உவமை அணி (Simile)
இரண்டு பொருள்களுக்கு ஒப்புமை விளங்கச்சொல்வது உவமையணியாகும். உவமானம், உவமேயம், பொதுத் தன்மை, உவம உருபு ஆகிய நான்கும் இருப்பது விரி உவமை எனப்படும்.
எடுத்துக்காட்டு: பால் போலும் இனிய சொல்.
- உபமானம் (பொருள் ஒப்பிடுவதற்கு): பால்
- உபமேயம் (ஒப்பிடப்படும் பொருள்): சொல்
- பொதுத்தன்மை: இனிய
- உருபு: போலும்
(உப - அருகில்; மானம் - அளவு. அருகில் வைத்து அளக்குங் கருவியாயிருப்பது உபமானம்; அளக்கப்படுவது உபமேயம். உபமானத்தை உவமானம் என்றும், உபமேயத்தை உவமேயம் என்றும் கூறுவர்.)
எடுத்துக்காட்டு: மலை போன்ற தோள்
தொகை உவமை என்பது பொதுத்தன்மையும் உருபும் தொக்கி (அஃதாவது இல்லாமல்) வருவது. சில வேளைகளில் இந்த இரண்டில் ஒன்று மட்டும் மறைந்தும் வரும்.
புதிய உவமைகள்
- அப்போது அவளுடைய முகம், கதிரவன் மறைந்த பிறகு நீலக்கடலில் தோன்றும் நிறைமதியைப் போலப் பசும் பொன் ஒளி வீசிக் காட்சியளித்தது. இப்போது அதிகாலை நேரத்தில் மேற்குத் திசையில் மறையும் மதியைப்போல வெளிறிய பொன்னிறமாயிருக்கிறது.
- பளீரென்று மின்னல் மின்னி மறைவது போலப் பத்மாவின் முகம் கம்பிகளுக்குப் பின் தோன்றி மறைந்தது.
- எவ்வளவு நேரம் என்று ஒரு குரல் கூப்பிட்டது. அதைக் கேட்டு இளம் வர்த்தகன் திடீரென்று காலால் நெருப்பை மிதித்தவன் போலத் துள்ளித் திரும்பிப் பார்த்தான்.
- சுவாசப் பையிலுள்ள சிறு கண்ணறைகள் பிராணவாயுவை உட்கொண்டு உடலிலுள்ள கெட்ட இரத்தத்தைத் துப்புரவு செய்வன போல, ஆயிரக்கணக்கான நம் குக்கிராமங்கள் அவ்வப்போது நம் நாட்டின் கேடுகளை நீக்கி நமது வாழ்வை மேன்மைப்படுத்தி வந்துள்ளன.
- அலை இயங்கும் கடலில் பவளக்கொடிகள் அவ்வலைகளால் கேடுறாமல் மேன்மேலும் படர்ந்து நிலைத்திருப்பன போல, நம் கிராமங்களும் பலவகைக் கேடுகளுக்கும் தப்பி நிலைத்து அழியாத நல்வளத்தை நம் நாட்டுக்கு அளித்து வந்துள்ளன.
எடுத்துக்காட்டு உவமை அணி
உவமானத்தையும் உவமேயத்தையும் தனித்தனி வாக்கியமாக நிறுத்தி இடையில் உவம உருபு கொடாமல் கூறுவது எடுத்துக் காட்டு உவமை அணியாகும். இது செய்யுளில் மட்டும் வரும்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"
(எழுத்துகள் எல்லாம் 'அ' என்னும் எழுத்தை முதலாக உடையன. அதுபோல உலகம் கடவுளை முதலாக உடையது.)
இல்பொருளுவமை அணி
உலகத்தில் இல்லாத பொருளை உவமையாகக் கூறுவது இல்பொருளுவமை அணி எனப்படும்.
எடுத்துக்காட்டு: கருமலை நடந்து வந்தாற்போலக் கருநிற விபீஷணன் நடந்து வந்தான்.
