வலிமிகுதல் II
தங்கும் இடமாக "இந்த இடத்தை பிரயாணிகள் உபயோகிக்கக் கூடாது. டிக்கட்டுகள் வாங்கியவுடன் பிரயாணிகள் தங்குமிடத்திற்கு செல்ல கோறப்படுகிறார்கள்."
"உசிலம்பட்டி வரையிலுள்ள ஸ்டேஷன்களுக்கும் மதுரைக்கு தெற்கேயுள்ள எல்லா ஸ்டேஷன்களுக்கும் 2-ஆம் வகுப்பு டிக்கட்டுகள் கொடுக்கப்படும்."
இவ்விரண்டு அறிவிப்புகளும் செந்தமிழ் உலவும் நந்தமிழ் மதுரைப் புகைவண்டி நிலையத்திலேயே பயணச் சீட்டு விற்கும் இடத்திலே இருந்தவை: பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப் பட்டவை. எந்தத் தமிழறிஞரின் திருப்பணியோ இது! புகைவண்டி நிலையத்து எழுத்தர் திருப்பணியாகத்தான் இஃது இருக்க வேண்டும்.
முதல் அறிவிப்பில் 'இடத்தை பிரயாணிகள்' என்று வல்லெழுத்து மிகாமல் இருப்பது பிழையானது. 'இடத்தைப் பிரயாணிகள்' என்று எழுத 'தங்குமிடத்திற்கு செல்ல கோறப்படுகிறார்கள்' என்னும் மூன்று சொற்களுள்ள தொடரில் மூன்று பிழைகள் உள்ளன. 'தங்குமிடத்திற்குச் செல்லக் கோரப்படுகிறார்கள்' என்று எழுதுவது தான் திருத்தமானது.
இரண்டாவது அறிவிப்பில் 'மதுரைக்கு தெற்கே' என்று இருப்பது தவறானது. 'மதுரைக்குத் தெற்கே' என்றிருக்க வேண்டும். இரண்டாம் வேற்றுமை 'ஐ' உருபின் பின்னும் நான்காம் வேற்றுமை 'கு' உருபின் பின்னும் வல்லெழுத்து மிக வேண்டும் என்னும் இவ் விதிகள் தெரிந்திருந்தால் இப்பிழைகள் நேர்ந்திரா. நாளிதழ் ஆசிரியர்களும் செய்தி எழுதி அனுப்புகிறவர்களும் இவை போன்ற பிழைகளைச் செய்து வருகிறார்கள். ஆதலால், எத்துறையினரும் வல்லெழுத்து மிகுதலைக் கற்றுக்கொள்ள வேண்டும்; எளிதாகக் கற்கலாம்.
வல்லெழுத்து மிகுதற்குள்ள வேறு விதிகளையும் இங்குக் காண்போம். வேறொரு சொல்லைப் பற்றியல்லாது நிற்க முடியா திருக்கும் ஒரு குறைந்த வினைச்சொல் மற்றொரு வினைச் சொல்லைத் தழுவி நின்றால், அப்பொருள் குறைந்த வினைச் சொல்லை வினையெச்சம் என்பர்.
தேடப் போனார், எனக் கூறினார், மெல்லச் சொன்னார். தேடிச் சென்றார். வருவதாய்க் கூறினார், போய்ப் பார்த்தார் என்னும் இத்தொடர்களில் உள்ள தேட, என, மெல்ல, தேடி, வருவதாய், போய் என்பவை வினையைத் தழுவி நிற்பதால் வினையெச்சங்களாகும். இவை எச்சச் சொற்களாய் வினையெச்சங்கள் எனப்படும்.
- தேட, என, மெல்ல என்னும் இவ்வினையெச்சங்கள் அகர ஈற்றில் முடியும் வினையெச்சங்கள்.
- தேடி என்பது இகர ஈற்றில் முடியும் வினையெச்சம்.
- போய் என்பது வினையெச்சம்.
