; அஃறிணை எழுவாயுடன் ஆனது, ஆனவை, என்பது, என்பவை என்னும் சொல்லுருபுகளையும் சேர்த்தெழுதுவதுண்டு.

    கால்டுவெல் என்பவர் திராவிட மொழி ஒப்பிலக்கணம் இயற்றினார்.

  2. பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப் பெயர், தொழிற் பெயர், வினையாலணையும் பெயர், சுட்டுப்பெயர், முன்னிலைப்பெயர், தன்மைப் பெயர், படர்க்கைப்பெயர் முதலியவை எழுவாயாக வரும்.

    • பசுமை கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். (பண்புப் பெயர் எழுவாயாய் வந்துளது.)
    • நடத்தல் நல்ல உடற்பயிற்சி ஆகும். (தொழிற்பெயர் எழுவாயாய் வந்துளது.)
    • வந்தவர் போனார். (வினையாலணையும் பெயர் எழுவாயாய் வந்துளது.)
    • காளை வந்தான். (காளை - காளை போன்றவன், உவமையாகு பெயர் எழுவாயாய் வந்துளது.)
    • அவன் சென்றான். அது பறந்தது. (சுட்டுப்பெயர் எழுவாயாய் வந்துளது.)
  3. பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை, வேற்றுமைத்தொகை, உருபும் பயனும் உடன் தொக்க தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, வினைத் தொகை, அன்மொழித்தொகை ஆகியவையும் எழுவாயாக வரும்.

    • கருங்குதிரை ஓடிற்று. (பண்புத்தொகை எழுவாயாய் வந்துளது.)
    • பலாமரம் விழுந்தது. (இருபெயரொட்டுப் பண்புத்தொகை எழுவாயாய் வந்துளது.)
    • யானைத் தந்தம் கிடைத்தது. (6-ஆம் வேற்றுமைத்தொகை எழுவாயாய் வந்துளது.)
    • மலைப்பாம்பு செத்தது. (7-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை எழுவாயாய் வந்துளது.)
    • மதிமுகம் வியர்த்தது. (உவமைத்தொகை எழுவாயாய் வந்துளது.)
    • உயிர்மெய், 216 எழுத்துகளை உடையது. (உம்மைத் தொகை எழுவாயாய் வந்துளது - உயிர்மெய்: உயிரும் மெய்யும் கூடிய எழுத்து.)
    • கொல்யானை நிற்கிறது. (வினைத்தொகை எழுவாயாய் வந்துளது.)
    • தேன்மொழி பாடினாள். (அன்மொழித்தொகை எழுவாயாய் வந்துளது.)
  4. சில வாக்கியங்களின் எழுவாய் மறைந்திருக்கும். மறைந் திருக்கும் எழுவாயைத் தோன்றா எழுவாய் என்பர்.

    அறஞ்செய (இவ்வாக்கியத்தில் 'நீ' என்பது மறைந்திருக்கிறது.) ஒருவரை 'இவர் யார்?' என்று வினவும்போது கேட்கப்பட்டவர், 'என் தம்பி' என்று கூறுகையில், 'இவர்' என்னும் எழுவாய் மறைந்திருக்கிறது. இவ்வாறு தோன்றாமல் இருக்கும் எழுவாயைத் தோன்றா எழுவாய் என்பர்.

பயனிலை பற்றி

பயனிலை, பெயராகவும் வினைமுற்றாகவும் வினாவாகவும் இருக்கும் என்று கண்டோம். வினைமுற்றானது தெரிநிலை வினைமுற்றாகவும் இருக்கலாம்; குறிப்பு வினைமுற்றாகவும் இருக்கலாம்.

  • கந்தன் வந்தான் (வந்தான் என்னும் தெரிநிலை வினைமுற்று, பயனிலையாய் வந்துளது.)
  • பணம் இல்லை (இல்லை என்னும் குறிப்பு வினைமுற்று பயனிலையாய் வந்துளது.)

சில வினா வாக்கியங்கள் வினா வடிவத்தோடு தெரிநிலை வினைமுற்றாகவோ குறிப்பு வினைமுற்றாகவோ வருவதுண்டு.