தற்குறிப்பேற்ற அணி
இயற்கையாக நடப்பதில் கவி தன் கற்பனைக் குறிப்பை ஏற்றிச் சொல்வது தற்குறிப்பேற்ற அணியாம்.
- பட்டணத்துக் கோட்டையில் கட்டப்பட்டிருந்த கொடிகள் அருச்சுனனை, 'வருக, வருக' என்று அழைப்பது போல ஆடிக் கொண்டிருந்தன.
- துரியோதனனைப் பார்த்துக் கொடிகள், 'நீ வரினும் எழில் வண்ணன் படைத்துணையாக மாட்டான். திரும்பிப்போ என்று கூறுவது போல ஆடிக் கொண்டிருந்தன.
- சேவல்கள், "மாணவர்களே! காலை வந்து விட்டது; எழுந்திருங்கள், எழுந்திருங்கள்" என்று கூப்பிடுவது போலக் கூவின. தற்குறிப்பேற்ற அணி அழகானது. நம் மனப்போக்குக்கு ஏற்றவாறு இவ்வணியைப் பயன்படுத்தலாம்.
உயர்வு நவிற்சி அணி (Hyperbole or Exaggeration)
ஒரு பொருளை நம்ப முடியாதவாறு மிகைப்படுத்திக் கூறுவது உயர்வு நவிற்சி அணியாகும்.
- மேகங்கள் தங்கி உறங்கும்படியான கோட்டை மதிலில் உராய்ந்து சூரியனும் உடல் சிவந்து விட்டது.
- கோட்டை அகழியின் ஆழம் பூமியைத் தாங்கி நிற்கும் தலை வரையில் சென்றது.
பிறிது மொழிதல் அணி
உவமானத்தைச் சொல்லி உவமேயத்தைப் பெற வைப்பது பிறிது மொழிதல் அணியாகும்.
எடுத்துக்காட்டு: மாமரத்தில் பழுத்த பழங்கள் விழாமலிருக்க, அதிலிருந்து பிஞ்சுகள் உதிர்ந்து விடுகின்றன. (ஆகையால், இளமையிலேயே அறம் செய்யுங்கள். உலகில் கிழவர்கள் இருக்க இளைஞர்கள் இறந்து விடக்கூடுமாதலால், இளைஞர்களும் அறஞ் செய்தல் வேண்டும்.)
ஐய அணி
ஒப்புமையின் ஒரு பொருளை அதுவோ இதுவோ என்று ஐயமுறுதல் ஐய அணியாகும்.
எடுத்துக்காட்டு: இவள் கண், கயலோ வண்டோ அறியேன்.
வேற்றுமை அணி
வேற்றுமையை மையமாகக் விளக்கும் அணி வேற்றுமை அணி. உவமானம், உவமேயங்களுள் ஒன்றுக்குச் சிறப்பைத் தருவதே இதுவாகும்.
- தீயினாற் சுட்ட புண் உள்ளாறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது.
- சந்திரனும் சான்றோரும் ஒப்பாவார். சந்திரன் மறுத்தாங்கும்; சான்றோர் அது தாங்கார்.
சிலேடை அணி
ஒரு சொல் பல பொருள் தருவது சிலேடை அணியாகும்.
- சிவப்புத்தேள் - (அ) சிவப்புத் தேள். (ஆ) சிவனாகிய புத்தேள். (புத்தேள் - தேவன்)
- புத்தியில்லாதவன் - (அ) புத்தியில் மிகுந்த ஆதவனை (சூரியனை)ப் போன்றவன். (ஆ) மடையன்.
பிறிதினவிற்சி அணி
ஒன்றை இயல்பாகக் கூறாமல் வேறு வகையால் கூறுவது பிறிதினவிற்சி அணியாகும்.
எடுத்துக்காட்டு: தசரதர் புத்தென்னும் நரகைக் கடந்தார். (மகனைப் பெற்றார்)
வஞ்சப் புகழ்ச்சி அணி
பழிப்பதுபோலப் புகழ்வதும், புகழ்வதுபோலப் பழிப்பதும் வஞ்சப்புகழ்ச்சி அணியாகும்.
