Skip to main content

நலத் திட்டங்கள், வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு (Welfare Schemes, Poverty Alleviation & Employment)

வறுமை ஒழிப்பு மற்றும் வேலை வாய்ப்பு திட்டங்கள்

கிராமப்புற இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் (TRYSEM - 1979)

நோக்கம்: கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள 18-35 வயது இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியும், வியாபாரப் பயிற்சியும் அளித்து சுயவேலை தொடங்குவதற்கு உதவி செய்வதாகும்.

ஒருங்கிணைக்கப்பட்ட ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP - 1980)

1980 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தொடங்கப்பட்டது. வறுமையை ஒழிப்பதற்கான முக்கியத் திட்டமாக செயல்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சுய வேலை வாய்ப்பளித்து தன்னிறைவு பெறச் செய்தலாகும். இதன் துணைத் திட்டங்களாவன:

  • TRYSEM
  • DWCRA
  • கங்கா கல்யாண் யோஜனா
  • சித்ரா மில்லியன் கிணறுத் திட்டம்

ஜவஹர் ரோஜ்கர் யோஜனா (JRY - 1989)

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் கிராமப்புற நிலமற்றோருக்கான வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களையும் இணைத்து தொடங்கப்பட்டது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு திட்டமாகச் செயல்படுகிறது.

நேரு ரோஜ்கார் யோஜனா (NRY - 1989)

நகர்ப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. 1997-ல் ஸ்வர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்துடன் (Swarna Jayanthi Shahari Rozgar Yojana) இணைக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் (EAS - 1993)

கிராமத்தில் 18 முதல் 60 வயதிற்குட்பட்டு உழைக்கும் தகுதியுள்ளவர்களுக்கு வேளாண்மைத் தொழில் இல்லாத நாட்களில் 100 நாட்களுக்குக் குறைவில்லாமல் வேலைவாய்ப்பு தருவதாகும். கிராமப்புறக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், மற்றும் சமூகத் திட்டங்களை செயல்படுத்தி போதுமான வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல் இதன் நோக்கமாகும்.

பிரதம மந்திரி ரோஜ்கர் யோஜனா (PMRY - 1993)

1993 அக்டோபர் 2-ல் தொடங்கப்பட்டது. இளைஞர்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.

ஸ்வர்ண ஜெயந்தி சஹாரி ரோஜ்கார் யோஜனா (SJSRY - 1997)

இந்திய சுதந்திரமடைந்த 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் 1997 டிசம்பர் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. நகர்ப்புற வேலையற்ற மக்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. இதன் கூறுகள்:

  • நகர்ப்புற சுய வேலைவாய்ப்பு திட்டம்
  • நகர்புற பெண்கள் சுய உதவித் திட்டம்
  • வேலைவாய்ப்புத் திட்டத்தின் திறன் மேம்பாட்டு பயிற்சி
  • ஊதிய வேலைவாய்ப்பு திட்டம்

ஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஜ்கார் யோஜனா (SGSY - 1999)

IRDP, TRYSEM, DWCRA, SITRA, கங்கா கல்யாண் யோஜனா, மில்லியன் கிணறுகள் திட்டம் (MWS) ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து ஏப்ரல் 1999-ல் கொண்டு வரப்பட்டது. வறுமை ஒழிப்பு, குழந்தைகளுக்கு பண உதவி மற்றும் சுயவேலை வாய்ப்பிற்கான உதவிகளும் வழங்கப்படுகின்றன. இது தற்போது நடப்பில் உள்ள ஒரே சுய வேலைவாய்ப்பு திட்டமாகும். நிதிப் பங்கீடு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே 75:25 விகிதத்தில் உள்ளது.

ஜவஹர் கிராம சம்ரிதி யோஜனா (JGSY - 1999)

கிராமப்புறக் கட்டமைப்புகளின் முன்னேற்றத்தையும் வேலையில்லாத ஏழைகளுக்கு கூலி வேலைகள் பெற்றுத் தருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கிராம சபைகள் மூலம் திட்டங்களுக்கான பணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

வேலைக்கு உணவுத் திட்டம் (2001)

வறட்சியால் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களில் (குஜராத், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒரிசா, ராஜஸ்தான்) உள்ள கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை அளித்து பசியை போக்குவதற்கான திட்டமாகும். வேலைக்கான கூலி பாதி உணவு, மீதி பணமாகவும் வழங்கப்படும்.

