தமிழ் மொழி
எத்திசையும் புகழ் மணக்க இருந்துவரும் தமிழ் மொழி தமிழகத்தின் தாய்மொழி; தமிழ்நாட்டில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களின் தாய்மொழி. தமிழகம் தவிர ஆந்திரம், கர்நாடகம், பாண்டிச்சேரி, அந்தமான் தீவு, மகாராஷ்டிரம், ஒரிசா, வங்காளம், டெல்லி முதலிய மாநிலங்களிலும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் குடியேறி இருக்கிறார்கள் அல்லது தங்கி இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் வாழ்கிறார்கள். மொரீஷியஸ் தீவிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். மலேஷியாவிலும் சிங்கப்பூரிலும் மியான்மாரிலும் (பர்மா) தமிழர்கள் இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவிலும், பிரான்ஸிலும், ஜெர்மனியிலும், ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், கனடாவிலும் தமிழர்கள் குடியேறியிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் உள்ள தமிழ் மக்களைக் கணக்கெடுத்தால், அவர்கள் தொகை 7 கோடிக்கு மேல் இருக்கக் கூடும். இப்பெருந்தொகையினரின் தாய்மொழி இது. அனைவரையும் சமய வேறுபாடின்றியும் கொள்கை மாறுபாடின்றியும் ஒன்றுபடுத்துவது அமிழ்தினும் இனிய தமிழ் மொழியே.
தொன்மொழி
"உலகில் 6000 மொழிகள் தோன்றின என்றும் அவற்றுள் 2700 மொழிகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன என்றும் ருஷ்யா நாட்டுப் 'பிராவ்தா' இதழ் கூறுகிறது. இந்த 2700 மொழிகளுள் தமிழ், வடமொழி, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்காளம், உருது, சீனம், பாரசீகம், ஈப்ரு, இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானியம் போன்றவையே இலக்கிய வளமுள்ள மொழிகளாகும். வடமொழி, கிரேக்கம், இலத்தீன், ஈப்ரு, சீனம் ஆகவேய போலேவ தமிழ் மொழியும் மிகவும் தொன்மை உள்ள பெரு மொழியாகும்; உயர்தனிச் செம்மொழியுமாகும்.
இந்தியாவில் மட்டும் 179 இலக்கிய வளமொழிகளும் 544 கிளை மொழிகளும் உள்ளன என்று இந்தியநாட்டு மொழி நூலறிஞராய் விளங்கிய காலஞ்சென்ற சுனிதி குமார் சட்டர்ஜி குறிப்பிட்டுள்ளார். இம்மொழிகளனைத்திலும் தொன்மையானது தமிழ்மொழி. சென்னை உயர்நீதி மன்ற நடுவராய் இருந்தவரும் பேரறிஞருமாகிய காலஞ்சென்ற சதாசிவ ஐயர் அவர்கள், வடமொழியைப் பார்க்கிலும் தமிழ்மொழி தொன்மையானதாய் இருக்க வேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழில் ஒரு ககரம் இருக்கிறது. வடமொழியில் இதற்குமேல் மூன்று ககரங்கள் உள்ளன. க, ச, ட, த, ப ஆகிய எழுத்துகளுக்குத் தமிழிலிருப்பதைவிட வடமொழியில் மும்மூன்று எழுத்துகள் மிகுதியாய் உள்ளன. இவை தவிர வேறு எழுத்துகளும் வட மொழியில் உண்டு. இப்படி வடமொழியில் எழுத்து வளர்ச்சியுற்றிருப்பதே அம்மொழி, தமிழ் மொழிக்குப் பின் தோன்றியதைக் காட்டுகிறது. குறைவிலிருந்துதானே வளர்ச்சி தோன்றுவது இயல்பு. இஃது ஐயரவர்கள் கூறிய காரணம். திரு. வி.க. அவர்கள் தமிழ் மொழியில் மெல்லொலிகள் மிகுந்திருப்பதே அதன் தொன்மைக்குக் காரணம் என்றார். இற்றைக்கு 5,000 ஆண்டுப் பழமையுடையனவாய்க் கருதப்படும் ஹரப்பா, மொகஞ்சதாரோ புதைபொருள்களில் இருக்கும் உருவ எழுத்துகளைப் படித்த ஈராஸ் பாதிரியார், அவை தமிழ் எழுத்துகள் என்றும், ஆதலால், தமிழ்மொழி தொன்மை வாய்ந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