- கயவர்கள் தேவரைப் போன்றவர்கள்; ஏனென்றால், அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் செய்வார்கள்.
- அரசே, நீ கண்ணுக்கு இனியவனாயில்லை; கேள்விக்கு இனியவனாய் உள்ளாய். உன் பகைவர் கேள்விக்கு இன்னார்; கண்ணுக்கு இனியர். (நீ வீரன்; உன் பகைவர் வீரமற்றவர்.)
வேற்றுப்பொருள் வைப்பணி
பொதுப்பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப்பொருளையும் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பணியாகும்.
எடுத்துக்காட்டு: காந்தியடிகள் தீண்டாமையை அசைத்து விட்டார்கள். பெரியவர்களால் ஆகாத செயல் இல்லை.
உருவக அணி (Metaphor)
உவமானத்தையும் உவமேயத்தையும் வேறாகக் கூறாமல் ஒன்றுபடுத்திக் கூறுவது உருவக அணியாகும்.
-
மக்கள் மனம் என்னும் நிலத்தில் அன்பு என்னும் பயிரை வளர்த்தல் வேண்டும்.
-
தமிழ்ச் சரித்திர மண்டலம் பெருமக்களென்னும் விண் மீன்கள் இல்லாது வறிதே இருந்தது. மாங்குடி மருதனார் முதலிய சிற்றொளிகளே தமிழ் வானத்தில் திகழ்ந்து விளங்கின. இளங்கோவடிகளாகிய பெருநக்ஷத்திரம் அப்போது தோன்றவில்லை. தேவார ஆழ்வாராதியர்கள் என்னும் விண் மீன்களும் ஆசிரியர்கள், இன்னொளி வீசவில்லை. திருத்தக்கதேவர் என்னும் செவ்விய நல்லொளியும் முகஞ்செய்து திகழவில்லை. சேக்கிழார் என்னும் விடி வெள்ளியும் இன்னும் அரும்பவில்லை. விண்ணையும் மண்ணையும் தன்னிடமாகக் கொண்டு தனது பேரொளிப் பெருவெள்ளத்தில் இரு பேருலகையும் ஒளிமயமாக்கிய கம்பர் என்னும் சூரியனும் உதிக்கவில்லை. பேரொளி மண்டிலங்களில் ஒன்று மின்றிச் சிறுவெள்ளிகள் சிற்றொளி செய்து விளங்கிய தமிழ்ச் சரித்திர மண்டிலத்தே நாம் இன்று போற்றித் தொழுகின்ற வள்ளுவராகிய தெய்வ ஒளித் திங்கள்.
— S. வையாபுரிப் பிள்ளை
-
மாணவர்களே, இலக்கணம் என்னும் திறவுகோல் கொண்டு இலக்கியக் கோயிற் கதவுகளைத் திறந்து தமிழ்ப் பெருந்தேவியைக் கண்டு களிகூருங்கள்.
ஏகதேச உருவக அணி
ஒரு பாதியை உருவகப்படுத்தி மற்றொரு பாதியை உருவகப்படுத்தாமல் கூறுவது ஏகதேச உருவக அணியாகும். (ஏகதேசம் - ஒரு பாதி).
உருவக அணி:
திருக்குறளாகிய கலங்கரை விளக்கின் உதவியால் வாழ்க்கையாகிய கடலை வழிதெரிந்து கடந்து செல்லலாம்.
ஏகதேச உருவக அணி:
திருக்குறளாகிய கலங்கரை விளக்கின் உதவியால் வாழ்க்கையை வழி தெரிந்து கடந்து செல்லலாம்.
இதில் திருக்குறள் கலங்கரை விளக்காக உருவகப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், வாழ்க்கை கடலாக உருவகப்படுத்தப் படவில்லை. ஆதலால், பின்னது ஏகதேச உருவக அணியாகும்.
மற்றொரு எடுத்துக்காட்டு:
மக்கள் மனத்தில் அன்புப் பயிரை வளர்த்தல் வேண்டும்.