Skip to main content

9 ஆம் வகுப்பு நூல் வெளி

திராவிட மொழிக்குடும்பம்

தென்திராவிடம்நடுத்திராவிடம்வடதிராவிடம்
தமிழ்தெலுங்குகுரூக்
மலையாளம்கூயிமால்தோ
கன்னடம்கூவி (குவி)பிராகுய் (பிராகுயி)
குடகு (கொடகு)கோண்டா
துளுகோலாமி (கொலாமி)
கோத்தாநாய்க்கி
தோடாபெங்கோ
கொரகாமண்டா
இருளாபர்ஜி
கதபா
கோண்டி
கோயா

நூல் வெளி: தமிழோவியம் (ஈரோடு தமிழன்பன்)

ஈரோடு தமிழன்பன் எழுதிய 'தமிழோவியம்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது. இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளார். இவரது 'வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 'தமிழன்பன் கவிதைகள்' தமிழக அரசின் பரிசுபெற்ற நூல். இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தெரிந்து தெளிவோம்

இனிமையும் நீர்மையும் தமிழெனல் - பிங்கல நிகண்டு

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் - பாரதியார்

தெரியுமா?
  • உலகத் தாய்மொழி நாள்: பிப்ரவரி 21
  • தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள்: இலங்கை, சிங்கப்பூர்

சில திராவிடமொழிகளின் பழமையான இலக்கிய இலக்கணங்கள்

மொழிஇலக்கியம்காலம்இலக்கணம்காலம்சான்று
தமிழ்சங்க இலக்கியம்பொ.ஆ.மு. 5 - பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டு அளவில்தொல்காப்பியம்பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டு அளவில்தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ.), சாகித்திய அகாதெமி
கன்னடம்கவிராஜ மார்க்கம்பொ.ஆ. 9 ஆம் நூற்றாண்டுகவிராஜ மார்க்கம்பொ.ஆ. 9 ஆம் நூற்றாண்டுஇந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் - செ. வை. சண்முகம்
தெலுங்குபாரதம்பொ.ஆ. 11ஆம் நூற்றாண்டுஆந்திர பாஷா பூஷணம்பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டு
மலையாளம்ராம சரிதம்பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டுலீலா திலகம்பொ.ஆ. 15 ஆம் நூற்றாண்டுமலையாள இலக்கிய வரலாறு - சாகித்திய அகாதெமி

திராவிட மொழிகளில் சொல் ஒற்றுமை

தமிழ்மலையாளம்தெலுங்குகன்னடம்துளுகூர்க்
மரம்மரம்மானுமரம்மரமர
ஒன்றுஒண்ணுஓகடிஒந்துஒஞ்சி
நூறுநூறுநூருநூருநூது
நீநீநீவுநீன்நின்
இரண்டுஈர்ரெண்டுஈர்ரெண்டுஎரடுரட்டு
நான்குநால், நாங்குநாலுகுநாலுநாலு
ஐந்துஅஞ்சுஐதுஐதுஐனு

நூல் வெளி: புறநானூறு

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. இது பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது. இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.

தெரியுமா?

மொரிசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.

தெரிந்து தெளிவோம்

கண்ணி - இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர். அதேபோல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.

தெரியுமா?

தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம். - கால்டுவெல்

நூல் வெளி: தமிழ்விடு தூது

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது’ என்பதும் ஒன்று. இது, 'வாயில் இலக்கியம்', சந்து இலக்கியம்' என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக ‘மாலையை வாங்கிவருமாறு' அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகக் 'கலிவெண்பா'வால் இயற்றப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர் யார் என அறிந்துகொள்ள இயலவில்லை.

தமிழ்ப் பின்ன இலக்கங்கள்

பெயர்எண் அளவு
முந்திரி1/320
அரைக்காணி1/160
அரைக்காணி முந்திரி3/320
காணி1/80
கால் வீசம்1/64
அரைமா1/40
அரை வீசம்1/32
முக்காணி3/80
முக்கால் வீசம்3/64
ஒருமா1/20
மாகாணி (வீசம்)1/16
இருமா1/10
அரைக்கால்1/8
மூன்றுமா3/20
மூன்று வீசம்3/16
நாலுமா1/5

போன்ற பின்ன இலக்கங்களுக்கும் தமிழ்ச்சொற்கள் உள்ளன.

title="யார் இவர்? சர் ஆர்தர் காட்டன்"

இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கல்லணையைப் பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார். கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைபட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது. இந்தச் சூழலில் 1829இல் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர்தான் பயனற்று இருந்த கல்லணையைச் சிறு சிறு பகுதிகளாய்ப் பிரித்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரையும் சூட்டினார். மேலும் கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் 1873ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

title="திட்பமும் நுட்பமும்: கல்லணை தொழில்நுட்பம்"

காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அவற்றின்மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களிமண்ணைப் புதிய பாறைகளில் பூசி, இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே, கல்லணையைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகக் கருதப்படுகிறது.

