Skip to main content

தென்னிந்தியாவில் தேசிய எழுச்சி (National Awakening in South India)

தொடக்ககால தேசியவாத இயக்கங்கள் சில வரம்புகளைக் கொண்டிருந்தன. முதலாவதாக, அவர்கள் அனைவரும் ஒரு சிறிய சதவீத மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்தனர் - நகர்ப்புற நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர். இரண்டாவது, கடந்தகால மகத்துவத்தை முறையிடுவதும் வேத அதிகாரத்தை நம்புவதுமாகும். இது ஒருபுறம் கள்ளத்தனத்தையும், மறுபுறம் நவீன அறிவியலின் முழு அங்கீகாரத்தையும் தடுத்து, நிகழ்காலத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியைத் தடுத்தது. தேசிய நனவின் விரைவான எழுச்சியுடன், வகுப்புவாத உணர்வு நடுத்தர வர்க்கத்தினரிடையே தலைதூக்கத் தொடங்கியபோது, இந்த நிகழ்வின் தீய அம்சங்கள் தெளிவாகத் தெரிந்தன. மத சீர்திருத்த இயக்கங்களின் தன்மையும் இதற்கு பங்களித்தது.

தொடக்ககால அரசியல் அமைப்புகள் (Early Political Organizations)

தமிழ்நாட்டில் தொடக்ககால தேசிய அதிர்வுகள்

(அ) சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association)

சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association - MNA), தொடங்கப்பெற்ற காலத்தால் முற்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பு தனிப்பட்ட குழுக்களின் விருப்பங்களைக் காட்டிலும் பொதுமக்களின் தேவைகளை அனைவருக்கும் தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவானது. இவ்வமைப்பு 1852இல் கஜுலு லட்சுமிநரசு, சீனிவாசனார் மற்றும் அவர்களைச் சேர்ந்தோர்களாலும் நிறுவப் பெற்றது. இவ்வமைப்பில் வணிகர்களே அதிக எண்ணிக்கையில் அங்கம் வகித்தனர். தனது உறுப்பினர்களின் நலன்களை முன்னெடுப்பது, வரிகளைக் குறைக்க கோரிக்கை வைப்பது போன்ற நோக்கங்களை இவ்வமைப்பு உள்ளடக்கி இருந்தது. மேலும் கிறித்தவ சமயப்பரப்பாளர்களின் செயல்பாடுகளுக்கு அரசு ஆதரவளித்ததை எதிர்த்தனர்.

மக்களின் நிலை, அவர்களின் தேவைகள் ஆகியவற்றின் மீது அரசின் கவனத்தைத் திருப்பும் பணியை இவ்வமைப்பு மேற்கொண்டது. வருவாய்த்துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதைப்படுத்தப்படுவதற்கு எதிராக இவ்வமைப்பு (MNA) நடத்திய போராட்டம் முக்கியமான பங்களிப்பாகும். இவ்வமைப்பு மேற்கொண்ட முயற்சிகளால் சித்திரவதை ஆணையம் (Torture Commission) நிறுவப்பட்டது. அதன் விளைவாகச் சித்திரவதை முறைகள் மூலம் கட்டாய வரிவசூல் முறையை நியாயப்படுத்திய சித்திரவதைச் சட்டம் (Torture Act) ஒழிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இவ்வமைப்பு 1862க்குப் பின்னர் செயலிழந்து இல்லாமலானது.

(ஆ) தேசியவாதப் பத்திரிக்கைகளின் தொடக்கங்கள் (Beginnings of Nationalist Press)

T. முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக 1877இல் நியமிக்கப்பட்டது சென்னை மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு இந்தியர் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டதை சென்னையைச் சேர்ந்த அனைத்துப் பத்திரிக்கைகளும் விமர்சனம் செய்தன. எதிர்ப்பு தெரிவித்த அனைத்துப் பத்திரிக்கைகளும் ஐரோப்பியர்களால் நடத்தப்படுவதை கல்விகற்ற இளைஞர்கள் உணர்ந்தனர். இது குறித்து இந்தியரின் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு செய்திப் பத்திரிக்கை தேவை என்பது உணரப்பட்டது. G. சுப்பிரமணியம், M. வீரராகவாச்சாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் நால்வர் ஆகியோர் இணைந்து 1878இல் 'தி இந்து' எனும் (The Hindu) செய்திப் பத்திரிக்கையைத் தொடங்கினர். மிக விரைவில் இச்செய்திப் பத்திரிக்கை தேசியப் பிரச்சாரத்திற்கான கருவியானது.

