Skip to main content

12 ஆம் வகுப்பு நூல் வெளி

அணியிலக்கண நூல்கள்

அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள்

  • தண்டியலங்காரம்
  • மாறனலங்காரம்
  • குவலயானந்தம்

அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள்

  • தொல்காப்பியம்
  • வீரசோழியம்
  • இலக்கண விளக்கம்
  • தொன்னூல் விளக்கம்
  • முத்துவீரியம்

நூல்வெளி: தண்டியலங்காரம்

தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று. பாடப்பகுதி பொருளணியியல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார். இவர் கி.பி. (பொ.ஆ.) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது; இலக்கண நூலார், உரையாசிரியர்கள் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.

நூல்வெளி: சிற்பி பாலசுப்பிரமணியம்

இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்பிரமணியம்; பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்; மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவர் ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய பல கவிதை நூல்களை ஆக்கியவர்; இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்; மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்; சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

நூல்வெளி: தி.சு. நடராசன்

தி.சு. நடராசன் எழுதிய 'தமிழ் அழகியல்' என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டுப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர். திறனாய்வாளராகப் பரவலாக அறியப்படும் இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

பரலி சு. நெல்லையப்பர்

பரலி சு. நெல்லையப்பர் விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, முரசுப்பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர். பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களையும் வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

நூல்வெளி: பாரதி கடிதங்கள்

மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய இக்கடிதம் ரா. அ. பத்மநாபன் பதிப்பித்த 'பாரதி கடிதங்கள்' என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது. பாரதி, பதினைந்து வயதில் கல்விகற்க உதவிவேண்டி எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதம்முதல் அவர்தம் மறைவிற்கு முன்னர் குத்திகேசவருக்கு எழுதிய கடிதம்வரை அனைத்தும் நம்மிடம் பேசுவதுபோல இருப்பதே அவருடைய நடையழகின் சிறப்பு. பாரதியாரைவிட ஏழாண்டுகள் இளையவரான பரலி சு. நெல்லையப்பரைப் பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி அன்புகாட்டி வந்தார். பாரதியின் கடிதங்கள் மேலும் அவரை நன்றாகப் புரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன.

தெரிந்து தெளிவோம்: வம்சமணி தீபிகை

எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் வம்சமணி தீபிகை என்னும் நூலை 1879 இல் வெளியிட்டார். அப்பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசைகொண்ட பாரதி, ஆட்சிசெய்த வெங்கடேசுர எட்டப்பருக்கு 6.8.1919 இல் கடிதம் எழுதினார். பலவிதமான குற்றங்களையுடைய அந்நூலை நல்ல இனிய தமிழ்நடையில் அமைத்துத் தருவேன் என்று குறிப்பிட்டார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. வம்சமணிதீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக இளசை மணி என்பவரால் 2008இல் அப்படியே வெளியிடப்பட்டது.

தெரியுமா?

குஜராத்தில் உள்ள ஆனந்த் வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குறிப்பிடும், மழையைக் கணிக்கும் அறிகுறிகள்:

  • கார்மேகங்கள், சூரிய உதயத்திற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிழக்கு வானத்தில் தோன்றுதல்
  • செம்மை நிற மேகங்கள்
  • திடீர்ப் புயல்
  • காற்றின் திசை
  • இடி, மின்னல்
  • பலமான காற்று
  • வானவில்
  • முட்டைகளைச் சுமந்திருக்கும் எறும்புகள்
  • பறக்கும் பருந்து
  • சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்
  • வெப்பமும் ஈரப்பதமுமான வானிலை
  • தூசுப் பனிமூட்டம்

சான்றோர் சித்திரம்: ஆறுமுக நாவலர் (1822-1879)

நீதிமன்றத்தில் மொழித்திறன்

வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் தமிழறிஞர் ஒருவர். அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள். தமிழறிஞர், சாட்சியத்தை ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட்டார். அவர் உடனே 'அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி’ என்று துவங்கினார். மொழிபெயர்ப்பாளர் திணறிப் போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட அவர் மறுத்துத் தமிழிலேயே கூறினார். அவரது மாணவர் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கினார். ‘சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது' என்பது அவர் கூறியதற்குப் பொருள். இத்தகைய மொழித்திறன் கைவரப்பெற்றவர்தான் ஆறுமுக நாவலர்.

பன்முகப் ஆளுமை

'வசனநடை கைவந்த வல்லாளர்' எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர். தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.

பதிப்புப் பணிகள் மற்றும் படைப்புகள்

திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் - சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார். இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன. புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினார். தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு 'நாவலர்’ பட்டம் வழங்கியது. பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்.

தெரியுமா?

சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்குக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன்படி வங்கக்கடலிலும் அரபிக்கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் ஒவ்வொன்றும் எட்டுப் பெயர்களைப் பரிந்துரை செய்திருக்கின்றன. அந்தப் பட்டியலில் உள்ள 64 பெயர்களின் வரிசைப்படிதான் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கப்படுகிறது.

சான்றோர் சித்திரம்: மாயூரம் வேதநாயகம் (1826-1889)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தைத் தாது வருடப் பஞ்சம் (Great Famine 1876-1878) என்று, இன்றும் நினைவுகூர்வர். ஒரு கோடி மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கி இறந்திருக்கலாம் எனப் பதிவுகள் கூறுகின்றன. இதைக் கண்டு மனம் பொறுக்காத தமிழர் ஒருவர் மனமுவந்து தமது சொத்துகள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபாலகிருஷ்ண பாரதியார், 'நீயே புருஷ மேரு ... ' என்ற பாடலை இயற்றி அவரைப் பெருமைப்படுத்தினார். அவர்தான், நீதிபதி மாயூரம் வேதநாயகம்.

இவர், மொழிபெயர்ப்பாளராகவும் நாவலாசிரியராகவும் பெயர் பெற்றவர்; தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை இயற்றியவர். மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றிய இவர், தமது சமகாலத் தமிழறிஞர்களான மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார், இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர் போன்றோரிடம் நட்புப் பாராட்டி நெருங்கியிருந்தார்; கி.பி. 1805 முதல் கி.பி. 1861ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து 'சித்தாந்த சங்கிரகம்' என்ற நூலாக வெளியிட்டார்.

மேலும் பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார். இசையிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்த இவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார்; வடமொழி, பிரெஞ்சு, இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றறிந்திருந்தார். இவர், பெண்கல்விக்குக் குரல் கொடுத்த மிக முக்கிய ஆளுமையாக அறியப்படுகிறார்.

மொழியாட்சிக்குச் சான்று

இவருடைய மொழியாட்சிக்குச் சான்றாக, பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து ஒரு பத்தி:

"கல்வி விஷயத்தைப் பற்றி உன் பாலன் சொல்வதைக் கேள்" என்று என் பிதா ஆக்ஞாபித்தார். உடனே என் தாயார் என் முகத்தைப் பார்த்தாள். நான் முன் சொன்னபடி என் பாட்டியாரிடத்திலே கற்றுக்கொண்ட பாடத்தை என் தாயாருக்குச் சொன்னேன். அதைக் கேட்டவுடனே என் தாயாருக்கு முகம் மாறிவிட்டது. பிறகு சற்று நேரம் பொறுத்து, என் தாயார் என்னை நோக்கி, "என் கண்மணியே, நீ சொல்வது எள்ளளவுஞ் சரியல்ல. கல்வி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஜனங்களைப் பார். அவர்களுடைய செய்கைகளுக்கும் மிருகங்களுடைய செய்கைகளுக்கும் என்ன பேதமிருக்கிறது? நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்?" என்றார்.

நூல்வெளி: அய்யப்ப மாதவன்

இக்கவிதை 'அய்யப்ப மாதவன் கவிதைகள்' என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன்; இதழியல் துறை, திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர்; 'இன்று' என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

தெரிந்து தெளிவோம்: தமிழர் பரம்பரை

பரன் (Male Lineage)பரை (Female Lineage)
சேயோன்சேயோள்
ஓட்டன்ஓட்டி
பூட்டன்பூட்டி
பாட்டன்பாட்டி
தந்தைதாய்
நாம் (Self)நாம் (Self)
மகன்மகள்
பெயரன்பெயர்த்தி
கொள்ளுப் பெயரன்கொள்ளுப் பெயர்த்தி
எள்ளுப் பெயரன்எள்ளுப் பெயர்த்தி

நூல் ஆதாரம்: மா. இராசமாணிக்கனார், பத்துப்பாட்டு ஆராய்ச்சி

தெரிந்து தெளிவோம்: சிறுபாணன் பயணம்

  • நல்லூர் (சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம்)
  • 8 கல்
  • எயிற்பட்டினம் (மரக்காணம்)
  • 12 கல்
  • வேலூர் (உப்பு வேலூர்)
  • 11 கல்
  • ஆமூர் (நல்லாமூர்)
  • 6 கல்
  • கிடங்கில் (திண்டிவனம்) (சிறுபாணன் பயணம் முடித்த இடம்)

நூல் ஆதாரம்: மா. இராசமாணிக்கனார், பத்துப்பாட்டு ஆராய்ச்சி

நூல்வெளி: நெடுநல்வாடை

பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; 188 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. இப்பாடலின் பெயர் இருவகையில் பொருள் சிறந்து விளங்குகிறது. தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடையாகவும் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடுநல்வாடை எனும் பெயர் பெற்றது.

நூல்வெளி: உத்தம சோழன்

உத்தம சோழன் (செல்வராஜ்) எழுதிய "முதல்கல்" கதை பாடமாக உள்ளது. தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பில் இது இடம் பெற்றுள்ளது. உத்தம சோழன் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள் புரத்தைச் சேர்ந்தவர்; மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்; "கிழக்கு வாசல் உதயம்" என்ற திங்களிதழைக் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

நூல்வெளி: பக்தவத்சல பாரதி

இப்பாடப்பகுதி, பனுவல் (தொகுதி II, 2010) காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம். இதை எழுதியவர் பக்தவத்சல பாரதி. தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை இவர் முன்னெடுத்து வருகிறார். பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது. இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், தமிழகப் பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

நூல்வெளி: ஜலாலுத்தீன் ரூமி

ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் அழகாக மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ். அதனைத் தமிழில் 'தாகங்கொண்ட மீனொன்று' என்ற தலைப்பில் என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். அத்தொகுப்பிலுள்ள கவிதையொன்று பாடப்பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில், கி.பி. (பொ.ஆ.) 1207ஆம் ஆண்டில் பிறந்தார். பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இவரது சூஃபி தத்துவப் படைப்பான மஸ்னவி (Masnavi) 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு. இவரின் புகழ்பெற்ற மற்றொரு நூல், 'திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி' (Collective Poems of Shams of Tabriz) என்பதாகும்.

நூல்வெளி: கம்பராமாயணம்

கம்பராமாயணம் பல்வேறுவிதமான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட பாத்திரங்களால் படைக்கப்பட்டிருக்கிறது. இராமன் அனைத்து உயிர்களையும் கீழ் மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டும் பகுதிகள் பாடமாக இடம்பெற்றுள்ளன. அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், யுத்த காண்டம் ஆகியவற்றிலிருந்து குகன், சடாயு, சவரி, சுக்ரீவன், வீடணன் ஆகியோரைப் பற்றிய பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உடன்பிறப்பியப் பண்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் பாடல்கள் இவை.

இந்நூலை இயற்றியவர் கம்பர். இதற்குக் கம்பர் இராமாவதாரம் என்னும் பெயர் சூட்டினார். கம்பனது கவிநலத்தின் காரணமாக இது "கம்பராமாயணம்” என்றே அழைக்கப்படுகிறது. கம்பரது காலம் 12ஆம் நூற்றாண்டு. எழுதப்பட்ட காலம் தொட்டு மக்கள் இலக்கியமாகப் போற்றப்படுவதற்குக் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிநலமே காரணம்.

நூல்வெளி: பூமணி

** உரிமை ** என்னும் இச்சிறுகதை 'பூமணி சிறுகதைகள்’ என்னும் தொகுப்பில் உள்ளது. பூமணி, கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர். பூ. மாணிக்கவாசகர் என்ற தனது பெயரைச் சுருக்கிப் பூமணி என்ற பெயரில் எழுதி வருகிறார். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவாளராகப் பணியாற்றியவர். அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புகள். வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை உள்ளிட்ட புதினங்களை எழுதியுள்ளார். கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக 2014இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.

சான்றோர் சித்திரம்: பரிதிமாற் கலைஞர் (1870 - 1903)

நயம்பட உரைத்தல்

வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், "நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக" என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் 'திராவிட சாஸ்திரி' என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர்.

கல்வி மற்றும் பணி

அவர் தந்தையாரிடம் வடமொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப்.ஏ (F.A - First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

படைப்புகள் மற்றும் பங்களிப்புகள்

ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு. போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி. பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது.

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின்மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

பழங்காலப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட நூல்கள்

கதைப்பாடல்கள், மாணவர்களுக்குக் கற்பித்த நூற்களைப் பட்டியலிடுகின்றன. இவை பெரும்பாலும் நீதி நூல்கள் (ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி). நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது. வியாபாரம் செய்வதற்கும் கோவிலில் பணி செய்வதற்கும் கணிதமுறை கட்டாயமாகக் கற்பிக்கப்பட்டதைக் கதைப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்யவேண்டும். இதற்காக பிரபவாதி சுவடி என்ற புத்தகம் கூட இருந்தது.

ஆதாரம்: பேராசிரியர் அ.கா. பெருமாள் (இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை)

நூல்வெளி: திருக்குறள்

திரு + குறள் = திருக்குறள். சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலால் இப்பெயர் பெற்றது. இது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. குறள் - இரண்டடி வெண்பா, திரு - சிறப்பு அடைமொழி. திருக்குறள் என்பது அடையடுத்த கருவி ஆகுபெயர் ஆகும். குறள், உலகப்பொது மறை; அறவிலக்கியம்; தமிழர் திருமறை; மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக் காட்டிய நூல். இலத்தீன், கிரேக்கம் முதலிய உலக மொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி", "பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்" என்னும் பழமொழிகள் இந்நூலின் பெருமையை விளக்குகின்றன. இவற்றுள் 'நால்' என்பது நாலடியாரையும் 'இரண்டு' என்பது திருக்குறளையும் குறிக்கும்.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" எனப் பாரதியாரும், "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" - எனப் பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது. திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

உரையாசிரியர்கள்

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமேலழகர் திருமலையார்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்.

என்று ஒரு பழம்பாடல் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களின் பட்டியலொன்றைத் தருகிறது.

திருக்குறள் அமைப்பு

பால் (Part)அதிகாரங்கள்இயல்கள்இயல்களின் பெயர்கள் (அதிகார எண்ணிக்கை)
அறம்384பாயிரவியல் (04), இல்லறவியல் (20), துறவறவியல் (13), ஊழியல் (01)
பொருள்703அரசியல் (25), அமைச்சியல் (32), ஒழிபியல் (13)
இன்பம்252களவியல் (07), கற்பியல் (18)
மொத்தம்1339
தெரியுமா?

மாணாக்கர்களுள் பழையவர்கள் புதியவர்களுக்குக் கற்பிப்பது பள்ளிக்கூட வழக்கங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் பாடங்கள் முடிந்தவுடன் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பும்போது அவர்களது ஞாபகசக்தியை விருத்தி செய்விப்பதற்காக ஒவ்வொருவருக்கும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார். அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொல்ல வேண்டும்.

பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால், பிள்ளைகள் பெரியவர்களை அழைத்து வருவதே வழக்கம். முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள். மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது அதன் பொருள்.

பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா.

— உ.வே.சா.

தெரிந்து தெளிவோம்

கல்விச் சொற்கள்

  • வித்தியாரம்பம் - கல்வித் தொடக்கம்
  • வித்தியாப்பியாசம் - கல்விப் பயிற்சி
  • உபாத்தியாயர் - ஆசிரியர்
  • அக்ஷராப்பியாசம் - எழுத்துப் பயிற்சி

கணக்குச் சொற்கள்

  • கீழ்வாயிலக்கம் - பின்ன எண்ணின் கீழ்த்தொகை
  • மேல்வாயிலக்கம் - பின்ன எண்ணின் மேல்தொகை
  • குழிமாற்று - பெருக்கல் வாய்பாடு

பிற சொற்கள்

  • சீதாள பத்திரம் - தாழை மடல்
  • நவத்வீபம் - வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

வட்டார வழக்குச் சொற்கள்

  • அனயம் - நிறைவானது
  • எச்சௌந்தவன் - ஏழை எளியவன்
  • கீழத்தார் - புன்செய்யின் ஒரு பகுதி
  • கெராமுனுசு - கிராம நிர்வாக அலுவலர்
  • கொடவாங்கல் - கொடுக்கல் வாங்கல்
  • திருணை - திண்ணை
  • தெகஞ்சத - முடிந்ததை
  • பிஞ்சை - புன்செய்
  • ரோசி - உரசுதல்
  • வாந்தக்கமாக - இணக்கமாக
  • வெதப்பெட்டி - விதைப்பெட்டி
  • வெள்ளங்காட்டி - விடியற்காலை
  • வேண்டாற - வேண்டாத
  • திருகை - மாவு அரைக்கும் கல்
  • குறுக்கம் - சிறிய நிலப்பரப்பு
  • கடகம் - ஓலைப்பெட்டி
தெரியுமா?

பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது. உப்பு விளையும் களத்திற்கு 'அளம்' என்று பெயர். பிற நிலங்களில் கிடைக்கும் பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாகப் பெற்றனர்.

திண்ணைப் பள்ளிக்கூடங்களும் அண்ணாவிகளும்

  • மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவருமான வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார் திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 4 வருடங்கள் படித்திருக்கிறார்.
  • வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா. இராசமாணிக்கனார் மௌனகுருவிடம் படித்திருக்கிறார்.
  • நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
  • சுப்பிரமணிய பாரதியின் நண்பரும் வழக்குரைஞரும் தமிழறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும்,
  • சிலப்பதிகார உரையாசிரியர் வேங்கடசாமி வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியிலும்,
  • மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் வ. சுப. மாணிக்கம் மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் படித்தனர்.

ஆதாரம்: பேராசிரியர் அ.கா. பெருமாள் (இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை)

நூல்வெளி: உ.வே. சாமிநாதையர்

இப்பாடப்பகுதி உயிர்மீட்சி என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட உ.வே.சா.வின் இலக்கியக் கட்டுரைகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 'தமிழ்த் தாத்தா' என அழைக்கப்பெற்ற உ.வே.சா. இணையற்ற ஆசிரியர்; புலமைப் பெருங்கடல்; சிறந்த எழுத்தாளர்; பதிப்பாசிரியர்; பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.

‘திராவிட வித்தியா பூஷணம்', 'தாக்ஷிணாத்திய கலாநிதி’ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்; கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1932இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் 'டாக்டர்' பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. சென்னையில் திருவான்மியூரில் இவர் பெயரால் உ.வே. சா. நூலகம் அமைந்துள்ளது.

சான்றோர் சித்திரம்: மறைமலையடிகள் (1876-1950)

பரிதிமாற் கலைஞரை வியக்க வைத்தவர்

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக்கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர், "குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள்" என்று கேட்டார். அவர் "அஃது எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார். 'நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள் என்றார் பரிதிமாற்கலைஞர். 'தெரியாது' என்று சொன்னவரை, "எப்படித் தேர்வு செய்யலாம்?" என்று பிறர் கேட்டபோது, 'அஃது என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம், 'எனக்கு' என்பது வன்தொடர்க் குற்றியலுகரம், 'தெரியாது' என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.

தனித்தமிழ் இயக்கம்

அவருடனான நட்பு 'தனித்தமிழ்' மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார். ‘சுவாமி வேதாசலம்’ எனும் தன்பெயரை ‘மறைமலை அடிகள்’ என மாற்றிக்கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார்.

இதழாளர் மற்றும் எழுத்தாளர்

இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த அடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean Of Wisdom (1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார். முறையான பள்ளிக்கல்வியை முடித்திராத மறைமலையடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தும்.

நூல்வெளி: சுரதா

இப்பாடப்பகுதி, கவிஞர் சுரதாவின் 'துறைமுகம்' என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். அப்பெயரைப் பாரதிதாசன்மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்.

முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார். தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

நூல்வெளி: சி. மணி

இடையீடு கவிதை, சி. மணியின் (சி. பழனிச்சாமி) 'இதுவரை' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை குறியீடுகளைக்கொண்டு அமைந்தது. அதனால் பன்முகப் பொருள் கொண்டது. இக்கவிதை கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.

1959ஆம் ஆண்டுமுதல் 'எழுத்து' இதழில் இவரின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் 'நடை’ என்னும் சிற்றிதழையும் நடத்தியவர். இவர் படைத்த இலக்கணம் பற்றிய 'யாப்பும் கவிதையும்' என்னும் நூலும், 'வரும் போகும்', ஒளிச்சேர்க்கை ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. ஆங்கிலப்பேராசிரியரான இவர் 'தாவோ தே ஜிங்' எனும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் புதுக் கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர்; இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்.

இவர் விளக்கு விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்; வே. மாலி, செல்வம் என்ற புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

நூல்வெளி: புறநானூறு - ஔவையார்

சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தபோது ஔவையார் பாடிய பாடல் நமக்குப் பாடப்பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடல் இடம்பெற்றுள்ள புறநானூறு, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது புறப்பொருள் பற்றியது; புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது. தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

அதியமானிடம் நட்புப் பாராட்டிய ஔவையார், அவருக்காகத் தூது சென்றவர்; அரசவைப் புலவராக இருந்து அரும்பணியாற்றியவர். இவர் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

தெரியுமா? சென்னையின் நீர்நிலைகளும் வடிகால்களும்

சென்னை, வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய பக்கிங்காம் கால்வாய் மற்றும் காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா என 18 பெரிய ஓடைகள், 540க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் அக்காலத்தில் வடிகால்களைப் பெற்றிருந்தது. மழைநீர், சிறிய ஓடைகள் வழியாகப் பெரிய ஓடைகளைச் சென்றடையும்; பெரிய ஓடைகள் ஆறுகளைச் சென்றடையும்; ஆறுகள் கடலில் சென்று சேரும். இப்படி இயற்கை கொடுத்த வடிகால்களை நாம் என்ன செய்துள்ளோம்? எண்ணிப் பார்ப்போம்!

தெரியுமா?

வள்ளல் பச்சையப்பர் கூவம் நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக குறிப்பு ஒன்று, அவரது நாட்குறிப்பில் உள்ளது.

பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம், உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர் 'மாவலிபுரச் செலவு' எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கின்றார்:

சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் - எழில்
அன்னம் மிதப்பது போல.
என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி - பின்பு
தீவிரப் பட்டது வேகம்

சாலைப் பாதுகாப்பு

பாரிஸ் நகரத்தில் 1909 ஆம் ஆண்டு நடந்த முதல் சர்வதேச சாலை மாநாட்டில் (International Road Congress) ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ஏற்பட்டது. பல மொழிகளில் எழுதப்படும் அறிவிப்புப் பலகைகளை விட மொழிவேறுபாடற்ற குறியீடுகள் எளிதில் மக்களுக்குப் புரியும் என்பதற்காக இவை உருவாக்கப்பட்டன. அபாய முன்னறிவிப்பு, முக்கியத்துவத்தைச் சுட்டும் குறியீடுகள், தடை செய்யப்பட்டதைத் தெரிவிக்கும் குறியீடுகள், கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய குறியீடுகள், சிறப்பு அறிவிப்புக் குறியீடுகள், திசை காட்டும் குறியீடுகள் போன்ற பல பிரிவுகளில் இவை வடிவமைக்கப்பட்டன.

பொதுவான விதிகள்

  • வகைகள், மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • முறைப்படுத்தும் குறியீடுகளுக்கும் போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கும் ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
  • நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும் சாலையைக் கடப்பவர்களையும் அச்சுறுத்தக் கூடாது.
  • சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.
  • பின்வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். தேவையெனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.
  • பிற ஊர்தி ஓட்டிகளுக்கு விட்டுக்கொடுப்பது சிறந்தது.
  • இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டம் 2017- குறிப்பிடுவன:

  • வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
  • உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ரூ.5000 தண்டத்தொகையோ, மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
  • அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் ரூ. 5000 தண்டத்தொகை பெறப்படும்.
  • மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் ரூ.10,000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • மிகுவேகமாக ஊர்தியை இயக்கினால் ரூ. 5000 தண்டத்தொகை கட்ட நேரும்.
  • இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ. 2000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.
  • தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்தியை இயக்கினால் ரூ. 1000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.
  • ஊர்திகளுக்குக் காப்பீடு இல்லாமல் இயக்கினால் ரூ. 2000 தண்டத்தொகை கட்ட நேரும்.

தெரிந்து தெளிவோம்: சென்னை நூலகங்கள்

சென்னையின் பழமை, அறிவுப்புரட்சி ஆகியவற்றின் அங்கமாக விளங்கும் நூலகங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்த பண்பாட்டுத்தளங்கள் ஆகும். அவற்றுள் சில:

  • சென்னை இலக்கியச் சங்கம்: 1812இல் கோட்டைக் கல்லூரியின் இணைவாக உருவான இந்நூலகம், அரிய பல நூல்களைக் கொண்ட இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று.
  • கன்னிமாரா நூலகம்: 1860இல் அருங்காட்சியகத்தின் அங்கமாகத் தொடங்கப்பட்ட இந்நூலகம், இந்தியாவின் முதல் பொது நூலகமாகும்.
  • கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்: காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக்கொண்டு 1869இல் உருவாக்கப்பட்ட இந்நூலகம் அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகளைக் கொண்டது.
  • அண்ணா நூற்றாண்டு நூலகம்: 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நூலகம் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாகும்.
  • தமிழாய்வு நூலகங்கள்: சிறப்பு நிலையில் தமிழாய்வு நூல்களைக் கொண்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், மறைமலையடிகள் நூலகம், செம்மொழித் தமிழாய்வு நூலகம், உ.வே.சா. நூலகம் போன்றவை முக்கியமானவை.

தெரிந்து தெளிவோம்: இந்தோ - சாரசனிக் கட்டடக்கலை

இது முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது. இப்பாணியில் 1768இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம் சேப்பாக்கம் அரண்மனையே ஆகும்.

சென்னையின் புகழ்பெற்ற கட்டடங்களான மத்தியத் தொடர்வண்டி நிலையம், தென்னகத் தொடர்வண்டித் தலைமையகம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், பொது அஞ்சல் அலுவலகம், உயர்நீதி மன்றம், சென்னைப் பல்கலைக்கழகம், ரிப்பன் கட்டடம், விக்டோரியா அரங்கு போன்றவை இந்திய - சாரசனிக் கட்டடக்கலையின் சிறப்புகளை நமக்குக் காட்டுகின்றன.

தெரிந்து தெளிவோம்: வட்டார வழக்குச் சொற்கள்

  • உம்மா - அம்மா
  • வாப்பா - அப்பா
  • ஏச்சு - திட்டுதல்
  • கடவு - படித்துறை
  • கன்னியார் கோணம் - ஒரு வயற்காட்டின் பெயர்
  • உப்பா - தாத்தா
  • பாவாத்து - துணி நெய்ய வேண்டிய நூலுக்குப் பசை கொடுப்பது
  • சுள்ளைக்கு உள்ளிருந்து அடிபற்றி இருக்கும் - சுள்ளைக்கு உள்ளிருந்து அடித்தரை தெரியும்படி இருக்கும்
  • வேசாடையாக - சற்றுக் கோபமாக
  • அமானிதம் - பாதுகாக்கப்பட வேண்டிய விசயம்
  • ஏலாவிலிருந்து - பெரிய வயலில் இருந்து
  • முக்கால் மூண்டானி - ஒரு அளவு
  • புன்ன மூட்டடி - புன்னை மரத்தின் நிழல்
தெரியுமா? யாழின் வகைகள்
  • பேரியாழ்: 21 நரம்புகளைக் கொண்டது
  • மகரயாழ்: 17 நரம்புகளைக் கொண்டது
  • சகோடயாழ்: 16 நரம்புகளைக் கொண்டது
  • செங்கோட்டியாழ்: 7 நரம்புகளைக் கொண்டது

நூல்வெளி: இராமலிங்க அடிகள்

பாடப்பகுதியிலுள்ள பாடல், இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்ற தெய்வமணிமாலை என்னும் பாமாலையில் உள்ளது. இப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டும் தெய்வமணிமாலையின் 8ஆம் பாடல்.

சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான அடிகள் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார். சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். இம்மண்ணில் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர் அடிகளார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய அவ்வள்ளலின் பாடல்கள் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையவை.

திருவருட்பா, ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. 'மனுமுறை கண்ட வாசகம்', 'ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள்.

மயிலாப்பூர் சிறப்புகள்

  1. மடலார்ந்த தெங்கின் மயிலை
  2. இருளகற்றும் சோதித் தொன்மயிலை
  3. கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
  4. கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்
  5. கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
  6. மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
  7. ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை

மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள்

  1. ஐப்பசி - ஓண விழா
  2. கார்த்திகை - விளக்குத் திருவிழா
  3. மார்கழி - திருவாதிரை விழா
  4. தை - தைப்பூச விழா
  5. மாசி - கடலாட்டு விழா
  6. பங்குனி - பங்குனி உத்திர விழா

நூல்வெளி: திருஞானசம்பந்தர்

பாடப்பகுதியாக உள்ள பாடல், இரண்டாம் திருமுறையில் உள்ள திருமயிலாப்பூர் பதிகத்தில் இடம்பெற்றுள்ளது. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்புகள். இவர் பாடல்கள் இசைப் பாடல்களாகவே திகழ்கின்றன. இப்பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களுக்குத் தேவாரம் என்று பெயர். சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம் சமயக் கோட்பாடுகள் அனைத்தும் சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.

நூல்வெளி: தோப்பில் முகமது மீரான்

தோப்பில் முகமது மீரான் எழுதிய ‘ஒரு குட்டித் தீவின் வரைபடம்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதை இது. தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் எனும் சிற்றூரில் 1944இல் பிறந்தார். இவர் தமிழிலும், மலையாளத்திலும் படைப்பவர். சிறுகதை போன்ற பல்வேறு இலக்கியத் தளங்களில் இயங்கி வருபவர். இவர் எழுதிய ‘சாய்வு நாற்காலி’ எனும் புதினம் 1997இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது. துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.

தெரிந்து தெளிவோம்: உப்பங்கழி

கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு ‘உப்பங்கழி' எனப் பெயர். கடல்நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்கிறோம். ஆடை போல் படியும் இந்த உப்பைக் கூட்டிச் சேகரித்து, பக்குவப்படுத்தி விற்பனைக்கு அனுப்புவர்.

நூல்வெளி: அகநானூறு

பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. களிற்றியானைநிரையில் 120, மணிமிடை பவளத்தில் 180, நித்திலக்கோவையில் 100 எனப் பாடல்கள் உள்ளன.

அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்; நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர். இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.

வட்டார வழக்கு

தமிழ்மொழி ஒன்றேயாயினும் வட்டாரங்களுக்கென்று சிறப்பான தனி மொழிவழக்குகள் இருக்கின்றன. சென்னைத்தமிழ், கோவைத்தமிழ், நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ், குமரித்தமிழ், என்றெல்லாம் வேறுபட்டுத் தமிழ் வழங்குகின்றது. அந்தந்தப் பகுதிகளுக்கென்று தனித் தொனிகளும் வாஞ்சைகளும், விளிப்புகளும் இருக்கின்றன. அவ்வவ் வட்டாரங்களின் பழக்கவழக்கங்கள், தொழில்கள், பழமொழிகள், சடங்குகள் சார்ந்தும் சொல் மாறுபாடுகள் இருக்கின்றன. இவை பேச்சு வழக்கில் இருப்பது வட்டார அடையாளமாகவும் இருக்கிறது.

இவ்வட்டார வழக்குகள் படைப்பிலக்கியங்களில் இடம்பெறுகிறபோது, தமிழின் அழகு கூடுகிறது. தமிழ்ச் சிறுகதைகளிலும் புதினங்களிலும் வட்டார மொழி இடம்பெற்று வட்டாரச் சிறுகதை, வட்டாரப் புதினம் என்று பகுத்துப் பேசக்கூடிய நிலை ஏற்பட்டது. வட்டார இலக்கியம் என்ற பகுப்பும் உருவாயிற்று.

  • புதுமைப்பித்தன் - நெல்லைத் தமிழிலும்,
  • சண்முகசுந்தரம் - கோவைத்தமிழிலும்,
  • ஜெயகாந்தன் - சென்னை வட்டாரத் தமிழிலும்,
  • தி.ஜானகிராமன் - தஞ்சைத் தமிழிலும்,
  • தோப்பில் முகமது மீரான் - குமரித் தமிழிலும் எழுதிப் புகழ்பெற்றனர்.
  • கி. ராஜநாராயணன் - கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்திப் படைத்தார். தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் "கரிசல் இலக்கியம்" என்று பெயரிட்டார்.

இவர்களைத் தொடர்ந்து பலர் இவ்வகையில் வட்டார இலக்கியங்களைப் படைத்து வருகிறார்கள். சிறுகதைகள் வட்டாரம் சார்ந்து தொகுக்கப்பட்டுத் "தஞ்சைக் கதைகள்" என்பது போன்று வெளியீடு பெறுகின்றன.

தெரியுமா?

படங்காட்டுதல் (Exhibition) மூலம்தான் முதன்முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது. மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்கார் டுபான் (Dupont) என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார். திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த அவர், பின்னர் திருவனந்தபுரம், மதுரை நகர்களில் முகாமிட்டு, மதராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார். அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர், லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909 இல் மதராஸ் திரும்பினார். அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே) கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.

சென்னையிலிருக்கும்போது சினிமாத்தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கியமான அடியெடுத்து வைத்தார். புரொஜக்டர்களை இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார். இதனால் புதிய திரையரங்குகள் வர ஏதுவாயிற்று.

— சு. தியோடர் பாஸ்கரன், மீண்டெழும் சினிமா கொட்டகை 2018

சான்றோர் சித்திரம்: சோமசுந்தர பாரதியார் (1879 -1959)

ஒருமுறை எட்டயபுரம் அரண்மனைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். அக்கூட்டத்திற்கு இரண்டு நண்பர்கள் சென்றிருந்தனர். பலரும் பாடல் இயற்றிக் கொடுக்க அனைத்துப் பாடல்களிலும் நண்பர்கள் இருவரின் பாடல்களே சிறந்ததெனத் தேர்ந்தெடுத்த அப்புலவர், இருவருக்கும் 'பாரதி' என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். அவ்விருவரில் ஒருவர் சுப்பிரமணிய பாரதியார், மற்றொருவர் சோமசுந்தர பாரதியார்.

பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமைகொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார். வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு வ. உ. சி. யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். 'என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது' என்று வ. உ.சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார்.

இவர் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும் முதலிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். இவர் சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடுகொண்டு சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். வ. உ. சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக இவர் வாதாடியது குறிப்பிடத்தக்கது.

தீந்தமிழுக்குச் சான்று

"கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு, எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது. இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார். எளிமையும் தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு".

(நாவலர் சோமசுந்தர பாரதியின் நூல்தொகுதி 4 - 'நற்றமிழ்’ என்னும் கட்டுரையிலிருந்து.)

தெரியுமா?

தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார். காட்சி தருகிற உவமைகள், காட்சி தரா வெறும் உவமைகள் என இரு பிரிவாக உவமைகளைப் பிரிக்கலாம். சங்க இலக்கியப் பாடல்களில் பெரும்பாலும் உவமைகளின் வழியே சொல்லவந்த கருத்தை மேலும் அழகுபடக் கூறுவர். சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்சி தரும் உவமைகளையே ஆண்டுள்ளன.

படிமம் என்பது உவமையினாலும் அமைவது. படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது. அந்த வகையில் உவமைக் கோட்பாடு, படிமத்திற்குத் தோற்றுவாயாக இருக்கிறது. படிமச் சிந்தனை, இவ்வகையில் நம்மிடம் இருந்த ஒன்றுதான்; புதியதாக மேலை நாட்டிலிருந்து பெற்றுக் கொண்டதன்று.

யார் இவர்? சார்லி சாப்ளின்

இளமைக்காலம்

இலண்டனில் பிறந்த சாப்ளின் வறுமையின் மடியில் வளர்ந்தவர்; சாப்ளினின் தாய், வறுமை வலியை மறக்கடிக்கக் கதைகள் சொன்னார்; அதன்மூலம் ஒரு கலைஞனாக அவர் செதுக்கப்பட்டார். மேடையில் பாடிப் பிழைத்த அம்மாவின் குரல் கெட்டுவிட, சிறுவனான சாப்ளின் மேடையேறி ஆடிப்பாடி அசத்தினார். நடிகனாகிக் குடும்பத்தைக் காக்கக் கனவு கண்ட சாப்ளின் நாடக நடிகராகி, குழுவுடன் அமெரிக்கா சென்று திரை வாய்ப்பைப் பெற்றார்.

திரையுலகப் பிரவேசம்

தொள தொள கால்சட்டையும் இறுக்கமான கோட்டும் துண்டு மீசையும் புதுவிதமான சேட்டையும் கொண்ட 'லிட்டில் டிராம்ப்' (Little Tramp) என்று அவர் உருவாக்கிக் கொண்ட தோற்றம் அவரைப் பேசாப்பட நாயகனாக்கியது. அவரது ஊதியம் போல், புகழும் உயர்ந்தது. வறுமைமிக்க தன் இளமை வாழ்வை 'தி கிட்' (The Kid) என்ற வெற்றிப் படமாக்கினார். 'யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்' என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிப் பெரும் வளர்ச்சி கண்டார்.

சாதனைப் படங்கள்

அவரது மேதைமையும் திறமையும் 'தி கோல்டு ரஷ்' (The Gold Rush), 'தி சர்க்கஸ்' (The Circus) போன்ற காவியப் படங்களை உருவாக்கின. மரபான கருத்துருவாக்கங்களைத் தன் படங்களில் சாப்ளின் உடைத்து நொறுக்கினார்; பேசாப்படங்களில் சேட்டைகள் மூலம் புகழ்பெற்ற அவர் பேசும்படங்கள் உருவான காலத்தில், தோற்பார் என எதிர்பார்த்தனர்; எதிர்பார்ப்புகளை முறியடித்து 'சிட்டி லைட்ஸ்' (City Lights) என்ற படத்தை எடுத்ததன் வாயிலாக எதிரிகளின் வாய்களை அடைத்தார்.

மூன்று ஆண்டு உழைப்பில் 'மாடர்ன் டைம்ஸ்' (Modern Times) படத்தை வெளியிட்டார். இதில் அன்றைய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்தார்; சாப்ளினுக்குப் பொதுவுடைமையாளர் என்ற முத்திரை விழுந்தது. பல முதலாளிய நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது. இருந்தாலும் படம் வெற்றி பெற்றது.

அவரது சாதனைப்படமான 'தி கிரேட் டிக்டேட்டர்' (The Great Dictator) 1940இல் வெளியானது. ஹிட்லர் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விமரிசித்து வந்த முதல்படம் அது. 'மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும்தான்' என்பதைப் படம் உணர்த்தியது.

பிற்கால வாழ்க்கை

1952இல் அவர் இலண்டன் சென்று கொண்டிருந்தபோது பொதுவுடைமையாளரான அவரை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்தது. பின் சாப்ளின் சுவிட்சர்லாந்தில் குடியேறினார். தன் தவற்றை உணர்ந்த அமெரிக்கா, மீண்டும் அங்கு வந்துவிடுமாறு சாப்ளினை வேண்ட, சாப்ளினும் ஒத்துக்கொண்டு சென்றார். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இன்றும் உலகின் பல பகுதிகளில் சாப்ளினின் டிராம்ப் உருவம், குழந்தைமை, மனிதமை ஆகியவற்றின் குறியீடாக இடம் பெற்றிருப்பதே அவரது வெற்றியின் அடையாளம்.

தெரியுமா?

திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தால் நாடகத்தின் குழந்தை எனலாம். தொடக்க காலங்களில் நாடகங்களை அப்படியே திரைப்படமாக எடுப்பது வழக்கம். நாடகம் என்பது ஒரு காட்சியை ஒற்றைக் கோணத்தில் மட்டும் நேரிடையாகக் காண்பது. இதனால்தான் நாடகத்தை ஒற்றைக் கோணக்கலை (single dimension art) எனக் கூறுவர்.

நாடகங்களின் காலத்தில் ஒலிபரப்புக் கருவிகள் இல்லாததால் வசனங்களை உரக்கப் பேச வேண்டிய தேவையிருந்தது. அதே போலத் தொலைவிலிருப்பவர்களும் நடிகர்களின் நடிப்பைப் பார்க்க வேண்டும் என்பதால் அதிக ஒப்பனை செய்துகொண்டு கை - கால்கள், கண்களின் அசைவுகள் நன்றாகத் தெரியும் வகையில் அசைத்து உரக்கப்பேசி இயல்பில் நாம் செய்வதைவிடச் சற்றுக் கூடுதலாகச் செய்து நடித்தார்கள்.

திரையரங்கில் மவுனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் ஒலிவாங்கியைப் பிடித்து, கதை சொல்லும் காலமும் இருந்தது. அவருக்கு ஆங்கிலத்தில் நேரேட்டர் (Narrator- கதைசொல்லி) என்று பெயர். ஒரு கதாநாயகன் போல மிடுக்காக உடை அணிந்து 'நேரேட்டர்' எனும் அக் கதைச்சொல்லி வந்து நின்றாலே அனைவரும் கைதட்டத் தொடங்கினர்.

நூல்வெளி: நகுலன்

நம்பாடப் பகுதியிலுள்ள கவிதைகள் 'நகுலன் கவிதைகள்' என்னும் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. கவிஞர் நகுலன் (டி.கே. துரைசாமி). கும்பகோணத்தில் பிறந்தவர்; கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

தமிழின் அனைத்துச் சிற்றிதழ்களிலும் எழுதி வந்தவர். புதுக்கவிதை வடிவம் தமிழ் மொழியில் தடம் பதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்குத் தேவையான கருத்துகளை நறுக்கென்று கூறியுள்ளார். இவர், சொல் விளையாட்டுகளோ, வாழ்க்கை பற்றிய எந்தக் குழப்பமோ இன்றித் தெளிவான சிந்தனையோடு கருத்துகளை உரைத்துள்ளார். இவருடைய கவிதைகள் மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி உள்ளிட்ட சிறு சிறு தொகுதிகளாக வந்துள்ளன. இவர் 7 புதினங்களை எழுதியுள்ளார்; பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

நூல்வெளி: சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையின் ஒருபகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது.

சிறப்புப் பெயர்கள்

  • அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது ‘குடிமக்கள் காப்பியம்' எனப்படுகிறது.
  • புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
  • முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் ‘புரட்சிக் காப்பியம்’ எனப்படுகிறது.
  • இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால் ‘முத்தமிழ்க் காப்பியம்' எனப்படுகிறது.
  • செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால் இது 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' எனப்படுகிறது.
  • மேலும், இந்நூல் ‘முதற் காப்பியம்', ‘ஒற்றுமைக் காப்பியம்', 'வரலாற்றுக் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

இரட்டைக் காப்பியங்கள்

சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் 'இரட்டைக் காப்பியங்கள்' என அழைக்கப்படுகின்றன.

ஆசிரியர்

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். ‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று பாரதி குறிப்பிடுகிறார். வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப்பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

தெரிந்து தெளிவோம்: தி கிரேட் டிக்டேட்டர்

சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமரிசகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940இல் அவர் ஒரு படம் எடுத்தார். அதுதான் 'தி கிரேட் டிக்டேட்டர்'.

இக்கதையில் ஹிட்லரை உருவகப்படுத்தி ஹென்கோல் என்னும் கதைப்பாத்திரத்தை, சாப்ளின் உருவாக்கினார். அதே உருவம் கொண்ட இன்னொரு பாத்திரத்தைக் கடை நடத்தி வரும் யூத இனத்தைச் சார்ந்தவராக அறிமுகப்படுத்தினார். சர்வாதிகாரி ஹென்கோல், யூதர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். காவலர்களும் யூதரான கடைக்காரரைக் கைதுசெய்து சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர். சிறையிலிருந்து தப்பிக்கும் கடைக்காரர், வழியில் ஹென்கோலின் உடையைத் திருடி அணிந்து கொள்கிறார். அப்போது வழியில் வரும் ஹென்கோலின் படைவீரர்கள் இவர்தான் ஹென்கோல் எனத் தவறாக நினைத்து மரியாதை செய்கின்றனர். அதேசமயம் தப்பித்த கைதியைத் தேடி வந்த காவலர்கள் சாதாரண உடையில் வந்த ஹென்கோலை, தப்பித்த குற்றவாளி என நினைத்துக் கைது செய்கின்றனர். ஹென்கோல் சிறைக் கைதியாகிறார். ஒரேநாளில் இருவர் வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது.

அதன் பிறகு நடக்கும் காட்சிகள் எல்லாம் கடுமையான அரசியல் விமரிசனங்கள். இறுதிக்காட்சியில் சர்வாதிகாரி வேடத்தில் இருக்கும் யூதர் கைது செய்யப்பட்டிருந்த அனைவரையும் விடுதலை செய்யச் சொல்லி ஆணையிடுகிறார். மாநாட்டில் மனிதகுல விடுதலை குறித்துப் பேருரை ஆற்றுகிறார். அந்தப் பேருரைதான் இன்றுவரை திரைப்படங்களின் மிகச் சிறந்த வசனமாகப் போற்றப்படுகிறது. வாழும் காலத்திலேயே ஹிட்லரைக் கடுமையாக விமரிசனம் எடுத்த ஒரேபடம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. அதுபோல இரட்டை வேடப் படங்கள் எவ்வளவோ வந்தாலும் அதில் மிகச் சிறந்த திரைப்படம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

நூல்வெளி: திரைமொழி

திரைமொழி குறித்த இப்பாடம் திரு. அஜயன் பாலாவின் கட்டுரையை அடிப்படைச் சட்டமாகக் கொண்டு சுஜாதா, செழியன், அம்ஷன்குமார் முதலானோரின் திரைப்பார்வைகளை ஊடும்பாவுமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கலையும் வணிகமுமான திரைப்படத்தை அணுகுவதற்கான எளிய சூத்திரத்தைக் கற்பிப்பதாக இப்பாடம், பாடக்குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது.

குறியீடுகள், கதை நகர்த்தல், திரை உரையாடல் என்று பல கூறுகளில் மரபுக் கலைகளிலிருந்து வேறுபட்ட தொழில்நுட்பம் சார்ந்த திரைக்கலையின் மொழியைப் புரிந்துகொள்ளும் முயற்சியின் தொடக்கம்தான் இப்பாடம்.

நூல்வெளி: தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

நம்பாடப் பகுதி தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் மெய்ப்பாட்டியலில் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் என்பதை அறிவோம். அது பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூலாகும். தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ்க் கவிதையியலின் நுட்பங்களையும் பேசுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரம் கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்புகிறது.

தொல்காப்பியத்தின் ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச் சான்றோர், 'ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்' என்று போற்றுகின்றனர். நூல் முழுமைக்கும் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார்.

கட்டபொம்மன் பாத்திரம் பற்றி சிவாஜி கணேசன்

பல நாடகங்களில் அதிக வேலையுள்ள பெரும் பாத்திரங்களை ஏற்று நான் நடித்திருக்கிறேன். ஆனாலும், இந்த கட்டபொம்மனில் எனக்கு இயற்கையாக எழும் உணர்ச்சி நாடக முடிவில் எத்தகைய களைப்பை, சிரமத்தை உண்டாக்குகின்றது என்பதை நினைக்க எனக்குப் பயமாகவே இருக்கிறது. என்றாலும் எனது குழுவினர்களோடு நாடக நாள்களில் ஒன்றுபட்டுச் செயல்படுவதில் காணும் இன்பமும், மக்களின் பாராட்டுதலை நேருக்குநேர் பெறும் வாய்ப்பும், எனக்கு எதிலும் பெற முடியாத ஒரு தனி மகிழ்ச்சியைத் தருகிறதென்ற உண்மை ஒன்றே எனக்குக் கிடைக்கும் பெரும் ஆறுதலாகும்.

-நடிகர் திலகம் சிவாஜிகணேசன்

சிவாஜிகணேசன் பெற்ற விருதுகள்

  • ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது
  • கலைமாமணி விருது
  • பத்ம ஸ்ரீ விருது (தாமரைத் திரு)
  • பத்ம பூஷன் விருது (தாமரை அணி)
  • செவாலியர் விருது
  • தாதாசாகெப் பால்கே விருது

நூல்வெளி: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

இப்பாடப்பகுதி, மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய 'சிதம்பர நினைவுகள்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. இவர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். இவரின் இந்நூலை கே.வி. சைலஜா 'சிதம்பர நினைவுகள்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

காப்பிய அமைப்பு முறை

காப்பியச் சிற்றுறுப்புகளாக காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலானவை சிற்றுறுப்புகளாக அமைந்திருக்கின்றன. காண்டம் என்பது பல சிற்றுறுப்புகளின் தொகுதியாக உள்ள பேருறுப்பைக் (பெரும்பிரிவு) குறிக்கும்.

  • காதை - சிலப்பதிகாரம், மணிமேகலை
  • சருக்கம் - சூளாமணி, பாரதம்
  • இலம்பகம் - சீவக சிந்தாமணி
  • படலம் - கந்தபுராணம், கம்பராமாயணம்
  • காண்டம் - சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

காப்பியத்தைக் குறிக்கும் பிறபெயர்கள்

பொருட்டொடர்நிலைச் செய்யுள், கதைச் செய்யுள், அகலக்கவி, தொடர்நடைச் செய்யுள், விருத்தச் செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், மகாகாவியம்.

காப்பிய வடிவங்கள்

  • விருத்தம் என்னும் ஒரேவகைச் செய்யுளில் அமைந்தவை: சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்
  • பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது: சிலப்பதிகாரம்.

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள்

இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலக்கணங்களுள் சிலவற்றைப் பின்பற்றி இயற்றப்பட்டதைக் குறுங்காப்பியம் அல்லது குறுங்காவியம் என்பர். இவற்றுள் சில, பிறமொழித் தழுவலாகவும் மொழிபெயர்ப்பாகவும் அமைந்துள்ளன.

ஆசிரியர்நூல்கள்
பாரதியார்பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு
பாரதிதாசன்பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, இருண்ட வீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி
கவிமணிமருமக்கள் வழி மான்மியம்
கண்ணதாசன்ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம்
கவியோகி சுத்தானந்த பாரதியார்பாரதசக்தி மகா காவியம்
புலவர் குழந்தைஇராவண காவியம்

நூல்வெளி: வெ. இறையன்பு

இப்பாடப்பகுதி வெ. இறையன்பு எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை' என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி வரும் இவர், இ.ஆ.ப. தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர். 1990ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்து வருபவர்.

தமிழ் இலக்கியப் பற்றுடைய இவர், தமிழில் வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்; பட்டிமன்றங்களில் நடுவராகப் பங்கேற்பதுடன் பல்வகைப்பட்ட ஊடகങ്ങളിലും பங்களிப்பைச் செய்து வருபவர். இவர் எழுதிய 'வாய்க்கால் மீன்கள்' என்னும் கவிதை நூல், 1995ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது. சிறுகதை, புதினம், தன்முன்னேற்ற நூல், நம்பிக்கை நூல் என இவர் படைப்புக்களம் விரிவானது.