நூல் வெளி: தமிழ்ஒளி

கவிஞர் தமிழ்ஒளி (1924-1965) புதுவையில் பிறந்தவர். பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர்; மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர். நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை. இப்பாடப்பகுதி தமிழ் ஒளியின் கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

title="தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்களும் விளக்கமும்"
  • அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
  • அருவி - மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது
  • ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
  • ஆறு - இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு
  • இலஞ்சி - பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
  • உறைக்கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு
  • ஊருணி - மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை
  • ஊற்று - அடியிலிருந்து நீர் ஊறுவது
  • ஏரி - வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்
  • கட்டுக்கிணறு - சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு
  • கடல் - அலைகளைக் கொண்ட உப்புநீர்ப் பெரும்பரப்பு
  • கண்மாய் - பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்
  • குண்டம் - சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
  • குண்டு - குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
  • குமிழிஊற்று - அடிநிலத்து நீர், நிலமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று
  • கூவல் - உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
  • கேணி - அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
  • புனற்குளம் - நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை
  • பூட்டைக் கிணறு - கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு

நூல் வெளி: பெரியபுராணம் (சேக்கிழார்)

சுந்தரரின் திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையைக் கூறுகிறது. இதைச் சிறிது விரித்து நம்பியாண்டார்நம்பியால் எழுதப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்துமூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம். இதன் பெருமை காரணமாக இது பெரியபுராணம் என்று அழைக்கப்படுகிறது. கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார், சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தார். 'பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என்று இவரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.

title="யார் இவர்? ஜான் பென்னி குவிக்"

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகியவற்றின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குவிக். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைகை வடிநிலப் பரப்பில் மழை பொய்த்துப் பஞ்சம் ஏற்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாற்றில் ஓடி வீணாகக் கடலில் கலப்பதை அறிந்த இவர், அங்கு ஓர் அணை கட்ட முடிவு செய்தார். கட்டுமானத்தின்போது இடையில் கூடுதல் நிதி ஒதுக்க ஆங்கிலேய அரசு மறுத்தபோது தனது சொத்துகளை விற்று அணையைக் கட்டி முடித்தார். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அப்பகுதி மக்கள் தம் குழந்தைகளுக்குப் பென்னி குவிக் எனப் பெயர் சூட்டும் வழக்கம் இன்றும் உள்ளது.

title="திட்பமும் நுட்பமும்: சோழர் காலக் குமிழித்தூம்பு"

மழைக்காலங்களில் ஏரி நிரம்பும்போது நீந்துவதில் வல்லவரான ஒருவர் தண்ணீருக்குள் சென்று கழிமுகத்தை அடைந்து குமிழித்தூம்பை மேலே தூக்குவார். அடியில் இரண்டு துளைகள் காணப்படும். மேலே இருக்கும் நீரோடித் துளையிலிருந்து நீர் வெளியேறும். கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும். இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை.

தெரிந்து தெளிவோம்

அகழி, ஆழிக்கிணறு, உறைக்கிணறு, அணை, ஏரி, குளம், ஊருணி, கண்மாய், கேணி - எனப் பல்வேறு பெயர்களில் நீர்நிலைகள் உள்ளன.

தெரிந்து தெளிவோம்

செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை; செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை என்பதை நினைவில் கொள்க.

மறைநீர் (Virtual Water)

கண்ணுக்குத் தெரியாமல் நாம் இரண்டு வகையில் நீரைப் பயன்படுத்துகிறோம். முதல் வகை நாம் பயன்படுத்தும் பொருள்கள் வழியாக; இரண்டாவது வகை நாம் உண்ணும் உணவின் வழியாக. புலப்படாத் தண்ணீர் என்பது உணவுப் பொருள்களின் உற்பத்தி குறித்தும் அதனை உற்பத்தி செய்யச் செலவிடப்பட்ட தண்ணீர்த் தேவை குறித்தும் பேசுவது ஆகும்.

  • ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய 822 லிட்டர் தண்ணீரும்
  • ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 1780 லிட்டர் தண்ணீரும்
  • ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீரும்
  • ஒரு கிலோ காப்பிக் கொட்டையை உற்பத்தி செய்ய 18,900 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகின்றது.