G. சுப்பிரமணியம் 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார். 1899இல் அவ்விதழ் நாளிதழாக மாறியது. இந்தியன் பேட்ரியாட் (Indian Patriot), சவுத் இந்தியன் மெயில் (South Indian Mail), மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் (Madras Standard), தேசாபிமானி, விஜயா, சூர்யோதயம், இந்தியா போன்ற உள்நாட்டுப் பத்திரிக்கைகள் தொடங்கப்படுவதற்கு இது ஊக்கமளித்தது.

(இ) சென்னை மகாஜன சபை (Madras Mahajana Sabha)

தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற தொடக்ககால அமைப்பு சென்னை மகாஜன சபையாகும். 1884 மே 16இல் M. வீரராகவாச்சாரி, P. அனந்தாச்சார்லு, P. ரங்கையா மற்றும் சிலரால் நிறுவப்பட்ட இவ்வமைப்பின் முதல் தலைவராக P. ரங்கையா பொறுப்பேற்றார். இதனுடைய செயலாளராக பொறுப்பேற்ற P. அனந்தாச்சார்லு இதன் செயல்பாடுகளில் பங்காற்றினார். அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்று கூடி தனிப்பட்ட விதத்திலும் அறைக்கூட்டங்கள் நடத்தியும் பொதுப்பிரச்சனைகள் குறித்து விவாதித்து தங்கள் கருத்துகளை அரசுக்குத் தெரியப்படுத்தினர். குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும், லண்டனிலுள்ள இந்தியக் கவுன்சிலை மூடுவது, வரிகளைக் குறைப்பது, இராணுவ குடியியல் நிர்வாகச் செலவுகளைக் குறைப்பது ஆகியன இவ்வமைப்பின் கோரிக்கைகளாகும். இவ்வமைப்பின் பல கோரிக்கைகள் பின்னர் 1885இல் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் கோரிக்கைகளாயின.

மிதவாதக் கட்டம் (The Moderate Phase)

சென்னை மகாஜன சபை போன்ற மாகாண அமைப்புகள் அகில இந்திய அளவிலான அமைப்புகள் நிறுவப்படுவதற்கு வழிகோலியது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பாக பல கூட்டங்களில் கலந்து கொண்டனர். அவ்வாறான ஒரு கூட்டம் 1884 டிசம்பரில் அடையாறு எனும் இடத்தில் உள்ள பிரம்மஞான சபையில் கூடியது. தாதாபாய், K.T. தெலாங், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் சில முக்கியத் தலைவர்களுடன், சென்னையிலிருந்து G. சுப்பிரமணியம், P. ரங்கையா, P. அனந்தாச்சார்லு போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடக்ககால தேசியவாதிகள் அரசமைப்பு வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். அறைக்கூட்டங்கள் நடத்துவதும் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுவதும் அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன. வங்கப் பிரிவினையின் போது திலகரும் ஏனைய தலைவர்களும் பெருவாரியான மக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்களை நடத்தியதாலும் மக்களை ஈடுபடச்செய்வதற்காக வட்டாரமொழியைப் பயன்படுத்தியதாலும் தொடக்ககால தேசியவாதிகள் மிதவாதிகளென அழைக்கப்படலாயினர். சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ்நாட்டு மிதவாதத் தலைவர்கள் V.S. சீனிவாச சாஸ்திரி, P.S. சிவசாமி, V. கிருஷ்ணசாமி, T.R. வெங்கட்ராமனார், G.A. நடேசன், T.M. மாதவராவ் மற்றும் S.சுப்பிரமணியனார்.

இந்திய தேசியக் காங்கிரசின் முதற்கூட்டம் 1885இல் பம்பாயில் நடைபெற்றது. மொத்தம் கலந்து கொண்ட 72 பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தோராவர். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு 1886இல் கொல்கத்தாவில் தாதாபாய் தலைமையில் நடைபெற்றது. காங்கிரசின் மூன்றாவது மாநாடு பத்ருதீன் தியாப்ஜியின் தலைமையில் 1887இல் சென்னையில் இன்று ஆயிரம் விளக்கு என்று அழைக்கப்படுகிற மக்கிஸ் தோட்டத்தில் (Makkies Garden) நடைபெற்றது. கலந்து கொண்ட 607 அகில இந்தியப் பிரதிநிதிகள் 362 பிரதிநிதிகள் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

