பொது சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்கள் (Public Health and Welfare Schemes)
இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான முக்கிய அரசு திட்டங்கள், கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் கண்ணோட்டம்.
உடல் நலத்திற்கான அரசின் கொள்கைகள்
உடல்நலம் (சுகாதாரம்) மற்றும் குடும்ப நலம் தொடர்புடைய பல்வேறு திட்டங்கள், பரவும் நோய்களின் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, இந்திய மருத்துவ முறைகள் தொடர்பாக கருத்தாக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மேற்கொள்கிறது.
தேசிய ஊரக சுகாதார திட்டம் (National Rural Health Mission - NRHM)
தரமான மருத்துவ சேவையை ஊரகப் பகுதியிலுள்ள மக்கள் எளிதாக அடையும் வகையில் 2005-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. உடல்நலத்தை உறுதி செய்யும் பொருட்டு குடிநீர், சுகாதாரம், கல்வி, உணவூட்டம், பாலின சமநிலை என அனைத்தையும் உறுதி செய்கிறது. உடல்நலத்திற்காக செலவு செய்யும் நிதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2-3% இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
நோக்கங்கள்
- IMR (Infant Mortality Rate): 30/1000
- MMR (Maternal Mortality Rate): 100/100,000
- மலேரியா, டெங்கு போன்றவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்.
- பைலேரியா நோயை 2015-க்குள் ஒழித்தல்.
- காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பினை 85% ஆக அதிகரித்தல்.
- அனைத்து சமூக உடல்நல மையங்களிலும் ஒரே மாதிரியான மருத்துவ தரத்தை தருதல்.
இத்திட்டமானது மருத்துவ வசதிகளை பஞ்சாயத்துகள் மூலம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்கிறது. ASHA (Accredited Social Health Activist) என்றழைக்கப்படும் புதிய கருத்துரு இத்திட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதன்படி கிராமப்பகுதிகளில் உள்ள பெண்களுக்கு உடல் நல மேம்பாடு குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.
திட்ட வெற்றிகள்
- போலியோ ஒழிப்பு.
- ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய்க்கு எதிரான தடுப்பூசி (9 மில்லியன் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது).
- குழந்தைகளுக்குப் பரவும் தட்டம்மை ஒழிப்பு.
- 2 மில்லியன் பிரசவங்கள் ஆரம்ப சுகாதார மையங்களிலோ அல்லது மருத்துவமனைகளிலோ நடைபெற்றன.
- 1 மில்லியன் “கிராம உடல்நலம் மற்றும் சுகாதாரக் குழுக்கள்" மூலம் பள்ளிகளில் சுகாதாரத் திட்டங்கள் தொடங்கப்பட்டன.
கர்ப்பிணி பெண்கள் நலத்திட்டங்கள்
ஜனனி சுரக்ஷா யோஜனா (Janani Suraksha Yojana)
தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ் 2005-ல் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். ஏழை கர்ப்பிணிப் பெண்கள் முறையான மருத்துவ நிறுவனங்கள் மூலம் பிரசவம் மேற்கொள்ளுதலை ஊக்குவித்தல் இதன் நோக்கம். இது 100% மத்திய அரசின் திட்டமாகும். குழந்தைகள் பிறப்பிற்குப் பின்னான மருத்துவ சேவையும், நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ராம் (Janani Shishu Suraksha Karyakram)
2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு மற்றும் பொது சுகாதார நிறுவனங்களில் நடைபெறும் அனைத்துப் பிரசவங்களுக்கும் இலவசமாகவே செய்யப்படுகின்றன.
குழந்தை நலத் திட்டங்கள்
- நவஜாத் சிசு சுரக்ஷா கார்யகிராம் (Navjaat Shishu Suraksha Karyakram): பிறந்த குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு, உடல்நலப் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தலே இதன் நோக்கமாகும்.
- தடுப்பூசி திட்டம் (Immunization Programme): உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சூழ்நிலைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு 1978-ம் ஆண்டு நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.
- போலியோ தடுப்பாற்றல் திட்டம் (Pulse Polio Immunisation Program, 1995-96): முதலில் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 1996-97-ல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
நோய் கட்டுப்பாட்டு திட்டங்கள்
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் (National Leprosy Eradication Program)
- தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்: 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1982 முதல் பல மருந்துகள் உபயோக முறை கொண்டுவரப்பட்டது.
- தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்: 1983-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 1991-ல் உலக சுகாதார அமைப்பு (WHO) 2000-ம் ஆண்டிற்குள் தொழு நோயை ஒழிக்கத் தீர்மானம் கொண்டு வந்தது.
