வலிமிகுதல் I
பிழையற்ற தமிழில் இலக்கண மரபு குன்றாது எழுதுவதுதான் நல்ல தமிழில் எழுதுவதாகும். பிழையோடு அழகாக எழுதுவது மணமற்ற மலர் போலாகும். வலி மிகுதல் என்பது நல்ல தமிழ் எழுத விரும்புவோர் அறிந்து கொள்ள வேண்டுவனவற்றுள் ஒன்று. வல்லெழுத்து மிகுந்து வருதலையே இலக்கணத்தில் சுருக்கமாக வலிமிகுதல் என்பர். வலி மிகுதலால் பொருள் வேறுபாடு தெரியும்; இனிய ஓசை உண்டாகும்.
உதாரணமாக 'செடிகொடி' என்னும் தொடருக்கும் 'செடிக்கொடி' என்னும் தொடருக்கும் வேறுபாடு உண்டு. 'செடிகொடி' என்னும் தொடருக்குச் செடியும் கொடியும் என்பது பொருள். 'செடிக்கொடி' என்னும் தொடரானது செடியில் ஏறியுள்ள கொடி என்றே பொருள் தரும்.
'திரைக்கடல்' என்னும் சொற்றொடர்க்குத் திரையையுடைய கடல் என்று பொருள் காண வேண்டும். திரை - அலை.
'பெண்மையுடைய பெண்களெலாம்', 'பெண்மையுடையப் பெண்களெலாம்' ஆகிய இவ்விரண்டு தொடர்களையும் பாருங்கள். முதலாவது தொடரானது பெண் தன்மையுள்ள பெண்களெலாம் என்று பொருள் தருகிறது. இரண்டாவது தொடர் பெண் தன்மை ஒழிந்து போக இருக்கும் பெண்களெல்லாம் எனப் பொருள் கொடுக்கிறது.
இங்கு இவற்றை எடுத்துக் காட்டியதனால் அறிவது யாது? இலக்கண அறிவு இருந்தால்தான் சொற்றொடர்களின் பொருளை நன்குணர்ந்து கொள்ள முடியும் என்பது புலனாகும். எனவே, நம் முன்னோர்கள் புணர்ச்சி இலக்கண அறிவை மொழித் தேர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாய் வற்புறுத்தியுள்ளார்கள்.
'வாழை பழம்' என்றால் நன்றாயிருக்குமா? அறிஞர்கள் இப்படி எழுதுவதைக் கண்டு நகைக்க மாட்டார்களா? 'வாழைப் பழம்' என்றால்தான் தமிழுக்குரிய இனிய ஓசையை அச்சொற்றொடரில் காணலாம்.
போதுமான தமிழ்க்கல்வி இல்லாதவர்கள் எழுதும் நூல்களில் வலிமிக வேண்டிய இடத்தில் வலி மிகாமல் இருக்கிற பிழைகள் மலிந்து கிடக்கின்றன. ரயில் நிலைய அறிவிப்புகளிலும், வேறு இடங்களில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளிலும் இப் பிழைகளை மிகுதியாகக் காண்கிறோம். தமிழ் நாளிதழ்களிலோ, தமிழ் வார இதழ்களிலோ இப்பிழைகள் மலிந்திருப்பதைப் பற்றிச் சொல்லவே வேண்டுவதில்லை. இங்ஙனம் அங்கும் இங்கும் எங்கும் பிழைகளே மிகுந்திருத்தலைக் காணலாம். ஆங்கில இதழ்களிலோ பிழைகள் மிகுந்திருக்கக் காண்பதில்லை. தமிழ் செய்த தவக் குறையோ என்னவோ தமிழ் நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் எழுத்தாளர் பலர் நூல்களிலும் இப்பிழைகள் மலிந்து கிடக்கின்றன; காரணம் மொழித்தேர்ச்சியற்றவர்கள் எழுதுவதேயாகும்.
பல மொழிகளை ஆய்ந்தறிந்த மொழி நூலாசிரியர் ஆட்டோ யெஸ்பர்சன் என்பவர், "ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்றால், பல சொற்களை அடுக்கி எழுதப் படித்துக் கொள்வதுமட்டுமாகாது; எந்த மொழியைக் கற்கிறார்களோ அந்த மொழிக்கு உரிய இலக்கண முறைப்படி மரபு தவறாது சொற்களைச் சேர்த்தெழுதக் கற்றுக் கொள்ள வேண்டும். இது யாருக்கும் இயற்கையாக உண்டாகாது. இயற்கையாக வர வேண்டுமென்றால் அளவு கடந்த உழைப்பு வேண்டுவதாகும்" என்கிறார்.
அவர் கூறுவது மிக மிக உண்மை. ‘வல்லெழுத்து மிகுவது ஏன் வேண்டும்' என்று வினவலாம். பொருளைத் தெளிவாகவும் சரியாகவும் உணர்வதற்கும், தமிழ் மொழிக்கே உரிய இன்னோசையை வெளிப்படுத்துவதற்கும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். வலி மிகுதல் தமிழ் மொழியிலும் மலையாள மொழியிலும் காணப்படுவதன்றி வேறு மொழிகளில் இல்லை என்று மொழி நூலறிஞர்கள் கூறுகிறார்கள்.
வல்லெழுத்து மிகும் இடங்கள்
வல்லெழுத்துக் கொள்ளும்படி சில விதிகள் கீழே தரப்படுகின்றன.
சுட்டெழுத்து, வினா எழுத்தை அடுத்து ஒற்று மிகும்
அ, இ, உ
என்ற சுட்டு எழுத்துகளையும் எ
என்ற வினா எழுத்தையும் அடுத்து வரும் க, ச, த, ப
முன் ஒற்று மிகும்.