சுதேசி மற்றும் புரட்சிகர கட்டம் (Swadeshi and Revolutionary Phase)

சுதேசி இயக்கம் (Swadeshi Movement)

வங்கப் பிரிவினை (1905) சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்று விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது. இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக வங்காளம், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் புகழ்பெற்ற தலைவர்கள் தோன்றினர். கொல்கத்தா காங்கிரசில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின்படி சுதேசி நிறுவனங்களை ஊக்குவித்தல், அந்நியப் பண்டங்களைப் புறக்கணித்தல், தேசியக் கல்வியை முன்னெடுத்தல் ஆகியவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தினர்.

(அ) தமிழ்நாட்டின் எதிர்வினை (Response in Tamil Nadu)

வ. உ. சிதம்பரனார், V. சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுரேந்திரநாத் ஆரியா ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த தலைவர்களாவர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக தமிழ் பயன்படுத்தப்பட்டது. மக்களின் நாட்டுப்பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்பியதில் சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் மிக முக்கியமானவையாகும்.

சுதேசி கருத்துகளைப் பரப்புரை செய்ய பல இதழ்கள் தோன்றின. சுதேசமித்திரன், இந்தியா ஆகிய இரண்டும் முக்கிய இதழ்களாகும். தீவிர தேசியவாதத் தலைவரான பிபின் சந்திரபால் சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஆற்றிய சொற்பொழிவுகள் இளைஞர்களைக் கவர்ந்தன. சுதேசி இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

சுதேசி நீராவி கப்பல் நிறுவனம்: சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ. உ. சிதம்பரனாரால் தொடங்கப்பட்ட சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் ஆகும். இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.

(ஆ) திருநெல்வேலி எழுச்சி (Tirunelveli Uprising)

திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவாவின் தோளோடுதோள் நின்றார். இவர் 1908இல் ஐரோப்பியருக்குச் சொந்தமான கோரல் நூற்பாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்குத் தலைமையேற்றார். இந்நிகழ்வு நடைபெற்ற அதே சமயத்தில் பிபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்டார். பிபின் விடுதலைசெய்யப்பட்டதைக்கொண்டாடுவதற்காகப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்ததற்காக வ.உ.சியும் சிவாவும் கைது செய்யப்பட்டனர். தலைவர்கள் இருவரும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர். தொடக்கத்தில் வ.உ.சிக்கு கொடுமையான வகையில் இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன.

மக்கள் செல்வாக்கு பெற்ற இவ்விரு தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதில் திருநெல்வேலியில் கலகம் வெடித்தது. காவல்நிலைய, நீதிமன்ற, நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர். சிறையில் வ.உ.சி கடுமையாக நடத்தப்பட்டதோடு செக்கிழுக்க வைக்கப்பட்டார். சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்பிரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரிக்கு இடம்பெயர்ந்தார். பாரதியின் முன்னுதாரணத்தை அரவிந்தகோஷ், V.V. சுப்பிரமணியனார் போன்ற தேசியவாதிகளும் பின்பற்றினர்.

தமிழ்நாட்டில் புரட்சிகர தேசியவாதிகளின் செயல்பாடுகள்

புரட்சிகர தேசியவாதிகளுக்குப் பாண்டிச்சேரி பாதுகாப்பான புகலிடமாயிற்று. தமிழ்நாட்டைச் சேர்ந்த இப்புரட்சிகர தேசியவாதிகள் பலருக்குப் புரட்சிகர நடவடிக்கைகள் குறித்த அறிமுகமும் பயிற்சியும் லண்டனிலிருந்த இந்தியா ஹவுஸ் (India House) என்ற இடத்திலும் பாரிசிலும் வழங்கப்பெற்றது. அவர்களில் முக்கியமானவர்கள் M.P.T. ஆச்சாரியா, V.V. சுப்ரமணியனார் மற்றும் T.S.S. ராஜன் ஆகியோராவர். அவர்கள் புரட்சிகர நூல்களை பாண்டிச்சேரியின் வழியாக சென்னையில் விநியோகம் செய்தனர். புரட்சிவாதச் செய்தித்தாள்களான இந்தியா, விஜயா, சூர்யோதயம் ஆகியன பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்தன.