நூல்வெளி: தமிழ்நதி (கலைவாணி)

இக்கவிதை 'அதன் பிறகும் எஞ்சும்' என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. இதைப் படைத்த தமிழ்நதி (கலைவாணி) ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார்.

நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்), சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்), கானல் வரி (குறுநாவல்), ஈழம் : கைவிட்ட தேசம், பார்த்தீனியம் (நாவல்) முதலிய பல்வேறு படைப்புகளைப் படைத்துள்ளார். புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.

சான்றோர் சித்திரம்: வை.மு. கோதைநாயகி (1901-1960)

ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர், தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கும் புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணவர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் ஓரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எப்படி எழுத முடியும் என்று அவர் வருந்தியபோது, அவரது தோழி, நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான 'இந்திர மோகனா' என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர்தான் 'நாவல் ராணி', 'கதா மோகினி', 'ஏக அரசி' என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. ('வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்') ஆவார்.

இவர் 'ஜகன் மோகினி’ என்ற இதழை முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளர்களையும், வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார். காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர் தம் எழுத்தின் மூலமாக மட்டுமன்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார்.

தமிழகப் பெண் வரலாற்றில் தனித்து அடையாளம் காட்டப்பட வேண்டிய சிறப்புக்குரியவரான வை.மு.கோ. அவர்கள் 115 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'குடும்பமே கதி என்று பெண்கள் வாழ்ந்த காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன் வாழ்வின்மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் வை.மு.கோ. அம்மையார்.

எழுத்தாற்றலுக்குச் சான்று:

"என்ன வேடிக்கை! அடிக்கடி பாட்டி 'உலகானுபவம்... உலகம் பலவிதம்..' என்றெல்லாம் சொன்னதைக் கேட்டபோது எனக்கு ஒண்ணுமே புரியாது விழித்தேனே ... பாட்டி சொல்லிய வசனங்களைவிடக் கடிதங்கள் பலவற்றைப் படித்தால் அதுவே மகத்தான லோகானுபவங்களை உண்டாக்கிவிடும் போலிருக்கிறதே! பாவம்! பேசுவது போலவே தன்னுடைய மனத்தினுள்ளதைக் கொட்டி அளந்துவிட்டாள். நான் கிராமத்தை வெறுத்துச் சண்டையிட்டு வீணாக அவர் மனதை நோவடிக்கிறேன். இவள் பட்டணத்தை வெறுத்துத் தன் கொச்சை பாஷையில் அதன் உண்மை ஸ்வரூபத்தை படம் பிடித்துக் காட்டி விட்டாளே !.. என்ன உலக விசித்திரம் !.."

(சித்ராவின் வினோதம்' குறுநாவலில் இருந்து)

நூல்வெளி: சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல். பரிசுபெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது. வள்ளல்களாகக் கருதப்பட்ட குறுநில மன்னர்கள் பற்றிய செய்திகள் இப்பாடப்பகுதியில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

நூல்வெளி: கும்மிப் பாடல்கள்

நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள கும்மிப் பாடல்கள் 'தேயிலைத் தோட்டப் பாட்டாளி மக்களின் பரிதாபச் சிந்து' என்னும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டவை. மக்கள் இயல்பாகத் தங்கள் வாழ்வில் ஏற்படும் தாக்கங்களைப் பாடல்கள், கதைப்பாடல்கள் உள்ளிட்ட இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்துகின்றனர்.

பல்வேறு பொருள்கள் பற்றிய இவ்வெளிப்பாடுகள் மெல்லிய தாளில், பெரிய எழுத்தில், மலிவான அச்சில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சிறு சிறு நூல்களாக வெளியிடப்பட்டன. வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள், காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள், பெரிய எழுத்துப் புத்தகங்கள், தெருப்பாடல்கள் என்று இந்நூல்கள் பலவாறாக அழைக்கப்பட்டன. செவ்வியல் இலக்கிய மரபு பாடாத, சொல்லாத அல்லது புறக்கணித்த கருப்பொருள்களை எல்லாம் இத்தகைய நூல்கள் பாடுபொருள்களாக்கின.

நூல்வெளி: புறநானூறு

இப்பாடப்பகுதி புறநானூற்றின் 184ஆவது பாடல் ஆகும். புறநானூறு புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்பெறுகிறது; பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது. முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மன்னர்கள், போர்ச் செய்திகள், கையறுநிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தும் இந்நூலை 1894ஆம் ஆண்டு உ.வே.சா. அச்சில் பதிப்பித்தார்.

இதன் சிறப்புக் கருதி இதனைப் பலரும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ். எல் ஹார்ட் The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் 1999ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இப்பாடலின் ஆசிரியர் பிசிராந்தையார். பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன், அறிவுடை நம்பி. இவர் அரசனுக்கு அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோராவார்.

நூல்வெளி: ஐராவதம் மகாதேவன்

ஐராவதம் மகாதேவன் எழுதிய இக்கட்டுரை ‘ஆவணம்’ இதழில் வெளிவந்தது. இவர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து, தொல்லியலிலும் எழுத்தியலிலும் கொண்ட ஆர்வத்தால் விருப்ப ஓய்வு பெற்றார். தனக்கு மிகவும் விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டார். சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று அவர் கண்ட முடிவு, வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

அவருடைய ஆய்வுகள் ஐந்திற்கும் மேற்பட்ட நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளன. ஆய்வுக்காக ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது (1970), இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992), தாமரைத்திரு விருது (2009) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர்க் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை இவர் கண்டுபிடித்தது, இலக்கியத்தையும் கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது. பாறைகளிலிருந்த பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கி இவர் தந்தது, இமயப் பணி.

தெரிந்து தெளிவோம்: பழந்தமிழ் எழுத்து வடிவங்கள்

தென்தமிழ் நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் 'பிராம்மி' வரிவடிவத்துடன் தமிழி, தரமிழி, திராவிடி என்று அழைக்கப்படுகிற வேறுபட்ட வரிவடிவங்களும் இருப்பதை ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககாலக் கல்வெட்டுகள், இலக்கியத் தரவுகள் ஆகியவற்றில் அசோகர் காலத்திய பிராம்மி வரிவடிவத்திலிருந்து முரண்பாடுகள் தெரியவருகின்றன.

இவற்றை இக்கல்வெட்டுகளை ஆராய்ந்த ஐராவதம் மகாதேவன் தன்னுடைய ஆய்வு நூலான ‘Early Tamil Epigraphy' யில் தெளிவுபடுத்துகிறார். தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரிவடிவத்தைத் ‘தமிழ்ப் பிராம்மி' என்றழைக்காமல் 'தமிழி' என்றோ அல்லது 'பழந்தமிழ்' என்றோ அழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

மாங்குளம் கல்வெட்டுகள்

"1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டுகள் சங்ககாலப் பாண்டிய மன்னனாகிய நெடுஞ்செழியனுடையவை என்றும் அவை கி.மு. (பொ. ஆ.) 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் கண்டுபிடித்தேன்".

ஐராவதம் மகாதேவன், நூற்றாண்டு மாணிக்கம், பக்.109

தெரிந்து தெளிவோம்: ஆய்வு நேர்மை

புகளூர்க் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 6ஆவது, 7ஆவது, 8ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்று ஐராவதம் மகாதேவன் எழுதியிருந்தார். இதை மறுத்து இம்மன்னர்கள் முறையே 7ஆவது, 8ஆவது, 9ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்று விளக்கியிருந்தார் மாணவர் ஒருவர்.

அதைச் சரியென்று உணர்ந்த மகாதேவன் முதல் உலகத்தமிழ் மாநாட்டில் அறிஞர்கள் முன்னிலையில் அதைக்குறிப்பிட்டு அக்கருத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். ஆய்வில் உண்மையை ஏற்றுக்கொள்வது, தவற்றைத் திருத்திக்கொள்வது என்னும் உயரிய நெறி அவரிடம் இருந்தது.

தெரியுமா?

மயிலை சீனி. வேங்கடசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் சொன்ன உருவ விவரிப்பு:

ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; அகன்ற நெற்றி; வட்ட முகம்; எடுப்பான மூக்கு; பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப்பையில் மூக்குக்கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல்துண்டு; இடது கரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் புத்தகப்பை. இப்படியான தோற்றத்துடன் கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே, அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி.

— நாரண. துரைக்கண்ணன்

சான்றோர் சித்திரம்: மா. இராசமாணிக்கனார் (1907-1967)

இளமைப் பருவம்

இவரின் தந்தை அரசுப் பணியாளர் என்பதால் பல ஊர்களில் பணியாற்ற வேண்டியிருந்தது. எனவே தற்போதைய ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்புவரை தெலுங்கு மொழியையே பயின்றார். இளம்வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார். பதினைந்து வயதை அடைந்த நிலையில் ‘இனி இவன் எங்கே படிக்கப் போகிறான்?' என்று முடிவெடுத்து ஒரு தையல் கடையில் அவரது தமையனாரால் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். 'பதினைந்து நாட்கள் வேலை கற்றுக்கொண்டேன்; காஜா எடுக்கக் கற்றுக்கொண்டேன். சிறிய பைகளைத் தையல் இயந்திரத்தில் தைக்கக் கற்றுக்கொண்டேன். நாள்தோறும் இரவில் வீடு திரும்புகையில் கடை உரிமையாளர் எனக்குக் காலணா கொடுப்பார்' என்று பின்னாளில் பதிவு செய்த அவரால் அத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை.

கல்விப் பயணம்

தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். மிகுந்த பொருளாதார நெருக்கடியில் கல்வி பயின்ற அவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதோடு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய பள்ளி இறுதித் தமிழ்த்தேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்பு எழுத்தர், பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர் என வளர்ந்தார். அவர்தான் இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் மிளிர்ந்த தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார்.

ஆய்வுகளும் படைப்புகளும்

ஆய்வு நெறிமுறைகளிலும் அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளைக் கையாண்ட இவர், சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்; சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் 'மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே. உமாமகேசுவரன், ந.மு. வேங்கடசாமி, ஆகியோராலும் உ.வே. சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட இவர் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். 2006-2007ஆம் ஆண்டு இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய, கிரேக்கத் தொன்ம ஒப்புமைகள்

ஒவ்வொரு சமூகத்திலும் தொன்மங்கள் இருக்கின்றன. அவற்றுக்குள் ஒற்றுமைகள் இருக்கின்றன. ஓரிடத்திலிருந்து மனித இனம் பிரிந்து வேறு இடத்தில் சென்று வாழ்வதை இவை உணர்த்துகின்றன. கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் நிறைய ஒப்புமைகள் உள்ளன.

  • இந்திரன் - சீயஸ்பிடர்
  • வருணன் - ஊரனாஸ்
  • பலராமன் - டயானிசிஸ்
  • கார்த்திகேயன் - மார்ஸ்
  • சூரியன் - அப்பல்லோ, சந்திரன் - லூனஸ்
  • விஸ்வகர்மன் - வன்கன்
  • கணேசன் - ஜோனஸ்
  • துர்க்கை - ஜீனோ
  • சரஸ்வதி - மினர்வா
  • காமன் - இராஸ்

என்று பல ஒப்புமைகள் உள்ளன. இவை இன மரபுகளை ஆய்வதற்கும் உதவக் கூடியவை.

கடையெழு வள்ளல்களும் - ஆண்ட நாடுகளும்

  • பேகன்: பேகனின் ஊரான ஆவினன்குடி 'பொதினி' என்றழைக்கப்பட்டு, தற்போது பழனி எனப்படுகிறது. பழனி மலையும் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளும் பேகனது நாடாகும். (செயல்: மயிலுக்குப் போர்வை தந்தவர்)
  • பாரி: பாரியின் நாடு பறம்பு மலையும், அதைச் சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும். பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது பிரான்மலை எனப்படுகிறது. இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. (செயல்: முல்லைக்குத் தேர் தந்தவர்)
  • காரி (மலையமான் திருமுடிக்காரி): காரியின் நாடு மலையமான் நாடு என்பதாகும். இது மருவி 'மலாடு' எனப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.
  • ஆய் அண்டிரன்: ஆய் நாடு பொதிய மலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும். தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.
  • அதியமான் (அதிகமான் நெடுமான் அஞ்சி): அதியமான் நாடு 'தகடூர்’ என்றழைக்கப்பட்ட தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய பகுதி. இப்பகுதியில் உள்ள பூரிக்கல் மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியையே ஒளவையாருக்கு அதிகமான் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
  • நள்ளி (நளிமலை நாடன்): நள்ளியின் நாடு நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி. தற்போது உதகமண்டலம் 'ஊட்டி' என்று கூறப்படுகிறது.
  • வல்வில் ஓரி: ஓரியின் நாடு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள **‘கொல்லி மலை’**யும் அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும்.

மற்றொரு வள்ளல் குமணன்

புறநானூறு குறிப்பிடும் மற்றொரு வள்ளல் குமணன். இவன் முதிர மலையை (பழனி மலைத்தொடர்களில் ஒன்று) ஆட்சி செய்த குறுநில மன்னனாவான். தன் தம்பியாகிய இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் காட்டில் மறைந்து வாழ்ந்தான். இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொய்து தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான். அப்போது தன்னை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால், தன் இடையிலுள்ள உறைவாளைத் தந்து, "தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு" கேட்டுக் கொண்டான். இதனால் இவன் ‘தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்’ என்று போற்றப்படுகிறான்.

தெரிந்து தெளிவோம்: புதிய செய்தி காணும் ஆய்வு

சேரன் கொடிக்கு வில், சோழன் கொடிக்கு புலி, பாண்டியன் கொடிக்கு மீன் என்று மரபான சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்ற சின்னங்கள் பற்றிய குறிப்புகள் ஆய்வுலகு அறியாதவை. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி. வேங்கடசாமி. இப்படி அவர் வெளிப்படுத்திய அரிய செய்திகள் பற்பல.

நூல்வெளி: இரட்சணிய யாத்திரிகம்

ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய Pilgrim's Progress எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் படைக்கப்பட்டது. இது 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம். இது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது. இக்காப்பியத்தின் குமார பருவத்தில் உள்ள இரட்சணிய சரித படலத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.

இதன் ஆசிரியர் எச்.ஏ. கிருட்டிணனார். பிற சமய இலக்கியங்களைப் போலவே கிறித்துவ சமய இலக்கியங்களும் தமிழ் இலக்கிய வளமைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன. எச்.ஏ. கிருட்டிணனார் போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். இவரைக் கிறித்துவக் கம்பர் என்று போற்றுவர்.

தகவல்

திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த 'நற்போதகம்' எனும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் பதின்மூன்று ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. இரட்சணிய யாத்திரிகம், 1894ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.

நூல்வெளி: சுகந்தி சுப்பிரமணியன்

'சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்' என்னும் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றிருக்கிறது. தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுகந்தி சுப்ரமணியன். கோவை புறநகரின் ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவர், உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.

தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவருடைய மறைவுக்குப் பிறகு இவரின் கவிதைகளும் சில சிறுகதைகளும் சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளன.

நூல்வெளி: சாந்தா தத்

சாந்தா தத் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்படைப்பாளர். அமுதசுரபியில் வெளியான 'கோடை மழை' என்னும் இச்சிறுகதை 'இலக்கியச் சிந்தனை' அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது. இவர் தற்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத் துறைக்குத் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார். பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் ஹைதராபாத்தில் வெளியாகும் ‘நிறை’ மாத இதழின் ஆசிரியராக உள்ளார், ‘திசை எட்டும்' என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார். இவருடைய மொழிபெயர்ப்புகளைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. மனித நேயம் இவர் கதைகளில் வெளிப்படும் அடிப்படைப் பண்பாகும்.

தெரியுமா?

முல்லைக் கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செயலும் அறியாமையால் செய்யப்பட்டவையல்ல. இஃது அவர்களின் ஈகை உணர்வின் காரணமாகச் செய்யப்பட்டதேயாகும். இச்செயலே இவர்களின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பதாகிவிட்டது. பழமொழி நானூறு, 'அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்று கூறுகிறது.

சான்றோர் சித்திரம்: வ.சுப. மாணிக்கம்

நேர்மையும் கொள்கையும்

பர்மாவில் ரங்கூன் நகரில் உள்ள ஒரு கடையில் அடிப்பையனாகப் (உதவியாள்) பணியாற்றினான் ஒரு சிறுவன். அவனிடம், கடை முதலாளி ஒரு பெயரைக் குறிப்பிட்டு, அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால், ‘முதலாளி உள்ளே இருக்கிறார்’ என்று சொல்லுமாறு வற்புறுத்தினார். அந்தச் சிறுவனோ, "நீங்கள் வெளியிலிருந்தால் அவ்வாறு கூறலாம். இல்லாதபோது எப்படிப் பொய் சொல்வது? சொல்ல மாட்டேன்" என்று பிடிவாதமாகக் கூறினார். அவர், வ.சுப. மாணிக்கம்.

தமிழ்ப் பணிகள்

தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் 'தமிழ் இமயம்' என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப. மாணிக்கம். 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் தமிழ்வழிக் கல்வி இயக்கம் என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர். அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார். திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

படைப்புகள்

சங்கப் பாடல்களின் நுட்பங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் ஆற்றல் மிக்கவரான இவர் தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர். தமிழுக்குப்புதிய சொல்லாக்கங்களையும் உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர். ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமையான அவருக்குத் தமிழக அரசு அவருடைய மறைவிற்குப் பிறகு, திருவள்ளுவர் விருது வழங்கியதுடன் 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடைமையாக்கிச் சிறப்புச் செய்தது.

தமிழ்த்திறத்துக்கு ஒரு பதம்

கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் விற்பதற்கு மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்.

அறிவோம் தெளிவோம்: தொல்காப்பியம் கூறும் செய்யுள் உறுப்புகள் - 34

மாத்திரைநோக்குபயன்அழகுதொன்மை
எழுத்துபாமெய்ப்பாடுஅம்மைதோல்
அசைஅளவுஎச்சம்விருந்து
சீர்திணைமுன்னம்இயைபு
அடிகைகோள்பொருள்புலன்
யாப்புகூற்றுதுறைஇழைபு
மரபுகேட்போர்மாட்டு
தூக்குகளன்வண்ணம்
தொடைகாலம்

சங்க இலக்கியம்

எட்டுத்தொகை

அகம் (Internal)புறம் (External)அகம், புறம் (Both)
நற்றிணைபதிற்றுப்பத்துபரிபாடல்
குறுந்தொகைபுறநானூறு
ஐங்குறுநூறு
கலித்தொகை
அகநானூறு

பத்துப்பாட்டு

அகம் (Internal)புறம் (External)
குறிஞ்சிப்பாட்டுதிருமுருகாற்றுப்படை
முல்லைப்பாட்டுபொருநராற்றுப்படை
பட்டினப்பாலைசிறுபாணாற்றுப்படை
நெடுநல்வாடைபெரும்பாணாற்றுப்படை
மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)
மதுரைக்காஞ்சி

பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்கள்

நூல்கள்ஆசிரியர்
திருக்குறள்திருவள்ளுவர்
நாலடியார்சமணமுனிவர்கள்
நான்மணிக்கடிகைவிளம்பிநாகனார்
இன்னா நாற்பதுகபிலர்
இனியவை நாற்பதுபூதஞ்சேந்தனார்
திரிகடுகம்நல்லாதனார்
ஆசாரக்கோவைபெருவாயின்முள்ளியார்
பழமொழி நானூறுமுன்றுறையரையனார்
சிறுபஞ்சமூலம்காரியாசான்
ஏலாதிகணிமேதாவியார்
முதுமொழிக்காஞ்சிகூடலூர்கிழார்

அறிவோம் தெளிவோம்: களவழி நாற்பது

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் களவழி நாற்பது. களத்தை ஏர்க்களம், போர்க்களம் என்று இருவகைப்படுத்துவர். நெல் முதலானவற்றை அடித்துத் தூற்றும் களத்தைப் பாடுவது ஏர்க்களம். பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது போர்க்களம். போர்க்களத்தைப் பாடும் நூலே களவழி நாற்பது.

கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால், அவனை மீட்க பொய்கையார் பாடியதே இந்நூல்.

யானைப் போர் பற்றிக் குறிப்பிடப்படுவதால் பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு இந்நூலே காரணம் என்பர். இதிலுள்ள ஒவ்வொரு பாடலின் இறுதி சொல்லும் 'அட்டக்களத்து' என்று முடிவது இதன் சிறப்பு.

அறிவோம் தெளிவோம்

திரிகடுகம்சிறுபஞ்சமூலம்ஏலாதி
சுக்குகண்டங்கத்திரிஏலம்
மிளகுசிறுவழுதுணைஇலவங்கம்
திப்பிலிசிறுமல்லிநாககேசுரம்
பெருமல்லிதிப்பிலி
நெருஞ்சிசுக்கு
மிளகு

அறிவோம் தெளிவோம்: பன்னிரு திருமுறைகள்

திருமுறைகள்நூல்கள்ஆசிரியர்கள்
முதல், இரண்டாம், மூன்றாம் திருமுறைதேவாரம்திருஞான சம்பந்தர்
நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைதேவாரம்திருநாவுக்கரசர்
ஏழாம் திருமுறைதேவாரம்சுந்தரர்
எட்டாம் திருமுறைதிருவாசகம், திருக்கோவையார்மாணிக்கவாசகர்
ஒன்பதாம் திருமுறைதிருவிசைப்பா, திருப்பல்லாண்டுதிருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்
பத்தாம் திருமுறைதிருமந்திரம்திருமூலர்
பதினோராம் திருமுறை40 நூல்களின் தொகுப்புகாரைக்காலம்மையார் உள்ளிட்ட பன்னிரண்டு பேர்
பன்னிரண்டாம் திருமுறைதிருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்)சேக்கிழார்

அறிவோம் தெளிவோம்: பன்னிரு ஆழ்வார்கள்

வரிசை எண்ஆழ்வார்கள்நூல்கள்
1.பொய்கையாழ்வார்முதல் திருவந்தாதி
2.பூதத்தாழ்வார்இரண்டாம் திருவந்தாதி
3.பேயாழ்வார்மூன்றாம் திருவந்தாதி
4.திருமழிசையாழ்வார்நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்
5.நம்மாழ்வார்திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
6.குலசேகராழ்வார்பெருமாள் திருமொழி
7.தொண்டரடிப் பொடியாழ்வார்திருமலை, திருப்பள்ளியெழுச்சி
8.பெரியாழ்வார்திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
9.ஆண்டாள்நாச்சியார் திருமொழி, திருப்பாவை
10.திருப்பாணாழ்வார்அமலனாதிபிரான் (10 பாசுரங்கள்)
11.திருமங்கையாழ்வார்பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்
12.மதுரகவியாழ்வார்கண்ணிநுண் சிறுத்தாம்பு (11 பாசுரங்கள்)

இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள்

பழங்காப்பிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும், புதுக்கவிதை போன்ற புதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களும் இருபதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டன. பாரதியின் பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, புரட்சிக்கவி, வீரத்தாய் போன்றன இவ்வகையில் அடங்குவன. கவிமணி தேசிக விநாயகம் எழுதிய மருமக்கள்வழி மான்மியம், கண்ணதாசனின் ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், மாங்கனி, முடியரசனின் பூங்கொடி, வீரகாவியம், கவியோகி சுத்தானந்த பாரதியின் பாரதசக்தி மகாகாவியம், சாலை இளந்திரையனின் சிலம்பின் சிறுநகை, புலவர் குழந்தையின் இராவண காவியம் போன்ற காப்பியங்கள் பழங்காப்பிய மரபைப் பின்பற்றிப் படைக்கப்பட்டவை.

யாப்பு வடிவத்தை உடைத்து வளர்த்தெடுக்கப்பட்ட புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் தற்காலத்தில் படைக்கப்படுகின்றன.

  • வைரமுத்து: பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில் கவிராஜன் கதை என்னும் பெயரில் காப்பியமாகப் படைத்துள்ளார்.
  • கவிஞர் வாலி: இராமாயணத்தை அவதார புருஷன் என்ற பெயரிலும், மகாபாரதத்தைப் பாண்டவர் பூமி என்ற பெயரிலும் புதுக்கவிதை வடிவில் காப்பியமாக்கியுள்ளார்.

சிற்றிலக்கிய வகைகள் - 96

  1. அகப்பொருள்கோவை
  2. அங்கமாலை
  3. அட்டமங்கலம்
  4. அநுராகமாலை
  5. அரசன் விருத்தம்
  6. அலங்கார பஞ்சகம்
  7. ஆற்றுப்படை
  8. இணைமணி மாலை
  9. இயன்மொழி வாழ்த்து
  10. இரட்டை மணிமாலை
  11. இருபா இருபஃது
  12. உலா
  13. உலாமடல்
  14. உழத்திப்பாட்டு
  15. உழிஞைமாலை
  16. உற்பவ மாலை
  17. ஊசல்
  18. ஊர் நேரிசை
  19. ஊர் வெண்பா
  20. ஊரின்னிசை
  21. எண் செய்யுள்
  22. எழு கூற்றிருக்கை
  23. ஐந்திணைச் செய்யுள்
  24. ஒருபா ஒருபஃது
  25. ஒலியல் அந்தாதி
  26. கடிகை வெண்பா
  27. கடைநிலை
  28. கண்படை நிலை
  29. கலம்பகம்
  30. காஞ்சி மாலை
  31. காப்பியம்
  32. காப்பு மாலை
  33. குழமகன்
  34. குறத்திப்பாட்டு
  35. கேசாதி பாதம்
  36. கைக்கிளை
  37. கையறுநிலை
  38. சதகம்
  39. சாதகம்
  40. சின்னப் பூ
  41. செருக்கள வஞ்சி
  42. செவியறிவுறுஉ
  43. தசாங்கத்தயல்
  44. தசாங்கப்பத்து
  45. தண்டக மாலை
  46. தாண்டகம்
  47. தாரகை மாலை
  48. தானை மாலை
  49. தும்பை மாலை
  50. தூது
  51. தொகைநிலைச் செய்யுள்
  52. நயனப்பத்து
  53. நவமணி மாலை
  54. நாம மாலை
  55. நாற்பது
  56. நான்மணி மாலை
  57. நூற்றந்தாதி
  58. நொச்சிமாலை
  59. பதிகம்
  60. பதிற்றந்தாதி
  61. பயோதரப்பத்து
  62. பரணி
  63. பல்சந்த மாலை
  64. பவனிக்காதல்
  65. பன்மணி மாலை
  66. பாதாதி கேசம்
  67. பிள்ளைக்கவி (பிள்ளைத்தமிழ்)
  68. புகழ்ச்சி மாலை
  69. புறநிலை
  70. புறநிலை வாழ்த்து
  71. பெயர் நேரிசை
  72. பெயர் இன்னிசை
  73. பெருங்காப்பியம்
  74. பெருமகிழ்ச்சிமாலை
  75. பெருமங்கலம்
  76. போர்க்கெழு வஞ்சி
  77. மங்கல வள்ளை
  78. மணிமாலை
  79. முதுகாஞ்சி
  80. மும்மணிக்கோவை
  81. மும்மணிமாலை
  82. மெய்க்கீர்த்தி மாலை
  83. வசந்த மாலை
  84. வரலாற்று வஞ்சி
  85. வருக்கக் கோவை
  86. வருக்க மாலை
  87. வளமடல் - மடலேறுதல்
  88. வாகை மாலை
  89. வாதோரண மஞ்சரி
  90. வாயுறை வாழ்த்து
  91. விருத்த இலக்கணம்
  92. விளக்கு நிலை
  93. வீர வெட்சி மாலை
  94. வெற்றிக் கரந்தை மஞ்சரி
  95. வேனில் மாலை

சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினங்கள்

வ.எண்ஆண்டுநூல்ஆசிரியர்
11956அலை ஓசைகல்கி
21961அகல் விளக்குமு. வரதராசன்
31963வேங்கையின் மைந்தன்அகிலன்
41971சமுதாய வீதிநா. பார்த்தசாரதி
51972சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்
61973வேருக்கு நீர்ராஜம் கிருஷ்ணன்
71977குருதிப் புனல்இந்திரா பார்த்தசாரதி
81980சேரமான் காதலிகண்ணதாசன்
91984ஒரு காவிரியைப் போலலக்ஷ்மி
101990வேரில் பழுத்த பலாசு. சமுத்திரம்
111991கோபல்லபுரத்து மக்கள்கி. ராஜநாராயணன்
121992குற்றாலக் குறிஞ்சிகோவி. மணிசேகரன்
131993காதுகள்எம்.வி. வெங்கட்ராம்
141994புதிய தரிசனங்கள்பொன்னீலன்
151995வானம் வசப்படும்பிரபஞ்சன்
161997சாய்வு நாற்காலிதோப்பில் முகமது மீரான்
171998விசாரணைக் கமிஷன்சா. கந்தசாமி
182001சுதந்திர தாகம்சி.சு. செல்லப்பா
192003கள்ளிக்காட்டு இதிகாசம்வைரமுத்து
202005கல்மரம்ஜி. திலகவதி
212007இலையுதிர் காலம்நீல பத்மநாபன்
222011காவல் கோட்டம்சு. வெங்கடேசன்
232012தோல்டி. செல்வராஜ்
242013கொற்கைஜோ டி குரூஸ்
252014அஞ்ஞாடிபூமணி
262015இலக்கியச்சுவடுகள்ஆ. மாதவன்
272018சஞ்சாரம்எஸ். ராமகிருஷ்ணன்
282019சூல்சோ. தர்மன்

படைப்பு முகம்: ஜி. திலகவதி (1951)

தமிழகக் காவல்துறையின் முதல் பெண் தலைமை இயக்குநராகப் பணியாற்றிய இவர், தமிழின் சிறந்த எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். பெண்கள் சமூகத்தின் பலதளங்களில் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளைப் பிரதிபலிப்பவை இவரது படைப்புகள். இவர் சிறுகதைகள், குறும்புதினங்கள், புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 60க்கும் மேற்பட்ட படைப்புகளைப் படைத்துள்ளார். ஒரு பதிப்பாளராகவும் விளங்கி, சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.

புதினம் மற்றும் குறும்புதினம்

'நாவெலா' என்னும் இத்தாலிய மொழிச் சொல்லிருந்து, 'நாவல்’ என்னும் ஆங்கிலச்சொல் பிறந்தது. இச்சொல் புதுமை என்னும் பொருளுடையது. இதனால், நாவலைப் 'புதினம்’ என்றழைத்தனர். உண்மை நிகழ்ச்சிகளையும் செயல்களையும் கூறியதுடன், கற்பனை மாந்தரையும் நிகழ்ச்சிகளையும் படைத்துப் புனைந்து கூறியமையால் புதினம், புனைகதை என்னும் பெயரும் பெற்றது. தற்காலத்தில் கவிதையின் கற்பனை அழகுகளையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் உரைநடை மூலம் தருகின்ற சிறந்ததொரு கலைவடிவமாகப் புதினம் திகழ்கிறது.

குறும்புதினங்கள் சிறுகதையின் போக்கிலிருந்து சற்று மாறுபட்டவை. இதன் கதைப்பின்னல் நீண்ட வரலாறு போல் அமையாமல் சிறுகதை போல் அமைந்திருக்கும். இவ்வகைப் புதினங்கள், புதினங்களாகவும் இல்லாமல் சிறுகதைகள் போலவும் இல்லாமல் அமையும் ஒருவகை புனைகதை இலக்கியம் என பிரெஞ்சு திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். புதினத்திலிருந்து அளவால் சுருங்கியதாக இருந்தாலும் இது புதினத்தின் ஒரு பிரிவாகும்.

புதின இலக்கியங்களிலிருந்து குறும்புதினங்கள் வேறுபடுவதற்கு அடிப்படைக் காரணமாகக் கதைக்கரு வெளிப்படுத்தும் முறை அமைகின்றது. கதை, நிகழ்ச்சியை நோக்கி அமைந்தால் அதனைக் குறும்புதினம் என்றும், நிகழ்ச்சிக்கு அப்பால் கதைக்கரு அமைந்தால் அதனைப் புதினம் என்றும் கூறலாம். சிறுகதையிலிருந்து மாற்றம் பெற்ற புனைகதை வடிவமே குறும்புதின இலக்கியம்.

படைப்பு முகம்: சா. கந்தசாமி (1940)

சாயாவனம் புதினத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் சா. கந்தசாமி. இவரது படைப்புகளாக 7 புதினங்கள், 11 சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கசடதபற இதழின் மூலம் புகழ்பெற்றவர்களுள் இவரும் ஒருவர். 'சுடுமண் சிலைகள்' என்ற தமிழகப் பாரம்பரியக் கலைகள் பற்றிய குறும்படம் சர்வதேச விருது பெற்றது. சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரின் வாழ்வும் பணியும் பற்றிய குறும்படங்கள் எடுத்துள்ளார். 1998-இல் இவரது 'விசாரணைக் கமிஷன்’ புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

அறிவோம் தெளிவோம்: புக்கர் பரிசுகள்

புக்கர் பரிசு (Man Booker Prize for Fiction)

புக்கர் பரிசு (Booker Prize) அல்லது புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு (Man Booker Prize for Fiction), ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள புதினங்களுக்கு வழங்கப்படும் பரிசாகும். காமன்வெல்த் நாடுகள் அல்லது அயர்லாந்துக் குடியரசைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும் புதினங்களுக்கே இப்பரிசு வழங்கப்படுகின்றது. இது 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலக்கியத்துக்காக வழங்கப்படும் பரிசுகளில் புனைவு இலக்கிய எழுத்தாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த பெருமைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகின்றது.

மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு (Man Booker International Prize)

மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு (Man Booker International Prize) இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டளவில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளில் ஒன்றாகும். எந்த நாட்டினராக இருப்பினும் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஆக்கத்திற்காக வாழும் எழுத்தாளர் ஒருவருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. மான் குழுமத்தினரால் 2005ஆம் ஆண்டு முதல் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. ஓர் எழுத்தாளரின் தொடர்ந்த புத்தாக்கம், புனைகதைக்குப் பங்காற்றல் மற்றும் வளர்ச்சிக்காக இப்பரிசு அளிக்கப்படுகிறது. எனவே இது எழுத்தாளரின் ஆக்கத்தொகுதிக்கான பரிசாகும்.

படைப்பு முகம்: அசோகமித்திரன் (1931 -2017)

இயற்பெயர் ஜ. தியாகராஜன். கணையாழி இலக்கிய மாத இதழில் பல ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறுகதை, குறும்புதினம், புதினம், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவம் போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்குமேல் எழுதியுள்ளார். இந்திய, ஐரோப்பிய மொழிகளில் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்பிற்கு 1996 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. நகரத்தின் எளிய நடுத்தர வாழ்க்கையின் ஊடாக அமைந்ததே அசோகமித்திரனின் படைப்புகள்.