நீர்வளத்தைப் பாதுகாக்க நாட்டின் மேல்புற நீர்வளம் மற்றும் நிலத்தடி நீர்வளம் குறித்து அக்கறை கொள்ளவேண்டும். நீர் அதிகம் தேவைப்படும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்து, தேவைக்கேற்ப இறக்குமதி செய்துகொள்ள வேண்டும். இதனால் நாட்டின் நிலத்தடி நீரும் ஆற்று நீரும் சேமிக்கப்படும்.

(மா. அமரேசன் -- கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்)

நூல் வெளி: கந்தர்வன்

கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர். கவிதைகளையும் எழுதியிருக்கிறார். சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலியவை இவரது குறிப்பிடத் தகுந்த சிறுகதைத் தொகுப்புகள்.

நூல் வெளி: மணிமேகலை (சீத்தலைச் சாத்தனார்)

தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன. மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால், இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு. இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்; பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க்காப்பியம். இக்காப்பியம் சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது; பௌத்த சமயச் சார்புடையது. கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர். முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதையே விழாவறை காதை.

மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். சாத்தன் என்பது இவரது இயற்பெயர். இவர், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர். கூலவாணிகம் (கூலம் - தானியம்) செய்தவர். இக்காரணங்களால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பெற்றார். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர் என்பர். தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.

title="திட்பமும் நுட்பமும்: கீழடி அகழாய்வு"

மதுரை நகருக்கு அருகே உள்ள கீழடி என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருள்கள், உலோகப் பொருள்கள், முத்துகள், கிளிஞ்சல் பொருள்கள், மான்கொம்புகள், சோழிகள், கிண்ணங்கள், துளையிடப்பட்ட பாத்திரங்கள், இரத்தினக்கல் வகைகள், பழுப்பு, கறுப்பு, சிவப்பு-கறுப்புப் பானைகள், சதுரங்கக் காய்கள், தானியங்களைச் சேகரிக்கும் கலன்கள், செம்பு, சங்கு வளையல்கள், எலும்பினால் ஆன கூர் முனைகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், நீர் சேகரிக்கும் பெரிய மட்கலன்கள், சிறிய குடுவைகள், உறைக்கிணறுகள், சுடுமண் கூரை ஓடுகள் போன்ற பல்வேறு தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன. மூன்று வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இவற்றுள் தொன்மையானவை சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன. இதுவரை அகழாய்வு செய்யப்பட்ட பெரும்பான்மையான இடங்கள், இறப்புத் தொடர்பான தடயங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்திருந்தன. ஆனால், கீழடியில் கண்டறியப்பட்டுள்ள முழுமையான வாழ்விடப்பகுதியும் செங்கல் கட்டுமானங்களும் இதரப்பொருள்களும் தமிழரின் உயரிய நாகரிகத்தைக் கண்முன் காட்டும் சாட்சிகளாய் அமைந்துள்ளன.

தெரிந்து தெளிவோம்: பட்டிமண்டபம்

பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கியவழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள். பேச்சுவழக்கையும் ஏற்றுக்கொள்கிறோம்.

  • மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் - சிலப்பதிகாரம் (காதை 5, அடி 102)
  • பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் - மணிமேகலை (காதை 1, அடி 16)
  • பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே - திருவாசகம் (சதகம் 41)
  • பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் - கம்பராமாயணம் (பாலகாண்டம், நகரப் படலம் 154)

பட்டிமண்டபம் என்ற சொல் பயின்று வருகிறது.

தெரிந்து தெளிவோம்: ஐம்பெருங்குழு
  1. அமைச்சர்
  2. சடங்கு செய்விப்போர்
  3. படைத்தலைவர்
  4. தூதர்
  5. சாரணர் (ஒற்றர்)
தெரிந்து தெளிவோம்: எண்பேராயம்
  1. கரணத்தியலவர்
  2. கரும விதிகள்
  3. கனகச்சுற்றம்
  4. கடைக்காப்பாளர்
  5. நகரமாந்தர்
  6. படைத்தலைவர்
  7. யானை வீரர்
  8. இவுளி மறவர்
தெரிந்து தெளிவோம்

எகிப்தில் உள்ள பெனி - ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

title="ATM இயந்திரத்தின் பின்னணி"

"நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்துப் பயன்படுத்துவதற்கொரு வழியைச் சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது. அங்கு சாக்லேட்; இங்கே பணம்." - ஜான் ஷெப்பர்டு பாரன்

தெரிந்து தெளிவோம்

ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு (Adrian Ashfield) என்பவர் 1962இல் கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றிருந்தார். ஆரம்பத்தில் பெட்ரோல் தருவதற்குப் பயன்படுத்தவே காப்புரிமை தரப்பட்டது. அதுவே பின்னர் அனைத்துப் பயன்பாட்டுக்குமான காப்புரிமையாக மாற்றப்பட்டது.