பின்வரும் சொற்கள் நிலைமொழியாக (முதலில் நிற்கும் சொல்லாக) இருந்து, வருமொழியில் 'க', 'ச', 'த', 'ப' என்னும் எழுத்துகளுள் எது முதலாக வந்தாலும் வல்லெழுத்தானது கட்டாயம் மிகும்.
அந்த, இந்த, எந்த
அங்கு, இங்கு, எங்கு
ஆங்கு, ஈங்கு, யாங்கு
அப்படி, இப்படி, எப்படி
ஆண்டு, ஈண்டு, யாண்டு
(இடம்)அவ்வகை, இவ்வகை, எவ்வகை
அத்துணை, இத்துணை, எத்துணை
இனி, தனி, அன்றி, இன்றி
மற்ற, மற்றை, நடு, பொது, அணு, முழு, புது, திரு
அரை, பாதி, எட்டு, பத்து
முன்னர், பின்னர்
வருமொழி முதலில் (அடுத்து வரும் சொல்லின் முதலில்) - க, ச, த, ப
வர்க்கம் வந்தால் தான் வல்லெழுத்து மிகும்; உயிரெழுத்து வந்தால் மிகாது. க, ச, த, ப
வர்க்கம் தவிர வேறு எழுத்துகள் வரினும் வலிமிகாது.
எடுத்துக்காட்டுகள்:
அ + பக்கம்
->அப்பக்கம்
அக்குடம்
இச்செடி
எப்பக்கம்
அந்தச் செடி
இந்தக் குழந்தை
எந்தப் பாடம்?
அங்குச் சென்றான்
இங்குப் போகாதே
எங்குக் கேட்டாய்?
ஆங்குச்சென்றான்
ஈங்குக் கொடுத்தான்
யாங்குச் சென்றாய்?
அப்படிப் பேசு
இப்படிச் சொல்
எப்படித் தந்தாய்?
ஆண்டுப்போனேன்
ஈண்டுத் தந்தேன்
முழுப் பக்கம்
புதுக்கல்வி
திருக்குறள்
அரைப்பக்கம்
பாதித் துணி
எட்டுக் குழந்தைகள்
பத்துச் செடிகள்
அவ்வகைக் கொடி
இவ்வகைப் பூக்கள்
எவ்வகைச் செடி
அத்துணைப் பெரிய
இத்துணைச் சிறிய
எத்துணைப் பாடல்கள்
இனிப் பேசு
தனிக் குடிசை
அஃதன்றிக் கொடேன்
இன்றிச் செல்லேன்
மற்றப் பிள்ளைகள்
நடுக்கடல்
பொதுக்கூட்டம்
அணுக் குண்டு
முன்னர்க்கண்டேன்
பின்னர்ப்பேசுவேன்
பெரும்பாலோர் 'அங்கு போனார்', 'இங்கு சென்றார்', 'எங்கு கொடுப்பாய்' என்று எழுதுகின்றனர். இது தவறு. 'அங்குப் போனார்', 'இங்குச் சென்றார்', 'எங்குக் கொடுப்பாய்?' என்றே எழுத வேண்டும். அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களுக்குப்பின் கட்டாயம் வல்லெழுத்து மிகும்.
வன்தொடர் குற்றியலுகரத்தை அடுத்து ஒற்று மிகும்
சொற்கள் க்கு, ச்சு, த்து, ட்டு, ப்பு, ற்று
என முடிந்திருந்தால், அச்சொற்களை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் என்பர். (உ.ம்: மக்கு, தச்சு, செத்து, விட்டு, உப்பு, கற்று
). இத்தகைய சொற்கள் நிலைமொழியாக இருந்து வருமொழி முதலில் க, ச, த, ப
என்னும் எழுத்துகள் வந்தால், கட்டாயம் வல்லெழுத்து மிகும்.
எடுத்துக்காட்டுகள்:
மக்குப் பையன்
செத்துப் பிழைத்தான்
தச்சுத் தொழில்
உப்புக் கடை
விட்டுச் சென்றார்
கற்றுக் கொடுத்தார்
பத்துப் பாட்டு
எட்டுத் தொகை
'எதிர்த்து பேசினார்' என்று எழுதுவது தவறு; 'எதிர்த்துப் பேசினார்' என்றே எழுத வேண்டும். 'விற்று சென்றான்' என்று எழுதலாகாது; 'விற்றுச் சென்றான்' என்று தான் எழுத வேண்டும்.
இரண்டாம் மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகளை அடுத்து ஒற்று மிகும்
இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ
) மற்றும் நான்காம் வேற்றுமை உருபு (கு
) ஆகிய உருபுகளுக்குப் பின் வல்லெழுத்து மிகும் என்பதே விதி.
- 'நாட்டின் ஆட்சியை கைப்பற்ற' என்று எழுதுதல் பிழை; 'ஆட்சியைக் கைப்பற்ற' என்று எழுதுவதே சரியானது.
- 'மந்திரி சபைக்கு போக' என்று வல்லெழுத்து மிகாமல் எழுதுவது தவறு; 'மந்திரி சபைக்குப் போக' என்றே எழுத வேண்டும்.
வல்லெழுத்து மிகுதலைப் பற்றி எழுதுவது சுவையாக இராது; படிப்பதும் சிறிது கடினமாக இருக்கும். எனினும், ஒருமுறை இருமுறை இங்கே எளிதான முறையில் கூறியுள்ளதைப் படித்தறிந்து பழகிவிட்டால், இப்பிழை வாராதவாறு எவரும் எழுதலாம்; எழுதவும் முடியும். 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம், வைத்த தொரு கல்வி மனப்பழக்கம்', என்பது உண்மை. மனம் உண்டானால் வழி உண்டாகும். முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை.