10 ஆம் வகுப்பு நூல் வெளி
பெருஞ்சித்திரனார்
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார்.
இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார். இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது. இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
தேவநேயப் பாவாணர்
மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் "சொல்லாய்வுக் கட்டுரைகள்" நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையில் சில விளக்கக் குறிப்புகள் மாணவர்களின் புரிதலுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்குநராகப் பணியாற்றியவர்; உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
பாவாணர், தமிழ்ச்சொல்வளம் கட்டுரையில் வித்துவகை, வேர்வகை, அரிதாள் வகை, காய்ந்த இலைவகை, இலைக்காம்பு வகை, பூமடல் வகை, அரும்பு வகை, பூக்காம்பு வகை, இதழ்வகை, காய்வகை, கனி வகை, உள்ளீட்டு வகை, தாவரக் கழிவு வகை, விதைத்தோல் வகை, பதர் வகை, பயிர் வகை, கொடி வகை, மர வகை, கரும்பு வகை, காய்ந்த பயிர் வகை, வெட்டிய விறகுத்துண்டு வகை, மரப்பட்டை வகை, பயிர்ச்செறிவு வகை, நிலத்தின் தொகுப்பு வகை, செய் வகை, நில வகை, நன்செய் வகை, வேலி வகை, காட்டு வகை ஆகியவற்றின் சொல்வளங்களையும் விளக்கியுள்ளார்.
எத்திசையும் புகழ் மணக்க
போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கறுப்பு, சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான். (செய்தி - ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்)
இரட்டை மொழிதல் ஒப்பீடு: தமிழ் மற்றும் கடல்
பாடல் பகுதி | தமிழுக்கு | கடலுக்கு |
---|---|---|
முத்தமிழ் | இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் | முத்தினை அமிழ்ந்து எடுத்தல் |
முச்சங்கம் | முதல், இடை, கடை ஆகிய முச்சங்கம் | மூன்று வகையான சங்குகள் தருதல் |
மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) | ஐம்பெரும் காப்பியங்கள் | மிகுதியான வணிகக் கப்பல்கள் |
சங்கத்தவர் காக்க | சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை | நீரலையைத் தடுத்து நிறுத்தி, சங்கினைக் காத்தல் |
தெரிந்து தெளிவோம்
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழழகனார்
புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி - கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப் பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பாடலைப் படைத்தவர் தமிழழகனார். சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
எழில்முதல்வன் (மா. இராமலிங்கம்)
எழில்முதல்வன் எழுதிய 'புதிய உரைநடை’ என்னும் நூலிலுள்ள உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரையின் சுருக்கம், இங்கு உரையாடல் வடிவமாக மாற்றித் தரப்பட்டுள்ளது. மா. இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர். குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிசெய்தவர். மரபுக் கவிதை, புதுக்கவிதை படைப்பதிலும் வல்லவர். இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர். 'புதிய உரைநடை’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றவர்.
தெரிந்து தெளிவோம்
ஒருகாலத்தில் குழாயிலிருந்து அப்படியே தண்ணீர் குடித்த நாம், நீர் மாசுபாடு அடைந்ததன் காரணமாக அதனைத் தூய்மைப்படுத்தியும் விலைக்கு வாங்கியும் குடிக்கும் நிலையில் இருக்கிறோம். இப்போது காற்றும் மாசுபாடு அடைந்துவருகிறது. தண்ணீரைப் புட்டியில் அடைத்து விற்பது போன்று, உயிர்வளியையும் (ஆக்சிஜன்) விற்கும் நிலையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஒரு புட்டியின் விலை 1000 ரூபாய்க்கும் அதிகமாகும்.
இரா. இளங்குமரனார்
இவர் தமிழாசிரியர்; நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்; சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்.
- திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலை" ஒன்றை அமைத்திருப்பவர்.
- பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்.
- தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்; தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர்.
- விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்.
- அதற்காக, தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்; இன்றளவும் இவ்வாறே எழுதித் தமிழுக்குத் தனிப்பெரும் புகழை நல்கி வருபவர்.
- பற்பல நூல்களை எழுதியிருப்பினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியன இவர்தம் தமிழ்ப் பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகள்.
அவர்தான் உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்.
தெரியுமா?
தமிழ் மறையான திருக்குறளைத் தந்த "திருவள்ளுவர்" பெயரில் முதல் தமிழ்க் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது. இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை (Data) உள்ளீடாகச் செலுத்தி நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாகக் கணினியிலிருந்து பெறமுடிந்தது. இந்தக் கணினி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக்கூடியதாக அமைந்தது. சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துறை அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினியும் "திருவள்ளுவரே"!
குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்.
கி.பி. (பொ. ஆ.) முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி, பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார். அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்துசென்றன. அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள். ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.
சுப்பிரமணிய பாரதியார்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை' என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்.
- கவிஞர், கட்டுரையாளர், கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர், சிறுகதை ஆசிரியர், இதழாளர்.
- சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்.
- குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்.
- இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார். இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
தெரிந்து தெளிவோம்
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.
நப்பூதனார் (முல்லைப்பாட்டு)
முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இது 103 அடிகளைக் கொண்டது. இப்பாடலின் 1-17 அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது. இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.
எத்திசையும் புகழ் மணக்க
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர். - தனிநாயக அடிகள் (ஒன்றே உலகம்)
தெரியுமா?
- புயலுக்கு முன்பு பேரழிவு பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்புக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.
- வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
- வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
- இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு. 'கஜா' புயலின் பெயர் இலங்கை தந்தது. அடுத்து வந்த புயல் பெயர் தாய்லாந்து தந்தது.
தெரிந்து தெளிவோம்
மேட்டிலிருந்து தாழ்வுக்குப் பாயும் தண்ணீர்போல, காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து, குறைவான இடத்துக்குக் காற்று வீசும். இப்படி வீசும் காற்றின் போக்கை, புவி தனது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கையில் மாற்றும். நிலநடுக்கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை வலப்புறமாகத் திருப்பும். தெற்குப் பகுதியில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்பும். காற்றின் வேகம் கூடினால் இந்த விலக்கமும் கூடும். வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை, ஜப்பானை, சீனாவைத் தாக்கும் புயல்களும் இடம்புரிப் புயல்கள்! ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்! பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த விளைவை 1835இல் கண்டுபிடித்தார். புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.
தெரியுமா?
பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும்போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர். "காலின் ஏழடிப் பின் சென்று" - பொருநராற்றுப்படை, 166
ப. சிங்காரம்
புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம், புயலிலே ஒரு தோணி. இந்நூலாசிரியர் ப. சிங்காரம் (1920 - 1997). இந்தோனேசியாவில் இருந்தபோது, தென்கிழக்காசியப் போர் மூண்டது. அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு இப்புதினம். அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
ப. சிங்காரம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர். வேலைக்காக இந்தோனேசியா சென்றார். மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார். இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.
தெரிந்து தெளிவோம்
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர்.
தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள். உண்பவர் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறுவர்.
எத்திசையும் புகழ் மணக்க
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் 'வாழையிலை விருந்து விழா'வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது. தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டு வாழையிலையில் விருந்து வைக்கின்றனர். முருங்கைக்காய் சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய்க் கூட்டு, தினைப் பாயசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர். அங்கு வாழும் தமிழர்கள் பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர். தொடர்ந்து பல பண்பாட்டு நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.
அதிவீரராம பாண்டியர்
காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம். இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது. 'இல்லொழுக்கங் கூறிய பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம். இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது. சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.
ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.
பெருங்கௌசிகனார்
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று 'மலைபடுகடாம்'. 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது; மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.
தெரிந்து தெளிவோம்
கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம். காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை. கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி கி. ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர். கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி. ராஜநாராயணன். அந்தக் கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா. செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ. வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக.
குலசேகராழ்வார்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. இதில் 105 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடியவர் குலசேகராழ்வார். இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.
கி. ராஜநாராயணன் (கி.ரா.)
கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள். ஆசிரியர் தன் சொந்தஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார். இதன் ஒரு பகுதியே இங்குப் பாடமாக உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல். இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.
கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும். இவரின் கதைகள் அனைத்தும் கி. ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன; இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் 'கரிசல் இலக்கியம்' என்று அழைக்கப்படுகின்றன. எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.
தெரியுமா?
ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம். வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன. எ.கா. கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி.
- பாச்சல் - பாத்தி
- பதனம் - கவனமாக
- நீத்துப்பாகம் - மேல்கஞ்சி
- கடிச்சு குடித்தல் - வாய்வைத்துக் குடித்தல்
- மகுளி - சோற்றுக் கஞ்சி
- வரத்துக்காரன் - புதியவன்
- சடைத்து புளித்து - சலிப்பு
- அலுக்கம் - அழுத்தம் (அணுக்கம்)
- தொலவட்டையில் - தொலைவில்
ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர். இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ. வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன. இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்படுகின்றன. பெப்பரை வரவேற்பாளராகவும் பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு & ரோபோக்கள்
- 2016இல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன், சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.
- சீனாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், இயந்திர மனிதர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளன. அவை அங்கு வரும் நோயாளிகளின் குரலையும் முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றன. சீன மொழியின் வெவ்வேறு வட்டார வழக்குகளையும்கூட அவை புரிந்துகொண்டு பதில் அளிக்கின்றன.
எத்திசையும் புகழ் மணக்க
சீன நாட்டில் ‘காண்டன்' நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அது சீனப் பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்டீபன் ஹாக்கிங்
தெரிந்து தெளிவோம்
பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் (Big Bang Theory) உருவானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் விளக்கினார். இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை மறுத்தார். பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை' என்றார்.
ஸ்டீபன் ஹாக்கிங் நூல்கள்
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் 'காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பொதுமக்களிடையே பரப்பி, ஒரு கோடிப் படிகளுக்கு மேல் விற்பனையானது.
தெரிந்து தெளிவோம்
இந்த அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெளியே நின்று பார்த்தோமெனில், சிறுதூசிபோலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924இல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார். 1300 ஆண்டுகளுக்குமுன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்:
"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" (திருவாசகம் 3 - 1 - 6)
அண்டப் பகுதிகளின் உருண்டை வடிவும், ஒப்பற்ற வளமையான காட்சியும் ஒன்றுக்கு ஒன்று ஈர்ப்புடன் நின்ற அழகினைச் சொல்வது எனின், அவை நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள்போல அவை நுண்மையாக இருக்கின்றன.
நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் நம் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்துகொண்டே சென்று அளவற்றதாகிறது.
"சில நேரங்களில் உண்மை, புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும். புனைவு இலக்கியம் படைப்பவர்களது கற்பனைகளையெல்லாம் மிஞ்சுவதாகவே கருந்துளைகள் பற்றிய உண்மைகள் உள்ளன. அதனை அறிவியல் உலகம் மிக மெதுவாகவே புரிந்துகொள்ள முயல்கிறது" என்று கூறுகிறார், ஸ்டீபன் ஹாக்கிங்.
அமெரிக்க அறிவியலாளர் ஜான் வீலர் என்பவர்தாம் கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர். சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும், ஏன் ஒளியும்கூடத் தப்பமுடியாது, உள்ளே ஈர்க்கப்படும். இவ்வாறு உள்சென்ற யாவையும் வெளிவரமுடியாததால் இதனைக் கருந்துளை எனலாம் என்று ஜான் வீலர் கருதினார்.
கீரந்தையார் (பரிபாடல்)
பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார். இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது. இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல். உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.
தெரிந்து தெளிவோம்
எங்கோ தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அதுதான் மொழிபெயர்ப்பு. எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்துவிட்டது. கருத்துப்பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன எல்லாம் மொழிபெயர்ப்பு வழியாகவே சர்வதேசத்தன்மை பெறுகின்றன.
ராகுல் சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார். 1949ஆம் ஆண்டு இந்நூலை கணமுத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இன்றுவரையில் 'வால்காவிலிருந்து கங்கை வரை' ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது. இதுவரையில் பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.
- 1949 - கணமுத்தையா மொழி பெயர்ப்பு
- 2016 - டாக்டர் என். ஸ்ரீதர் மொழி பெயர்ப்பு
- 2016 - முத்து மீனாட்சி மொழி பெயர்ப்பு
- 2018 - யூமா வாசுகி மொழி பெயர்ப்பு
ந. முத்துசாமி (கூத்துப்பட்டறை)
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர். இவர் தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர். அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம்செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர். அவர்தான் கூத்துப்பட்டறை ந. முத்துசாமி என்ற கலைஞாயிறு.
இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
பாரதியின் மொழிபெயர்ப்பு
- Exhibition - காட்சி, பொருட்காட்சி
- East Indian Railways - இருப்புப் பாதை
- Revolution - புரட்சி
- Strike - தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம்
எத்திசையும் புகழ் மணக்க
பிரான்சு "தேசிய நூற்கூடத்தில் (Bibliothèque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டைக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். "மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்" முதலிய நூல்களும் அங்கு உள. (தனிநாயக அடிகள்)
சதாவதானம்
"சதம்" என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம்.
செய்குதம்பிப் பாவலர்
'சதாவதானம்' என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 - 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்; பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்; சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்; 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி பாராட்டுப்பெற்றார். இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன. இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
பரஞ்சோதி முனிவர்
திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது. இந்நூல் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் 64 படலங்களும் உடையது. பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்; பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; சிவபக்தி மிக்கவர். வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.
எத்திசையும் புகழ் மணக்க
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், 'இராச சோழன் தெரு' என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது. (ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுமலர்)
கமலாலயன் (வே. குணசேகரன்)
புத்தகம் ஒன்று ஒரு சிறு பெண்ணுடன் வாழ்க்கை நெடுகப் பேசிக்கொண்டே வருகிறது. "உனக்குப் படிக்கத் தெரியாது" என்ற கூற்றால் உள்ளத்தில் பெற்ற அடி, பிற்காலத்தில் சமையல் செய்தும் தோட்டமிட்டும் பொது இடங்களில் பாட்டுப்பாடியும் சிறுகச்சிறுகப் பணம் சேர்த்துக் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிடக் காரணமானது. உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன். இம் மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை "உனக்குப் படிக்கத் தெரியாது" என்ற தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார் கமலாலயன். இவரின் இயற்பெயர் வே. குணசேகரன். வயதுவந்தோர் கல்வித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
கு. அழகிரிசாமி
'ஒருவன் இருக்கிறான்' கதை 'கு. அழகிரிசாமி சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கு. அழகிரிசாமி, அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர்; மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்; கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர். கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை. படைப்பின் உயிரை முழுமையாக உணர்ந்திருந்த கு. அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்; மலேசியாவில் இருந்தபோது அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர். இவர் பதிப்புப் பணி, நாடகம் எனப் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழ் இலக்கியத்தில் ஆர்வம்கொண்டு திறனாய்வு நூல்களையும் படைத்தவர்.
குமரகுருபரர்
குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது. 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ். இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ். பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும்.
குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு. இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்; கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
- இருபாலருக்கும் பொதுவான பருவங்கள்: காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
- ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்): சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
- பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்): கழங்கு, அம்மானை, ஊசல்.
ஐந்திணைகளின் கருப்பொருள்
கருப்பொருள் | குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
---|---|---|---|---|---|
தெய்வம் | முருகன் | திருமால் | இந்திரன் | வருணன் | கொற்றவை |
மக்கள் | வெற்பன், குறவர், குறத்தியர் | தோன்றல், ஆயர், ஆய்ச்சியர் | ஊரன், உழவர், உழத்தியர் | சேர்ப்பன், பரதன், பரத்தியர் | எயினர், எயிற்றியர் |
உணவு | மலைநெல், தினை | வரகு, சாமை | செந்நெல், வெண்ணெல் | மீன், உப்புக்குப் பெற்ற பொருள் | சூறையாடலால் வரும் பொருள் |
விலங்கு | புலி, கரடி, சிங்கம் | முயல், மான், புலி | எருமை, நீர்நாய் | முதலை, சுறா | வலியிழந்த யானை |
பூ | குறிஞ்சி, காந்தள் | முல்லை, தோன்றி | செங்கழுநீர், தாமரை | தாழை, நெய்தல் | குரவம், பாதிரி |
மரம் | அகில், வேங்கை | கொன்றை, காயா | காஞ்சி, மருதம் | புன்னை, ஞாழல் | இலுப்பை, பாலை |
பறவை | கிளி, மயில் | காட்டுக்கோழி, மயில் | நாரை, நீர்க்கோழி, அன்னம் | கடற்காகம் | புறா, பருந்து |
ஊர் | சிறுகுடி | பாடி, சேரி | பேரூர், மூதூர் | பட்டினம், பாக்கம் | குறும்பு |
நீர் | அருவி நீர், சுனைநீர் | காட்டாறு | மனைக்கிணறு, பொய்கை | மணற்கிணறு, உவர்க்கழி | வற்றிய சுனை, கிணறு |
பறை | தொண்டகம் | ஏறு கோட்பறை | மணமுழா, நெல்லரிகிணை | மீன் கோட்பறை | துடி |
யாழ் | குறிஞ்சி யாழ் | முல்லை யாழ் | மருத யாழ் | விளரி யாழ் | பாலை யாழ் |
பண் | குறிஞ்சிப்பண் | முல்லைப்பண் | மருதப்பண் | செவ்வழிப்பண் | பஞ்சுரப்பண் |
தொழில் | தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல் | ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் | நெல்லரிதல், களை பறித்தல் | மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் | வழிப்பறி, நிரை கவர்தல் |
உமா மகேஸ்வரி
கவிஞர் உமா மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார். இவர், நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார்; கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.