தெரியுமா?

பத்தாம் வகுப்பும் பன்னிரண்டாம் வகுப்பும் முடித்த மாணவர்களுக்கு, அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்யப்படவேண்டிய பதிவு, அவர்கள் படித்த பள்ளிகளிலேயே ஆண்டுதோறும் இணையத்தின் வழியாகச் செய்யப்பட்டு வருகிறது. அரசின் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றைப் பெற்ற மாணவர்களின் விவரங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.

நூல் வெளி: திருக்குறள் (திருவள்ளுவர்)

உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல், திருக்குறள். இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை இந்நூல். இது முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலைப் போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.

உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள். தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல்.

பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.

நூல் வெளி: வைரமுத்து

கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர். இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர். கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும் மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர். இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்பாடப் பகுதி வைரமுத்து கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இலக்கியங்களில் அறிவியல்

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி

புறநானூறு (பாடல் 27, அடி 7-8)

அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன் வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, "ஓர் எந்திர வூர்திஇயற்றுமின்" என்றான்.

சீவக சிந்தாமணி (நாமகள் இலம்பகம் 50)

இந்திய அறிவியல் அறிஞர்கள்

அப்துல்கலாம்

இவர், இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர்; தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர்; ஏவுகணை, ஏவுகணை ஏவு ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால் இவர், 'இந்திய ஏவுகணை நாயகன்' என்று போற்றப்படுகின்றார்; பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்திலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்வெளிப் பொறியாளராகப் பணியாற்றினார்; இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றவர். இவர் தம் பள்ளிக் கல்வியைத் தமிழ்வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்மதி

அரியலூரில் பிறந்த இவர், 2015இல் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர். இஸ்ரோவில் 1984ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். 2012இல் உள் நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT-1) திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர், இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் ஆவார்.

அருணன் சுப்பையா

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளரும் திட்ட இயக்குநரும் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகில் உள்ள கோதைசேரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்று, 1984இல் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம்சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்து, தற்போது பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார். 2013இல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருக்கின்றார்.

தெரிந்து தெளிவோம்

1990இல் டிம் பெர்னெர்ஸ் லீ (Tim Berners-Lee) வையக விரிவு வலை வழங்கியை (www - server) உருவாக்கினார். "இணையத்தில் இது இல்லையெனில், உலகத்தில் அது நடைபெறவேயில்லை!" என்பது லீயின் புகழ் பெற்ற வாசகம்.

நூல் வெளி: தொல்காப்பியம்

தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம். இதனை இயற்றியவர் தொல்காப்பியர். தொல்காப்பியம் பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்திருக்கிறது. இது எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களையும் 27 இயல்களையும் கொண்டுள்ளது. எழுத்து, சொல் அதிகாரங்களில் மொழி இலக்கணங்களை விளக்குகிறது. பொருளதிகாரத்தில் தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கியக் கோட்பாடுகளையும் இந்நூல் விளக்குகிறது. இந்நூலில் பல அறிவியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகப் பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர். இது தமிழர்களின் அறிவாற்றலுக்குச் சிறந்த சான்றாகும்.

விக்ரம் சாராபாய்

இவர் 'இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்; ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர். செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24,000 இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இவரின் பெயரால் 'விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவருகிறது. இங்கு, வானூர்தியியல் (Aeronautics), வான்பயண மின்னணுவியல் (Avionics), கூட்டமைப் பொருள்கள் (Composites), கணினி - தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவருடைய முயற்சியால்தான் இஸ்ரோ தொடங்கப்பட்டது.

சாதித்த பெண்கள்

பெண்மை - துணிவு: மூவலூர் இராமாமிர்தம் (1883 - 1962)

தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி; எழுத்தாளர்; திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்; தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர். தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.

பெண்மை - சிறப்பு: ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் (1870-1960)

பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.

பெண்மை - புரட்சி: முத்துலெட்சுமி (1886 - 1968)

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதாரத் தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர். அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

பெண்மை - உயர்வு: பண்டித ரமாபாய் (1858 - 1922)

இவர் சமூகத் தன்னார்வலர். தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர்.