ஆஷ் கொலை (Ashe Murder)

1904இல் நீலகண்ட பிரம்மச்சாரியும் வேறு சிலரும் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கினர். ஆங்கில அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வைத் தூண்டுவதே இவ்வமைப்பின் நோக்கமாகும். செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் இவ்வமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார். அவர் 1911 ஜூன் 17இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W.D.E. ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்றார். அதன் பின்னர் தன்னைத்தானே சுட்டு கொண்டார்.

காந்திய சகாப்த இயக்கங்கள் (Gandhian Era Movements)

(இ) அன்னிபெசன்ட் அம்மையாரும் தன்னாட்சி இயக்கமும் (Annie Besant and the Home Rule Movement)

தீவிர தேசியவாதிகளும் புரட்சிகர தேசியவாதிகளும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்ட நிலையில் மிதவாத தேசியவாதிகள் சில அரசமைப்பு சீர்திருத்தங்கள் செய்யப்படலாம் என நம்பினர். இருந்தபோதிலும் மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் பொறுப்பாட்சியை வழங்கவில்லை என்பதால் அவர்கள் மனச்சோர்வடைந்தனர். இவ்வாறு தேசிய இயக்கம் தளர்வுற்று இருந்த நிலையில் பிரம்மஞான சபைத் தலைவரும், அயர்லாந்துப் பெண்மணியுமான அன்னிபெசன்ட் அயர்லாந்தின் தன்னாட்சி அமைப்புகளை அடியொற்றி தன்னாட்சி இயக்கத்தை முன்மொழிந்தார்.

1916இல் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule League) தொடங்கிய அவர் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார். இச்செயல் திட்டத்தில் G.S. அருண்டேல், B.P. வாடியா மற்றும் C.P. ராமசாமி ஆகியோர் அவருக்குத் துணை நின்றனர். இவர்கள் கோரிய தன்னாட்சி ஆங்கில அரசிடம் ஓரளவிற்கான விசுவாசத்தையே கொண்டிருந்ததாக அமைந்தது.

தன்னுடைய திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காக அன்னிபெசன்ட் நியூ இந்தியா (New India), காமன் வீல் (Commonweal) எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.

note

"அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது" என அன்னிபெசன்ட் கூறினார்.

1910ஆம் ஆண்டு பத்திரிக்கைச் சட்டத்தின்படி அன்னிபெசன்ட் பிணைத் தொகையாக பெருமளவு பணத்தைச் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டார். 'விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது' ('How India wrought for Freedom'), இந்தியா: ஒரு தேசம் (India: A Nation) எனும் இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதினார்.

பிராமணர் அல்லாதோர் இயக்கமும் காங்கிரசிற்கு சவாலும் (Non-Brahmin Movement and Challenge to Congress)

(அ) தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (South Indian Liberal Federation - Justice Party)

பிராமணரல்லாதோர் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்களை ஒரு அரசியல் அமைப்பாக அணிதிரட்டிக் கொண்டனர். 1912இல் சென்னை திராவிடர் கழகம் (Madras Dravidian Association) உருவாக்கப் பெற்றது. அதன் செயலராக C. நடேசனார் செயலூக்கமிக்க வகையில் பங்காற்றினார். 1916 ஜூன் மாதத்தில் அவர் பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக 'திராவிடர் சங்க தங்கும் விடுதி'யை நிறுவினார். 1916 நவம்பர் 20இல் P. தியாகராயர், டாக்டர் T.M. நாயர், C. நடேசனார் ஆகியோர் தலைமையில் சுமார் முப்பது பிராமணரல்லாதவர்கள் சென்னை விக்டோரியா பொதுஅரங்கில் கூடினர். பிராமணரல்லாதோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (South Indian Liberal Federation - SILF) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது.

1920இல் நடத்தப்பட்ட தேர்தல்களைக் காங்கிரஸ் புறக்கணித்தது. சட்டமன்றத்தில் மொத்தமிருந்த 98 இடங்களில் 63இல் நீதிக்கட்சி வெற்றிபெற்றது. நீதிக்கட்சியின் A. சுப்பராயலு முதலாவது முதலமைச்சரானார். 1923இல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக் கட்சியைச் சேர்ந்த பனகல் அரசர் அமைச்சரவையை அமைத்தார்.

அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள்: ரௌலட் சட்டம் (Repressive Measures of the Government: Rowlatt Act)

ஆங்கில அரசு 1919இல் கொடூரமான குழப்பவாத புரட்சிக் குற்றச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தைப் பரிந்துரை செய்த குழுவினுடைய தலைவரின் பெயர் சர் சிட்னி ரௌலட் ஆவார். எனவே இச்சட்டம் பரவலாக ரௌலட் சட்டம் என அறியப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் முறையான நீதித்துறை சார்ந்த விசாரணைகள் இல்லாமலேயே யாரை வேண்டுமானாலும் பயங்கரவாதி எனக் குற்றம்சாட்டி அரசு சிறையில் அடைக்கலாம். இதைக் கண்டு இந்தியர்கள் திகிலடைந்தனர். மக்களின் கோபத்திற்குக் குரல்கொடுத்த காந்தியடிகள், தென்னாப்பிரிக்காவில் தான் பயன்படுத்திய போராட்ட வடிவமான சத்தியாகிரகத்தை மேற்கொண்டார்.

ரௌலட் சத்தியாகிரகம் (Rowlatt Satyagraha)

1919 மார்ச் 18இல் மெரினா கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார். 1919 ஏப்ரல் 6இல் 'கருப்புச் சட்டத்தை' எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பும் வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை நகரின்பல பகுதிகளிலிருந்து தொடங்கிய ஊர்வலங்கள் மெரினா கடற்கரையில் ஒன்றிணைந்து பெரும் மக்கள் கூட்டமானது. அந்நாள் முழுவதும் உண்ணாவிரதமும் பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன. சென்னை சத்தியாகிரக சபை என்ற அமைப்பும் நிறுவப்பட்டது. ராஜாஜி, கஸ்தூரிரங்கர், S. சத்தியமூர்த்தி, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் கூட்டத்தில் உரை நிகழ்த்தினர். தொழிலாளர்களுக்கென தனியாக நடத்தப்பட்ட கூட்டமொன்றில் V. கல்யாணசுந்தரம் (திரு.வி.க), B.P. வாடியா, வ.உ.சி ஆகியோர் உரையாற்றினர். தொழிலாளர்களும், மாணவர்களும், பெண்களும் பெருவாரியான எண்ணிக்கையில் பங்கேற்றதே இவ்வியக்கத்தின் முக்கிய அம்சமாகும்.

(இ) கிலாபத் இயக்கம் (Khilafat Movement)

ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து அதற்குக் காரணமான ஜெனரல் டயர் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுக்கப்பட்டதோடல்லாமல் அவருக்குப் பரிசுகளும் வெகுமதியும் வழங்கப்பட்டன. முதல் உலகப் போருக்குப் பின்னர் துருக்கியின் கலீபா அவமரியாதை செய்யப்பட்டதுடன் அவரது அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டன. கலீபா பதவியை மீட்பதற்காக கிலாபத் இயக்கம் தொடங்கப் பெற்றது. பெரும்பாலும் தேசிய இயக்கத்திலிருந்து ஒதுங்கி இருந்த முஸ்லிம்கள் தற்போது பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கத் தொடங்கினர். தமிழ்நாட்டில் 1920 ஏப்ரல் 17இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதைப்போன்ற ஒரு மாநாடு ஈரோட்டிலும் நடத்தப்பட்டது. வாணியம்பாடி, கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.

ஒத்துழையாமை இயக்கம் (Non-Cooperation Movement)

ஒத்துழையாமை இயக்கத்தின்போது தமிழ்நாடு செயல்துடிப்புடன் விளங்கியது. C. ராஜாஜியும் ஈ.வெ. ராமசாமியும் (ஈ.வெ. ரா பின்னர் பெரியார் என அழைக்கப்பட்டார்) தலைமையேற்று நடத்தினர். முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை நிறுவிய யாகுப் ஹசன் என்பாருடன் ராஜாஜி நெருக்கமாகச் செயல்பட்டார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தின்போது இந்துக்களும் இஸ்லாமியரும் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டனர்.

  • வரிகொடா இயக்கம்: பல இடங்களில் விவசாயிகள் வரிகொடுக்க மறுத்தனர். தஞ்சாவூரில் வரிகொடா இயக்கம் ஒன்று நடைபெற்றது.
  • புறக்கணிப்பு: சட்டமன்றங்கள், பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன. அந்நியப்பொருட்கள் புறக்கணிக்கப்பட்டன.
  • கள்ளுக்கடை மறியல்: தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது கள்ளுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்களே.
  • சட்ட மறுப்பு: 1921 நவம்பரில் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டது. ராஜாஜி, சுப்பிரமணிய சாஸ்திரி, ஈ.வெ.ரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
  • வேல்ஸ் இளவரசர் வருகை புறக்கணிப்பு: 1922 ஜனவரி 13இல் வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது. காவல்துறையின் அடக்குமுறையில் இருவர் கொல்லப்பட்டனர் பலர் காயமுற்றனர்.