சம்பூர்ண கிராமின் ரோஜ்கார் யோஜனா (SGRY - 2001)

வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் (EAS), ஜவஹர் கிராம சம்திரி யோஜனா (JGSY) மற்றும் ஜவஹர் ரோஜ்கர் யோஜனா (JRY) ஆகிய மூன்றும் இணைந்து இத்திட்டம் 2001-ல் உருவாக்கப்பட்டது. நோக்கம்: கிராமப்புறங்களில் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருதல் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்தல். திட்டச் செலவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் ஏற்றுக் கொள்கின்றன.

ஜெயப்ரகாஷ் நாராயண் ரோஜ்கார் யோஜனா (JPNRGY - 2002-2003)

மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள மக்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும். திட்ட நிதியை மத்திய மாநில அரசுகள் 75:25 என்ற விகிதாச்சாரத்தில் அளிக்கின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் (MGNREGS - 2005)

செப்டம்பர் 2005-ல் சட்டமாக இயற்றப்பட்டது. ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊரகப் பகுதியில் வேலைவாய்ப்பு தருவதற்காக கொண்டு வரப்பட்டது. திறனற்ற உடல் உழைப்பு அளிக்க விரும்பும் அனைத்து குடும்பங்களுக்கும் வேலை வழங்கப்படும். முக்கிய நோக்கங்கள்:

  • பதிவு செய்த அனைத்து குடியிருப்போருக்கும் 100 நாள் கூலி வேலைக்கு உத்திரவாதம்.
  • மத்திய அரசு கூலி மற்றும் பொருட்களுக்கான நிதியை வழங்கும் (திறனற்ற உழைப்புக்கு 100%, திறனுள்ளவர்களுக்கு 75%).
  • கூலி மற்றும் பொருளின் விகிதம் 60:40 ஆக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய வேலைக்கான அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும்.
  • கிராம பஞ்சாயத்தின் 5கி.மீக்குள் வேலைக்கான இடம் இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் 10% கூடுதல் கூலி வழங்கப்படும்.
  • மூன்றில் ஒரு பங்கு பயனாளிகள் பெண்களாக இருக்க வேண்டும்.
  • குறைதீர்க்கும் அமைப்பின் மூலம் குறைகள் தீர்க்கப்படும். கட்டணமற்ற தொலைபேசி எண் (1299) அளிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY - 2015)

இது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.

  • தகுதி: 18-50 வயது, வங்கி கணக்கு இருத்தல்.
  • பயன்: எந்த வகை மரணத்திற்கும் ரூ. 2 லட்சம்.
  • சந்தா: ஆண்டுதோறும் ரூ. 330.
  • செயலாக்கம்: ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC).

ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் ஆப் இந்தியா (2014)

ஆகஸ்ட் 14, 2014-ல் தொடங்கப்பட்டது. புதிய தொழில் முனைவோர் மற்றும் வேலை வாய்ப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்கள்

வறட்சிக்கு இலக்காகும் பகுதித் திட்டம் (DPAP - 1973)

நாட்டிலுள்ள வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளை மேம்படுத்தும் பொருட்டு தொடங்கப்பட்டது. வறட்சிக்கு இலக்கான பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்தி நிலம், நீர் மற்றும் இயற்கை வளங்களை சமநிலையில் கொண்டு வருவதே இதன் நோக்கம்.

கிராம கைவினைக் கலைஞர்களுக்கு உபகரணம் அளிப்பு திட்டம் (SITRA - 1992)

கிராமக் கைவினைஞர்களுக்கு புதிய கருவிகளை அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இது ஒருங்கிணைக்கப்பட்ட ஊரக வளர்ச்சித் திட்டத்தின் துணை திட்டமாகும். 1999-ல் சுவர்ண ஜெயந்தி பொன்விழா வேலைவாய்ப்பு திட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இந்திரா ஆவாஸ் யோஜனா (IAY)

ஜவஹர் ரோஜ்கர் யோஜனாவின் ஒரு பகுதியாக செயல்பட்ட இத்திட்டம், 1998 முதல் தனித் திட்டமாக மாறியது. இதன் நோக்கம் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், ஊரக பகுதியில் விடுவிக்கப்பட்ட குடிமைகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீடுகளை கட்டித் தருவதாகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் 75:25 விகிதத்தில் நிதி வழங்குகின்றன.