கண்பார்வையற்றோருக்கான கட்டுப்பாட்டு திட்டம் (Programme for Control of Blindness)
பார்வையற்றவர்களின் எண்ணிக்கையை 0.3% ஆக 2001 ஆண்டிற்குள் குறைத்தல் இதன் நோக்கமாகும். 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ரேபிஸ் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டம் (Rabies Control Program)
11-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2008) ரேபீஸ் நோயால் ஏற்படும் மனிதர்களின் இறப்பை கட்டுப்படுத்தும் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டம் (National Tobacco Control Program)
ஒருங்கிணைந்த புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டம் 2003-ன் கீழ், மக்களிடையே புகையிலையின் தீய விளைவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
தேசிய ஐயோடின் சத்து குறைபாடு நோய் திட்டம் (National Iodine Deficiency Disorders Control Program)
முதலில் தேசிய காய்டர் கட்டுப்பாடு திட்டம் என்று 1962 முதல் வழங்கப்பட்டது. உணவுக் கலப்பட தடுப்புச்சட்டம் 1954-ன் படி அயோடைடு இல்லாத உப்பு விற்பனையை அரசு 2006 முதல் தடை செய்துள்ளது.
தேசிய மனநல திட்டம் (National Mental Health Program)
அனைவருக்கும் குறைந்தபட்ச மனநல வசதியை கிடைக்கச் செய்தல், மனநலம் பற்றிய அறிவை ஊக்குவித்தல் மற்றும் சமூக வளர்ச்சிக்குப் பாடுபடல் இதன் நோக்கமாகும்.
தேசிய கொசு மூலம் பரவும் நோய்கள் கட்டுப்பாட்டு திட்டம் (National Vector Borne Disease Control Program)
மலேரியா, பிலேரியா, கலா-அசார், மூளைக்காய்ச்சல், டெங்கு மற்றும் சிக்குன்குன்யா போன்ற நோய்களின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கென கொண்டுவரப்பட்ட ஒன்றிணைந்த திட்டமாகும்.
கினியா புழு ஒழிப்பு திட்டம் (Guinea Worm Eradication Program)
1983-84-ல் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. உலக சுகாதார மையத்தின் சான்றிதழ்படி, பிப்ரவரி 15, 2000 முதல் இந்தியாவில் கினியா புழு நோய் முற்றிலும் ஒழிந்தது.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் (National Cancer Control Program, 1975-76)
இதன் நோக்கம் நோய் வராது தடுத்தல், ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், மற்றும் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு வழங்குதல். தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் நவம்பர் 7.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் (National AIDS Control Program, 1987)
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டு, அதன் கீழ் இத்திட்டம் 1987 முதல் செயல்படுகிறது. நாடு தழுவிய அளவில் தாக்கமடையக்கூடிய குழுக்களைக் கண்டறிதல் மற்றும் பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்துதல் இதன் முக்கிய பணிகள்.
தேசிய பைலேரியா (யானைக்கால் நோய்) திட்டம் (National Filaria Control Program, 1955)
முதலில் 22 இழை ஒட்டுண்ணி ஆய்வுக் கூடங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட்டன. கொசு எதிர்ப்பு மற்றும் நுண்ணிய ஒட்டுண்ணி பாதிப்புக்கு சிகிச்சை அளித்தல் இதன் செயல்பாடுகள்.
தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் (National Tuberculosis Control Program)
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து வீட்டிலேயே சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், மற்றும் அறுவை சிகிச்சை வழங்குதல் இதன் நோக்கங்கள். மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் 1962-ல் தொடங்கப்பட்டது.
தேசிய டிரக்கொமா தடுப்பு திட்டம் (National Trachoma Control Program, 1963)
இத்திட்டம் தேசிய பார்வையற்றோர் கட்டுப்பாட்டு திட்டத்துடன் இணைக்கப்பட்டது.
கொள்கைகள் மற்றும் சட்டங்கள்
உணவு கலப்பட தடுப்பு சட்டம், 1954 (Prevention of Food Adulteration Act, 1954)
நுகர்வோர்களுக்கு சுத்தமான மற்றும் முழுமையான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது. இதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கே உண்டு.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006 (Food Safety and Standards Act, 2006)
உணவு கலப்பட தடுப்புச் சட்டம் 1954-ஐ நீக்கி இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
தேசிய சுகாதாரக் கொள்கை (National Health Policy)
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 1983-ல் முதல் தேசிய சுகாதாரக் கொள்கையை உருவாக்கியது. இதன் குறிக்கோள், 2000-ஆம் ஆண்டிற்குள் "எல்லோருக்கும் நலவாழ்வு" என்பதை அடைவதாகும். இதைத் தொடர்ந்து, தேசிய நலவாழ்வுக் கொள்கை - 2002 உருவாக்கப்பட்டது.