படைப்பு முகம்: தகழி சிவசங்கரன் (1912 -1999)

மலையாள மொழியின் யதார்த்தவாத முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவர் தகழி சிவசங்கரன். இவர் மலையாள மொழியில் 36 நாவல்களையும் 500க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ஒரு நாடகத்தையும் எழுதியுள்ளார். கேரளத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவி நிலைநாட்டியவர் தகழி. அத்துடன் கேரள சாகித்திய அகாதெமி என்ற அமைப்பை தலைமை ஏற்று திறம்பட நடத்தியிருக்கிறார். 'ஏணிப்படிகள்' என்ற புதினத்திற்கு கேந்திர சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு இவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது.

படிப்போம் சுவைப்போம்: ஞானபீட விருது

ஞானபீட விருது (Jnanpith Award) என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதாகும். இவ்விருது, பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகத்தால் வழங்கப்படுகிறது. இது 1961இல் சாகு சாந்தி பிரசாத் ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.

1965இல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டது. 'முதல் பிரதிஸ்ருதி' என்ற புதினத்திற்காக இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆஷா பூர்ணாதேவி.

ஓர் எழுத்தாளரின் சிறந்த படைப்பிற்காக 1982ஆம் ஆண்டு வரை ஞானபீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

தமிழில் 1975இல் சித்திரப்பாவை புதினத்திற்காக அகிலனும், 2002இல் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ஜெயகாந்தனும் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

படைப்பு முகம்: ஹெப்சிபா ஜேசுதாசன் (1925-2012)

'புத்தம் வீடு' புதினத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹெப்சிபா ஜேசுதாசன். திருவனந்தபுரம் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் 4 புதினங்களும் ஆங்கிலத்தில் பாரதியாரின் குயில்பாட்டை மொழிபெயர்த்ததுடன் கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியங்களையும் படைத்துள்ளார். 2002 இல் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் இவருக்கு விளக்கு விருது வழங்கியுள்ளது.

படைப்பு முகம்: மாக்சிம் கார்க்கி (1868-1936)

உலகப்புகழ் பெற்ற இலக்கியப் படைப்பாளர்கள் வரிசையில் முன்நிற்பவர் மாக்சிம் கார்க்கி. இவர் ரஷ்யாவிலுள்ள நிழ்னி நோவோகார்டு என்னும் இடத்தில் பிறந்தார். இயற்பெயர் அலெக்ஸி மாக்சிகொவிச் பெஸ்கோவ். இவர் எழுதிய தாய் என்னும் புதினம் உலகப்புகழ் பெற்றது.

இவர் செருப்புத் தைப்பது, மூட்டை தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில் பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக் காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என பலதரப்பட்ட வேலைகளையும் செய்தவர். வாழ்க்கையின் வறுமையான பக்கங்களைத் தாம் அனுபவித்ததால்தான் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை அவரால் படைக்க முடிந்தது.

ரஷ்யப் புரட்சியாளர் லெனினுடன் ஏற்பட்ட தொடர்பால் இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். ஒரு மகனை நேசிப்பதைப்போல் லெனின் கார்க்கியை நேசித்தார். லெனின் புரட்சி நிதிவேண்டி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து அவரால் எழுதப்பட்டதுதான் தாய் புதினம். கார்க்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்தப்புதினம்தான்.

படிப்போம் சுவைப்போம்: நோபல் பரிசு

ஆல்பிரட் நோபலின் பெயரில் 1895ஆம் ஆண்டு நோபல் அறக்கட்டளை நிறுவப்பட்டது. இது சுவீடிய அரசு கல்விக்கழகத்தாலும் கரோலின்கா நிறுவனத்தாலும் நார்வே நோபல் குழுவாலும் தனியொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வழங்கப்படுகிறது. 1901ஆம் ஆண்டு முதல் வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மருத்துவம் ஆகிய துறைகளில் பெரும்பங்களிப்பு நல்கியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது. 1968ஆம் ஆண்டிலிருந்து பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசும் வழங்கப்பட்டு வருகின்றது.

இரவீந்திர நாத் தாகூர் 1913ஆம் ஆண்டு தமது கீதாஞ்சலி என்ற நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.

நவீன நாடக ஆசிரியர்களும் நாடகங்களும்

  • ந. முத்துசாமி: காலம் காலமாக, நாற்காலிக்காரர், அப்பாவும் பிள்ளையும், இங்கிலாந்து, சுவரொட்டிகள், உந்திச்சுழி, கட்டியக்காரன், விறகுவெட்டிகள், வண்டிச்சோடை, நற்றுணையப்பன் அல்லது கடவுள்.
  • இந்திரா பார்த்தசாரதி: இறுதி ஆட்டம், கொங்கைத்தீ, நந்தன் கதை, பசி, மழை, காலயந்திரங்கள், புனரபி ஜனனம் புனரபி மரணம், தர்மம், போர்வை போர்த்திய உடல்கள்.
  • சே. இராமானுஜம்: புறஞ்சேரி, பிணம் தின்னும் சாத்திரங்கள், சுமை, முகப்போலிகள், சஞ்சயன் காட்சி தருகிறான், அக்கினிக்குஞ்சு, கேகயன் மடந்தை, வெறியாட்டம், செம்பவளக்காளி, மௌனக்குறம்.
  • மு. இராமசுவாமி: துர்க்கிர அவலம், சாபம்! விமோசனம்?, புரட்சிக்கவி, ஆபுத்திரன்.
  • பிரபஞ்சன்: முட்டை, அகல்யா.
  • ஜெயந்தன்: மனுசா மனுசா, நினைக்கப்படும்
  • ஞான ராஜசேகரன்: வயிறு, மரபு, பாடலிபுத்திரம்.
  • பிரளயன்: உபகதை, நவீன மத்தவிலாசப் பிரகடனம் அல்லது காஞ்சித் தலைவி
  • எம்.டி.முத்து குமாரசாமி: சைபீரிய நாரைகள் இனி இங்கு வரப் போவதில்லை, குதிரைக்காரன் கதை.
  • இன்குலாப்: மணிமேகலை.
  • எஸ்.எம்.ஏ. ராம்: சுயதர்மம், மூடிய அறை, மணிமேகலையின் கண்ணீர், எப்போ வருவாரோ.
  • கே.ஏ. குணசேகரன்: பலி ஆடுகள், சத்தியசோதனை, பவளக்கொடி அல்லது குடும்பவழக்கு, அறிகுறி, பாறையைப் பிளந்து கொண்டு, கனவுலகவாசி, தொட்டில் தொடங்கி.
  • ரமேஷ் - பிரேம்: ஆதியிலே மாம்சம் இருந்தது, அமீபாக்களின் காதல்
  • எஸ். ராமகிருஷ்ணன்: உருளும் பாறைகள், தனித்திருக்கப்பட்டவர்கள், சூரியனின் அறுபட்ட சிறகுகள், அரவான்.
  • அ. ராமசாமி: ஒத்திகை, மூட தேசத்து முட்டாள் ராஜா, தொடரும் ஒத்திகைகள், 10 குறு நாடகங்கள்
  • வ. ஆறுமுகம்: கருஞ்சுழி, ஊசி, தூங்கிகள்.
  • முருகபூபதி: சரித்திரத்தின் அதீத ம்யூசியம், கண்ணாடியுள் அலைவுறும் பிம்பங்கள், வனத்தாதி, தேகவயல், ரகசிய நிழல்கள், தனித்திருக்கப்பட்டவர்கள், கூந்தல் நகரம், செம்மூதாய்.

நவீன நாடகக் குழுக்கள்

நாடகக் குழுக்கள்இடம்
கூத்துப்பட்டறைசென்னை
நிஜநாடக இயக்கம்மதுரை
பரீக்ஷாசென்னை
வீதிசென்னை
முத்ராசென்னை
தளிர் அரங்குகாந்தி கிராமம்
துளிர்தஞ்சை
அரங்கம்தஞ்சை
எது?சென்னை
சுதேசிகள்மதுரை
ஜ்வாலாமதுரை
பல்கலை அரங்கம்சென்னை
ஐக்யாசென்னை
திருச்சி நாடகச் சங்கம்திருச்சி
யவனிகாசென்னை
ஒத்திகைமதுரை
தியேட்டர் லெப்ட்மதுரை
தலைக்கோல்புதுவை
கூட்டுக்குரல்புதுவை
கூடம்சென்னை
தன்னானே கலைக்குழுபுதுவை
ஆழிபுதுவை
சென்னை முற்போக்கு எழுத்தாளர் கலைக்குழுசென்னை

அறிவோம் தெளிவோம்: சமயங்களின் பொதுநீதி

நிலத்தின் கடினத்தன்மையை இளக்கி நெகிழச்செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவது உழவு. சுவையுடையனவாக, ஆனால் ஒன்றோடொன்று மாறுபட்ட சுவையுடையனவாகிய பொருள்களைச் சுவைத்தற்குரிய சுவையுடையனவாக ஆக்குவது சமைத்தல்.

மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு, வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பது பெயர். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம்.

- குன்றக்குடி அடிகளார்

அறிவோம் தெளிவோம்: நாடகப் பயிற்சிப் பட்டறைகள்

தமிழில் நவீன நாடகத்திற்கான அடிப்படைகளை உருவாக்கியதில் குறிப்பிடத்தக்க பயிற்சிப் பட்டறைகள்:

  • தேசிய நாடகப்பள்ளியின் மூலம் 1977இல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் ஒருவார நாடகப் பயிற்சிப் பட்டறை.
  • 1978இல் தேசிய நாடகப் பள்ளியும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் சேர்ந்து நடத்திய எழுபது நாள் நாடகப் பயிற்சிப் பட்டறை.
  • பாதல் சர்க்கார் அவர்களைக் கொண்டு 1980இல் சென்னையில் நடத்தப்பட்ட பத்து நாள் பயிற்சிப் பட்டறை.

உலகளாவிய திரைப்பட விருதுகள்

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதெமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகள் ஆகும். ஆஸ்கர் விழாவை 1927 இல் நிறுவப்பட்ட 'அகாதெமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்சஸ்' என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இவ்வமைப்பு 1929ஆம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதினை வழங்கி வருகிறது.

  • ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர்: பானு அத்தையா (காந்தி படத்திற்காக).
  • வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கர் விருது பெற்ற இந்தியர்: சத்தியஜித் ரே.
  • இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்றவர்: இசைக்கலைஞர் ஏ.ஆர். ரகுமான் ('ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படத்திற்காக 2009ஆம் ஆண்டு).

கான்ஸ் உலகத் திரைப்பட விழா

1939-இல் கான்ஸ் உலகத் திரைப்பட விழா பிரான்சில் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரால் தடுமாற்றம் கொண்டதால், அதன் தொடர்ச்சியான ஆண்டுகளில் திரைப்பட விழா நடைபெறவில்லை. மீண்டும் 1949ஆம் ஆண்டிலிருந்து இத்திரைப்பட விழாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உருவானது. 1955ஆம் ஆண்டிலிருந்து தங்கப் பனை (The Golden Palm) விருது வழங்கப்படுகிறது.

இவற்றைப் போன்றே பெர்லின் உலகத் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா, மாஸ்கோ திரைப்பட விழா, நியூயார்க் திரைப்பட விமர்சகர் விழா, டோக்கியோ திரைப்பட விழா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

தெரியுமா?

புகழ் மிக்க நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான சார்லி சாப்ளின் ஊமைப்படங்களையே தயாரித்து வருவதைக் கண்டு பொறுமையிழந்த அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் சாப்ளினிடம் கேட்டார்கள். "பேசும் படம் எடுப்பதானால் செலவு கூடுதலாக வரும்தான்; உங்களை விடவும் வசதி குறைந்த தயாரிப்பாளர்கள் எல்லாரும் பேசும் படங்களை எடுக்கும்போது, நீங்கள் மட்டும் இன்னமும் ஊமைப்படங்களையே தயாரிக்கிறீர்களே, ஏன்?" என்று கேட்டார்கள்.

இந்தக் கேள்விக்குச் சார்லி சாப்ளின் இவ்வாறு பதிலுரைத்தார்: "என் படங்கள் ஊமைப்படங்கள் என்று கூறுவதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். அவற்றைப் பார்க்கும் உங்களுக்கு அந்தப் படங்கள் கூறும் செய்தி புரிகிறதல்லவா? அவ்வாறெனில், அந்தப் படங்கள் உங்களோடு பேசிவிட்டன என்று தானே அர்த்தமாகிறது! என் திரைப்படங்கள் திரைக்கே உரிய அதன் சொந்த மொழியில் பேசுகின்றன (It speaks in its own language)" என்றார்.

மேலும் "என் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல், ஆங்கில மொழியில் பேசியிருந்தால், அது ஆங்கிலம் தெரிந்த குறிப்பிட்ட வட்டாரத்திலுள்ள மக்களுக்கு மட்டுமே புரிந்திருக்கும். ஆனால் என் படங்கள் திரைமொழியில் பேசுவதால், உலகின் அனைத்துப் பகுதியிலும் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் புரிகின்றது. என் படங்கள் வட்டார மொழிப் படங்கள் அல்ல. அவை உலகப் பொதுமொழியில் (Universal Language) பேசும் உலக மொழிப் படங்கள் ஆகும்" என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

சர்வதேச திரைப்பட விழா (IFFI)

திரைப்பட ஆர்வலர்களுக்குத் திருவிழா என்பது ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்கள்தாம். இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆதரவுடன், 1952 ஆம் ஆண்டு மும்பையில் முதலில் நடைபெற்றது. அதன்பின் சென்னை, கல்கத்தா, திருவனந்தபுரம், கோவா போன்ற இந்திய நகரங்களில் தொடர்ச்சியாக நடந்துவருகின்றது. இது மத்திய அரசின் அங்கீகாரத்துடன் நடைபெறுகிறது. இதில் 'இந்தியன் பனோரமா' பிரிவில் ஒவ்வோர் ஆண்டும் வெளியான முக்கியமான இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படும்.

தாதாசாகேப் பால்கே விருது

இந்தியத் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும். இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு இவ்விருது வழங்கும் அமைப்பு நிறுவப்பட்டது.

  • முதல் விருது பெற்றவர்: தேவிகா ராணி (1969).
  • தமிழகத்தில் விருது பெற்றவர்கள்: சிவாஜி கணேசன் (1996), கே. பாலச்சந்தர் (2010).

தேசிய திரைப்பட விருது

இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருது தேசிய திரைப்பட விருது. இவ்விருது வழங்கும் அமைப்பு 1954ஆம் ஆண்டு இந்திய அரசால் நிறுவப்பட்டது. இந்திய திரைப்பட விழாக்களின் இயக்குநரகம் 1973 முதல் இவ்விருதுகளை வழங்கி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் குடியரசுத் தலைவரால் புது தில்லியில் இவ்விருது வழங்கப்படுகிறது.

  • முதல் தேசிய விருதினைப் பெற்ற தமிழ்ப்படம்: ‘மலைக்கள்ளன்'.

அறிவோம் தெளிவோம்: நாடக விழாக்கள்

தேசிய சங்கீத நாடக அகாதெமி நடத்திய போட்டியில் மு. இராமசுவாமி, துர்க்கிர அவலம் என்னும் நாடகத்தை அரங்கேற்றினார். பின்னர் பெங்களூரில் நடந்த தென் மண்டல நாடக விழாவிலும், டெல்லியில் நடந்த தேசிய விழாவிலும் இதனை நிகழ்த்திக் காட்டினார். இதனால் இந்திய அரங்கில் தமிழ் நாடகத்திற்கு ஓர் அடையாளம் கிடைத்தது.

தென் மண்டல நாடக விழாவில் நிஜநாடக இயக்க நாடகமான சாபம்! விமோசனம்! அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரையில் முதல் நாடக விழாவை நிஜநாடக இயக்கம் 1988ஆம் ஆண்டு நடத்தியது. திருச்சி தூய வளனார் கல்லூரியில் 1991ஆம் ஆண்டு நடந்த பாதல் சர்க்கார் நாடக விழா குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

அறிவோம் தெளிவோம்

ஆவணப்படம் (Documentary Film)

உலகில் நடக்கும் நிகழ்வுகளை நடந்தவாறே எழுதி அல்லது பதிந்து வைக்கும் உண்மைக் குறிப்பே ஆவணம் ஆகும். திரைப்பட வகைகளில் ஆவணப்படம் என்பதும் ஒன்றாகும். ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போதே படப்பிடிப்புக் கருவி படம்பிடித்த உண்மைச் சம்பவங்களையே உண்மை ஆவணப்படம் என்று கூறுவர். இதனை "டாக்குமெண்டரி ஃபிலிம்" (Documentary Film) என்று ஆங்கிலத்தில் சுட்டுவர். விவரணப்படம், தகவல் படம், செய்திப்படம், சாசனப்படம் என்ற பல பெயர்களால் இதனை அழைப்பர். தமிழின் ஆவணப்பட முன்னோடியான ஏ.கே. செட்டியார் "வாழ்க்கைச் சித்திரப் படம்' என்று இதனைக் குறிப்பிட்டார். இவர் 1940இல் 'மகாத்மா காந்தி' என்னும் ஆவணப்படத்தைத் தயாரித்துப் புதுமையை ஏற்படுத்தியவர்.