தொல்காப்பியம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்பர். இதுதான் தமிழிலுள்ள பண்டைய உயர்ந்த இலக்கணம். இத்தகைய சீரிய கூரிய தமிழிலக்கணம் தோன்ற வேண்டுமென்றால், இதற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாவது தமிழ்மொழி தோன்றிச் செம்மை பெற வேண்டும். இப்படிப் பார்த்தால் தமிழ்மொழி குறைந்தது இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் தோன்றி வளர்ச்சியடைந்திருத்தல் வேண்டும் என்று கொள்ளலாம். தொன்மை மிக்க சங்க இலக்கியமாகிய புறநானூறு என்னும் நூலில் உள்ள இரண்டாம் செய்யுளில் முரஞ்சியூர் முடிநாகராயர், சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனைப் பின்வருமாறு வாழ்த்தியுள்ளார்:
"அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்"
அந்நூலுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர், "அசைத்த தலையாட்டம் அணிந்த குதிரைகளையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்று வரும் பொருது போர்க்களத்தின்கண் படுந்துணையும் பெருஞ் சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்" என்று உரை கூறியுள்ளார். இருபடை வீரர்களுக்கும் பெருஞ்சோறு வரையாது வழங்கியதால் இத்தமிழகச் சேரமான், பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் எனப் பெயர் பெற்றான்.
ஈண்டுக் குறிப்பிட்டுள்ள போர் மகாபாரதப் போர் என வெள்ளிடைமலையென விளங்கும். இப்பாரதப் போர் நடந்த காலம் கி.மு. 1432 என்பர் வரலாற்றாசிரியர். ஆக இச் சேரவேந்தன் உயிரோடிருந்த காலத்தில் இப்பாடல் பாடியிருத்தல் வேண்டும். அம்மன்னன் இறந்த பின் இதனைப் பாடியிருத்தல் இயலாது. எனவே இப்பாடல் பாடிய காலம் இற்றைக்கு ஏறக் குறைய 3430 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மொழி தோன்றி வளர்ந்து செய்யுள் இயற்றிய நிலையை அடைய 1000 ஆண்டுகளாவது ஏற்பட்டிருத்தல் வேண்டும். எனவே தண்டமிழ் மொழி ஏறத்தாழ 4430 ஆண்டுகள் தொன்மையானது என்பது நன்கு விளங்கும்.
மொழி நூலறிஞரான தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் அவர்கள், தமிழ்மொழியைப் பற்றிக் கூறியது பின்வருமாறு:
"தமிழ் மொழிக்கு எழுத்துருவில் ஏறத்தாழ 2500 ஆண்டு வரலாறு உண்டு. பேச்சுருவில் ஏறத்தாழ 5000 ஆண்டு பழக்கம் உண்டு ... ஏறத்தாழ 2500 ஆண்டாயினும் பழைய இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களும் தொல்காப்பிய இலக்கணமும் இன்று படித்தாலும் பொருள் புரிவது கடினமன்று. இது பிற மொழிகளுக்கு இல்லாத சிறப்பாகும். இலத்தீனும் சமஸ்கிருதமும் பழம் பெருமையுடையவை. ஆனால், அவை ஆய்வாளர்களின் மூலம், அகரமுதலிகள் (அகராதிகள்) மூலம் பொருள் அறியும் நிலையில் இருக்கின்றன. கிரேக்கமும் அவற்றைப் போன்றதுதான். இன்றுள்ள கிரேக்க மொழிக்கும் பண்டைய கிரேக்கத்திற்கும் நிறைய வேற்றுமை உண்டு. இன்றைய கிரேக்க மொழி பேசுவோர் பண்டைய கிரேக்கத்தைத் தெரிந்து கொள்வது முடியாது. ஆனால், பண்டைய தமிழை ஓரளவு கல்வி அறிவுள்ள தமிழ்ச் சிறுவனும் பொருள் தெரிந்து கொள்வது கடினமன்று."
தமிழ் இலக்கியங்களும் பழமையுடையனவே. இது குறித்துத் தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியர் காலஞ் சென்ற திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் கூறுவது:
"தெலுங்கு மொழியை எடுத்துக் கொள்வோமாயின், அதற்குரிய ஆதி இலக்கியமாகிய நன்னைய பாரதம் என்னும் நூல் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகும். கன்னட மொழியை எடுத்துக் கொள்வோமாயின், அதற்குரிய ஆதி இலக்கியமாகிய கவிராஜ மார்க்கம் என்னும் நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாம். மலையாள மொழியை எடுத்துக் கொள்வோமாயின், அதற்குரிய ஆதி இலக்கியமாகிய இராமசரிதம் என்னும் நூல் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றினமை பிரசித்தம். ஆனால், தமிழ் மொழியின் ஆதி இலக்கியங்களோ இப்போது அறுதியிட்டிருக்கின்றபடி கிறிஸ்துவ சகாப்தத்தின் ஆரம்ப காலத்திலே தோன்றியவை. அகப்படுவனவற்றுள் காலத்தால் முற்பட்டனவற்றையே ஆதி இலக்கியம் என்கிறோம். இவ்விலக்கியங்களின் திருந்திய வடிவங்களையும் செய்யுள் அழகுகளையும் முதிர்ந்த பக்குவத்தையும் நோக்குமிடத்து, கிறிஸ்துவ சகாப்தத்துக்கு மிக மிக முற்பட்ட காலத்தே தமிழிலக்கியங்கள் உருப்பெறத் தொடங்கியிருத்தல் வேண்டுமென்று எளிதில் ஊகித்தல் கூடும்.
இத்தொன்மை பற்றித் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் பெருமை மேற்கொள்ளுதல் இயல்பே. இதனினும் மிக்கதொரு சிறப்பு நமது மொழிக்கு உள்ளது. திராவிட வகுப்பில் பிற மொழிக்கு உரிய ஆதி இலக்கியங்களெல்லாம் வடமொழி நூல்களின் வழிவந்தனவாம். உதாரணமாக, தெலுங்கு நூல்களுள் காலத்தால் முந்திய நன்னைய பாரதம் என்னும் நூல் வடமொழியிலுள்ள வியாச பாரதத்தைப் பின்பற்றியது. தமிழிலக்கியங்களுள் காலத்தால் முந்திய நூல்கள் இப்பெற்றியன அல்ல."
திராவிடத் தாய்மொழி தமிழே
இந்திய மொழிகளைத் திராவிட இனம் எனவும், ஆரிய இனம் எனவும், ஆரியத் திராவிட இனம் எனவும் பிரிப்பர் இக் கால மொழி நூலறிஞர். திராவிட இனத்தைச் சேர்ந்த மொழிகளே தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய திருந்திய மொழிகளும், துதம், கோதம், கோண்டு, கூ, ஓரியன், இராசமகால் முதலிய திருந்தாத மொழிகளுமாகும்.
இலக்கிய வளமில்லாத திராவிட மொழிகள் வட திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள், தென் திராவிட மொழிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. பிராகுய், கூர்க், மால்ரோ என்பவை வடதிராவிட மொழிகளாகும். கொலமி-நாய்கி, பார்ஜி, கொண்டி கோண்டு, குய்-கூவி என்பன மத்திய திராவிட மொழிகளாகும். துளு, கூர்க், துதம், கோதம் என்பன தென் திராவிட மொழிகளாகும். இவ்வாறு பேராசிரியர் பரோ கூறுவர். வடமொழி ஆரிய இனத்தைச் சேர்ந்தது. வட இந்திய மொழிகள் பெரும்பாலானவை ஆரியத் திராவிட இனத்தைச் சேர்ந்தவை.