அடையப்பட வேண்டிய இலக்குகள் | ஆண்டு |
---|---|
போலியோ மற்றும் ஆஸ்பிரின் ஒழிப்பு | 2005 |
தொழுநோய் ஒழிப்பு | 2005 |
கடுங்காய்ச்சல் ஒழிப்பு | 2010 |
நிணநீர் மண்டல யானைக்கால் நோய் ஒழிப்பு | 2015 |
எச்.ஐ.வி/எய்ட்ஸ் வளர்ச்சி குறைத்தல் | 2007 |
காசநோய், மலேரியா, நீரால் பரவும் நோய்கள் 50% குறைப்பு | 2010 |
பார்வையின்மை 0.5% ஆக குறைத்தல் | 2010 |
குழந்தை இறப்பு விகிதம் (30/1000) மற்றும் தாய்மார் இறப்பு விகிதம் (100/1 லட்சம்) | 2010 |
பொது சுகாதார செலவினத்தை GDP-யில் 2% ஆக உயர்த்துதல் | 2010 |
20 அம்ச திட்டங்கள் (20-Point Programme, 1975)
1975-ம் ஆண்டு நலத்திட்டத்தோடு சமூக பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் 8 திட்டங்கள் நலவாழ்வு குறித்த நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு கொண்டவை.
மருத்துவ மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள்
இந்திய மருத்துவக் குழு (Medical Council of India)
இந்திய மருத்துவக் குழுச்சட்டம் 1956-ன் படி நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் 1958-ல் நிறுவப்பட்டது. புதிய மருத்துவ கல்லூரிகள் உருவாக்கம், புது பாடப்பிரிவுகள் தொடங்குதல் போன்றவற்றுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இந்திய மருந்தகங்கள் குழு (Pharmacy Council of India)
பார்மஸி சட்டம் 1948-இன் கீழ் உருவாக்கப்பட்டது. மருந்தகம் தொடர்பான கல்வியை ஒழுங்குபடுத்துதல் இதன் கடமையாகும்.
இந்திய பல்மருத்துவக் குழு (Dental Council of India)
1948-ம் ஆண்டு பல் மருத்துவ சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அமைப்பு. பல் மருத்துவக் கல்வி, பணி மற்றும் அதன் நெறிமுறைகளை ஒழுங்குபடுத்துதல் இதன் நோக்கம்.
இந்திய செவிலியர் குழு (Indian Nursing Council)
இந்திய செவிலியச் சட்டம் 1947-ன் படி அமைக்கப்பட்டது. செவிலியப் பயிற்சியில் ஒரே அளவான தரத்தை பாதுகாத்தல் தொடர்பான ஒழுங்கு முறைகளை மேற்கொள்கிறது.
மத்திய சுகாதார கல்வி ஆணையம் (Central Health Education Bureau)
சுகாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு 1956, டிசம்பர் 6-ல் தொடங்கப்பட்ட முதன்மை நிறுவனம் ஆகும்.
தேசிய மருத்துவ அறிவியல் கழகம் (National Academy of Medical Sciences, 1961)
மருத்துவ அறிவியலின் நன்மைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 1961-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
பிற முக்கிய திட்டங்கள்
பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா (Pradhan Mantri Swasthya Suraksha Yojana - PMSSY)
2010-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம், நம்பத்தகுந்த மருத்துவ சேவைகளைப் பெறுவதில் ஏற்படும் வட்டார சமநிலையின்மையை சரி செய்வதும், தரமான மருத்துவக் கல்வியை வழங்குவதும் ஆகும். இதன் கீழ், எய்ம்ஸ் (AIIMS) போன்ற 6 புதிய மருத்துவ நிறுவனங்கள் நிறுவப்பட்டன மற்றும் 13 பழைய மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்தப்பட்டன.
ராஷ்ட்ரிய ஆரோக்கிய நிதி (Rashtriya Arogya Nidhi)
1997-ல் தொடங்கப்பட்டது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், தீவிர நோய்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர்) நிதி உதவி வழங்குகிறது.
இரத்த பாதுகாப்பு திட்டம் (Blood Safety Program)
1998 ஜனவரி 1 முதல் தொழில் ரீதியாக இரத்த தானம் செய்வது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. தன்னார்வ இரத்த தானம் ஊக்குவிக்கப்படுகிறது. இரத்தத்தின் ஒவ்வொரு அலகும் ஹெபடைடிஸ், மலேரியா மற்றும் கிரந்தி நோய் தொற்றுக்காக பரிசோதிக்கப்பட வேண்டும்.
