தொழில் வளர்ச்சி மற்றும் கொள்கைகள் (Industrial Growth and Policies)
தொழில் வளர்ச்சி (Industrial Growth)
தொழில்துறையின் தேவை மற்றும் பணி உலகம் முழுவதும் வளர்ச்சி சிந்தனையுடைய அனைத்து நாடுகளாலும் உணரப்பட்டுள்ளது. நவீன வளர்ச்சி நிலைகளில் விரைவான வளர்ச்சியையும் பொருளாதார மேம்பாட்டையும் பெறுவதற்கு தொழில்துறையின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. பின் வருபவை தொழில் துறையின் அவசியத்தை உணர்த்துகிறது.
- தொழில்மயமாதல் மூலம் நாட்டு வருமானம் உயர்வதால் பொருளாதாரம் சீரடைகிறது. தொழில்துறையில் முன்னேறிய நாடுகளில் நாட்டு வருமானத்தின் பெரும்பங்கு தொழில் துறையிடமிருந்து வருகிறது.
- தொழில்மயமாதல் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகி மக்களின் வருமானம் உயர்ந்து வாழ்க்கைத் தரமும் மேம்படுகிறது.
- ஏற்றுமதி அதிகமாவதன் மூலம் போதிய அந்நியச் செலாவாணியை ஈட்டமுடிகிறது.
- அதிகரிக்கும் வருமானம் அதிக சேமிப்பிற்கும் அதிக மூலதன உருவாக்கத்திற்கும் வழிவகுக்கிறது.
- தொழிலக அமைவிடமானது வெபர் கோட்பாட்டின் அடிப்படையில் அமையும்.
தொழில் வளர்ச்சியின் வகைகள் (Patterns of Industrial Growth)
தொழில்கள் நான்கு மிக முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
- அடிப்படைப் பண்டங்கள் (சிமெண்ட், இரசாயன பொருட்கள், உரம்)
- மூலதனத் தளவாடங்கள் (இயந்திரங்கள், இயந்திர தளவாடங்கள், பொறியியல் பண்டங்கள்)
- நுகர்வுப் பண்டங்கள் (மிதிவண்டி, தொலைக்காட்சி பெட்டி, மகிழுந்து, குளிர்சாதனப் பெட்டி, இருசக்கர வாகனம், குளிர் பானங்கள்)
- இடைவினைப் பண்டங்கள் (பெயிண்ட், பிளைவுட், பைப் மற்றும் குழாய்கள், துணைப் பொருட்கள் போன்றவை)
இரும்பு எஃகு தொழில் (Steel Industry)
இரும்பு தொழில்கள் உற்பத்தி, சுரங்கத் தொழில், கட்டுமானம், மின்சாரம், போக்குவரத்து போன்ற பல தொழில்களுக்கு உள்ளீடு பொருட்களை வழங்குவதன் மூலம் எல்லாத் தொழில்களுக்கும் திறவுகோலாகவும் தாய்த் தொழிலாகவும் விளங்குகிறது. பொதுத்துறை நிர்வாகங்களில் காணப்படும் திறமையற்ற மேலாண்மை மற்றும் தொழில்நுட்பவாதிகளைவிட அதிகாரிகளின் ஆதிக்கம் ஆகியவை இத்தொழிலின் நிலவும் மிகப்பெரிய பிரச்சனைகள் ஆகும்.
இந்திய இரும்பு எக்குத் தொழில் நிறுவனம் (Steel Authority of India - SAIL) நிறுவப்பெற்றது. இதன் முக்கியப் பணிகள் மூலப்பொருட்களைப் பெற உதவி செய்வதும் மற்றும் இரும்பு எக்கு தொழில்களின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவதும் ஆகும். 1992 ஆம் ஆண்டு விலை மற்றும் பகிர்மானக் கட்டுப்பாட்டை இந்நிறுவனம் விலக்கியது ஒரு மிகப்பெரிய கொள்கை சீர்திருத்தம் எனலாம். 1951 ஆம் ஆண்டு 7 மில்லியன் டன்னாக இருந்த இரும்பு தொழில் உற்பத்தி ஏறத்தாழ 57 மடங்கு உயர்ந்து 2004-05 ஆம் ஆண்டுகளில் 40 மில்லியன் டன்னாக உயர்ந்தது.