- வருவதாய் என்பது ஆய் சேர்ந்து வந்த வினையெச்சம்.
அகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும், இகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும், ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின்னும் வரும் வல்லெழுத்து மிகும். கீழ்வரும் எடுத்துக் காட்டுகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்; புரிந்து கொள்ளலாம்.
- வரக்கூறினார், தேடப்போனார். (அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வந்த வல்லெழுத்து மிகுந்தது.)
- கூறிச்சென்றார், கை வாடிப்போயிற்று. (இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வந்த வல்லெழுத்து மிகுந்தது.)
- போய்ச் சொன்னார், போய்த் தேடினார். (போய் என்னும் வினையெச்சத்தின் பின் வந்த வல்லெழுத்து மிகுந்தது.)
- சொன்னதாய்ச்சொல். (ஆய் சேர்ந்து வந்த வினையெச்சத்தின் பின் வந்த வல்லெழுத்து மிகுந்தது.)
மதுரைப் புகைவண்டி நிலைய முதல் அறிவிப்பில் 'செல்ல கோறப்படுகிறார்கள்' என்றிருப்பது தவறு என்று முன்னே குறிப்பிடப்பட்டது. 'செல்லக் கோரப்படுகிறார்கள்' என்றிருக்க வேண்டும் என்று திருத்தமும் முன்னே கூறப்பட்டது. அப்படிக் கூறக் காரணம் யாதென வினவலாமன்றோ? 'செல்ல' என்பது அகர ஈற்று வினையெச்சம். ஆதலால், 'செல்லக் கோரப்படுகிறார்கள்' என்று எழுத வேண்டும் என்றது. கோரப்படுகிறார்கள் என்பதற்கு விரும்பப்படுகிறார்கள் என்பது பொருள். இடையின ரகத்திற்கு வல்லின றகரம் போடப்பட்டிருப்பது பிழை.
ஆறாம் வேற்றுமைத் தொகை (அஃறிணையாக இருந்தால்)
இன்னும் ஒரு விதியையும் தெரிந்து கொள்ளலாம். இரண்டு சொற்கள் இருந்து பொருள் கொள்ளும் போது நடுவில் ஆறாம் வேற்றுமை உருபாகிய அது என்பது மறைந்து வந்தால், ஆறாம் வேற்றுமைத் தொகை எனப்படும். குதிரைத் தலை என்பது ஆறாம் வேற்றுமைத் தொகை. (ஆறாம் வேற்றுமைத் தொகையில் முதலில் நிற்கும் சொல் அஃறிணையாக இருந்தால் வல்லெழுத்து கட்டாயம் மிகும்).
- நரிப்பல், நாய்க்குட்டி, குதிரைக்குளம்பு, கோழிக்கால், படைத்தலைவன், சேனைத்தலைவன், கழுதைக்குரல், பறவைக்கூட்டம்.
இவ் விதிகளைத் தெரிந்து கொள்ளாமலே எழுத இயலாதா?' என்று சிலர் வினவலாம். பிழையில்லாமல் எழுதப் பட்ட அறிஞர்களுடைய உரைநடை நூல்களைப் படிப்பதால் ஓரளவு இவ் விதிகளை உணராமல் எழுதக் கூடிய மொழித்திறமை பெறலாம். அப்படித்தான் பலர் எழுதியும் வருகின்றனர். "ஏன் இப்படி வல்லெழுத்து மிகும்படி எழுதவேண்டும்?' என்று ஒருவர் அவர்களை வினவினால், அவர்கள் பாடு திண்டாட்டந் தான். எல்லாரும் அவ்வாறு எழுதியிருக்கிறார்கள்; நானும் எழுதுகிறேன்' என்று அவர்கள் சொல்வார்களேயன்றி, இக்காரணத்தால் இப்படி எழுத வேண்டும் என்று கூற அறியமாட்டார்கள். விதிகளைத் தெரிந்து கொண்டால் அவர்களுக்கு ஐயமின்றி எழுதும் ஆற்றல் மிகும். அவர்கள், 'இக்காரணத்தால் இங்கே வல் லெழுத்து மிக வேண்டும்' என்று நன்கு தெரிந்து எழுதுவார்கள். எனவே, நல்ல தமிழ் எழுத விரும்புகிறவர்கள் வலி மிகும் விதிகளைப் படித்தறிவதைத் தலைவலியாகக் கொள்ளாமல் அவற்றைப் படித்துத் தெரிந்து கொண்டால் பிழையற எழுதலாம்.