1922இல் சௌரி சௌரா நிகழ்வில் 22 காவலர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

சுயராஜ்ஜிய கட்சியினர் - நீதிக்கட்சியினர் இடையேயான போட்டி

ஒத்துழையாமை இயக்கம் விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் "மாற்றத்தை விரும்பாதோர்", "மாற்றத்தை விரும்புவோர்" எனப் பிரிந்தது.

  • மாற்றத்தை விரும்பாதோர் (No-Changers): ராஜாஜி, கஸ்தூரிரங்கர், M.A. அன்சாரி போன்றோர் சட்டமன்றப் புறக்கணிப்பைத் தொடர விரும்பினர்.
  • மாற்றத்தை விரும்புவோர் (Pro-Changers/Swarajists): சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் தேர்தல்களில் போட்டியிட்டுச் சட்டமன்றத்தினுள் செல்ல விரும்பினர். இவர்கள் சுயராஜ்ஜியக் கட்சியை உருவாக்கினர். தமிழ்நாட்டில் S. சீனிவாசனார், S. சத்தியமூர்த்தி ஆகியோர் சுயராஜ்ஜியக் கட்சியினருக்குத் தலைமை ஏற்றனர்.

சுப்பராயன் அமைச்சரவை (Subbarayan Ministry)

1926இல் நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றனர். இருந்தபோதிலும் காங்கிரசின் கொள்கைக்கு இணங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்கமறுத்து, சுயேட்சை வேட்பாளரான P. சுப்பராயனுக்கு அமைச்சரவை அமைக்க உதவினர். 1930இல் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் போட்டியிடாததால் நீதிக்கட்சி எளிதாக வெற்றி பெற்று, 1937 வரை ஆட்சி செய்தது.

(ஈ) சைமன் குழுவைப் புறக்கணித்தல் (Boycott of Simon Commission)

1919ஆம் ஆண்டுச் சட்டத்தின்செயல்பாடுகளைப் பரிசீலனை செய்து சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்ய 1927இல் சர் ஜான் சைமனின் தலைமையில் இந்திய சட்டப்பூர்வ ஆணையம் ஒன்று அமைக்கப் பெற்றது. ஆனால் வெள்ளையர்களை மட்டுமே கொண்டிருந்த இக்குழுவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறாதது இந்தியர்களுக்கு மிகப்பெரும் மனச்சோர்வை அளித்தது. ஆகையால் காங்கிரஸ் சைமன் குழுவைப் புறக்கணித்தது. சென்னையில் S. சத்தியமூர்த்தி தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சாரக் குழுவொன்று உருவாக்கப்பட்டது. 1929 பிப்ரவரி 18இல் சைமன் குழு சென்னைக்கு வந்தபோது குழுவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.

சட்ட மறுப்பு இயக்கம் (Civil Disobedience Movement)

(அ) பூரண சுயராஜ்ஜியத்தை நோக்கி (Towards Purna Swaraj)

1927இல் இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாநாடு முழுமையான சுதந்திரமே தனது இலக்கு என அறிவித்தது. 1929இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயராஜ்ஜியம் (முழு சுதந்திரம்) என்பதே இலக்கு எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 1930 ஜனவரி 26இல் ராவி நதியின் கரையில் சுதந்திரத்தை அறிவிக்கும் விதமாக ஜவகர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றினார்.

(ஆ) வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் (Vedaranyam Salt March)

காந்தியடிகள் முன்வைத்த கோரிக்கைகளை வைஸ்ராய் ஏற்றுக்கொள்ளாததைத் தொடர்ந்து அவர் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். தமிழ்நாட்டில், ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடுசெய்து தலைமையேற்று வேதாரண்யம் நோக்கி அணி வகுத்துச் சென்றார். 1930 ஏப்ரல் 13இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து தொடங்கி ஏப்ரல் 28இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் வேதாரண்யத்தைச் சென்றடைந்தது. இவ்வணிவகுப்புக்கென்றே "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” எனும் சிறப்புப்பாடலை நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் புனைந்திருந்தார்.