நெசவுத் தொழில் (Textiles)
மொத்தத் தொழில்துறை உற்பத்தியில் 20% நெசவுத்தொழில் மூலம் கிடைக்கிறது. 20 மில்லியன் மக்கள் இதன் மூலம் வேலை பெறுகின்றனர். முதல் 5 ஆண்டுத் திட்டத்தின் போது 4755 மில்லியன் சதுர மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டது. அது முதல் இத்தொழிலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. 2004-05 ஆண்டுகளில் 45378 மில்லியன் சதுர மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உற்பத்தி சுதந்திரம் பெற்றது முதல் ஏறத்தாழ 10 மடங்கு உயர்ந்துள்ளது. மூலப்பொருள் கிடைக்காமை, உள்ளீடு பொருள்களின் விலையேற்றம், சிறு ஆலைகளின் குறைவான லாபம், நவீனமயமாக்கல் ஆகும். அதிக செலவு ஆகியன நெசவுத் தொழில் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சனைகள் ஆகும்.
சிமெண்ட் ஆளைத் தொழில் (Cement Industry)
அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள ஒரு மிகப்பெரிய தொழில் சிமெண்ட் ஆலைத் தொழில் ஆகும். இத்தொழில் கச்சாப் பொருள், இயந்திரங்கள், தொழில்நுட்பம் மற்றும் பெருகிவரும் தேவை ஆகியவற்றில் தன்னிறைவைப் பெற்றுள்ளது. உலக சிமெண்ட் உற்பத்தியில் 6 விழுக்காட்டை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு 8.4% என்ற வீதத்தில் இத்தொழில் வளர்ச்சி கண்டுள்ளது. 140.53 மில்லியன் மெட்ரிக் டன் நிறுவனத் திறனைப் பெற்றுள்ள நமது நாட்டில் 365 சிறு தொழிற்சாலைகளும் 120 பெரிய தொழிற்சாலைகளும் அடங்கும். தற்காலக் கொள்கைச் சீர்திருத்தங்கள் தொழிற்சாலைகளின் திறன் பயன்பாட்டினை மேலும் உயர்த்துவதாக உள்ளது. அதிக உள்ளீட்டு செலவுகள் மற்றும் ஏற்றுமதிக்கான உட்கட்டமைப்பு இன்மை ஆகியன இத்தொழிலில் உள்ள பிரச்சனைகள் ஆகும்.
சர்க்கரை ஆலைத் தொழில் (Sugar Industries)
சர்க்கரைத் தொழில் வேளாண்மையைச் சேர்ந்த ஒரு முக்கியத் தொழிலாகும். அது பல தொழிற்சாலைகளுக்கு உள்ளீடுகளை அளிக்கிறது. உலகிலேயே அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாக (15%) இந்தியா திகழ்கிறது. பன்னாட்டு வாணிபத்தில் இதன் பங்கு மிகவும் குறைவே. ஆலைகளின் திறனை முழுமையாகப் பயன்படுத்தாமை, கரும்பு உற்பத்தியாளர்களுக்கு குறைவான விலை நிர்ணயம் செய்தல், தொழில் நலிவு, தொழிற்சாலைகளை மூடுதல் ஆகியன இத்தொழில் சந்திக்கும் பிரச்சனைகள்.