1911ஆம் ஆண்டு டில்லியில் ஐந்தாம் ஜார்ஜின் முடிசூட்டு விழாவை எடுத்த படமே இந்தியாவில் உருவாக்கிய முதல் ஆவணப்படம். இதனை மருதப்பன் என்ற தமிழர் உருவாக்கினார்.

குறும்படம் (Short Film)

குறும்படம் என்பது குறைந்த நேரத்திற்குள், அதாவது முப்பது நிமிடத்திற்குள் திரையில் காட்டப்படும் படங்கள் ஆகும். இன்று குறும்படங்கள் ஐந்து நிமிடத்திற்குள் முடிவதும் உண்டு. முழுநீளக் கதைப்படத்தை ஒரு புதினம் என்று சொன்னால், குறும்படத்தை ஒரு சிறுகதை என்று கூறலாம். குறிப்பிட்ட ஒரு நீதியை அல்லது ஒரு கருத்தைச் சட்டென மக்களுக்கு உணர்த்த இவ்வகையான குறும்படங்கள் பயன்படுகின்றன. நடிகர்களை நடிக்க வைத்துத்தான் குறும்படம் உருவாக்க வேண்டும் என்பதில்லை. கருத்துப்படமாகவோ, அசைவூட்டப் படமாகவோ, வரைகலை சித்திரமாகவோ இருக்கலாம். "விம்பம்" (VIMBAM) என்ற அமைப்பு லண்டனில் குறும்பட விழாக்களை 2004ஆம் ஆண்டு முதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தெரியுமா?

1946ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அமைதி என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகம், பாரதிதாசனால் எழுதப்பட்டது. இந்நாடகம் பதினாறு காட்சிகளைக் கொண்டது.

திரைப்படமான சில தமிழ் இலக்கியங்கள்

ஆசிரியர்நூல்திரைப்படம்
ஜே.ஆர். ரங்கராஜூமோகனசுந்தரம்மோகனசுந்தரம்
வடுவூர் துரைசாமிகும்பகோணம் வக்கீல்திகம்பர சாமியார்
வை.மு. கோதைநாயகிராஜ்மோகன்ராஜ்மோகன்
வை.மு. கோதைநாயகிதியாகக்கொடிதியாகக்கொடி
கல்கிபொய்மான் கரடுபொன்வயல்
அகிலன்கயல்விழிமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
அண்ணாதுரைரங்கோன் ராதாரங்கோன் ராதா
அண்ணாதுரைபார்வதி பி.ஏ.பார்வதி பி.ஏ.
மு. கருணாநிதிபொன்னர் சங்கர்பொன்னர் சங்கர்
வெ. ராமலிங்கம் பிள்ளைமலைக்கள்ளன்மலைக்கள்ளன்
பி.எஸ். ராமையாபோலீஸ்காரன் மகள்போலீஸ்காரன் மகள்
மு. வரதராஜன்பெற்ற மனம்பெற்ற மனம்
இந்திரா பார்த்தசாரதிஉச்சி வெயில்மறுபக்கம்
மஹரிஷிபுவனா ஒரு கேள்விக்குறிபுவனா ஒரு கேள்விக்குறி
மணியன்இதய வீணைஇதய வீணை
நீல. பத்மநாபன்தலைமுறைகள்மகிழ்ச்சி
தி. ஜானகிராமன்மோகமுள்மோகமுள்
ரா.கி. ரங்கராஜன்இது சத்தியம்இது சத்தியம்
எஸ்.எஸ். வாசன்சதி லீலாவதிசதி லீலாவதி
சுஜாதாபிரியாபிரியா
சுஜாதாஇருள் வரும் நேரம்வானம் வசப்படும்
டி. செல்வராஜ்தேனீர்தேனீர்
பூமணிகருவேலம்பூக்கள்கருவேலம்பூக்கள்
சி.ஆர். ரவீந்திரன்நண்பா நண்பாநண்பா நண்பா
லக்ஷ்மிபெண் மனம்இருவர் உள்ளம்
லக்ஷ்மிகாஞ்சனையின் கனவுகாஞ்சனா
அனுராதா ரமணன்சிறைசிறை
அனுராதா ரமணன்கூட்டுப்புழுக்கள்கூட்டுப்புழுக்கள்
சிவசங்கரிநண்டுநண்டு
சிவசங்கரிஒரு சிங்கம் முயலாகிறதுஅவன் அவள் அது

அறிவோம் தெளிவோம்: திரைப்பட ரசனை

சிறந்த இலக்கியம் என்பது மனிதர்களை மேம்படுத்தும். சிறந்த திரைப்படம் என்பது மனிதர்களைப் பண்படுத்தும். நம்மை அடுத்த நிலைக்கு நகர்த்தும். சிறந்த ஒரு திரைப்படமானது, மனிதர்களை முற்றிலும் மாற்றும் திறன் உடையது. அப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்குவதே சினிமா ரசனை.

திரைப்படம் வெறும் பொழுதுபோக்கிற்கான கலை வடிவம் அன்று. ஒரு திரைப்படத்தை ரசனையோடு அணுகும் முறையே திரைரசிகராக நம்மை உருவாக்குகின்றது. ஒரு திரைப்படம் சொல்லும் கருத்து, இயக்குநரின் பார்வை, காட்சி அமைப்பு, படத்தின் இசை, படத்தொகுப்பு எனப் பல்வேறு கோணங்களில் காணும் அனுபவமே திரைப்பட ரசனையாக மாறுகிறது. இவற்றையெல்லாம் ஒரு திரைப்படம் பார்க்கும்போது நாம் கவனித்தால், அது நம் ரசனையை மேம்படுத்தும்.

கலையின் வெளிப்பாடு

சினிமா என்பது வணிகம் என்ற அம்சத்தைத் தாண்டி கலை என்பதன் முழுமையான வெளிப்பாடு. எல்லாக் கலைகளையும் அது தன்னகத்தே உள்ளடக்கியிருக்கின்றது. மற்ற எந்தக் கலைகளைக் காட்டிலும் சினிமா தனித்துவமானது. திரைப்படம் பார்ப்பது என்பது ஓர் அனுபவம். அந்த அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். காண்போரின் மனநிலை, சூழல், வெளிப்படுத்தும் தன்மை ஆகியவற்றைப் பொருத்து ரசனையும் மாறுபடும்.

அறிவோம் தெளிவோம்: வங்கமொழியின் இரு சிங்கங்கள்

இந்தியத் திரைப்பட இயக்குநர்களுள் குறிப்பிடத்தக்கவர், சத்தியஜித் ரே. இந்தியமொழிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், இரவீந்திர நாத் தாகூர். இருவரும் வங்கமொழிக்குப் பெருமை சேர்த்தவர்களாவர். தாகூரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த சத்தியஜித் ரே, அவரது பண்பட்ட சிந்தனைத் தளங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

தாகூரின் எழுத்துப் படைப்புகளை நேரில் கண்டு, கேட்டறியும் உயிர் செறிந்த கலையனுபவங்களாக, உலகமெல்லாம் இரசித்து மகிழும் வகையில் உருவாக்கிய பெருமை, சத்தியஜித் ரேவையே சாரும். தாகூரின் 'சாருலதா', 'வீடும் வெளியும்' (கரே பைரே) என்னும் இருநாவல்கள், சத்யஜித் ரேவால் உருவாக்கப்பட்ட அரிய திரைப்படக் கலை வடிவங்கள். 1961ஆம் ஆண்டில், தாகூரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இரவீந்திர நாத் தாகூர் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை உருவாக்கினார். கலை இலக்கிய சிந்தனாவாதி ஒருவர் பற்றிய படம் என்றால், அஃது இப்படித்தானே இருக்கவேண்டும் என்று கூறத்தக்க அளவில் அருமையான படைப்பாக, அந்த ஆவணப்படம் இன்றளவும் விளங்குகிறது.

இவரைத் தெரியுமா?

"ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி" என்ற குரலை வானொலியில் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. இவருடைய குரலைக் கேட்பதற்காகவே செய்தியைக் கேட்டவர்கள் உண்டு. 40 ஆண்டுகாலம் ஒலிபரப்புத் துறையில் சிறப்பாகச் செய்தி வாசித்தமைக்காகத் தமிழக அரசு இவருக்கு 2008 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டியுள்ளது. இதுவே செய்தி வாசிப்பாளருக்காக வழங்கப்பட்ட முதல் கலைமாமணி விருதாகும்.

குறும்படம் உருவாக்கலாம் வாங்க!

குறும்படம் மற்றும் ஆவணப் படங்களைத் தயாரிக்க ஆகும் காலமும் செலவும் மிகக் குறைவு. இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்ப உதவியால் இவ்வகைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிக எளிது. மேலும் செல்பேசி அல்லது திறன்பேசியின் மூலமாகவே இப்படங்களை ஒளிப்பதிவு செய்ய இயலும்.

மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை வலையொளி (YouTube) மூலம் எளிதாகப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்லலாம். வலையொளியில் கட்டணமின்றித் தங்களுக்கான பக்கத்தைத் தொடங்கி தங்கள் படைப்புகளைப் பதிவேற்றலாம். தங்கள் படைப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்ல திரைப்படச் சங்கங்களையும் நாடலாம். இந்திய அரசு ஆண்டுதோறும் உலகப் படவிழாக்களை நடத்துகிறது. தேர்வுக்கெனப் படங்களை அனுப்பலாம்.

குறும்படம், ஆவணப்படம் அனுப்புவதற்கான இணையத்தள முகவரிகள்:

மொழிநிலைகள்

சொல்லமைப்பின் அடிப்படையில், மொழிநிலைகள் மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டுநிலை என்பன.

தனிநிலை (Isolating language)

சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனித்தனியாக நின்று பொருள் உணர்த்துவது, தனிநிலை அமைப்பு. சீனம், சயாம், பர்மியம், திபெத்து ஆகிய மொழிகள் தனிநிலை அமைப்புடையவை. எ. கா.: சீன மொழியில், மின் என்னும் சொல் மக்களைக் குறிக்கும். லிக் என்னும் சொல், வலிமையைக் குறிக்கும். இரண்டும் சேரும்போது, மின்லிக் (மக்கள் வலிமை), மின் சிலிக் (மக்களுடைய வலிமை) என்பதைக் குறிக்கும். சி என்பது அம்மொழியில் வெறுஞ்சொல்.

உட்பிணைப்புநிலை (Inflectional language)

அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது, இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்பது, உட்பிணைப்புநிலை அமைப்பு. ஐரோப்பிய மொழிகள் உட்பிணைப்பு நிலையைச் சார்ந்தவை. எ. கா.: 'Such', 'Which' என்னும் ஆங்கிலச் சொற்கள், So-like, Who-like என்பனவற்றின் உட்பிணைப்பு.

ஒட்டுநிலை (Agglutinative language)

அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது, ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்பது, ஒட்டுநிலை அமைப்பு. உலகிலுள்ள பெரும்பான்மையான மொழிகள் இவ்வகையைச் சார்ந்தவை. திராவிட மொழி, சித்திய மொழி, ஜப்பானிய மொழி, கொரிய மொழி, பின்னிஷ் மொழி, பாஸ்க் மொழி, ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் பண்டு மொழி, மலேசிய பாலினேஷியன் மொழி முதலான பல மொழிகளும் ஒட்டுநிலையைச் சார்ந்தவை. எ.கா.: பார் என்னும் அடிச்சொல்லோடு இடைநிலை, விகுதி போன்ற இடைச்சொற்கள் ஒட்டி வருகின்றன. பார் + த் + த் + ஆன் = பார்த்தான்.

அறிவோம் தெளிவோம்: தமிழின் சிறப்பைப் பற்றி மேலைநாட்டினர் கருத்துகள்

  • மாக்ஸ்முல்லர்: தமிழே மிகவும் பண்பட்ட மொழி; தனக்கே உரிய வளம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி.
  • பெர்சிவல்: உள்ளத்தின் பெற்றியை உள்ளவாறு எடுத்துக்காட்டுவதில் தமிழ்மொழிக்கு ஈடாக எம்மொழியும் இயைந்ததாக இல்லை.
  • ரைஸ்டேவிஸ்: வடமொழி, எபிரேயம், கிரேக்கம் ஆகிய மூன்று இலக்கிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் கலந்திருக்கின்றன.
  • ஈராஸ் பாதிரியார்: இப்போது வழங்கும் எல்லா மொழிகளிலும் தமிழே மிகப் பழைமையானது.

அறிவோம் தெளிவோம்

ஆங்கிலம், 146 மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கியுள்ளதென ஒரு கணக்கெடுப்பின்படி அறியமுடிகிறது. தமிழிலிருந்து ஆங்கிலம் பெற்றுக்கொண்ட சில சொற்கள் பின்வருமாறு:

தமிழ்English
அணைக்கட்டுAnicut
காசுCash
கட்டுமரம்Catamaran
கறிCurry
மாங்காய்Mango
தோப்புTope
பப்படம்Poppadam
தேக்குTeak
ஓலைOlla
மிளகுத் தண்ணீர்Mulligatawny
கூலிCoolie
பச்சிலைPatchouli
பலகணிBalcony
சந்தனம்Sandal

அறிவோம் தெளிவோம்

இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்ற மூன்றையும் இலக்கண எல்லையில் அவை பொருந்தாவிட்டாலும் அவற்றின் பயன்கருதி, வழக்கிலுள்ள சொற்களாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நன்னூல் குறிப்பிடுகிறது.

இம்மூன்றனுள் மங்கலம் என்னும் வழக்குச்சொல்லை நோக்குவோம். நல்லதை வாயால் சொல்வார்களேயன்றிக் கெட்டதைத் தமிழர்கள் வாயால் சொல்லமாட்டார்கள். கெட்டவர்களைக்கூடக் 'கெட்டவர்' என்னாது, 'நல்லவர் அல்லாதார்' அல்லது 'யாரோ' எனக் கூறுவது, தமிழர் பண்பாடு. ‘கொல்லா விரதமெனக் கொண்டவரே நல்லோர் மற்றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே!’ என்று தாயுமானவர் தம் பராபரக்கண்ணியில் குறிப்பிடுவது மங்கலம் என்னும் வழக்குக்கருதிதான் எனலாம்.

இவைபோன்ற இலக்கண அமைதிகள் தமிழில் காலமும் இடமும் கருதி, தமிழர்தம் பண்பும் நாகரிகமும் கெடாதவகையில் பயன்படுகின்றன.

- நல்ல தமிழ், அ. மு. பரமசிவானந்தம்

அறிவோம் தெளிவோம்: பின்னுருபுகள் (Postpositions)

இரண்டாம் வேற்றுமைமுதல் ஏழாம் வேற்றுமைவரை உள்ள உருபுகள் முறையே ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன. இவை, பின்னொட்டுகளாக வருவதனை அறிந்துள்ளீர்கள். இவை மட்டுமின்றி, வேறு சில உருபுகளும் உள்ளன. இவற்றை வேற்றுமைச்சொல் பின்னொட்டு அல்லது பின்னுருபு (Postpositions) என்கிறோம். இலக்கணநூலார், சொல்லுருபுகள் என்று கூறுகின்றனர்.

வேற்றுமை உருபுகள் (பின்னொட்டு)

  • - மரத்தை
  • ஆல் - மரத்தால்
  • கு - மரத்துக்கு
  • இன் - மரத்தின்
  • அது - மரத்தினது
  • கண் - மரத்தின்கண்

சொல்லுருபுகள் (பின்னுருபு)

  • பற்றி - மரத்தைப்பற்றி
  • விட - மரத்தைவிட
  • போல - மரத்தைப்போல
  • தவிர - மரத்தைத் தவிர
  • கொண்டு - மரத்தைக்கொண்டு
  • வைத்து - மரத்தை வைத்து

அறிவோம் தெளிவோம்: வினைமுற்று ஒப்பீடு

தமிழ்

வினைமுற்றுஎழுவாய்திணைபால்எண்இடம்காலம்
விளையாடுவான்அவன்உயர்திணைஆண்பால்ஒருமைபடர்க்கைஎதிர்காலம்
பாடுகின்றேன்நான்உயர்திணை-ஒருமைதன்மைநிகழ்காலம்
பேசினார்கள்அவர்கள்உயர்திணைபலர்பால்பன்மைபடர்க்கைஇறந்தகாலம்
வந்ததுஅதுஅஃறிணைஒன்றன்பால்ஒருமைபடர்க்கைஇறந்தகாலம்
கொடுப்பாய்நீஉயர்திணை-ஒருமைமுன்னிலைஎதிர்காலம்
மேய்கின்றனஅவைஅஃறிணைபலவின்பால்பன்மைபடர்க்கைநிகழ்காலம்
செய்வீர்கள்நீங்கள்உயர்திணைபலர்பால்பன்மைமுன்னிலைஎதிர்காலம்

ஆங்கிலம்

VerbTenseOther Info
gavepast tense-
speaksPresent tense-

அறிவோம் தெளிவோம்: இயற்கைமொழி - செயற்கைமொழி

மனிதர்கள் இயற்கையாகப் பயன்படுத்தும் எந்த மொழியும் இயற்கை மொழியாகும்.

செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட மொழிகள் இயற்கை மொழியில் இருந்து வேறுபட்டவை. கணிப்பொறியில் பயன்படுத்தும் நிரலாக்க [programming language] மொழிகளான சி (C), சி++ (C++), ஜாவா (JAVA), பெர்ல் (Perl), பைத்தான் [Python] போன்றவை செயற்கை மொழிகளாகும்.