வேதாரண்யம் சென்றடைந்த பின்னர் இராஜாஜியின் தலைமையில் 12 தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பை அள்ளினர். உப்புச் சட்டத்தை மீறியதற்காக இராஜாஜி கைது செய்யப்பட்டார். T.S.S. ராஜன், திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம், C. சாமிநாதர் மற்றும் K. சந்தானம் ஆகியோர் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற ஏனைய முக்கியத் தலைவர்களாவர்.

(இ) தமிழக மாவட்டங்களில் பரவலான போராட்டங்கள் (Widespread Protests in Tamil Nadu Districts)

T. பிரகாசம், K. நாகேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையில் சத்தியாகிரகிகள் சென்னைக்கு அருகேயுள்ள உதயவனம் என்ற இடத்தில் ஒரு முகாமை அமைத்திருந்தனர், ஆனால் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். 1930 ஏப்ரல் 27இல் திருவல்லிக்கேணியில் காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது, இதில் மூன்று நபர்கள் உயிரிழந்தனர். பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். உப்புச்சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதியாவார்.

1932 ஜனவரி 26இல், பரவலாக ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றினார்.

திருப்பூர் குமரனின் வீரமரணம்: 1932 ஜனவரி 11இல் திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் நாட்டுப்பற்று மிகுந்தபாடல்களைப் பாடிச் சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்து உதைக்கப்பட்டனர். பரவலாக திருப்பூர் குமரன் எனப்படும் O.K.S.R. குமாரசாமி தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறே விழுந்து இறந்தார். ஆகையால் இவர் கொடிகாத்த குமரன் என புகழப்படுகிறார்.

இறுதிக்கட்டப் போராட்டங்கள் (Final Phase of Struggle)

(ஈ) முதல் காங்கிரஸ் அமைச்சரவை (First Congress Ministry)

1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது. சென்னையில் இராஜாஜி முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தார். மது விலக்கைப் பரிசோதனை முயற்சியாக சேலத்தில் அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அமைச்சரவையைக் கலந்தாலோசிக்காமல் ஆங்கில அரசு இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தியதால் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது.

(உ) இந்தி எதிர்ப்புப் போராட்டம் (Anti-Hindi Agitation)

பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப்பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது, இது இராஜாஜியால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய நடவடிக்கையாகும். தமிழ்மொழிக்கும் பண்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்க, ஆரிய வட இந்தியர்களால் சுமத்தப்பட்ட ஏற்பாடாக இது கருதப்பட்டதால் மக்களிடையே பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக ஈ.வெ.ரா மிகப்பெரிய பரப்புரையை மேற்கொண்டார். அவர் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றினை சேலத்தில் நடத்தினார். தாளமுத்து மற்றும் நடராஜன் எனும் இரண்டு ஆர்வமிக்க போராட்டக்காரர்கள் சிறையில் மரணமடைந்தனர். பெரியார் உட்பட 1200 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து நிர்வாகத்தைக் கைக்கொண்ட சென்னை மாகாண ஆளுநர் இந்தி கட்டாயப் பாடம் என்பதை நீக்கினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement)

1942 ஆகஸ்டு 8இல் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காந்தியடிகள் "செய் அல்லது செத்துமடி” எனும் முழக்கத்தை வழங்கினார். ஒட்டு மொத்த காங்கிரஸ் தலைவர்களும் ஒரே நாள் இரவில் கைது செய்யப்பட்டனர். பம்பாயிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த கு. காமராஜர், காவல்துறையினரின் கண்களில்படாமல் அரக்கோணத்திலேயே இறங்கி, தலைமறைவாகி வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக மக்களைத் திரட்டும் பணியை மேற்கொண்டார்.

இவ்வியக்கத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்றனர். பக்கிங்காம் மற்றும் கர்நாட்டிக் மில், சென்னை துறைமுகம், சென்னை மாநகராட்சி மற்றும் மின்சார டிராம் போக்குவரத்து போன்ற இடங்களில் பெருமளவிலான தொழிலாளர் போராட்டங்கள் நடைபெற்றன. பெரும் எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் இந்திய தேசிய இராணுவத்தில் (INA) சேர்ந்தனர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் இரக்கமற்ற முறையில் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டது. ராயல் இந்தியக் கப்பற்படைப் புரட்சியும், இங்கிலாந்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தொழிலாளர் கட்சி அரசு தொடங்கிய பேச்சு வார்த்தைகளும் இந்திய விடுதலைக்கு வழிகோலின.