Skip to main content

8 ஆம் வகுப்பு நூல் வெளி

நூல் வெளி: தொல்காப்பியம்

தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92, 93) இங்குத் தரப்பட்டுள்ளன.

தெரிந்து தெளிவோம்
இளமைப் பெயர்கள்ஒலி மரபு
புலி - பறழ்புலி - உறுமும்
சிங்கம் - குருளைசிங்கம் - முழங்கும்
யானை - கன்றுயானை - பிளிறும்
பசு - கன்றுபசு - கதறும்
ஆடு - குட்டிஆடு - கத்தும்

நூல் வெளி: சி. சுப்பிரமணிய பாரதியார்

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி. சுப்பிரமணிய பாரதியார். இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர். கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர். சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

தெரிந்து தெளிவோம்: ஓரெழுத்து ஒருமொழிகள்
  • உயிர் எழுத்து - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
  • மகர வரிசை - மா, மீ, மூ, மே, மை, மோ
  • தகர வரிசை - தா தீ, தூ, தே, தை
  • பகர வரிசை - பா, பூ, பே, பை, போ
  • நகர வரிசை - நா, நீ, நே, நை, நோ
  • ககர வரிசை - கா, கூ, கை, கோ
  • சகர வரிசை - சா, சீ, சே, சோ
  • வகர வரிசை - வா, வீ, வை, வெள
  • யகர வரிசை - யா
  • குறில் எழுத்து - நொ, து
தெரிந்து தெளிவோம்

பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் பல உள்ளன. காடர்கள் மிகச்சிறிய பழங்குடிச் சமுதாயத்தினர். தாங்கள் பேசும் மொழியை 'ஆல்அலப்பு' என்று அழைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைமுறை பற்றிய எழுத்துக் குறிப்புகள் ஏதும் அவர்களிடம் இல்லை.

தெரிந்து தெளிவோம்

கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் அமைப்பு:

  1. 'ச' எனும் வடமொழி எழுத்து காணப்படுகிறது.
  2. மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.
  3. எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.

நூல் வெளி: இரா. இளங்குமரனார்

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர். இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார். திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.

இவரது தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்து இங்குத் தரப்பட்டுள்ளன.

நூல் வெளி: வாணிதாசன்

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும்.

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

நூல் வெளி: பக்தவத்சல பாரதி

இக்கட்டுரை பக்தவத்சல பாரதி எழுதிய தமிழகப் பழங்குடிகள் எனும் நூலில் இருந்து எடுத்துத்தரப்பட்டுள்ளது.

நூல் வெளி: வெங்கம்பூர் சாமிநாதன் (பஞ்சக்கும்மிகள்)

நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர். பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன. புலவர் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

நூல் வெளி: யானையோடு பேசுதல்

மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். அவற்றை யானையோடு பேசுதல் என்னும் தலைப்பில் வ. கீதா தமிழாக்கம் செய்துள்ளார். அந்நூலில் இருந்து ஒரு கதை இங்குத் தரப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்
  1. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று, தன்மை இடத்தில் வராது.
  2. இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை. செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ளன.

நூல் வெளி: திருவள்ளுவர்

பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர். திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

நூல் வெளி: கவிமணி தேசிக விநாயகனார்

கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்; முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.

மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி: நீலகேசி

நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது. கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

தெரிந்து தெளிவோம்: மருத்துவ முறைகள்

நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளுள் சில:

  • சித்த மருத்துவம்
  • ஆயுர்வேத மருத்துவம்
  • யுனானி மருத்துவம்
  • அலோபதி மருத்துவம்
தெரிந்து தெளிவோம்

தலையின் பகுதியில் நடைபெறும் சில தன்னிச்சையான செயல்களான வெளிச்சத்திற்கு ஏற்றபடி கண்களைத் திறப்பது, தலையைத் திருப்பும்போது கண்களை நிலைநிறுத்துவது ஆகியவற்றை எல்லாம் மூளையே பார்த்துக் கொள்கிறது. ஆனால், ஏப்பம் விடுவது, இருமல், தும்மல், கொட்டாவி, வாந்தி ஆகியவற்றுக்கெல்லாம் மூளைக்குப் பதிலாக முதுகெலும்பு இருந்தாலே போதும்.