தமிழைப் பற்றிப் பொதுவாக இருவகைக் கொள்கைகள் உலவி வருகின்றன. திராவிட மூலமொழி ஒன்று இருந்தது என்றும், அம்மூலத் திராவிடத்திலிருந்தே தமிழ், கன்னடம், மலையாளம், குடகு, துளு முதலிய திருந்திய திராவிட மொழிகளும், துதம், கோதம், கோண்டு, கூ, ஓரியன், இராசமகால் முதலிய திருந்தாத திராவிட மொழிகளும் தோன்றின என்றும் ஒரு சாரார் கூறுவர். மற்றொரு சாரார், மற்றத் திராவிட மொழிகள் தமிழ் பெற்ற சேய்களே என்பர். இக்கொள்கையை முதன்முதலாகக் குறிப்பிட்டவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆவார். அவர் தமது ஒப்புயர்வற்ற 'மனோன்மணீயம்' என்னும் நாடகத்திலுள்ள தமிழ் வாழ்த்தில்,
"கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்"
என்று பாடியிருக்கக் காணலாம். இக்கொள்கையினர் திராவிட மூலமொழி என்பது கற்பனை என்றும், பழந்தமிழே திராவிட மொழிகளின் தாய்மொழி என்றும், தமிழ் மொழியிலிருந்தே திருந்திய திராவிட மொழிகளும் திருந்தாத திராவிட மொழிகளும் தோன்றியுள்ளன என்றும், மலையாள மொழி தமிழிலிருந்து கி.பி.10-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கிளைமொழியே என்றும் குறிப்பிடுகின்றனர். இக்கொள்கை இப்பொழுது வலிவுற்று வருகிறது. நடுவு நிலையினின்று நோக்குவார்க்குத் திராவிட மொழியினத்தின் தாய், பழந்தமிழே என்பது நன்கு புலனாகும்.
தமிழ்மொழி வேறு; வடமொழி வேறு
தமிழ்மொழி, வடமொழியினின்று தோன்றியது என்று ஒரு சிலர் தவறான உணர்ச்சியினால் பல ஆண்டுகளாய் அறியாது கூறி வந்ததுண்டு. இத்தவறுக்குக் காரணம் பல வடசொற்கள் தமிழில் புகுந்திருப்பதேயாகும். வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்த தவஞானச் செல்வரான சிவஞான யோகிகளும், வடமொழியும் தமிழ் மொழியும் நன்குணர்ந்த மொழி நூலறிஞர் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியாரும் பிறரும், 'வடமொழி வேறு; தமிழ் மொழி வேறு" என்பதை நன்கு எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்கள். மொழி நூலறிஞர் டாக்டர் கால்டுவெல், திராவிட மொழிகளையும் வடமொழியையும் நன்கு ஆராய்ந்து, வட மொழியினும் வேறானவை திராவிட மொழிகள் என்பதை நிலை நாட்டியதோடு, சில தமிழ்ச் சொற்கள் வடமொழியிலும் புகுந்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.
வடநூற்புலமையும் தமிழ் நூற்புலமையும் பெற்றுத் தமிழ் இலக்கிய நயங்களை மிக நன்றாக எடுத்தியம்புதலில் இணையற்று விளங்கிய பெரும்புலவரான மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் கூறுவதாவது:
வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடுகள் மிகப் பல. வடமொழியில் தமிழில் இருப்பது போலத் திணை பால் உணர்த்தும் வினை விகுதிகள் இல்லை. 'பவதி' என்னும் வினைமுற்று, இருக்கிறான், இருக்கின்றாள், இருக்கின்றது என ஓர் ஈறே நின்று எழுவாய்க்கு ஏற்றவாறு பொருள் உணர்த்தி நிற்கும். தமிழில் வினைமுற்றுகளின் ஈறோ திணை பால்களை உணர்த்தி நிற்கும். பால் வகுப்பு தமிழில் பொருளைப் பற்றியும் வடமொழியில் சொல்லைப் பற்றியும் உள்ளது. ஆண் மகனைப் பற்றி வருஞ்சொற்கள் எல்லாம் ஆண் பாலாகவும், பெண் மகளைப் பற்றி வருவன எல்லாம் பெண் பாலாகவும் தமிழில் உள்ளன. வடமொழியில் இவ்வரையறை இல்லை. மனைவியைப் பற்றி வரும் 'பத்னி' என்னும் சொல் பெண்பாலாகவும், 'தாரம்' என்னும் சொல் ஆண்பாலாகவும், 'களத்திரம்' என்னும் சொல் நபுஞ்சகப்பாலாகவும் வருதல் காண்க.