கம்பர்
கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி "இராமாவதாரம்" எனப் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது. இது ஆறு காண்டங்களை உடையது. கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை. அவற்றுள் அழகுணர்ச்சிமிக்க சில கவிதைகள் பாடப்பகுதியாக அமைந்துள்ளன.
"கல்வியில் பெரியவர் கம்பர்", "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்; சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்; திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்; "விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்" என்று புகழ்பெற்றவர்; சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.
சா. கந்தசாமி
'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சிறுகதை தொகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம்பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் சா. கந்தசாமி. இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார். விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார். சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார். நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார். தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில.
திணையும் பொழுதும்
திணை | பெரும்பொழுது | சிறுபொழுது |
---|---|---|
குறிஞ்சி | குளிர்காலம், முன்பனிக்காலம் | யாமம் |
முல்லை | கார்காலம் | மாலை |
மருதம் | ஆறு பெரும்பொழுதுகள் | வைகறை |
நெய்தல் | ஆறு பெரும்பொழுதுகள் | எற்பாடு |
பாலை | இளவேனில், முதுவேனில், பின்பனி | நண்பகல் |
மார்ஷல் ஏ. நேசமணி
இளம்வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர். நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டார். 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.
எத்திசையும் புகழ் மணக்க
ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவடி சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம். இது கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
ம.பொ. சிவஞானம்
ம.பொ. சிவஞானத்தின் 'எனது போராட்டம்' என்னும் தன்வரலாற்று நூலில் இருந்து இக்கட்டுரை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ. சிவஞானம் (1906 - 1995) விடுதலைப் போராட்ட வீரர்; 1952முதல் 1954வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972முதல் 1978வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்; தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் இவருடைய நூலுக்காக 1966ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.
நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்பியதற்குக் காரணமுண்டு; திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ விரும்பாதவனல்லன்; ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறில்லையென்று உறுதியாகக் கூறுவேன். இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம். — சிலம்புச் செல்வர் ம.பொ.சி
கு.ப. ராஜகோபாலன் (கு.ப.ரா.)
'ஏர் புதிதா?' எனும் கவிதை கு.ப.ரா. படைப்புகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. 1902இல் கும்பகோணத்தில் பிறந்த கு.ப. ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர். பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் இராசராச சோழன் (மெய்க்கீர்த்தி)
கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி பாடமாக உள்ளது. இம்மெய்க்கீர்த்திப் பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்துவதாக உள்ளது. இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு. அதில் ஒன்று 91 அடிகளைக் கொண்டது. அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன. இப்பாடப் பகுதிக்கான மூலம் தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது.
முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. மெய்க்கீர்த்திகளே கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள். இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.
தெரியுமா?
காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் கொடும்பாளூர் என்னும் இடத்தை அடைந்தனர். தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம். சிறுமலையின் இடப்பக்க வழியாகச் சென்றால் திருமால்குன்றம் (அழகர் மலை) வழியாக மதுரை செல்லலாம். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியில், சோலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ளன. அவ்வழியாகச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடைந்து, மதுரை செல்லலாம். கோவலனையும் கண்ணகியையும் கவுந்தியடிகள் இடைப்பட்ட வழியிலேயே அழைத்துச் சென்றார். மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம் (சுருளி மலை) சென்று வேங்கைக் கானல் என்னுமிடத்தை அடைந்தாள்.
உரைப்பாட்டு மடை
உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை. இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு. வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம். இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை.
இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம்)
சிலப்பதிகாரம், புகார்க்காண்டத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதையிலிருந்து இப்பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது; மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது; கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது. மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக்காப்பியங்கள் எனவும்அழைக்கப்பெறுகின்றன. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள், சேர மரபைச் சேர்ந்தவர். மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் கோவலன் கண்ணகி கதையைக் கூறி, 'அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் 'நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்' என இக்காப்பியம் படைத்தார் என்பர்.
தி.சொ. வேணுகோபாலன்
நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சொ. வேணுகோபாலனின் 'கோடை வயல்' என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் திருவையாற்றில் பிறந்தவர்; மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்; 'எழுத்து' காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு மீட்சி விண்ணப்பம்.
எத்திசையும் புகழ் மணக்க
கி.பி.(பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார். பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே "ஜென்" தத்துவம். இது, பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கண்ணதாசன்
'காலக்கணிதம்' என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 'முத்தையா' என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் - விசாலாட்சி ஆவர். 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர். சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
வீரமாமுனிவர்
தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது. கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது. இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி.
இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி. தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.
வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார். இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார். இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் தூய துறவி என்று பொருள்.
ஜெயகாந்தன்
கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் அவர்; சிறுகதை, புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர்; இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர். மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ஜெயகாந்தன்.
நூல் வெளி
ஜெயகாந்தன் பேசி, 'எதற்காக எழுதுகிறேன்?' என்ற தலைப்பில் கட்டுரையாகத் தொகுக்கப்பட்ட பகுதியும் 'யுகசந்தி' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'தர்க்கத்திற்கு அப்பால்' என்னும் சிறுகதையும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. தான் வாழ்ந்த காலத்தில் சிக்கல்கள் பலவற்றை ஆராய, எடுத்துச்சொல்ல, தன் பார்வைக்கு உட்பட்ட தீர்ப்பைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கையே படைப்பு. அவருடைய படைப்புகள் உணர்ச்சி சார்ந்த எதிர்வினைகளாக இருக்கின்றன. இதுவே அவருக்குச் 'சிறுகதை மன்னன்' என்ற பட்டத்தைத் தேடித்தந்தது. இவர் குறும்புதினங்களையும் புதினங்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளார்; தன் கதைகளைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்; தலைசிறந்த உரத்த சிந்தனைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்; சாகித்திய அகாதெமி விருதையும் ஞானபீட விருதையும் பெற்ற இவருடைய கதைகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
விருதுகள்
- குடியரசுத் தலைவர் விருது (உன்னைப்போல் ஒருவன் - திரைப்படம்)
- சாகித்திய அகாதெமி விருது (சில நேரங்களில் சில மனிதர்கள் - புதினம்)
- சோவியத் நாட்டு விருது (இமயத்துக்கு அப்பால்)
- ஞானபீட விருது
- தாமரைத்திரு விருது
இவர்கள் பார்வையில் ஜெயகாந்தன்
ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம். — அசோகமித்திரன்
கச்சிதமான உருவம், கனமான உள்ளடக்கம், வலுவான நடை, புதுக்கருத்துகள், புதுவிளக்கங்கள், ஆழம், கனம் இந்த அம்சங்களை இவருடைய சிறுகதைகளில் பூரணமாகக் காணலாம். அதுமட்டுமின்றிப் பலதிறப்பட்ட சூழ்நிலைகளையும் வெற்றிகரமாகச் சித்தரிப்பது இவருடைய அரிய சாதனை. — வாசகர்களின் கருத்து - தீபம் இதழ் - 1967.
நேர் கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் - இவைகள்தாம் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழனின் சிறப்பான அடையாளங்கள். 'படிக்காத மேதை' என்று குறிப்பிடப்படும் அவர், முறையாகக் கல்லூரிகளில் படிக்கவில்லையே தவிர, தமிழ், இந்திய இலக்கியங்களை மட்டுமன்றி, சோவியத் பிரெஞ்சு இலக்கியங்களைத் தானே படித்து உணர்ந்தது மட்டுமன்றி, வாழ்க்கையையும் ஆழமாகப் படித்தவர் பிறகு அவற்றை வார்த்தைகளில் அழகுறப் படைத்தவர். — கா. செல்லப்பன்
ஈன்ற முத்துகளில் சில (எழுதிய நூல்கள்)
சிறுகதைத் தொகுப்புகள்
- குருபீடம்
- ஒரு பிடி சோறு
- உண்மை சுடும்
- இனிப்பும் கரிப்பும்
- தேவன் வருவாரா
- புதிய வார்ப்புகள்
குறும்புதினங்கள்
- பிரளயம்
- கைவிலங்கு
- ரிஷிமூலம்
- பிரம்ம உபதேசம்
- யாருக்காக அழுதான்?
- கருணையினால் அல்ல
- பாரீசுக்குப் போ!
- சுந்தர காண்டம்
புதினங்கள்
- உன்னைப் போல் ஒருவன்
- கங்கை எங்கே போகிறாள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- இன்னும் ஒரு பெண்ணின் கதை
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
மொழி பெயர்ப்புகள்
- வாழ்விக்க வந்த காந்தி (பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்)
- ஒரு கதாசிரியனின் கதை (முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)
திரைப்படமான படைப்புகள்
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- ஊருக்கு நூறுபேர்
- உன்னைப் போல் ஒருவன்
- யாருக்காக அழுதான்
நாகூர் ரூமி (முகம்மதுரஃபி)
முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்; இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர். மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலையும் படைத்துள்ளார்.