வலிமிகும் விதிகளின் தொகுப்பு
சிதறிக்கிடக்கும் வலிமிகும் விதிகள் எல்லாம் இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இத்தொகுப்பு, படித்த விதிகளை உள்ளத்தில் தள்ள முடியாதவாறு பிடித்து நிறுத்தப் பயன்படும்.
கீழ்வரும் சொற்களுக்குப்பின் க, ச, த, ப எழுத்துகளில் அமைந்த சொல் வருமொழியாக வந்தால் வலி மிகும்.
-
அ, இ, எ, அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு; அப்படி, இப்படி, எப்படி; ஆண்டு, ஈண்டு, யாண்டு; அவ்வகை, இவ்வகை, எவ்வகை; அத்துணை, இத்துணை, எத்துணை; இனி, தனி; அன்றி, இன்றி மற்ற, மற்றை, நடு, பொது, அணு, முழு, புது, திரு, அரை, பாதி; எட்டு, பத்து; முன்னர், பின்னர் ஆகிய இச்சொற்களுக்குப் பின் வரும் வலிமிகும்.
-
ஓரெழுத்து ஒரு மொழிக்குப்பின் வரும் வலி மிகும்.
- பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்.
- தீ + பிடித்தது = தீப்பிடித்தது.
- கை + குழந்தை = கைக்குழந்தை.
- பூ + பந்தல் = பூப்பந்தல்.
-
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வரும் வலி மிகும்.
- அறியா + பிள்ளை = அறியாப்பிள்ளை.
- காணா + காட்சி = காணாக்காட்சி.
- சொல்லா + சொல் = சொல்லாச்சொல்.
- நிலையா + பொருள் = நிலையாப்பொருள்.
- தீரா + துன்பம் = தீராத்துன்பம்.
-
அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும், ஆய், போய், ஆக, என என்னும் வினையெச்சங்களின் பின்னும் வரும் வலி மிகும்.
- வர + சொன்னான் = வரச்சொன்னான்.
- மெல்ல + பேசினார் = மெல்லப்பேசினார்.
- ஓடி + போனான் = ஓடிப்போனான்.
- கேட்பதாய் + கூறினான் = கேட்பதாய்க்கூறினான்.
- போய் + தேடினான் = போய்த்தேடினான்.
- இருப்பதாக + கூறு = இருப்பதாகக்கூறு.
- என + கேட்டான் = எனக்கேட்டான்.
-
வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின்வரும் வலி மிகும்.
- எட்டு + கட்டுகள் = எட்டுக்கட்டுகள்.
- பத்து + செய்யுள்கள் = பத்துச்செய்யுள்கள்.
- கற்று + கொடுத்தான் = கற்றுக்கொடுத்தான்.
- விட்டு + சென்றாள் = விட்டுச்சென்றாள்.
- வைத்து + போனான் = வைத்துப்போனான்.
- கொக்கு + பறந்தது = கொக்குப்பறந்தது.
noteகொக்குப் பறந்தது என்னும் தொடர் எழுவாய்த் தொடராயினும் நிலைமொழி வன்றொடர்க் குற்றியலுகரமானதால் வலிமிக்கு வந்தது. இங்கு வலி மிகுதலை விரும்பா விட்டால் கொக்கு என்னும் சொல்லின் பக்கத்தில் காற்புள்ளியிட்டு கொக்கு, பறந்தது என்று இவ்வாறு எழுதுக.