மயில்சாமி அண்ணாதுரை

'இளைய கலாம்’ என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், கோதவாடி என்னும் சிற்றூரில் பிறந்தவர். மேல்நிலை வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்தவர். இதுவரை 5 முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார். 1982ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த இவர் தற்போது இயக்குநராகப் பணிபுரிகிறார். நம் நாடு நிலவுக்கு முதன் முதலில் அனுப்பிய ஆய்வுக்கலம் சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர். சந்திரயான் - 2 திட்டத்திலும் பணியாற்றிவருகிறார். சர்.சி.வி. இராமன் நினைவு அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். தமது அறிவியல் அனுபவங்களை, கையருகே நிலா என்னும் நூலாக எழுதியுள்ளார்.

தெரிந்து தெளிவோம்: சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் சிலர்

ஒளவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார், பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்.

தெரிந்து தெளிவோம்: பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள்
  • ஈ.வெ.ரா. - நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம்: பட்டமேற்படிப்பிற்கு உரியது.
  • சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்: கல்வி, திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது.
கோத்தாரி கல்விக் குழு

1964ஆம் ஆண்டு கோத்தாரிக் கல்விக் குழு தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.

சாரதா சட்டம்

பெண் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். எனவே, அதைத் தடுக்க 1929ஆம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.

தனித் தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையார் (1903 - 1943)

மறைமலையடிகளின் மகள் ஆவார். தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்; இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல்-தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் (1906-1955)

தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார். சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.

நூல் வெளி: குடும்ப விளக்கு (பாரதிதாசன்)

குடும்ப விளக்கு, குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது; கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது; குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானதும் இன்றியமையாததும் ஆகும். இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில், விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பாடப்பகுதியாக உள்ளன.

பாரதிதாசனின் இயற்பெயர் கனக. சுப்புரத்தினம். இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள். இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் 'பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்' என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்
  • அன்று என்பது ஒருமைக்கும், அல்ல என்பது பன்மைக்கும் உரியன.
    • (எ.கா.) இது பழம் அன்று. இவை பழங்கள் அல்ல.
  • எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்; எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்.
    • (எ.கா.) எத்தனை நூல்கள் வேண்டும்? எத்துணை பெரிய மரம், எத்துணை ஆண்டு பழைமையானது.

பெண்மை - அறிவு: சாவித்திரிபாய் பூலே (1831 - 1897)

1848 இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.

title="யார் இவர்? மலாலா"

பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது பன்னிரண்டு (1997).

பேரறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகளுள் சில

  1. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.
  2. கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
  3. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
  4. சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
  5. மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.
  6. நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
  7. இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
  8. இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
  9. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

நூல் வெளி: சு. சமுத்திரம்

சு. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம், திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர். தமது பெயரைப் போலவே ஆழமும் விரிவும் வளமும் கொண்டவர்; முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்; வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, காகித உறவு போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகளாகும். 'வேரில் பழுத்த பலா' புதினம் சாகித்திய அகாதெமி விருதையும், 'குற்றம் பார்த்தல்' சிறுகதைத் தொகுதி தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளன.

நூல் வெளி: சிறுபஞ்சமூலம் (காரியாசான்)

தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம். ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள். அவை கண்டங்கத்திரி, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன. இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர். காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர். மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

தெரிந்து தெளிவோம்: சாதனைக்கு வயது தடையன்று
  1. 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.
  2. 11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி 'பாரதி' என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.
  3. 15ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ.
  4. 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர்.
  5. 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ.
தெரியுமா?

சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அது போல, ஒரு பாடலில் மூன்று, ஆறு கருத்துகளைக் கொண்ட அறநூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு வரிசையில் அமைந்துள்ளன. அந்நூல்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

நூல் வெளி: இராவண காவியம் (புலவர் குழந்தை)

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம். இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது. இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது. தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

நூல் வெளி: பேரறிஞர் அண்ணா

வீட்டிற்கோர் புத்தகசாலை என்னும் இப்பகுதி பேரறிஞர் அண்ணாவின் வானொலி உரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர். எழுத்தாளரான அண்ணாவைத் ‘தென்னகத்துப் பெர்னாட்ஷா' என்று அழைத்தனர். சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பஒளி வரை பல படைப்புகளைத் தந்தவர். அவரது பல படைப்புகள் திரைப்படங்களாயின. தம்முடைய திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர் இவரே. 1935இல் சென்னை, பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார். ஹோம்ரூல், ஹோம்லேண்ட், நம்நாடு, திராவிடநாடு, மாலைமணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் இருந்தார். முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்றதும் இருமொழிச் சட்டத்தை உருவாக்கினார். சென்னை மாகாணத்தைத் 'தமிழ்நாடு' என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.