  1. அது வருமா? அவன் போனானா? (இவை தெரிநிலை வினைமுற்றுகள். ஈற்றில் வினா எழுத்துப் பெற்று முடிந்த வினா வாக்கியங்கள்.)
    • அவள் பொன்னம்மாளா? (இது வினா எழுத்துச் சேர்ந்து வந்துள்ள பெயர்ப் பயனிலை பெற்று முடிந்த வினா வாக்கியம்.)
  2. காசு இல்லையா? உன் பேச்சு இனிதா? (இவை குறிப்பு வினைமுற்றுகள். வினா எழுத்துப் பெற்று முடிந்த வினா வாக்கியங்கள்.)

சில வாக்கியங்களில் பயனிலை முன்னும் எழுவாய் பின்னும் மாறி வருவதுமுண்டு.

  • வந்தான் கந்தன்.
  • யார் அவர்?

வாக்கியம் எழுவாயாகவும் செயப்படுபொருளாகவும் வருதல்

  1. ஒரு வாக்கியம் எழுவாயாக வருதல்: சில வாக்கியங்களில் ஒரு வாக்கியமே எழுவாயாக வருவதுண்டு.

    தொண்டுக்கு முந்து; தலைமைக்குப் பிந்து என்பது ஒரு சிறந்த கருத்து. (இதில் ஒரு வாக்கியமே எழுவாயாய் வந்துளது. இதனை எழுவாய்க்கு வந்த அடைமொழி என்பர்.)

  2. ஒரு வாக்கியம் செயப்படுபொருளாக வருதல்: சில வாக்கியங்களில் செயப்படுபொருளும் ஒரு வாக்கியமாய் இருப்பதுண்டு.

    நீ 'செல்லப்பன் நல்லவன்’ என்பதைத் தெரிந்து கொள்க. (இதில் ஒரு வாக்கியமே செயப்படுபொருளாய் வந்துளது. தமிழ் இலக்கணம் இதனைச் செயப்படுபொருளுக்கு வந்துள்ள அடைமொழி என்று குறிப்பிடும்.)

ஒன்றன்பால் உடன்பாடு

  1. போர் நாட்டைப் பாழாக்குகிறது.
  2. கட்சிச் சண்டை பிளவை உண்டாக்குகிறது.

பலவின்பால் உடன்பாடு

  1. போர்கள் நாட்டைப் பாழாக்குகின்றன.
  2. கட்சிச் சண்டைகள் பிளவை உண்டாக்குகின்றன.

ஒன்றன்பால் எதிர்மறை

  1. செய்தி வாராது.
  2. விடுமுறை இராது.

பலவின்பால் எதிர்மறை

  1. செய்திகள் வாரா.
  2. விடுமுறைகள் இரா.

மாற்றும் வழிமுறைகள்

உலகில் ஒன்று மற்றொன்றாக மாறுவதுண்டு. ஒன்றை மற்றொன்றாக மாற்றுவதுமுண்டு. மாறுவதும் மாற்றுவதும் எங்கும் காணப்படுவன. எழுத்துலகத்தினும் இச்செயல் இல்லாமல் இல்லை. உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாகவும், தன் வினையைப் பிறவினையாகவும், செய்வினையைச் செயப்பாட்டு வினையாகவும், நேர்க்கூற்றை அயற்கூற்றாகவும், வாக்கியங்களில் பொருள் கருதி மாற்ற வேண்டுவது ஏற்படும். ஒரே கருத்தை வெவ்வேறு வாக்கியங்களாக மாற்றியும் எழுத நேரிடும். இம்மாற்றங்களைப் பற்றிய வழிமுறைகளை அறிந்து கொள்வது நன்று.

உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுதல்

வினைச் சொல்லில் உடன்பாட்டு வினை என்றும், எதிர்மறை வினை என்றும் பொதுவாக இரு வகை உண்டு. உடன்படும் அஃதாவது ஒப்புக் கொள்ளும் வினையே உடன்பாட்டு வினை என்பது. எதிர்மறுக்கும் வினையே எதிர்மறை வினையாகும்.