-
திரு, நடு, முழு, விழு, பொது, அணு போன்றுள்ள முற்றியலுகரச் சொற்களுக்குப் பின்வரும் வலி மிகும்.
- திரு + கோயில் = திருக்கோயில்
- நடு + தெரு = நடுத்தெரு.
- முழு + பேச்சு = முழுப்பேச்சு.
- விழு + பொருள் = விழுப்பொருள்.
- பொது + பணி = பொதுப்பணி.
- அணு + குண்டு = அணுக்குண்டு.
-
இரண்டாம் வேற்றுமை உருபின் பின்னும் நான்காம் வேற்றுமை உருபின் பின்னும் வரும் வலி மிகும்.
- பூனையை + பார்த்தான் = பூனையைப்பார்த்தான்.
- கடைக்கு + போனான் = கடைக்குப்போனான்.
-
பண்புத் தொகையில் வரும் வல்லெழுத்து மிகும்.
- வெள்ளை + தாள் = வெள்ளைத்தாள்.
- மெய் + பொருள் = மெய்ப்பொருள்.
- பொய் + புகழ் = பொய்ப்புகழ்.
-
இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வரும் வலி மிகும்.
- தை + திங்கள் = தைத்திங்கள்.
- கோடை + காலம் = கோடைக்காலம்.
- மல்லிகை + பூ = மல்லிகைப்பூ.
- ஆஸ்திரேலியா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம்.
noteஇவை பிறமொழிப் பெயராகையால் இவற்றில் வலி மிகுதல் கூடாது.
-
உவமைத் தொகையில் வரும் வலி மிகும்.
- ரொட்டி + தலை = ரொட்டித்தலை.
- தாமரை + கண் = தாமரைக்கண்.
- முத்து + பல் = முத்துப்பல்.
-
நான்காம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் வரும் வலி மிகும்.
- வேலி + கால் = வேலிக்கால்.
-
ஏழாம் வேற்றுமைத் தொகையில் வரும் வலி மிகும்.
- காட்டிடை + சென்றாள் = காட்டிடைச்சென்றாள்.
- குடி + பிறந்தார் = குடிப்பிறந்தார்.
-
ஆறாம் வேற்றுமைத் தொகையில் முதலில் நிற்கும் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின் வலி மிகும்.
- குருவி + தலை = குருவித்தலை.
- கிளி + கூடு = கிளிக்கூடு.
- தேர் + தட்டு = தேர்த்தட்டு.
- நாய் + குட்டி = நாய்க்குட்டி.
- பூனை + குட்டி = பூனைக்குட்டி.
-
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலிமிகும்.
- சிற்றுண்டி + சாலை = சிற்றுண்டிச்சாலை.
- தயிர் + குடம் = தயிர்க்குடம்.
- காய்கறி + கடை = காய்கறிக்கடை.
- தேர் + பாகன் = தேர்ப்பாகன்.
-
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும்.
- பித்தளை + குடம் = பித்தளைக்குடம்.
- பட்டு + சேலை = பட்டுச்சேலை.
- மோர் + குழம்பு = மோர்க்குழம்பு.
-
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும்.
- குழந்தை + பால் = குழந்தைப்பால்.
- கோழி + தீனி = கோழித்தீனி.
-
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும்.
- வாய் + பாட்டு = வாய்ப்பாட்டு.
- விழி + புனல் = விழிப்புனல்.
-
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும்.
- தண்ணீர் + பாம்பு
- சென்னை + கல்லூரி = சென்னைக்கல்லூரி.
- மதுரை + கோயில் = மதுரைக்கோயில்.
-
தனிக்குற்றெழுத்தை அடுத்து வரும் ஆகாரத்தின் பின்வரும் வலி மிகும்.
- கனா + கண்டான் = கனாக்கண்டான்.
- நிலா + பயன் = நிலாப்பயன்.
- சுறா + தலை = சுறாத்தலை.