தெரிந்து தெளிவோம்: புகழுக்குரிய நூலகங்கள்
  • ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன.
  • உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.
  • இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது, திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.
  • கொல்கத்தாவில் 1836ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும். இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது.
  • உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.
தெரியுமா?

தமிழக அரசு, சிற்பக் கலைஞர்களைப் பரிசளித்துப் பாராட்டிச் சிற்பக்கலையை வளர்த்து வருகிறது. மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசு சிற்பக்கல்லூரியை நடத்தி வருகிறது. அக்கல்லூரியிலிருந்து ஆண்டுதோறும் சிற்பக் கலைஞர்கள் பலர் உருவாகின்றனர். சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன. சென்னையிலும் கும்பகோணத்திலும் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரிகளில் சிற்பக்கலையைப் பயிலலாம். இக்கலைத்துறையில் மிகுதியான வேலைவாய்ப்புகள் உள்ளன. சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் 'சிற்பச்செந்நூல்" என்ற நூலை வெளியிட்டுள்ளது.

தெரியுமா?

2009 ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.

தெரிந்து தெளிவோம்

"இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்" - பேரறிஞர் அண்ணா

தெரிந்து தெளிவோம்

பெண்ணின் திருமண வயது 18; ஆணின் திருமண வயது 21 என்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்

கோர்வை/கோவை: கோ என்பது வேர்ச்சொல். கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி. (எ.கா.) ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான்.

தெரிந்து தெளிவோம்: சிறுகதை - விருது மாலை (சாகித்திய அகாதெமி)
  • 1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி
  • 1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்
  • 1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்
  • 1996 - அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்
  • 2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி
  • 2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்
  • 2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன்

நூல் வெளி: ஆண்டாள்

திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர். அவருள் ஆண்டாள் மட்டுமே பெண். இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என அழைக்கப்பெற்றார். இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர். ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு "நாலாயிர திவ்வியப் பிரபந்தம்" ஆகும். இத்தொகுப்பில் ஆண்டாள் பாடியதாகத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் உள்ளன. நாச்சியார் திருமொழி மொத்தம் 143 பாடல்களைக் கொண்டது. நம் பாடப்பகுதியின் இரு பாடல்கள் ஆறாம் திருமொழியில் இடம்பெற்றுள்ளன.

நூல் வெளி: தி. ஜானகிராமன்

தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர். உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர். வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன. நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார். "அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை" என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் இவர். தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

'செய்தி' என்னும் சிறுகதை 'சிவப்பு ரிக்ஷா' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.

தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை: உ.வே. சாமிநாதர், மௌனி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை இராமையா தாஸ், தஞ்சாவூர்க் கவிராயர் ஆகியோர்.

தெரிந்து தெளிவோம்: நாகசுரம்

இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக் கருவிகளில் நாகசுரமும் ஒன்று. மங்கலமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது. இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது. 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் என்னும் நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை. 13ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை. தமிழகப் பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை. ஆகவே இந்தக் கருவி 13ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது. நாகசுரம் என்ற பெயரே சரியானது. நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது. எனவே பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது. நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. சீவாளி, நாணல் என்ற புல் வகையைக்கொண்டு செய்யப்படுகிறது.

தெரியுமா?
  • தி. ஜானகிராமன் அவர்கள், தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967 இல் நூலாக வெளியிடப்பெற்றது.
  • ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974இல் நூலாக வெளியிட்டார்.
  • தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
  • இவரது மற்றுமொரு பயணக்கட்டுரை, அடுத்த வீடு ஐம்பது மைல் என்பதாகும்.
தெரியுமா?

இன்றைக்கும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும், வாரச் சந்தைகளும் மாதச் சந்தைகளும் குறிப்பிட்ட சில பொருள்களை மட்டும் விற்கும் சந்தைகளும் மாலை நேரச் சந்தைகளும் நடந்தவண்ணம் உள்ளன.

தந்தை பெரியார்

தெரிந்து தெளிவோம்: பெரியார் எதிர்த்தவை
  • இந்தித் திணிப்பு
  • குலக்கல்வித் திட்டம்
  • தேவதாசி முறை
  • கள்ளுண்ணல்
  • குழந்தைத் திருமணம்
  • மணக்கொடை
தெரிந்து தெளிவோம்: நேதாஜியின் பொன்மொழி

விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும்தான்.