தெரிந்து தெளிவோம்

மறதி என்பது சில நினைவுகள், மற்ற நினைவுகளுடன் குறுக்கிட்டு அவற்றை அழிப்பது என்று சிலர் கருதுகின்றனர். பொதுவாக நாம் உயிர் வாழத் தேவையான செய்திகளை நாம் விரைவில் மறப்பதில்லை. நம் பெயர், நண்பர், உறவினர், மேலதிகாரிகளின் பெயர்கள், வீட்டுக்குப் போகும் வழி இவற்றையெல்லாம் நாம் விரைவில் மறப்பதில்லை.

தெரிந்து தெளிவோம்

கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்.

  • விஜயலட்சுமி பண்டிட் (ஐ. நா. அவையின் முதல் பெண் தலைவர்)
தெரிந்து தெளிவோம்

ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்

  • குலோத்துங்கன்
தெரிந்து தெளிவோம்

நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு. (எ.கா.) கூலிக்காக வேலை

நூல் வெளி: திரு.வி.க.

திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்; சிறந்த மேடைப் பேச்சாளர்; தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர். இவர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

இவரது இளமை விருந்து என்னும் நூலிலிருந்து சிலபகுதிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

நூல் வெளி: பி.ச. குப்புசாமி

பி.ச. குப்புசாமி சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர். இவர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியுள்ளார். இவர் எழுதிய ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி இங்குத் தரப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்: சொல்லுருபுகள்
  • சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.
  • ஓவியர் தூரிகையால் ஓவியம் தீட்டினார். இதில் ஆல் என்பது வேற்றுமை உருபாக வந்துள்ளது.
  • ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். இதில் கொண்டு என்பது சொல்லுருபாக வந்துள்ளது.
தெரிந்து தெளிவோம்
  • வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை வேற்றுமைத் தொடர்கள் என்பர்.
  • வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.
தெரிந்து தெளிவோம்

இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு. நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை என்றும் இடப் பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை என்றும் கொள்ள வேண்டும்.

நூல் வெளி: சுந்தரர் (தேவாரம்)

சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர். இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்படுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார். இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

தே + ஆரம் - இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே + வாரம் - இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும். பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

நூல் வெளி: கலித்தொகை

கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்; நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது. குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது. கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவரும் இவரே.

தெரிந்து தெளிவோம்
  • பிரம்பு என்பது கொடிவகையைச் சேர்ந்த தாவரம். இதன் தாவரவியல் பெயர் கலாமஸ் ரொடாங் (Calamus Rotang) என்பதாகும். இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும், மண்குகைகளிலும் செழித்து வளரும். தமிழகத்தில் இப்போது இஃது அருகிவிட்டது. நமது தேவைக்காக அசாம், அந்தமான், மலேசியா ஆகிய இடங்களிலிருந்து தருவிக்கப்படுகிறது.

  • கல்மூங்கில், மலைமூங்கில், கூட்டுமூங்கில் என மூன்றுவகை மூங்கில்கள் உண்டு. அவற்றுள் கூட்டு மூங்கில்களே கைவினைப் பொருள்கள் செய்வதற்கு ஏற்றவை.

  • தமிழ்நாட்டின் மாநில மரம் பனை.

இசை

மக்களின் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி, குரல் வழியாக அல்லது செயற்கைக் கருவி ஒன்றின் வழியாக வெளிப்பட்டது. இது நகை, அழுகை, வீரம் உள்ளிட்ட ஒன்பது சுவைகளை வெளிப்படுத்தக்கூடிய கலையாகப் பிறந்தது. இக்கலையே இசை எனப்பட்டது. குரல்வழி இசை, கருவிவழி இசை என இசையை இரண்டாகப் பிரிப்பர்.

இசைக்கருவிகள்

இசையின் இனிமைக்குத் துணை செய்பவை இசைக் கருவிகள் ஆகும். காலத் தேவைகள், சமயச்சடங்குகள், திருவிழாக்கள் போன்ற பல நிகழ்வுகளின் பொருட்டு பலவிதமான இசைக்கருவிகள் தோன்றி வளர்ச்சிபெற்றன. இசைக்கருவிகள் குரல்இசைக்கு மட்டும் பயன்படுபவை, நாடகத்திற்கு மட்டும் பயன்படுபவை, இரண்டிற்கும் பயன்படுபவை எனப் பலவாகத் தோன்றிக் கிளைத்தன. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர்.

நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்

- புறநானூறு

தெரிந்து தெளிவோம்: மழைச்சோற்று நோன்பு

மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர். கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வை மழைச்சோற்று நோன்பு என்பர்.

நூல் வெளி: கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு

பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் அ. கௌரன்.