தொழிற் கொள்கை (Industrial Policies)
விடுதலைக்கு முன்னர் தொழிற்துறை மிகவும் சிறியதாக இருந்தது. விடுதலைக்குப்பின் 1948 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட தொழிற் கொள்கை முதன் முதலில் தொழில் மயமாக்கலுக்கு அடிப்படை எனலாம். தொழில் மயமாக்குதலில் 1951 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வளர்ச்சி மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தினை ஒரு மிகப்பெரிய மாற்றம் எனலாம். இதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களான மின்சாரம், கப்பல் கட்டுதல், தொலைத் தொடர்பு, இரும்பு எக்கு தொழில், நிலக்கரி, கனிம வளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம், தொழில் கொள்கை மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பையொட்டி 1956ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தீர்மானத்தின்படி விரைவான தொழில் மயமாதலின் அடிப்படை திட்டமிடுதலும், நெறிப்படுத்தலும் உருவாக்கப்பட்டது. இதன்படி அனைத்து தொழில்களும் (அடிப்படை மற்றும் போர் தொழில்கள்) அல்லது சமூக பயன்பாடு உடைய தொழில்கள் பொதுத் துறையின் பொறுப்பிலிருந்து நல்லமுறையில் திட்டமிட்டு விரைவான வளர்ச்சியடைய செய்ய வேண்டும். அடிப்படை மற்றும் கனரகத் தொழில்கள், மூலதனப் பொருட்களை உருவாக்கும் தொழில்கள் தற்சார்பு பெறும் வகையில் முக்கியத் துறைகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தொழிற் கொள்கைத் தீர்மானங்கள் - 1948
Industrial Policy Resolution, 1948 (நோக்கம்: இறக்குமதி குறைத்தல்) முதல் முக்கியத் தீர்மானம் 1948 இந்திய அரசால் வெளியிடப்பட்டது. இது தொழிற்சாலைகளை ‘4' பிரிவுகளாக பிரிக்கிறது. சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதேபோல் இது தனியார் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
- அரசின் முற்றுரிமை (State Monopoly): இது மைய அரசின் ஒட்டு மொத்த உரிமையை கொண்டுள்ளது. ஆயுதங்கள், இராணுவ தளவாடங்கள் உற்பத்தி, இரயில்வே, அணுசக்தி உற்பத்தியின் கட்டுபாடுகள் இதில் உள்ளன.
- அடிப்படை தொழிற்சாலைகள்: இது 6 துறைகளை கொண்டது அவையாவன, நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்கு தொழிற்சாலைகள், கப்பல் கட்டுதல், விமானங்கள் உற்பத்தி தொலைபேசி, தந்தி (Radio) நீங்கலாக மற்றும் கனிம எண்ணெய், இவை 10 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். இவைகள் தனியாருக்கு நிவாரணம் அளித்த பின் அரசுடைமையாக்கப்படும்.
- ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிற்சாலைகள்: பெரும்பான்மையான மக்களுக்கு முக்கியமானதாக உள்ளதால் இவை இந்திய அரசால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அவையாவன தானியங்கிகள், கனரக இயந்திரங்கள் (Auto Mobile) இரசாயனங்கள், உரங்கள், சர்க்கரை, தாள் சிமெண்ட், பருத்தி, கம்பளி.
- தனியார் தொழிற்சாலைகள்: இது கடைசி பிரிவு, மற்ற தொழிற்சாலைகள் (மேல் குறிப்பிடப்படாதவைகள்) இதில் அடங்கும்.
தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1951
Industries Development and Regulation Act, 1951 இது 1948 - தொழிற்கொள்கைத் தீர்மானங்களுக்காக இயற்றப்பட்டது. இது தொழிற்சாலைகள் மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய அரசால் இயற்றப்பட்டது.
இதன் முக்கிய நோக்கங்கள்:
- தொழிற்சாலை மேம்பாட்டிற்கான முக்கிய படிகளை எடுக்க வேண்டும். தொழிற்சாலை மேம்பாட்டின் நோக்கம் மற்றும் முறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.
- பொதுமக்கள் நன்மைக்காக கையகப் படுத்தப்பட்ட தொழிற்காலைகளின் செயல்பாடு முன்னேற்றம் மற்றும் முடிவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- இச்சட்டம் முதல் அட்டவணையில் உள்ள அட்டவணையிடப்பட்ட தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
- அதேபோல் அரசுடைமையான சிறு தொழிற்சாலைகள் அவற்றின் துணை அலகுகளுக்கு இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தொழிற் கொள்கை தீர்மானம் - 1956 (இந்திய தொழிற்சாலைகளின் மாக்னகார்டா)
Comprehensive Industrial Policy Resolution, 1956 இந்த தொழிற் கொள்கையானது மகலனோபிஸின் வளர்ச்சி மாதிரியை அடிப்படையாக கொண்டது (Mahalanobis model of growth). இந்தியப் பொருளாதாரம் நீண்ட கால அதிக வளர்ச்சியில் அமைய கனரக தொழிற்சாலைகளின் முக்கியத்துவத்தை இந்த மாதிரி வலியுறுத்துகிறது.