தெரிந்து தெளிவோம்: பெரியார் இயக்கம்மும் இதழ்களும்
  • தோற்றுவித்த இயக்கம்: சுயமரியாதை இயக்கம்
  • தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1925
  • நடத்திய இதழ்கள்: குடியரசு, விடுதலை, உண்மை, ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
தெரியுமா? பெரியார் விதைத்த விதைகள்
  • கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கான சொத்துரிமை
  • குடும்ப நலத்திட்டம்
  • கலப்புத் திருமணம், சீர்திருத்தத் திருமணம் ஏற்பு

நூல் வெளி: சீவக சிந்தாமணி (திருத்தக்கதேவர்)

சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. இது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியமாகும். இலம்பகம் என்ற உட்பிரிவுகளைக் கொண்டது. 13 இலம்பகங்களைக் கொண்டுள்ள இந்நூல், 'மணநூல்’ எனவும் அழைக்கப்படுகிறது. நாமகள் இலம்பகத்தில் நாட்டுவளம் என்னும் பகுதி பாடமாக அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் திருத்தக்கதேவர். சமண சமயத்தைச் சார்ந்த இவர், இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்றமுடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார். இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக நரிவிருத்தம் என்னும் நூலை இயற்றினார் என்பர்.

தெரிந்து தெளிவோம்: குற்றியலுகரம்

தனிக்குறில் அல்லாது, சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று) தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

  • வன்தொடர்க் குற்றியலுகரம்: நாக்கு, வகுப்பு
  • மென்தொடர்க் குற்றியலுகரம்: நெஞ்சு, இரும்பு
  • இடைத்தொடர்க் குற்றியலுகரம்: மார்பு, அமிழ்து
  • உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்: முதுகு, வரலாறு
  • ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்: எஃகு, அஃது
  • நெடில் தொடர்க் குற்றியலுகரம்: காது, பேசு
தெரியுமா? டோக்கியோ கேடட்ஸ்

இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகாடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 45பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ். போர்ச் சூழலுக்கு நடுவில் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் டோக்கியோ செல்வது ஒரு சவாலாக இருந்தது. பர்மாவில் இருந்து காட்டுவழியாகப் பயணம் செய்து, சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து, அங்கிருந்து படகு வழியாகத் தப்பிச் சென்று, பழைய கப்பல் ஒன்றில் ஏறி, சீறும் அலைகளில் சிக்கித் தவித்து முடிவில் ஜப்பானின் “கியூசு" தீவை அடைந்தனர். அந்தத் தீவு, கடற்படையின் வசம் இருந்தது. காலை 5 மணிக்கு எழுந்து மூன்று கல் தூரம் ஓடவேண்டும். அப்போது குளிர், சுழியத்திற்குக் கீழ் இருக்கும். உதடுகள் வெடித்து வலி தாங்க முடியாது. பனிப்புகை படர்ந்த மைதானத்தில் ஓடுவார்கள். மூன்று கல் தூரம் ஓடியதும் ஐந்து நிமிடங்கள் ஓய்வு, பிறகுதான் சிறப்புப் பயிற்சிகள். அதை முடித்துக்கொண்டு அவசரமாகக் குளித்துத் தயாராகி வர வேண்டும்.

நூல் வெளி: மா.சு. அண்ணாமலை

பேராசிரியர் மா.சு. அண்ணாமலை, "இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்கு" என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசுபெற்றவர். இவர் தலைமையில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசுகள் பெற்றன.

நூல் வெளி: முத்தொள்ளாயிரம்

வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்; மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது. மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது. நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை. இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது.

தெரியுமா?

"பொறிமயிர் வாரணம் கூட்டுறை வயமாப் புலியொடு குழும" (மதுரைக்காஞ்சி 673 - 677 அடிகள்) என்ற அடிகளின் மூலமாக மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக் காஞ்சியின் மூலம் அறியலாம். - பத்துப்பாட்டு ஆராய்ச்சி, மா. இராசமாணிக்கனார்

நூல் வெளி: மதுரைக்காஞ்சி (மாங்குடி மருதனார்)

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி. காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது. இந்நூல் 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன. இதைப் 'பெருகுவள மதுரைக்காஞ்சி' என்பர். இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிச் சந்தை 18 ஏக்கர் பரப்பில் எட்டாயிரம் கடைகளுடன் இன்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுகிறது. பல ஊர்களைச் சேர்ந்த மக்கள், தக்காளி முதல் தங்கம் வரை வாங்குவதற்குக் கூடுகிறார்கள். விற்பவரும் வாங்குபவரும் உறவுகளாய்ப் பேசி மகிழும் ஆரவாரம் அங்கே ஒலிக்கிறது. 125 ஆண்டுகள் வயதான அச்சந்தையில் நான்கு தலைமுறை நட்பு நிலவுகிறது. கலப்படமில்லாத பொருள்களை வருவாய் நோக்கின்றி அச்சந்தை இன்றும் விற்பனை செய்கிறது.