தமிழ் - ஆங்கிலம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை

தமிழ்ஆங்கிலம்
திராவிடமொழிக் குடும்பம்இந்தோ - ஐரோப்பியமொழிக் குடும்பம்
தமிழ், ஓர் ஒலிப்பியல் மொழி. ஒவ்வோர் ஒலியனுக்கும் ஓர் எழுத்து உண்டு. வல்லின எழுத்துகளுக்கு மட்டும் இடம் வரையறுக்கப்பட்டு ஓர் ஒழுங்குமுறையுடன் அமைந்துள்ளது.ஆங்கிலமும் ஓர் ஒலிப்பியல் மொழிதான். ஆனால், தமிழ்போன்று குறிப்பிட்ட வரையறையுடைய ஓர் ஒலிப்பியல் தன்மைகொண்ட மொழியன்று.
தமிழில் ஓர் எழுத்தைத் தனியாக ஒலிக்கும்போது, என்ன ஒலி எழுகிறதோ, அதே ஒலிதான் அந்த எழுத்து, சொல்லில் வரும்போதும் ஒலிக்கும். (விதிவிலக்கு: சங்கம்)ஆங்கில எழுத்துகளுக்கும் அவற்றின் ஒலிப்புமுறைகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. ஓர் எழுத்து, வெவ்வேறு சொற்களில் இடம்பெறும்போது, வெவ்வேறு ஒலிப்பைப் பெறும். எ.கா. C in CAT, COW, CALM.
ஒட்டுநிலை மொழியமைப்புடையது.உட்பிணைப்பு மொழியமைப்புடையது.
சொல்லின் வினைமுற்று வடிவம் திணை, பால், எண், இடம், காலம் உணர்த்தும்.சொல்லின் வினைமுற்று வடிவம் காலம்தவிர, எதனையும் உணர்த்தாது.
எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற அமைப்பில் தொடர் அமைவது வழக்கம். சொற்களின் வரிசைமுறை நெகிழ்வுடையது.எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்றே தொடர் அமையும். சொற்களின் ஒழுங்குமுறை, கட்டாயம் வேண்டும்.
தமிழில் எழுவாயையும் பயனிலையையும் இணைக்கும் இணைப்பு வினை இல்லை. எ.கா. அவர் ஆசிரியர்.ஆங்கிலத்தில் இணைப்பு வினை, கட்டாயம் தேவை (is, are, was, etc.). Example: He is a Teacher.
Article இல்லை. எனினும் ஒரு, ஓர், அந்த முதலிய சொற்கள் மாற்றாகப் பயன்படுகின்றன.Article (a, an, the) பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பின்னொட்டு அமைப்புடையது. எ.கா. புத்தகம் மேசைமேல் இருக்கிறது.முன்னொட்டு அமைப்புடையது. Example: The book is on the table.
'மற்றும்' (and) என்னும் இணைப்புச்சொல் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.'and' என்னும் இணைப்புச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

அறிவோம் தெளிவோம்

தொல்காப்பியம் கருப்பொருள்களின் பட்டியலில் ஐந்திணைக்கும் உரிய இசைக்கருவிகளைக் குறிப்பிடுகிறது. பறை, யாழ் போன்ற இசைக்கருவிகளை அத்திணை சார்ந்த மக்கள் வழிபாட்டின்போது இசைத்தும் ஆடியும் வந்துள்ளனர்.

நாடகத்திற்குரிய இசைக்கருவிகளான யாழ், முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, நெடுவங்கியம், குறுந்தூம்பு, தட்டைப் பறை, சல்லி, பதலை ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்ததாக மலைபடுகடாம் தெரிவிக்கிறது.

அறிவோம் தெளிவோம்: மார்ச் 27 - உலக நாடக நாள்

சர்வதேச அரங்காற்று நிறுவனம் (International Theatre Institute) பின்லாந்தில் செயல்பட்டு வருகின்றது. அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்வி கிவிமா அரங்காற்று நிகழ்வுகளுக்காக ஒரு நாளைக் கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார். 1961இல் கூடிய அரங்காற்றுக் கலைஞர்களின் மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27ஆம் தேதியை உலக நாடக நாளாகக் (World Theatre day) கொண்டாட முடிவு செய்தனர். உலகெங்கிலுமுள்ள நாடகக்கலைஞர்கள் அந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.

அறிவோம் தெளிவோம்

திறனாய்வுக்கு இணையான ஆங்கிலச் சொல், 'criticism'. இச்சொல், 'கிரிட்டிகோஸ்' என்ற கிரேக்கச் சொல்லின் ஆக்கமாகும். இதன் பொருள், பிரித்துப் பார்ப்பதும் தீர்ப்புச் சொல்வதும் ஆகும். 'கிரிட்டிசிஸம்' என்பதை, ஒரு கலைச்சொல்லாக முதலில் பயன்படுத்தியவர் ஜான் டிரைடன் (John Dryden) (18 ஆம் நூற்) என்னும் ஆங்கிலக் கவிஞர் ஆவார். அதற்கு முன்னால் 'Critic' என்ற சொல்லைப் பயன்படுத்தியவர், சிந்தனையாளர் பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon) (1605).

தமிழில் criticism என்ற சொல்லுக்கு இணையாக 'விமர்சனம்' என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர், பேரா. ஆ. முத்துசிவன் (1944). 'விமரிசை’ என்ற வடமொழி வழக்கிலிருந்துவந்த இச்சொல்லுக்குப் பாராட்டுதல், விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லுதல் என்று பொருள்.

தமிழில், இச்சொல்லுக்கு இணையாகத் 'திறனாய்வு' என்ற சொல்லை வழக்கத்தில் விட்டவர், பேரா. அ. ச. ஞானசம்பந்தன். (1953).

— திறனாய்வுக்கலை, பேராசிரியர் தி. சு. நடராசன்

அறிவோம் தெளிவோம்: பேரிடர்க்காலமும் ஹாம் வானொலியும்

இயற்கைப் பேரிடர்க் காலங்களில் மக்கள் தகவல்களைப் பெறுவதற்கும் தெரிவிப்பதற்கும் ஹாம் வானொலி அல்லது அமெச்சூர் வானொலி பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹாம் வானொலியில் தகவல்களைப் பெறவும் ஒலிபரப்பவும் முடியும். இயற்கைப் பேரிடர்க் காலங்களில் தொலைத்தொடர்புச் சாதனங்கள் அறவே செயலற்றுவிடுகின்றன. அச்சூழலில் நமக்குக் கை கொடுத்து உதவுவது, ஹாம் வானொலிகள் மட்டுமே.

இன்று அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் அனைத்து வீடுகளிலும், ஹாம் வானொலி உரிமம் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இயற்கைச் சீற்றங்களை இவர்களால் எளிதாக எதிர்கொள்ள முடிகிறது.

ஹாம் வானொலியினைப் பெறுவதற்கான வழிமுறைகளை www.wpc.dot.gov.in என்னும் இணையத் தளத்தில் காணலாம்.

அறிவோம் தெளிவோம்: உஷா மேத்தாவின் சுதந்திரக் குரல் வானொலி நிலையம்

1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர் உஷா மேத்தா. இவர், தமது 22 ஆம் வயதில் பாபுபாய் படேல் என்பவரின் உதவியுடன் 1942, ஆகஸ்ட் 14 அன்று ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கினார்.

தலைவர்களின் உரைகள், விடுதலைப் போராட்ட உத்திகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இதில் ஒலிபரப்பப்பட்டன. இந்நிலையத்தை ஒரே இடத்திலேயே தொடர்ச்சியாகச் செயல்படுத்த முடியவில்லை. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இடம்மாற்றப்பட்டது. மூன்று மாதங்கள் மட்டுமே இந்த வானொலி நிலையம் இயங்கியது.

அறிவோம் தெளிவோம்: வானொலி

டி.கே. சிதம்பரனார் "ரேடியோ" என்ற சொல்லுக்குத் தமிழில் வானொலி என்ற சொல்லை முன்மொழிந்தார். ஆல் இந்தியா ரேடியோ, ஆகாஷவாணி என்று முழங்கி வந்த நிலையில் முதன்முதலில் திருச்சி வானொலி நிலையம் 1959இல் 'திருச்சி வானொலி நிலையம்' என்று அறிவித்தது. அதன்பிறகு வானொலி என்ற சொல்லை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கினர்.

அனைத்திந்திய வானொலி (All India Radio) சேவைகள் - தமிழ்நாடு பண்பலை

எண்நிலையம்அதிர்வெண் (மெகாஹெர்ட்ஸ்-MHz)
1சென்னை101.4 (ஏஐஆர் எப்எம் ரெயின்போ), 102.3 (ஏஐஆர் எப்எம் கோல்டு)
2கோயம்புத்தூர்103
3தர்மபுரி102.5
4காரைக்கால்100.3
5கொடைக்கானல்100.5
6மதுரை103.3
7நாகர்கோவில்101
8உதகமண்டலம்101.8
9பாண்டிச்சேரி102.8
10தஞ்சாவூர்101.2
11திருச்சிராப்பள்ளி102.1
12ஏற்காடு (சேலம்)103.7

உங்களுக்குத் தெரியுமா?

  1. உலகத் தொலைக்காட்சி தினம் - நவம்பர் 21
  2. வானொலி அதிர்வெண்ணைக் கண்டுபிடித்தவர் - ஹெய்ன்ரீச் ருடோல்ஃப் ஹெட்ஸ்
  3. அகில இந்திய வானொலியின் தலைமையிடம் - ஆகாஷ்வாணி பவன், புதுதில்லி
  4. அகில இந்திய வானொலியின் பொன்மொழி - 'பகுஜன் ஹிதாய, பகுஜன் சுகாய'
  5. பண்பலை வானொலி ஒலிபரப்புமுறையைக் கண்டுபிடித்தவர் - எட்வின் எச். ஆம்ஸ்ட்ராங்
  6. தூர்தர்சனின் பொன்மொழி - சத்தியம் சிவம் சுந்தரம்
  7. அகில இந்திய வானொலியின் தலைப்பு இசையை அமைத்தவர் - பண்டிட் ரவி சங்கர்
  8. பொது ஒலிபரப்புநாள் கொண்டாடப்படும் தினம் - நவம்பர் 12
  9. மக்களவைத் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட ஆண்டு - 2004
  10. உலக பொம்மலாட்ட தினம் - மார்ச் 21
  11. உலக வானொலி தினம் - பிப்ரவரி 13

அறிவோம் தெளிவோம்: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)

இந்தியாவில் தொலைத் தொடர்புச் சேவைகளையும் கட்டணத்தையும் ஒழுங்குபடுத்த பாராளுமன்ற சட்டம் 1997 இன் 3 ஆவது பிரிவு வழிவகை செய்கிறது. அதன்படி 1997 பிப்ரவரி 20 அன்று இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நிறுவப்பட்டது. தொலைத்தொடர்புச் சேவைகளையும் சுங்க வரி விதிப்புகளையும் இவ்வாணையம் மேற்பார்வை செய்துவருகிறது.

அறிவோம் தெளிவோம்

இலக்கு அளவீட்டுப் புள்ளி (TRP)

(Target Rating Point) என்பது மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டளவாகும். ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு விளம்பரம் அல்லது தொடரினைப் பார்த்து ரசித்த இலக்கு பார்வையாளர்களின் மதிப்பீட்டுப் புள்ளிகளின் கூட்டுத்தொகை ஆகும். இதனை அளவிடும் கருவி "மக்கள் கருவி” (People Meter) என அழைக்கப்படும்.

அலைக்கற்றை எஸ். பாண்ட் (S-Band)

அலைக்கற்றை என்பது 2 முதல் 4 கிகா ஹெர்ட்ஸ் வரை உள்ள ரேடியோ அலையளவைக் குறிப்பதாகும். இது அலைபேசித் தொலைத்தொடர்புக்கும், ராடார் இயக்கத்துக்கும், தரைவழித் தொலைத்தொடர்புக்கும் பயன்படுகிறது. இதில் 2.6 கிகா ஹெர்ட்ஸ் (2500-2690 மெகா ஹெர்ட்ஸ்) என்றழைக்கப்படும் அலைநீளம் உலக வானொலி மன்றத்தால் 2000 ஆம் ஆண்டு தரைவழி அலைபேசி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அறிவோம் தெளிவோம்: பிபிசி தமிழோசை (BBC)

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது பிரிட்டன், இந்திய மொழிகளில் தன் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது. அதன் விளைவாக பிபிசி-இல், தமிழ் ஒலிபரப்பு 1941 ஆம் ஆண்டு மே திங்கள் 3- ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குத் தொடக்கத்தில் 'தமிழர் மடல்' எனப் பெயரிட்டிருந்தார்கள். 1948-இல் இந்நிகழ்ச்சிக்கு 'தமிழோசை' என சிவபாத சுந்தரம் பெயரிட்டார்.

தொடக்கத்தில் வாரம் ஒருநாள் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிகள் 80களின் தொடக்கத்தில் வாரம் ஐந்து முறை என விரிவுபடுத்தப்பட்டது. 80களின் இறுதியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் தனது ஒலிபரப்பைத் தொடங்கியது. வெளிநாட்டுச் சேவையான பிபிசி, 'வோர்ல்ட் சர்வீஸ்' என்ற பெயரில் 33 மொழிகளில் ஒலிபரப்புகின்றது. இதில் தமிழும் அடங்கும். உலகத் தமிழர்கள் இங்கிலாந்திலிருந்து வரும் தமிழோசை நிகழ்ச்சியைத் தங்கள் மொழிக்குக் கிடைத்த பெருமையாகவே கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.

அறிவோம் தெளிவோம்: முத்துக்கூத்தனின் மதுவிலக்குப் பொம்மலாட்டம்

  • கதை: தந்தை, தன் மகன் குடித்துவிட்டு வருவதாகக் கேள்விப்பட்டு கோபத்துடன் அவனை வெட்ட அரிவாளுடன் நிற்கிறார்.
  • விவாதம்: தாய் தடுக்க, குடிகார மகன் வீட்டுக்குள் வரக்கூடாது என தந்தை ஆத்திரப்படுகிறார்.
  • மகன் வருகை: மகன் வந்து, తాను குடிக்கவில்லை என்றும், குடித்துவிட்டு விழுந்து கிடந்த தந்தையின் நண்பரைத் தூக்கிவந்ததாகவும், அதனால் தள்ளாடி வந்ததாகவும் விளக்குகிறான்.
  • நீதி: "குடிகாரனைத் தொட்டதற்கே இப்படி கெட்ட பெயர் வந்துடுச்சே! குடியைத் தொட்டா எவ்வளவு கெட்ட பெயர் வந்து சேரும்" என்று மகன் கேட்கிறான்.
  • முடிவு: தன் தவற்றை உணர்ந்த தந்தை, மகனைக் கட்டி அணைத்துக்கொள்கிறார்.

அறிவோம் தெளிவோம்: செயற்கைக்கோளும் மின்னணு ஊடகங்களும்

ஒலி-ஒளி அலைகள் எப்போதும் நேர்க்கோட்டில் செல்லும் தன்மைகொண்டவை. பூமியானது கோளவடிவில் இருப்பதால் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொலைதூரத்திற்குப் பரப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.

இச்சூழலில்செயற்கைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டன. அதன் பயனாக இன்று உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை எளிதாக வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் வழியாக நாம் கண்டும் கேட்டும் மகிழ்கிறோம்.

அறிவோம் தெளிவோம்: திறன்பேசிகளின் எதிர்காலத் தொழில்நுட்பம்

0 ஜி தலைமுறையில் தொடங்கிய செல்பேசிகளின் வரலாறு 1,2,3,4-ஜி தொழில்நுட்பத்தைக் கடந்து அடுத்ததாக 5-ஜி (5G) தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகிறது. தற்போதுள்ள அகண்ட அலைவரிசை தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தின் வழி தகவல்கள் கடந்து போக 100 மில்லிசெகண்ட் தேவைப்படுகிறது. ஆனால் 5ஜி தொழில் நுட்பத்தின் வழி தகவல்கள் கடந்து போக 1 மில்லிசெகண்ட் மட்டுமே போதுமானது.

இவ்வாறு வழங்கப்படும் 5 ஜி தொழில்நுட்பம் திறன்பேசிகளின் வழியான அகண்ட அலைவரிசை சேவைகளையும் தாண்டி பற்பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயந்திர மனிதர்கள், தாமாகவே இயங்கும் மகிழுந்துகள், உடல் நல மருத்துவம், வேளாண்மை, கல்வி போன்ற பல துறைகளிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தும்.

அறிவோம் தெளிவோம்: ஊடகங்களில் உள்ள பணிகள்

அச்சு ஊடகம்மின்னணு ஊடகம்
முதன்மை ஆசிரியர்ஆசிரியர்
உதவி ஆசிரியர்கள்உதவி ஆசிரியர்கள்
நிருபர்கள்நிருபர்கள்
சிறப்புச் செய்தியாளர்கள்புகைப்படக் கலைஞர்கள்
பத்தி எழுத்தாளர்கள்ஒளி - ஒலிப்பதிவாளர்கள்
கருத்துப்படம் உருவாக்குபவர்தொழில்நுட்பக் கலைஞர்கள்
புகைப்படக் கலைஞர்செய்தி வாசிப்பாளர்
பிழை திருத்துநர்இணையத்தில் பக்கவடிவமைப்பாளர்
வரைகலை வடிவமைப்பாளர்அரங்கு அமைப்பாளர்
பக்க வடிவமைப்பாளர்நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்
ரேடியோ ஜாக்கி
வீடியோ ஜாக்கி
டிஸ்க் ஜாக்கி