வடமொழியில் ஒருமை, இருமை, பன்மைச் சொற்கள் உள்ளன. தமிழில் ஒருமை அல்லாதன எல்லாம் பன்மையே. திணைப்பாகுபாடு, குறிப்புவினைமுற்று முதலியன தமிழுக்கே உரியன.
தமது 'கலைபயில் கட்டுரை' என்னும் நூலில் வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை எடுத்துக் காட்டியுள்ளார். டாக்டர் பி.எஸ். சாஸ்திரியார், இன்னும் வட மொழிக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள பல் வேறுபாடுகளைத் தமது 'தமிழ் மொழி நூல்' என்பதில் விளக்கியிருக்கிறார். அகவற்பா, கலிப்பா, வெண்பா, வஞ்சிப்பா முதலியவை தமிழ் மொழிக்கே உரியவை. ஆதலால், தமிழ்மொழி வடமொழியினின்று பிறந்தது அன்று என்றும், வடமொழியிலிருந்து வேறுபட்ட பண்புடையது தண்டமிழ்மொழி என்றும் நன்கறியலாகும்.
தமிழ்மொழியின் சிறப்பு
இத்தகைய தன்மை வாய்ந்த தமிழ்மொழியின் அருமை பெருமைகளைத் தமிழ்க் கவிஞர்களும், அறிஞர்களும், தமிழ் கற்ற ஐரோப்பிய அறிஞர் பெருமக்களும் நன்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். மாணிக்கவாசகர் "ஒண்தீந்தமிழ்” என்றும், “தண்ணார் தமிழ்" என்றும் பாடியிருக்கிறார். கம்பர், "என்றுமுள தென்தமிழ்" என்று தமிழைப் பாராட்டியுள்ளார். தஞ்சைவாணன் கோவை ஆசிரியர், "தேருந்தொறும் இனிதாம் தமிழ்" என்றார். திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர், "மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?" என்று பாடினார். வேறொரு கவிஞர், "தன் நேர் இலாத் தமிழ்" என்று ஞாயிற்றுக்கும் ஞாலம் புகழும் தமிழுக்கும் ஒப்பிட்டுக் கூறினார். வடமொழி, ஆங்கிலம் முதலிய மொழிகளை அறிந்த தேசியக் கவிஞர் பாரதியாரோ, “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறினார். இப்படித் தமிழ்க் கவிஞர்கள் தங்களுடைய பாடல்களில் தமிழின் அருமையினையும் பெருமையினையும் நன்கு எடுத்துக் காட்டியிருப்பதைக் காண்கிறோம்.
இந்நாட்டின் நிலக்கொடை இயக்கத் தலைவரும், அரபு, சமஸ்கிருதம், மராத்தி, இந்தி, பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி முதலிய பதினெட்டு மொழிகளைக் கற்றவரும், ஏற்றமிகு பேரறிஞரும், தவஞானச் செல்வருமான காலஞ் சென்ற வினோபா முனிவர், தமது 1956-ஆம் ஆண்டு தமிழகச் சுற்றுப்பயணத்தில் ஈரோட்டில் ஆற்றிய சொற்பொழிவில்,
"தமிழக அரசு தமிழ் மொழியை வெற்றியுடன் திறம்பட ஆட்சி மொழியாக மாட்சியுடன் பயன்படுத்தக் கூடும். மொழியின் வளம் அதன் வினைச் சொற்களில் நன்கு அமைந்து கிடக்கிறது. தமிழ் மொழியோ இலத்தீன் மொழியைப் போன்று அளவற்ற வினைச் சொற்களைக் கொண்டு விளங்குகின்றது"
என்று தமிழ் மொழியின் சொல் வளம் பற்றிக் குறிப்பிட்டார்.