பிரதம மந்திரி கிராமொதையா யோஜனா (PMGY - 2000-2001)

கிராமப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, சுகாதாரம், தொடக்கக்கல்வி, குடிநீர், குடியிருப்பு மற்றும் கிராமச் சாலைகள் ஆகிய ஐந்து துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

  • பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம் (PMGSY - 2000): ஒவ்வொரு கிராமத்தையும் நகர்ப்புற சாலைகளுடன் இணைத்தலை நோக்கமாகக் கொண்டது.
  • கிராமின் ஆவாஸ் யோஜனா: கிராமப்புறத்தில் ஏழ்மையிலுள்ள மக்களுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்தித் தருவதை நோக்கமாகக் கொண்டது.

Total Sanitation Campaign (2000)

வீடுகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமூக வளாகங்கள் போன்ற இடங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தருதல். சுகாதார வசதியை மேம்படுத்துதல் இதன் நோக்கமாகும்.

Valmiki Ambedkar Awas Yojana (VAMBAY - 2001)

போதிய வசிப்பிட வசதி இல்லாமல் நகர்ப்புற சேரிகளில் வாழும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களின் துன்பம் போக்கவும், சுகாதாரமான நகர்ப்புற சுற்றுப்புறச் சூழலை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்டது. நிதிப் பங்கீடு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 50:50 ஆகும்.

கிராம புற பகுதியில் உள்ள நகர்புற வசதிகள் (PURA திட்டம் - 2004-2005)

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்களின் கனவுத் திட்டம். நகர்ப்புற வசதிகளை ஊரகப் பகுதிகளுக்கு வழங்குவதன் மூலம் நகர்ப்புற-ஊரகப் பகுதிகளுக்கிடையேயான வளர்ச்சி இடைவெளியைக் குறைத்தல் மற்றும் ஊரக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் இதன் நோக்கங்களாகும்.

ஜவஹர்லால் நேரு நகர்புற மேம்பாட்டு திட்டம் (JNNURM - 2005)

டிசம்பர் 3, 2005-ல் தொடங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கும், மிக விரைவாக வளர்ச்சி அடையச் செய்வதற்கும் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். தற்போது 65 நகரங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

பாரத் மாலா திட்டம் (2015)

7000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் திட்டம். கடற்கரையோர மற்றும் எல்லைப் பகுதிகளின் இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம். இதன் திட்ட அறிக்கையை NHAI தயாரித்துள்ளது.

அடல் ஓய்வூதிய திட்டம் (APY - 2015)

ஓய்வூதியம் இல்லாப் பணியாளர்களுக்கான திட்டம். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 2000 - 5000 வரை வழங்கப்படும். ஸ்வயலம்பன் திட்டத்திற்கு பதிலாக தொடங்கப்பட்டது.

AMRUT (Atal Mission for Rejuvenation and Urban Transformation - 2015)

ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 32 நகரங்கள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா (2015)

ஜூன் 24, 2015-ல் தொடங்கப்பட்டது. 2022-க்குள் 3 கோடி வீடுகள் கட்டுவதை இலக்காகக் கொண்டது. பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் இதன் பயனாளிகள் ஆவர்.

பிரதம மந்திரி உஜ்ஜவாலா யோஜனா (2016)

மே 2, 2016-ல் தொடங்கப்பட்டது. 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச LPG இணைப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

உடல்நலம் மற்றும் கல்வி திட்டங்கள்

ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டம் (1986)

ஊரகப் பகுதிகளில் துப்புரவு வசதிகளை ஏற்படுத்தவும், மக்களின் பொதுவான வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், திறந்த வெளிக் கழிப்பிடத்தை அகற்றவும் தொடங்கப்பட்டது.

மகிலா சமக்யா திட்டம் (1989)

தேசிய கல்விக் கொள்கையின் (1986) இலக்குகளை நிறைவேற்றும் பொருட்டு, ஊரகப் பகுதியில் உள்ள பெண்களின் கல்வி வளர்ச்சிக்காகக் கொண்டு வரப்பட்டது.