ராஜீவ் ஆரோக்கிய நல காப்பீட்டு திட்டம் (Rajiv Aarogyasri Health Insurance Scheme)
ஆந்திராவில் 2007-ல் தொடங்கப்பட்டது. வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு ராஜீவ் ஆரோக்ய ஸ்ரீ அறக்கட்டளை மூலம் உடல் நலக் காப்பீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
தேசிய குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார திட்டம் (National Water Supply and Sanitation Program)
1954-ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், தேவையான கழிவுநீர் குழாய்கள் வழங்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழக அரசின் உடல் நலத் திட்டங்கள்
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (Integrated Child Development Services, 1975)
தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநல மேம்பாட்டை வலியுறுத்துதல், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம் பெண்களின் ஊட்டச்சத்தினை உயர்த்துதல் இதன் நோக்கங்கள். அங்கன்வாடி மையங்கள் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் (MGR Nutritious Meal Programme, 1982)
பள்ளிக் குழந்தைகளுக்கு (5 முதல் 15 வயதிற்குட்பட்டோர்) சத்துணவு வழங்குதல், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல், மற்றும் எழுத்தறிவு விகிதத்தை அதிகரித்தல் இதன் முக்கிய நோக்கங்கள்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டம்
1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவியாக ரூபாய் 12,000 வழங்கப்படுகிறது.
தொட்டில் குழந்தைத் திட்டம் (Thottil Kuzhanthai Thittam)
பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஒரு முன்னோடித் திட்டம்.
நோய் மற்றும் காரணிகள்
நோய்கள் | நோய் உருவாக்கும் காரணிகள் |
---|---|
காலரா | விப்ரியோ காலரா |
டிப்தீரியா | கார்னி பாக்டீரியம் டிப்தீரியா |
கொனேரியா | நைசீரியா கொனேரியா |
காசநோய் | மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளே |
நிமோனியா | நிமோனியா |
சிபிலிஸ் | டிரபோனீமா பெலேடியம் |
டெட்டனஸ் | கிளாஸ்டீரியம் டெட்டனி |
டைபாய்டு | சால்மோனெல்லா டைபி |
கக்குவான் இருமல் | போர்டிடெல்லா பெர்ட்டுசிஸ் |
நோய்கள் | நோய் உருவாக்கும் காரணி | அரசின் நடவடிக்கை |
---|---|---|
மலேரியா | பிளாஸ்மோடியம் பால்சிபாரம், பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் | மலேரியா கட்டுப்பாடு மற்றும் கலா-அசர் ஒழிப்பு (2008-2009) |
பிலேரியாசிஸ் | ஊச்சரேரியா பாங்க்ராப்டி (புரோட்டோசோவா) | தேசிய நல்வாழ்வு கொள்கை 2002-ன் படி 2015-க்குள் ஒழித்தல் |
டெங்கு | வைரஸ் | - |
ஜப்பானிய என்செபலாட்டிஸ் (மூளைக்காய்ச்சல்) | வைரஸ் | தடுப்பூசித் திட்டம் 2006 |
கலா-அசர் | லீஸ்மோனியா தோனாவானி | தேசிய நல்வாழ்வு கொள்கை 2002-ன் படி 2010-க்குள் ஒழித்தல் |
காசநோய் | மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளி | தேசிய காசநோய் கட்டுபாட்டுத் திட்டம் 1997 |
லெப்ரசி (தொழுநோய்) | மைக்கோ பாக்டீரியம் லெப்ரே | தேசிய நல்வாழ்வு கொள்கை 2002-ன் படி 2005-க்குள் ஒழித்தல் |
மனிதவள மேம்பாடு (Human Resource Development)
கு.ர். ஹர்பிசன் (F.H. Harbison) என்பவரின் கூற்றுப்படி, 'மனித வளங்கள் என்பது மக்களிடமுள்ள ஆற்றல்கள், திறன்கள், அறிவு ஆகிய மறைந்துள்ள சக்திகளை பண்டங்களின் உற்பத்தியிலும் அல்லது பயனுள்ள பணிகளை ஆற்றுவதிலும் பயன்படுத்துவதில் அடங்கியுள்ளது'.
மனித மூலதனத்தை பற்றி குறிப்பிடும் போது ஒரு நபர் கீழ்கண்ட வகைகளில் தனது திறன்களை வளர்த்துக்கொள்ள முதலீடு செய்தலைக் குறிக்கின்றோம்:
- சுகாதார வசதிகள் மற்றும் பணிகள்
- பணிக்கான பயிற்சி
- முறையான கல்வி
- முதியோர் கல்வி மற்றும் விவசாய விரிவாக்கத் திட்டங்கள்
- வேலைவாய்ப்பைத் தேடி இடம் பெயர்தல்
மனித மூலதனத்தை அதிகரிக்கும் அனைத்து காரணிகளுக்குள்ளும் கல்வி மிக முக்கியம் ஆனதாக கருதப்படுகிறது.