- பொதுத்துறைகள் விரிவாக்கப்பட வேண்டும்.
- சோசியலிஸ்ட் அடிப்படையான சமூகம் வளர்ச்சியே அரசின் நோக்கம் என்று வலியுறுத்துகிறது.
- முதன் முறையாக இந்தியத் தொழிற்சாலைகள் வகைப்படுத்துதலில் தெளிவான முடிவு எடுக்கப்பட்டது.
- மக்களின் பயன்பாட்டு சேவைக்கான அடிப்படை மற்றும் முக்கிய தொழிற்சாலைகளில் அதிக முதலீட்டை கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் அரசுடமையாக்கப்பட்டது.
- கட்டாய உரிமை வழங்கும் முறை மேலும் உறுதியாக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையானது பொதுத்துறை மேம்பாட்டிற்கு பாதை அமைத்தது.
தொழிற்சாலைகள் மூன்று பிரிவாக்கப்பட்டது. அவையாவன அட்டவணை அ, அட்டவணை ஆ, அட்டவணை இ.
- அட்டவணை அ (Schedule-A): இவை மைய அரசின் ஏகபோக உரிமையை கொண்டது (17 தொழிற்சாலைகள்). இவை Central Public Sector Undertakings (CPSU) என்றழைக்கப்பட்டது. (உதாரணம்: ஆயுதங்கள், அணுசக்தி, இரும்பு, கனரக இயந்திரங்கள், நிலக்கரி, கனிம எண்ணெய்).
- அட்டவணை ஆ (Schedule-B): இவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை (12 தொழிற்சாலைகள்). மாநில அரசு நடவடிக்கையை எடுக்கவும் தொடர்ந்து கவனிக்கவும் செய்கிறது. (உதாரணம்: தாதுக்கள், அலுமினியம், இயந்திர கருவிகள், மருந்துகள், உரங்கள்).
- அட்டவணை இ (Schedule-C): தனியார் துறை (மத்திய, மாநில அரசின் உரிமை இல்லாதவை).
அனைத்துப் பட்டியல் ஆ மற்றும் இ யில் உள்ள தொழிற்சாலை பெரும்பாலும் கட்டாய உரிமம் பெறும் தொழிற்சாலைகள் ஆயின. இதனால் இந்தியாவில் உரிம அரசு (Licence Raj) தொழிற்கொள்கை உருவானது. தொழில் வளர்ச்சிக்குப் பொதுத் துறை கனரகத் தொழிற்சாலைகள் காரணமாயின. பிராந்திய ஏற்றத் தாழ்வுகளைப் போக்க பின்தங்கிய பகுதிகளில் பொதுத்துறை நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
ஹசாரி குழு (1967)
Hazari Committee (ஏகபோக உரிமை விசாரணை ஆணையம்) இவ்வாணையம் தொழில் உரிமம் பெறுதல் மற்றும் உரிமம் அளிக்கும் அமைப்புகளை ஆராய்ந்து முறையாக உரிமம் வழங்கும். பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டும் அதிகப்படியான உரிமங்களைப் பெற்று, தகுதிக்கு மீறி கடனால் பாதிக்கப்படுகின்ற நிறுவனங்களை அடையாளம் கண்டது. Dr. R. K. ஹசாரி, திட்ட குழுவினால் உரிமம் வழங்கும் முறையை மறு ஆய்வு செய்து ஆலோசனை வழங்க அமர்த்தப்பட்டார். இவர் தனது அறிக்கையை 1967ல் சமர்பித்தார்.