இசைக்கருவிகளின் வகைகள்

இசைக்கருவிகள் தோல்கருவி, நரம்புக்கருவி, காற்றுக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும்.

  1. தோல்கருவிகள்: விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள். (எ.கா.) முழவு, முரசு
  2. நரம்புக்கருவிகள்: நரம்பு அல்லது தந்திகளை உடையவை. (எ.கா.) யாழ், வீணை
  3. காற்றுக்கருவிகள்: காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை. (எ.கா.) குழல், சங்கு
  4. கஞ்சக்கருவிகள்: ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை. (எ.கா.) சாலரா, சேகண்டி

உடுக்கை (தோல்கருவி)

உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு கைப்பறை ஆகும். இதன் உடல் பித்தளையால் ஆனது. வாய்ப்பகுதி ஆட்டுத்தோலால் பொருத்தப்பட்டிருக்கும். இரு வாய்களையும் இணைக்கும் கயிறுகள் இடையில் கோக்கப்பட்டிருக்கும். இவற்றின் மீது ஒரு நாடா சுற்றப்பட்டுத் தொங்கும். வலது வாயின் மீதுதான் அடிப்பர். அவ்வப்போது இடையின் மீதுள்ள நாடாவை அமுக்குவர். பெரிய உடுக்கையைத் தவண்டை என்பர். சிறு உடுக்கையைக் குடுகுடுப்பை என்பர். தில்லையில் நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் இதனைக் காணலாம். இறை வழிபாட்டின் போதும் குறிசொல்லும் போதும் இக்கருவி இசைக்கப்படுகிறது.

தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்

- சம்பந்தர் தேவாரம்

குடமுழா (தோல்கருவி)

ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது குடமுழா. ஒரு பெரிய குடத்தின் வடிவில் ஐந்து வட்டவடிவ வாய்களுடன் அமைந்திருக்கும். நடுவில் இருக்கும் வாய் மற்றவற்றைவிடப் பெரியதாக இருக்கும். ஒவ்வொரு வாயும் தோலால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகையான இசை பிறக்கும். இதன் காரணமாக இதனைப் பஞ்சமகா சப்தம் என்றும் அழைப்பர். இது கோயில்களில் ஒலிக்கப்படும் இசைக்கருவியாகும். சென்னை அருங்காட்சியகத்தில் இவ்வகை முழவு ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

குழல் (காற்றுக்கருவி)

காடுகளில் வளரும் மூங்கிலில் வண்டுகள் துளையிடும். அவற்றின் வழியாகக் காற்று வீசும்போது இன்னிசை எழும்பும். இதனைக் கேட்டு மகிழ்ந்த நம் முன்னோர் அமைத்துக் கொண்டவையே குழல்கள். இதனை வேய்ங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்பர். குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும். இது சுமார் இருபது விரல் நீளம் உடையதாக இருக்கும். மூங்கில் மட்டுமன்றிச் சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.

- திருக்குறள்

கொம்பு (காற்றுக்கருவி)

மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று. இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்படுகின்றன. இதனை வேடர் வேட்டையின் போது ஊதுவர். கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன.

சங்கு (காற்றுக்கருவி)

இஃது ஓர் இயற்கைக் கருவி. கடலில் இருந்து எடுக்கப்படுவது. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களின் போதும் சமயச் சடங்குகளின் போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு.

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்

- திருப்பாவை

சாலரா (கஞ்சக்கருவி)

இது பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கும். அதன் உட்புறம் குவிந்து இருக்கும். இதனை ஒன்றோடு ஒன்று பொருத்தியும் விளிம்பின் மீது தட்டியும் தாளத்தின் தேவைக்கு ஏற்ப இசைப்பர். இதனைப் பாண்டில் எனவும் அழைப்பர். இது கோயில் கூட்டு வழிபாட்டின் போதும் இன்னிசை அரங்குகளிலும் இசைக்கப்படும் இன்றியமையாத இசைக்கருவி ஆகும். இதனை இக்காலத்தில் 'ஜால்ரா' என்பர்.

சேகண்டி (கஞ்சக்கருவி)

வட்டவடிவமான மணி வகையைச் சேர்ந்தது சேகண்டி. இதனைக் குச்சியாலோ அல்லது இரும்புத் துண்டாலோ அடித்து ஒலி எழுப்புவர். இது தேவைக்கு ஏற்பப் பல அளவுகளில் உருவாக்கப்படும். இதனைச் சேமங்கலம் என்றும் அழைப்பர். இதனைக் கோவில் வழிபாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைப்பர்.