உடன்பாட்டுவினை, தொழிலின் நிகழ்ச்சியை உணர்த்தும். எதிர்மறை வினையோ தொழில் நிகழாமையையும் எதிர்மறுத்தலையும் அறிவிக்கும்.

சிறப்பாக வகுத்துப் பார்த்தால், உடன்பாட்டு வினைமுற்று, எதிர்மறை வினைமுற்று என்றும், உடன்பாட்டுப் பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் என்றும், உடன்பாட்டு வினையெச்சம், எதிர்மறை வினையெச்சம் என்றும் பாகுபாடுகள் உள. முதலில் உடன்பாட்டு வினைமுற்றானது எதிர்மறை வினைமுற்றாக மாறும் வழிகளைப் பார்ப்போம்.

உடன்பாட்டு வினைமுற்று (Positive Verb)எதிர்மறை வினைமுற்று (Negative Verb)
1. நீ வேலை செய்ய வேண்டும்நீ வேலை செய்ய வேண்டா / வேண்டுவதில்லை.
2. நான் நாளைக்கு வருவேன்.நான் நாளைக்கு வாரேன் / வரமாட்டேன்.
3. அவன் நேற்று வந்தான்.அவன் நேற்று வந்திலன் / வரவில்லை.
4. நாலடியார் திருக்குறளுக்கு முற்பட்டது.நாலடியார் திருக்குறளுக்கு முற்பட்டதன்று / பிற்பட்டது.
5. உண்பேன்.உண்ணேன் / உண்ணமாட்டேன்.
6. பாடுவாள்.பாடாள் / பாடமாட்டாள்.
7. நடப்பார்.நடவார் / நடக்கமாட்டார்.
8. (சேவல்) கூவும்.(சேவல்) கூவாது.

சொற்கள் மாற்றத்தாலும், அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்ல, அல்லேன், அல்லை, அல்லார், இல்லை, இலன், இலள், இலது, இல, இலேன், இலோம், மாட்டாள், மாட்டேன், மாட்டோம், மாட்டாய், மாட்டீர் போன்றுள்ள சொற்களைச் சேர்ப்பதாலும், எதிர்மறை ஆகார இடைநிலை சேர்ந்து கெட்டும் கெடாமலும் வருவதாலும் உடன்பாட்டு வினைமுற்றானது எதிர்மறை வினைமுற்றாக மாறும். 'ஆ' என்பது எதிர்மறையைக் காட்டும் இடைநிலை. 'செய்யான்' என்பதில் ஆகார எதிர்மறை இடைநிலை முதலில் சேர்ந்து பின்பு கெட்டுவிட்டது. உண்ணாது: உண் + ஆ + து. இங்கே 'ஆ' என்னும் எதிர்மறை இடைநிலை கெடாதிருக்கிறது.

இனி உடன்பாட்டு வினையெச்சமானது எதிர்மறை வினையெச்சமாக மாறுவது குறித்துப் பார்ப்போம்.

உடன்பாட்டு வினையெச்சம்எதிர்மறை வினையெச்சம்
கண்டு (போனான்)காணாது / காணாமல் / காணாமே (போனான்)
உண்டு (சென்றேன்)உண்ணாது / உண்ணாமல் / உண்ணாமே (சென்றேன்)
போய் (வாங்கினாய்)போகாது / போகாமல் / போகாமே (வாங்கினாய்)

உடன்பாட்டு வினையெச்சத்தில் ஆகார இடை நிலையையும் து, மல், மே என்னும் விகுதிகளையும் சேர்த்தால் அதனை எதிர்மறை வினையெச்சமாக மாற்றலாம் என்பதறிக.

தன்வினையைப் பிறவினையாக மாற்றுதல்

  • தன்வினை (Verb denoting direct action): 'தன்வினை' என்பது தானே செய்யும் வினை.

    மாணாக்கன் படிக்கிறான். (மாணாக்கன் தானாகவே செய்யும் தொழிலாதலால், அது தன்வினையாயிற்று.)

  • பிறவினை (Causative Verb): 'பிறவினை' என்பது பிற பொருளால் செய்யும் வினை.