தத் குழு (1969)
Dutt Committee திரு. சுபிமால் தத் (Subimal Dutt) தலைமையில் தொழிற்சாலைகளின் உரிமக் கொள்கையின் மற்றொரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
- பெரும் தொழிற்குழுமங்களுக்கு, முதன்மை மற்றும் பெரும் முதலீட்டு நிறுவனங்கள் அமைப்பதற்கு மட்டும் உரிமம் வழங்க வேண்டும்.
- தொழிற் உரிமம் கொள்கையை மறு ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும்.
- பெரும் நிறுவனம் மற்றும் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஏகபோக உரிமையை கையாள ஏகபோக உரிமை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
- வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைத் தடுக்கும் சட்டம் (MRTP) 1969 ஆண்டு டட் குழுவின் பரிந்துரையால் உருவாக்கப்பட்டது.
MRTP சட்டம் 1969
Monopolistic and Restrictive Trade Practices Act 1969 பொருளாதார அமைப்பில் ஒரு சிலரிடம் மட்டும் பொருளாதார வலிமை குழுமி இருப்பதை தடுப்பதை உறுதி செய்யவும், வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைத் தடுக்கும் சட்டமானது பொருளாதார சக்திகள், வர்த்தகம், நுகர்வோரின் விருப்பம் ஆகியவற்றில் ஏகபோக உரிமை கொள்வதை தடை செய்கிறது.
பொருட்கள் மற்றும் சேவையில் உற்பத்தி மற்றும் சந்தை படுத்துதலில் பிற போட்டியாளர்களை நீக்கி சந்தையின் மீது ஒட்டுமொத்த கட்டுப்பாட்டைச் செலுத்துவதாகும். காரணம் இன்றி விலை ஏற்றம், சந்தையில் போட்டிகளை குறைத்தல் அல்லது தடுத்தல், தொழில்நுட்ப வளர்ச்சியை தடுத்தல், பொருட்களின் தரத்தை நிர்ணயித்தல், முறையற்ற வியாபாரம் இவையே வர்த்தகத்தில் ஏகபோக உரிமைமுறை எனப்படும்.
அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் 1973 (FERA)
Foreign Exchange Regulation Act 1973 முன்னர் இயற்றப்பட்ட சட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தவும், தடைகளை நீக்கவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. FERA பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காக்கவும், ஒழுங்குபடுத்தவும் இயற்றப்பட்டது. இதில் மிகவும் கடுமையான விதிகள் உள்ளன. இதை மீறும் போது குற்றம் விளைவிக்கும் போது FERA மூலம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
தொழில் துறை கொள்கை அறிக்கை (1977)
Industrial Policy Statement ஜனதா அரசு இதனை அறிவித்தது. இந்தக் கொள்கையானது கிராம தொழில்கள், சிறு மற்றும் குடிசைத் தொழில்களை மறுவரையறை செய்தது. சிறு தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை 180இல் இருந்து 500 ஆக ஒதுக்கீடு செய்தது (விரிவடையச் செய்தது). முதல் முறையாக சிறிய அலகு (Tiny unit) விவரிக்கப்பட்டது. இக்கொள்கையானது வேளாண்மைத்துறை மற்றும் தொழிற்துறைக்கு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது. மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கோகோ கோலா, ஐபிஎம் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் இருந்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் (தொழிற்துறை அமைச்சர்) வெளியேற்றினார்.