மதிய உணவுத் திட்டம் (1995)

தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு 300 கலோரி சத்து மற்றும் 8-12 கிராம் புரதம் கொண்ட சமைத்த உணவு மதிய உணவாக வழங்கப்படுகிறது. இதன் நோக்கங்கள்:

  • தொடக்க கல்வியை பரவலாக்குதல்
  • குழந்தைகளின் வருகையை அதிகரித்தல்
  • இடைநிற்றலைக் குறைத்தல்

சர்வ சிக்ஷா அபியான் (SSA - 2002)

6 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி என்ற அடிப்படை உரிமையை (86வது சட்டதிருத்தம், 2002) செயல்படுத்தும் திட்டம். 2010-க்குள் அனைவருக்கும் 8-ம் வகுப்பு கல்வி அளிப்பது இதன் நோக்கமாகும்.

ஊரக உடல் நலத் திட்டம் (NRHM - 2005)

ஏப்ரல் 12, 2005-ல் தொடங்கப்பட்டது. ஊரகப் பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவையினை வழங்குதல், சிசு இறப்பு வீதம் (IMR) மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இறப்பு வீதம் (MMR) போன்றவற்றைக் குறைப்பது இதன் நோக்கமாகும்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் (RCH - 2005)

ஏப்ரல் 1, 2005-ல் தொடங்கப்பட்டது. சிசு இறப்பு வீதம் மற்றும் பிரசவ நேரத்தில் கர்ப்பிணிகளின் இறப்பு வீதத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது.

ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA - 2009)

இடைநிலைக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, குடியிருப்புக்கு 5 கி.மீ அருகில் இடைநிலைக் கல்வி நிலையங்களை அமைத்தல். 2017-க்குள் 'அனைவருக்கும் இடைநிலைக் கல்வி' என்ற நிலையை அடைதல் இதன் இலக்காகும்.

சக்சார் பாரத் (2009)

செப்டம்பர் 2009-ல் 'தேசிய எழுத்தறிவு திட்டம்' என்ற பெயரில் இருந்து 'சக்சார் பாரத்' என்று பெயர் மாற்றப்பட்டது. 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

பிரதம மந்திரி ஸ்வஸ்தையா சுரக்ஷா யோஜனா (2010)

உடல்நல சேவைகளில் காணப்படும் சமமின்மையை சரி செய்யவும், தரமான மருத்துவக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் கொண்டுவரப்பட்டது. டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற 6 கல்வி நிலையங்களை நாடு முழுவதும் உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

'104' சுகாதார அவசர தொலைபேசி எண் (2013)

டிசம்பர் 30, 2013-ல் தொடங்கப்பட்டது. 24x7 மணி நேரமும் சுகாதாரம் தொடர்பான அவசர தகவல்களை (இரத்த வங்கி, நோய் தடுப்பு, நலத்திட்டங்கள்) வழங்கும் சேவை.

இந்திர தனுஷ் திட்டம் (2014)

டிசம்பர் 24, 2014-ல் தொடங்கப்பட்டது. குழந்தைகளுக்கு 7 விதமான தடுப்பூசிகளை (டிப்திரியா, காசநோய், கக்குவான் இருமல், டெட்டனஸ், போலியோ, மஞ்சள்காமாலை) போடுவதை உறுதி செய்யும் திட்டம்.

பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள்

கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டம் (DWCRA - 1982)

1982-ல் ஒருங்கிணைக்கப்பட்ட ஊரக வளர்ச்சித் திட்டத்தின் துணைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பப் பெண்களுக்கு சுயதொழில் தொடங்க வாய்ப்பளித்து, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை முன்னேற்றுவதை குறிக்கோளாகக் கொண்டது.

ஸ்வலம்பான் (1982)

வேலைவாய்ப்பைப் பெறவும், சுய வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவும் பயிற்சியளிக்கும் திட்டமாகும்.

சுவசக்தி திட்டம் (1988)

வளங்களை மகளிர் எளிதாக பயன்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குகிறது.

ராஷ்ட்ரீய மகிலா கோஷ் (1993)

'பெண்களுக்கான தேசிய நிதி உதவித் திட்டம்' என்று அழைக்கப்படுகிறது. வருமானம் தரக்கூடிய தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கி, கடன் வழங்குவோரின் சுரண்டல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.