திமிலை (தோல்கருவி)

பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும். மணற்கடிகார வடிவத்தில் இக்கருவி அமைந்திருக்கும். இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர்.

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி

- பெரியபுராணம்

பறை (தோல்கருவி)

விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி பறையாகும். பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்கக் கோட்பறையை முழக்கினர். பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது ஆகோட்பறையை முழக்குவர். இக்காலத்தில் இது தப்பு என்னும் பெயரில் வழங்கப்படுகிறது. இதனை முழக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது.

மத்தளம் (தோல்கருவி)

மத்து என்பது ஓசையின் பெயர். இசைக்கருவிகளுக்கு எல்லாம் தளம் அடிப்படை ஆகும். மத்து + தளம் = மத்தளம் என்று ஆகியது என்கிறார் அடியார்க்கு நல்லார். மத்தளத்தின் நடுப்பகுதி பெருத்தும் கடைப்பகுதி சிறுத்தும் காணப்படும். மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இதன் வாய்ப்பகுதி வளையங்களில் தோல் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். இக்கருவி இரண்டு கைகளாலும் இசைக்கப்படுகிறது. ஆகவே இதனை முதற்கருவி என்பர். தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவரும் இருந்தார் என்பர்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ்

- நாச்சியார் திருமொழி

முரசு (தோல்கருவி)

தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது முரசு ஆகும். படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்று மூன்று வகையான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன. தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மாக்கண் முரசம் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.

முழவு (தோல்கருவி)

ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு. ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக் கட்டப்பட்ட கருவியாகும். இத்தோலில் ஒருவகை பசை மண்ணைத் தடவி முழக்குவர். மண்ணமை முழவு எனப் பொருநராற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது. காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்

- புறநானூறு

யாழ் (நரம்புக்கருவி)

வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில் நாணில் இருந்து எழும் ஓசையை உணர்ந்தனர். வில்லைப் போன்ற வளைவு உடையதும் நரம்புகளால் ஆனதும் விரலால் வருடக் கூடியதுமான கருவி ஒன்றை உருவாக்கினார். இதன் அடிப்படையில் உருவான கருவியே யாழ் ஆகும். பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை மிகப் பழமையானவை. யாழின் வகைக்கு ஏற்ப அதில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது. இருபத்தொரு நரம்புகளைக் கொண்டது பேரியாழ், பத்தொன்பது நரம்புகளைக் கொண்டதாக மீன் வடிவில் அமைந்தது மகரயாழ், பதினான்கு நரம்புகளைக் கொண்டது சகோடயாழ். யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது என்பர்.

வீணை (நரம்புக்கருவி)

யாழ் போன்ற அமைப்பையுடைய நரம்புக்கருவி வீணையாகும். இஃது ஏழு நரம்புகளைக் கொண்டது. இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும் தேய்த்தும் வலக்கை சுண்டுவிரலால் கம்பிகளை மீட்டியும் இசை எழுப்புவர். இவ்வாறு நரம்புகள் மூலம் எழுப்பப்படும் இசையை அதன் குடம், தண்டு முதலிய பாகங்கள் பெருக்கி அனுப்புகின்றன. பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

நூல் வெளி: கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்

கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடியில் பிறந்தவர். சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர். நூற்றுைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர். கன்னிவாடி, குணச்சித்திரங்கள், உப்புக்கடலைக் குடிக்கும் பூனை முதலிய நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி: தகடூர் யாத்திரை

ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை. தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.

நூல் வெளி: செயங்கொண்டார்

செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்பர். இவர் முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். இவரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்.

கலிங்கத்துப்பரணி தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல். தமிழில் முதல்முதலில் எழுந்த பரணி இந்நூலே ஆகும். இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது. இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார். கலிங்கத்துப் பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது; 599 தாழிசைகள் கொண்டது.

போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

தெரிந்து தெளிவோம்
ஊர்கள்சிறப்புப் பெயர்கள்
தூத்துக்குடிமுத்து நகரம்
சிவகாசிகுட்டி ஜப்பான்
மதுரைதூங்கா நகரம்
திருவண்ணாமலைதீப நகரம்
தெரிந்து தெளிவோம்: எம்.ஜி.ஆர்.

கேரளாவைச் சேர்ந்தவர்களாகிய எம்.ஜி.ஆரின் பெற்றோர் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். இலங்கையில் உள்ள கண்டியில் கி.பி. (பொ. ஆ.) 1917 சனவரித் திங்கள் பதினேழாம் நாள் கோபாலன் - சத்தியபாமா இணையருக்கு ஐந்தாம் மகனாக எம்.ஜி.ஆர். பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து, கும்பகோணத்தில் குடியேறினார்.