பொதுத்துறை நிறுவனங்களின் வகைகள் (Public Sector Undertakings)
மகாரத்னா (Maharatna)
- பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)
- கோல் இந்தியா லிமிடெட் (CIL)
- கெயில் இந்தியா லிமிடெட் (GAIL)
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)
- என்.டி.பி.சி லிமிடெட் (NTPC)
- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC)
- ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா லிட் (SAIL)
நவரத்னா (Navratna)
- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
- பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
- இந்தியா லிமிடெட் கொள்கலன் கார்ப்பரேஷன்
- பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்
- இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
- மகாநகர் டெலிகாம் நிகம்
- தேசிய அலுமினிய கம்பெனி லிமிடெட்
- தேசிய கட்டிடங்கள் கார்ப்பரேஷன் லிமிடெட்
- என்.எம்.டி.சி லிமிடெட்
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்
- இந்திய எண்ணெய் நிறுவனம்
- பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
- இந்திய லிமிடெட் பவர் கிரிட் கார்ப்பரேஷன்
- ராஷ்டிரிய இஷ்பத் நிகாம் லிமிடெட்
- இந்தியா லிமிடெட் கப்பல் கூட்டுதாபனம்
மினிரத்னா - தரம் I (Miniratna - Category I) (51 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன)
மினிரத்னா - தரம் II (Miniratna - Category II) (17 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன)
தொழிற் கொள்கை தீர்மானங்கள் 1980
ஜூலை 1980 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்குப்பின் புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டது. பொருளாதார உள்கட்டுமானங்களை வலிமைப்படுத்த பொதுத்துறை மீது நம்பிக்கை வைக்கப்பட்டது. இதற்கு காரணம் அதன் நம்பிக்கையும், அதிக முதலீடும் மேலும் கூடுதலான கால அளவுமே காரணம்.
தொழிற் கொள்கை (1988) - ராஜீவ் காந்தி அரசின் கொள்கை
- வளர்ச்சி மையங்கள்: பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சிக்குத் தேவையான கட்டுமானங்களை (தொலைத்தொடர்பு, மின்சாரம், தண்ணீர்) அளிக்க வேண்டும்.
- பரவலான காப்பு (Broad Banding): மாறிவரும் தேவைக்கு ஏற்ப உற்பத்தியாளர்கள், உப பொருட்கள் உற்பத்தியை உச்ச நிலைக்கு அதிகரிக்க தனியாக உரிமம் பெற தேவையில்லை.
புதிய தொழிற்கொள்கை 1991
New Industrial Policy - 1991 நேரு காலங்களில் இருந்து வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் தொழிற்சாலைகளின் குறைகளை நீக்குவதற்கும் குறைபாடுகளை களைவதற்கும் இது ஏற்படுத்தப்பட்டது. இது 5 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
- தொழில் உரிமக் கொள்கை
- வெளிநாட்டு முதலீடு வெளிநாட்டு தொழில்நுட்ப உடன்படிக்கை
- பொதுத்துறை
- MRTP Act (வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை தடுக்கும் சட்டம்)
தொழில் உரிமக் கொள்கை
தொழில் உரிமம் முறையை இது முற்றிலும் தடைசெய்கிறது. ஆயினும் பாதுகாப்பு, சமூகக் காரணங்கள், தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள், சுற்றுச்சூழல் காரணங்கள் ஆகியவற்றிற்காக 8 தொழில்களுக்கு மட்டும் உரிமம் தேவை என வரையறுக்கப்பட்டது. (எ.கா: ஆயுதங்கள், அணுசக்தி, நிலக்கரி, கனிம எண்ணெய், தாதுக்கள், புகைவண்டிப் போக்குவரத்து)
முதலீடுகள்
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அனுமதிக்க இரண்டு சிறப்பு அதிகாரங்களைக் கொண்ட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன:
- வெளிநாட்டு முதலீடுகள் வளர்ச்சிக் குழு (Foreign Investment Promotion Board - FIPB): இந்தியாவில் ஒற்றைச் சாரள முறையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அனுமதிக்கிறது.
- வெளிநாட்டு முதலீடு செயல்படுத்தும் அமைப்பு (Foreign Investment Implementation Agency - FIIA): 1999ல் அமைக்கப்பட்டது. நேரடி முதலீடுகள் தொடர்பான அனுமதிகளை ஒரே இடத்தில் விரைவாகச் செயல்படுத்த முனைகிறது.
MRTP Act திருத்தம்
MRTP சட்டம், திருத்தப்பட்டு அதில் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்தின் உச்சவரம்பு நீக்கப்பட்டது. நிறுவனங்கள் இணைப்பு, விஸ்தரிப்பு, இயக்குனர்களை நியமித்தல் ஆகியவற்றில் மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் நீக்கப்பட்டது. MRTP நிறுவனங்களுக்கு உச்சவரம்பு ரூ.100 கோடி என நிர்ணயிக்கப்பட்டது.