தெரியுமா?
  • 1938 நவம்பர் 13 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்குப் 'பெரியார்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
  • 27.06.1970 இல் யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு தந்தை பெரியாரைத் ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

நூல் வெளி: ந. பிச்சமூர்த்தி

புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன. பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந. பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே, அவர் "புதுக்கவிதையின் தந்தை" என்று போற்றப்படுகிறார். புதுக்கவிதையை "இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை" என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.

ந. பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றினார். ஹனுமான், நவஇந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராகவும் இருந்தார். இவர் புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர். இவரின் முதல் சிறுகதை - "ஸயன்ஸூக்கு பலி" என்பதாகும். 1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார். பிக்ஷூ, ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்.

நூல் வெளி: லாவோட்சு

லாவோட்சு, சீனாவில் பொ.ஆ.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர். சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் இவரது சமகாலத்தவர். அக்காலம், சீனச் சிந்தனையின் பொற்காலமாகத் திகழ்ந்தது. லாவோட்சு "தாவோவியம்" என்ற சிந்தனைப்பிரிவைச் சார்ந்தவர். ஒழுக்கத்தை மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார். லாவோட்சுவோ இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன்வைத்தார். தாவோவியம் அதையே வலியுறுத்துகிறது. பாடப்பகுதியிலுள்ள கவிதையை மொழிபெயர்த்தவர் சி.மணி.

நூல் வெளி: தனிநாயகம் அடிகள்

தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர். அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை. இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு, பாடமாக இடம்பெற்றுள்ளது. தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பினார். அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் இவர் காரணமாக இருந்தார். இவர் தொடங்கிய தமிழ்ப் பண்பாடு என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.

நூல் வெளி: யசோதர காவியம்

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம். இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும். இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை. இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர். யசோதர காவியம், 'யசோதரன்’ என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது. இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது; பாடல்கள் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்.

நூல் வெளி: கல்யாண்ஜி (வண்ணதாசன்)

கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம்; சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம் எனத் தொடர்ந்து எழுதி வருபவர். வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்துவருகிறார். புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை அவரின் கவிதை நூல்களுள் சில. இவை தவிர, அகமும் புறமும் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. பல கடிதங்கள் 'சில இறகுகள் சில பறவைகள்' என்ற பெயரில் வெளியானது. கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது உள்ளிட்டவை இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள். ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இவருக்கு 2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

நூல் வெளி: குறுந்தொகை (பாடிய பெருங்கடுங்கோ)

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. இது, தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது; கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது. இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டவை. 1915ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார். நமக்குப் பாடமாக வந்துள்ளது 37ஆவது பாடல் ஆகும். இப்பாடலின் ஆசிரியர் 'பாலை பாடிய பெருங்கடுங்கோ'. இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்; கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் 'பாலை பாடிய பெருங்கடுங்கோ' என அழைக்கப் பெற்றார்.

உலகத் தமிழ் மாநாடுகள்

எண்இடம்ஆண்டுஎண்இடம்ஆண்டு
1கோலாலம்பூர், மலேசியா19665மதுரை, இந்தியா1981
2சென்னை, இந்தியா19686கோலாலம்பூர், மலேசியா1987
3பாரீசு, பிரான்சு19707மொரீசியசு1989
4யாழ்ப்பாணம், இலங்கை19748தஞ்சாவூர், இந்தியா1995

செம்மொழி மாநாடு 2010இல் கோவையில் நடைபெற்றது.

தெரிந்து தெளிவோம்

கைபேசியின் வரவால் இன்று கடிதம் எழுதும் பழக்கம் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். கடிதங்களைக் கொண்டு பல வரலாறுகளையும் இலக்கியங்களையும் பரிமாறியிருக்கிறார்கள். கடித வடிவில் புதினங்களும் எழுதப்பட்டுள்ளன. தாகூர், நேரு, டி.கே.சி., வல்லிக்கண்ணன், பேரறிஞர் அண்ணா, மு. வரதராசனார், கு. அழகிரிசாமி, கி. இராஜநாராயணன் முதலானோர் கடித வடிவில் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.