    ஆசிரியர் மாணாக்கனைப் படிப்பிக்கின்றார். (படித்தலாகிய தொழில் ஆசிரியரால் நடைபெறுகின்ற தால், அது பிறவினையாயிற்று.)

பிறவினையில் தொழில் செய்யுங் கருத்தாவும், தொழில் செய்ய ஏவும் கருத்தாவும் ஆக இரண்டு கருத்தா இருக்கும். 'ஆசிரியர் மாணாக்கனைப் படிப்பிக்கின்றார்' என்னும் வாக்கியத்தில் படித்தல் தொழில் மாணாக்கனதாகவும், படிக்க ஏவுந் தொழில் ஆசிரியருடையதாகவும் இருக்கும் நுட்பத்தைக் காண்க.

தன்வினையானது பிறவினையாக மாறும் விதங்கள்

  1. தன்வினைப் பகுதியோடு, 'வி' என்னும் விகுதியாவது 'பி' என்னும் விகுதியாவது சேர்வதால் தன்வினையானது பிறவினையாக மாறும்.

    • தன்வினை: செய்தான் → பிறவினை: செய்வித்தான்
    • தன்வினை: உண்டான் → பிறவினை: உண்பித்தான்
  2. தன்வினைப் பகுதியோடு கு, சு, டு, து, பு, று விகுதிகளுள் ஏதாவது ஒன்று சேர்வதால் தன்வினையானது பிறவினையாகும்.

    • தன்வினை: போனான் → பிறவினை: போக்கினான்.
    • தன்வினை: உருண்டான் → பிறவினை: உருட்டினான்.
    • தன்வினை: தாழ்ந்தான் → பிறவினை: தாழ்த்தினான்.
    • தன்வினை: எழுந்தான் → பிறவினை: எழுப்பினான்.
  3. தன்வினைப் பகுதியிலுள்ள மெல்லின மெய்யெழுத்தானது வல்லின மெய்யெழுத்தானால் தன்வினையானது பிறவினையாக மாறும்.

    • தன்வினை: முருகப்பன் நல்வழியில் திரும்புகிறான். → பிறவினை: எல்லப்பன் அவனை நல்வழியில் திருப்புகிறான்.
    • தன்வினை: மகன் தகப்பனுக்கு அடங்கினான். → பிறவினை: தகப்பன் மகனை அடக்கினான்.
    • தன்வினை: அவன் வருந்தினான். → பிறவினை: அவன் பிறரை வருத்தினான்.
    • தன்வினை: அவன் நனைந்தான். → பிறவினை: அவன் துணியை நனைத்தான்.
  4. தன்வினைப் பகுதி இரட்டிப்பதால் பிறவினையாக மாறும்.

    • தன்வினை: வெந்நீர் ஆறுகிறது. → பிறவினை: அவள் வெந்நீரை ஆற்றுகிறாள்.
    • தன்வினை: மன்னன் தீயவனாய் மாறினான். → பிறவினை: மன்னன் தீயவனை நல்லவனாய் மாற்றினான்.
குறிப்பு

சில இடங்களில் தன்வினையானது பிறவினைப் பொருளைத் தரும். 'அரசன் கோயிலைக் கட்டினான்' என்னும் வாக்கியத்தில் 'கட்டுவித்தான்' என்பதே பொருள். நடத்தினான், நடப்பித்தான் என்று பிறவினைகள் வருவதுண்டு. நடத்துவிப்பித்தான் என்றும் பிறவினை அருகி வரும்.

செய்வினையைச் செயப்பாட்டுவினையாக மாற்றுதல்

  • செய்வினை (Active Verb): செய்த பொருளுக்கு முதன்மை தரும் வினையே செய்வினை எனப்படும்.

    திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். ('இயற்றினார்' என்பது செய்வினை. இவ்வாக்கியத்தில் திருவள்ளுவருக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது.)

  • செயப்பாட்டுவினை (Passive Verb): செய்யப்பட்ட பொருளுக்கு முதன்மை கொடுக்கும் வினை செயப்பாட்டுவினை எனப்படும்.

    திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. ('இயற்றப்பட்டது' என்பது செயப்பாட்டுவினை. இவ்வாக்கியத்தில் திருக்குறளுக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.)

கீழ்வரும் எடுத்துக்காட்டுகளை ஆழ்ந்து படிக்கவும்:

  1. செய்வினை: இராமன் இராவணனைக் கொன்றான். செயப்பாட்டுவினை: இராவணன் இராமனால் கொல்லப்பட்டான்.
  2. செய்வினை: மகளே, வேந்தன் உன்னைக் கட்டினான். செயப்பாட்டுவினை: மகனே, நீ வேந்தனால் கட்டுண்டாய்.
  3. செய்வினை: நீங்கள் கட்டளையிடுங்கள். செயப்பாட்டுவினை: உங்களால் கட்டளையிடப்படட்டும்.

செய்வினையோடு படு, உண் என்னும் துணைவினைகள் சேர்ந்தால் செயப்பாட்டுவினையாகும். செய்வினையானது செயப்பாட்டுவினையாக மாறும்பொழுது இரண்டாம் வேற்றுமையிலிருப்பது முதல் வேற்றுமையிலும், முதல் வேற்றுமையிலிருப்பது மூன்றாம் வேற்றுமையிலும் வரும்.

குறிப்பு

எழுவாயை மறைக்கவே இக்காலத்தில் பல அறிவிப்புகளில் செயப்பாட்டுவினைகள் ஆங்கில முறையை ஒட்டிப் பயன்படுத்தப் பார்க்கிறோம். "பிரயாணிகள் கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்று வேண்டப்படுகிறார்கள்" என்றும் "தெருக்களில் மலம் கழித்தலாகாது எனப் பொது மக்கள் கோரப்படுகிறார்கள்" என்றும் இருக்கக் காணலாம். 'அதிகாரிகள் வேண்டுகிறார்கள்' என்று குறிப்பிட விரும்பாது, அறிவிப்பை எழுதுகிறவர்கள் இப்படி எழுதுகிறார்கள். கட்டுரையில் செயப்பாட்டுவினையை மிகுதியாகப் பயன்படுத்தினால் தமிழினிமை கெடும் என்றறிக. ஆதலால், செயப்பாட்டுவினையை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.

நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றுதல் (Direct Speech into Indirect Speech)

ஒருவர் நேரில் கூறியவாறே எழுதுவது நேர்க்கூற்று. ஒருவர் கூறியதை அவர் கூறியவாறே எழுதாமல் நாம் அக்கருத்தை மேற்கொண்டு கூறுவது அயற்கூற்று. (கூற்று - சொல்). நேர்க்கூற்றில் கூறிய சொற்களின் முன்னும் பின்னும் உள்ள மேற்கோள் குறி அயற்கூற்றில் இராது என்பதறிக.

நேர்க்கூற்று

அரிச்சந்திரன் முனிவரை நோக்கி, 'நாட்டை இழப்பினும், என் நன்மகனை இழப்பினும், இனி வரக்கூடிய நற்கதியை இழப்பினும் நான் உண்மையையே நவில்வது உறுதி' என்று கூறினான்.

அயற்கூற்று

அரிச்சந்திரன் முனிவரை நோக்கித் தான் தன் நாட்டை இழப்பினும், தன் நன்மகனை இழப்பினும், தனக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய நற்கதியை இழப்பினும் உண்மையையே நவில்வதென உறுதி கொண்டதாய்க் கூறினான்.

சொற்பொழிவுகளைச் சுருக்கமாக வெளியிடுவதற்கு நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றி எழுதும் முறை அறிவது இன்றியமையாதது. நேர்க்கூற்றானது, 'என்று சொன்னார்', 'என்றார்', 'எனக் கூறினார்' என்று முடியும். அயற்கூற்றானது, 'என்பதாய்க் கூறினார்' என்றும், 'என்றும் கூறினார்' எனவும் முடியும்.

நேர்க்கூற்று

என் தந்தையார், "நான் நாளைக் காலை வருவேன்" என்று என்னிடம் நேற்றுக் கூறிவிட்டுச் சென்றார்.