சமூக உதவித் திட்டம் / நாட்டு சமூக உதவித் திட்டம் (NSAP - 1995)

ஆகஸ்ட் 15, 1995-ல் தொடங்கப்பட்டது. ஏழைக் குடும்பத்தினர், வயது முதிர்ந்தோர், வருமானம் ஈன இயலாத ஊனமுற்றோர் போன்ற சமூகத்தில் நலிந்த நிலையிலுள்ள மக்களின் பாதுகாப்பை வலியுறுத்துகிறது. இதன் கீழ் பல ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஸ்வதார் (1995)

பெண்கள் சுதந்திரமாகச் செயல்படுவதை ஊக்குவித்து, தங்களது வாழ்க்கையை தாங்களே சுயமாக நிர்ணயிக்கும் வாய்ப்பை அளிக்கிறது.

ஜன ஸ்ரீ பீமா யோஜனா (2000)

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 18 முதல் 60 வயதிற்குட்பட்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்காக கொண்டுவரப்பட்ட காப்பீட்டு திட்டம்.

கிஷோரி சக்தி யோஜனா (2000)

இளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து மற்றும் உடல்நல மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டது. அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. தற்போது 'சப்லா' (SABLA) என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

அன்ன பூர்ணா திட்டம் (2000)

தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வராத மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டம்.

அந்தியோதய அன்ன யோஜனா (2000)

ஏழைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின்படி ரூ.2/கிலோ அரிசி, ரூ.3/கிலோ கோதுமை வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது.

ஸ்வயம் சித்தா (2001)

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மத்திய அமைச்சகத்தின் கீழ் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு தொழில் தொடங்க வழி செய்கிறது. இத்திட்டம் 'இந்திரா மகிளா யோஜனா' எனவும் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி உதவித் திட்டம் (STEP - 2003-2004)

எட்டு முக்கியத் துறைகளில் பெண்களின் அறிவையும் திறமைகளையும் வளர்க்கத் தேவையான பயிற்சி வழங்குகிறது.

ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY - 2005)

பாதுகாப்பான பிரசவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ளும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் பெண்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம். ASHA பணியாளர்கள் இத்திட்டத்தை செயல்படுத்த உதவுகின்றனர்.

தன்லக்ஷ்மி (2008)

எட்டாம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கான நிதியுதவித் திட்டமாகும். பெண் கல்வியை ஊக்குவிக்கவும், குழந்தைத் திருமணத்தை தடுக்கவும் தொடங்கப்பட்டது.

பெண்களின் அதிகாரமளித்தளுக்கான தேசிய திட்டம் (2010)

அரசின் திட்டங்கள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் கல்வி அளவில் பெண்களின் அதிகாரமளித்தலுக்கு வழிவகுக்கிறது.

நெய் ரோஷனி (2012-13)

சிறுபான்மையினர் பெண்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கவும், அவர்களுக்கு கல்வி அறிவு மற்றும் தொழில்நுட்பம் வழங்கவும் தொடங்கப்பட்டது.

சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வமகள் திட்டம் - 2015)

2015-ல் ஹரியானாவில் தொடங்கப்பட்டது. 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அவர்களின் எதிர்காலத்திற்கு சேமிக்கும் திட்டம்.

இதர முக்கிய திட்டங்கள்

நாடுளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சித் திட்டம் (MPLADS)

மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களின் மூலம் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கத்தில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. 2011-ல் இத்திட்டத் தொகை ரூபாய் இரண்டு கோடியிலிருந்து ஐந்து கோடியாக உயர்த்தப்பட்டது.

ரூபே அட்டை (RuPay Card - 2012)

மார்ச் 22, 2012 முதல் இந்தியாவின் உள்நாட்டு செலுத்துதலுக்காக இந்திய தேசிய செலவு நிறுவனத்தால் (NPCI) வெளியிடப்பட்டது. இது மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்டுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட இந்திய திட்டமாகும்.

HRIDAY (2015)

National Heritage City Development & Augmentation Yojana. நாடு முழுவதும் உள்ள 12 பெரிய நகரங்களில் புராதன சின்னங்களைப் பாதுகாக்கவும் அபிவிருத்தி செய்யவும் தொடங்கப்பட்ட திட்டம். தமிழ்நாட்டில் வேளாங்கண்ணி மற்றும் காஞ்சிபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

PRASAD (2015)

Pilgrimage Rejuvenation and Spiritual Augmentation Drive. HRIDAY திட்டத்தில் உள்ள 12 நகரங்களில் யாத்திரை, புத்துணர்வு மற்றும் ஆன்மிகத்தைப் பெருக்க உருவாக்கப்பட்ட இயக்கம்.