தெரிந்து தெளிவோம்: எண்ணும்மை

ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது எண்ணும்மை எனப்படும். (எ.கா.) இரவும் பகலும், பசுவும் கன்றும்

நூல் வெளி: மீரா

மீ. இராசேந்திரன் என்னும் இயற்பெயரை உடைய மீரா கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர். ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்: எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பெருமைகள்
  • சென்னைப் பல்கலைக் கழகம் எம்.ஜி. ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது.
  • தமிழக அரசு அவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தை நிறுவியுள்ளது; சென்னைக் கடற்கரையில் இவருக்கு எழிலார்ந்த நினைவிடம் ஒன்றையும் அமைத்துள்ளது.
  • அவரது இறப்புக்குப்பின் இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை 1988ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
  • எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒட்டி (2017 - 2018) தமிழக அரசால் சென்னையிலும் மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இந்திய அரசு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குப் புரட்சித் தலைவர் டாக்டர். எம். ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்து, அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.

நூல் வெளி: திருமூலர்

அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் திருமூலர். இவர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. எனவே, இந்நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர். இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. திருமந்திரம் என்னும் நூலிலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

நூல் வெளி: குணங்குடி மஸ்தான் சாகிபு

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர். இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார். சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார். எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

தெரிந்து தெளிவோம்: புறநானூற்றுப் பாடல்கள்

இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து கடியுடை வியன் நகரவ்வே அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொல்துறைக் குற்றில மாதோ என்றும் உண்டாயின் பதம் கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே

- ஔவையார்

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தனையே.

- ஔவையார்

தெரிந்து தெளிவோம்: அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள்: போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தினச் சுருக்கம், பாலவாகடம்.
  • அயோத்திதாசர் எழுதிய நூல்கள்: புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா முதலியன. திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.
  • "என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்." - தந்தை பெரியார்
  • சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தெரிந்து தெளிவோம்: பாவை நூல்கள்

மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக்கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர். அவ்வாறு திருமாலை வழிபடச் செல்லும் பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை.

இதேபோலச் சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை. இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.

நூல் வெளி: இறையரசன்

இறையரசனின் இயற்பெயர் சே. சேசுராசா என்பதாகும். கல்லூரி ஒன்றில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார். அந்நூலில் இருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி: புதுமைப்பித்தன்

சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம். சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர். நூற்றுக்குமேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். சில திரைப்படங்களுக்குக் கதை, உரையாடலும் எழுதியுள்ளார். கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒருநாள் கழிந்தது போன்றன இவரது சிறுகதைகளுள் புகழ்பெற்றவை. மணிக்கொடி இதழில் வெளியான புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி: மு. மேத்தா

வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா. புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்; கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்; கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மு. மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி: கோமகள்

கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி; சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார். இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார். உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பால் மனம் எனும் இக்கதை அ. வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

தெரிந்து தெளிவோம்

பழங்கால அளவைகள் மற்றும் நாணயங்கள்

  • மாகாணி, வீசம் போன்றவை அக்காலத்தில் வழக்கிலிருந்த அளவைப்பெயர்களாகும்.
  • அணா, சல்லி, துட்டு என்பது அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணயப் பெயர்கள் ஆகும். பதினாறு அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய். அதனால்தான் இன்றும் பேச்சுவழக்கில் அரை ரூபாயை எட்டணா என்றும் கால் ரூபாயை நாலணா என்றும் கூறுகின்றனர்.
தெரிந்து தெளிவோம்

இரட்டைமலை சீனிவாசன்

இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்துகொண்டார்.

தெரிந்து தெளிவோம்

அம்பேத்கரின் பொன்மொழி

"நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை."

தெரிந்து தெளிவோம்

அரசியல் அமைப்புச் சட்டம்

உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நாட்டில் பல்வேறுபட்ட இன, மொழி, சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்க, ஆட்சி நடத்த அடிப்படையான சட்டம் தேவைப்படுகிறது. இச்சட்டத்தினையே அரசியலமைப்புச் சட்டம் என்பர். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அந்தந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டே இயங்குகின்றன. அஃது எழுதப்பட்டதாகவோ அல்லது எழுதப்படாததாகவோ இருக்கக்கூடும்.