அயற்கூற்று

என் தந்தையார் என்னிடம் தாம் மறுநாள் காலை வருவதாய் முன் நாள் கூறிவிட்டுச் சென்றார்.

நேர்க்கூற்று

சுசீலை தன் கணவராகிய குசேலரை நோக்கி, "நாதா! வறுமை மிகமிகக் கொடியது. அது தலைவன் தலைவியரிடத்து மனக்கசப்பை உண்டாக்கும். அது சோம்பலைப் புகுத்தும். அது பாவங்கள் எல்லாவற்றையும் வருவிக்கும். ஆதலால், நீங்கள் வறுமையைப் போக்க வழி தேடுவீராக" என்றாள்.

அயற்கூற்று

சுசீலை, தன் கணவராகிய குசேலரிடம், வறுமை மிகமிகக் கொடியது என்றும், அது தலைவன் தலைவியரிடத்து மனக்கசப்பை உண்டாக்கும் என்றும், அது சோம்பலைப் புகுத்துவதோடு பாவங்கள் எல்லாவற்றையும் வருவிக்கும் என்றும், ஆதலால், அவர் வறுமையைப் போக்க வழிதேட வேண்டும் என்றும் கூறினாள்.

நேர்க்கூற்று

"இன்று இங்குத் தங்கி நாளைக்கு இராமரிடம் போவேன்" என்று பரதன் குகனிடம் கூறினான்.

அயற்கூற்று

அன்று அங்குத் தங்கி மறுநாளைக்கு இராமரிடம் செல்வதாய்ப் பரதன் குகனிடம் கூறினான்.

நேர்க்கூற்று

"இன்று போய்ப் போர்க்கு நாளை வா" என்று இராமர் இராவணனுக்கு உரைத்தார்.

அயற்கூற்று

அன்று போய் மறு நாளைக்குப் போர்க்கு வருமாறு இராமர் இராவணனுக்கு உரைத்தார்.

நேர்க்கூற்று

நாணன், "திண்ணா, நான் திரும்பிவரும் வரைக்கும் இங்கே நின்றுகொண்டிரு" என்று சொல்லிச் சென்றான்.

அயற்கூற்று

நாணன் திண்ணனைத் தான் திரும்பி வரும் வரைக்கும் அங்கே நின்று கொண்டிருக்குமாறு வேண்டிக்கொண்டு சென்றான்.

நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும்பொழுது கீழ்வருமாறு சொற்கள் மாறுதலடையும்.

நேர்க்கூற்றுஅயற்கூற்று
இதுஅது
இவைஅவை
இன்றுஅன்று
இப்பொழுதுஅப்பொழுது
இங்குஅங்கு
இதனால்அதனால்
நாளைமறுநாள்
நேற்றுமுன்நாள்
குறிப்பு

பல வாக்கியங்களைக் கொண்ட நேர்க்கூற்றாயிருப்பின் அயற்கூற்றாக மாற்றுங் காலத்தில் 'என்றும்' என்கிற இணைப்புச் சொல்லைச் சேர்த்தெழுதுக. ஒரு வாக்கியமாக இருப்பின் 'என' என்னும் சொல்லை இணைத்து எழுதுக. அயற்கூற்றுக்கு மேற்கோள் குறியிடலாகாது. நீண்ட பேச்சை வெளியிட வேண்டுமென்றால் நேர்க்கூற்றாக எழுதுவதே நன்று. கீழ்வருவதைக் காண்க:

சொற்பொழிவாளர் கூறியதாவது:

"நாம் அனைவரும் தொண்டு செய்ய வேண்டும்; சிற்றூர்கள் முன்னேறப் பாடுபடவேண்டும்; இந்தியாவிலுள்ள ஐந்து லட்சம் கிராமங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும்."

இவ்வாறு முக்கால் புள்ளியோடு கோடிட்டு எழுதும்போது நேர்க்கூற்றின் முடிவில் 'என்றார்' என்று முடிக்கக் கூடாது; மேற்கோள் குறியுடன் முடித்துவிட வேண்டும்.