-
அன்றி, இன்றி என்னும் இகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சங்களுக்குப் பின் வரும் வலி மிகும்.
- அன்றி + செல்லேன் = அன்றிச்செல்லேன்.
- இன்றி + கொடேன் = இன்றிக்கொடேன்.
-
ற
, இரட்டித்த நெடில் தொடர், உயிர்த் தொடர் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வரும் வலி மிகும்.- மாடு + சாணம் = மாட்டுச்சாணம்.
- தமிழ்நாடு + கலை = தமிழ்நாட்டுக்கலை.
- தமிழ்நாடு + போக்குவரத்து = தமிழ்நாட்டுப் போக்குவரத்து.
- வீடு + சோறு = வீட்டுச்சோறு.
- ஆறு + தண்ணீர் = ஆற்றுத்தண்ணீர்.
- கிணறு + தவளை = கிணற்றுத்தவளை.
- வேறு + பொருள் = வேற்றுப்பொருள்.
- மாடு + சாணம் = மாட்டுச்சாணம்.
-
மென் தொடர்க் குற்றியல் உகரச் சொற்களுக்குப் பின்னும், உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின்னும், முற்றியலுகரச் சொற்களுக்குப் பின்னும் வரும் வல்லெழுத்துச் சில இடங்களில் மிகும்.
- வண்டு + கால் = வண்டுக்கால்.
- திண்டு + கல் = திண்டுக்கல்.
- பாம்பு + தோல் = பாம்புத்தோல்.
- குரங்கு + கூட்டம் = குரங்குக் கூட்டம்.
- கன்று + குட்டி = கன்றுக்குட்டி.
- பண்பு + தொகை = பண்புத்தொகை.
- பண்பு + பெயர் = பண்புப்பெயர்.
- மருந்து + கடை = மருந்துக்கடை.
- முதுகு + தண்டு = முதுகுத்தண்டு.
- எருது + கொடி = எருதுக்கொடி.
- உணவு + பொருள் = உணவுப்பொருள்.
- செலவு + சொல் = செலவுச்சொல்.
- இந்துக்கள், பந்துக்கள், கந்துக்கடன் என்னும் சொற்களில் வல்லெழுத்து மிகுந்து வருதலும் காண்க.
- வண்டு + கால் = வண்டுக்கால்.
வலிமிகும் தொடர்களின் வரிசை
அரைப்பங்கு, அறிவுப்பஞ்சம், அணுக்குண்டு, இடைநிலைப்பள்ளி, அந்தக்கழகம், இராக்காலம், இராப்பகல், அங்குப்போனார், அவனுக்குக்கொடுத்தான், இரவுக்குறி, அழுக்குத்துணி, அன்றிச்செய்யேன், இந்தியத்துணைக்கண்டம், இந்தியத்தூதுக்குழு, அன்புத்தளை, இனிக்கேட்பேன், இடப்பக்கம், ஆரம்பப்பள்ளி, ஆண்டுப்போனான், ஆண்டுக்காலம், ஆங்குச்சென்றான், ஆட்சித்தொடக்கம், ஆலோசனைக்கூட்டம், இன்றிப்பேசு, இந்தப்பேச்சு, இங்குத்தந்தேன், இசைச்செல்வர், ஈண்டுப்போகிறேன், ஈங்குக்கொடுத்தேன், உழவுத்தொழில், உணவுப்பொருள், உயர்நிலைப்பள்ளி, உருளைக்கிழங்கு, உண்மைக்கதை முதலியனவற்றை நன்றாகத் தெரிந்து கொண்டால் பல பிழைகளை நீக்கலாம்.
தமிழறிஞர்கள் எழுதியுள்ள உரைநடை நூல்களைப் படிக்கும்போது வல்லெழுத்து மிகும் இடங்களைக் கவனித்துப் படித்து வந்தால், பிழையின்றி எழுத நன்கு தெரிந்து கொள்ளலாம்.