"தென்னிந்திய மொழிகளுள் பழமையானதும் பண்பட்டதும் தமிழ் மொழியே" என்று M. சீனிவாச ஐயங்கார் தமது 'தமிழ் மொழி ஆராய்ச்சி' என்னும் நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
ஐரோப்பிய அறிஞர்களின் கருத்து
செந்தமிழ் மொழியை நன்கு பயின்ற ஐரோப்பிய அறிஞர் பெருமக்களும், மேலை நாட்டு மொழிநூல் வல்லுநர்களும் தமிழின் அரிய தன்மைகளை நடுவு நிலைமையில் நின்று எடுத்துக் காட்டியிருப்பது காண்க.
-
வின்ஸ்லோ என்ற அறிஞர், "செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியினையும், இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியினையும் வெல்ல வல்லது தமிழ்மொழி' என்றார். மேலும் அவரே, "அதன் (தமிழ்) பெயரே இனிமை பொருள்படுவதற்கு ஏற்ப, அதனிடத்தில் கேட்டாரைத் தம் வசமாக்கும் இனிமை பொருந்தியிருப்பதற்கு ஐயமில்லை" என்று கூறியுள்ளார்.
-
டெய்லர் என்பார், "அது (தமிழ்) நிறைந்து தெளிந்து ஒழுங்காயுள்ள மொழிகளுள் மிகவும் சிறந்ததொன்றாகும்" என்று மொழிந்துள்ளார்.
-
டாக்டர் G.U. போப் பாதிரியார், "தமிழ்மொழி எம்மொழிக்கும் இழிந்த மொழி அன்று" என்று கூறியதோடு நில்லாமல் தமிழ்மொழி மேல் அளவற்ற அன்பு பூண்டு தம் கல்லறையின் மேல் "இங்கே தமிழ் மாணவர் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறார்" என்று கல்லில் பொறித்து வைக்குமாறு விருப்பு முறி (Will) எழுதி வைத்தார். இவருக்கிருந்த தமிழ்ப்பற்றை என்னென்று பாராட்டுவது! இந்த அளவு செந்தமிழ் மொழி, அந்தப் போப்பையர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
-
மொழி நூலறிஞர் டாக்டர் கால்டுவெல் துரைமகனார், "தமிழ் பண்டையது; நலம் சிறந்தது; உயர்நிலையில் உள்ளது;... விரும்பினால் வடமொழி உதவியின்றி இயங்கவல்லது" என்றார்.
-
கிரியர்சன் என்ற மற்றொரு ஐரோப்பியர், "திராவிட மொழிகளுள் தமிழ் மொழியே மிகத்தொன்மை வாய்ந்ததும் பெருவளம் பொருந்தியதுமாகும். மிகவும் சீர்திருந்தியதுமான உயர் தனிச் செம்மொழியுமாகும்; சொல்வளமும் மிகுந்தது. அளவிடவொண்ணாப் பண்டைக்காலம் முதல் பயின்றும் வருவது" என்றார்.
-
சிலேட்டர் என்பார், "திராவிட மொழிகள் எல்லாவற்றுள்ளும் மக்கள் பேச்சு மொழிக்குரிய தன்மையைப் பெற்றுள்ள மொழி தமிழ்மொழி; தர்க்க அமைப்புடையதும் தமிழ் மொழியே" என்றார்.
-
விட்னி என்ற ஓர் ஐரோப்பிய அறிஞர் தம்மிடம், தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழை நன்கு கற்றுத் தமிழரைப் போலவே எழுதவும் பேசவும் வல்லவராய் விளங்கிய அமெரிக்கர் ஒருவர் தமிழ்மொழி எண்ணுவதற்கும் பேசுவதற்கும் எந்த ஐரோப்பிய மொழியையும் விடச் சிறந்தது என்று கூறியதாய் எழுதியிருக்கிறார்.
-
ஜான் மர்டாக் என்ற ஐரோப்பிய அறிஞர், "சீரிய மொழியாயும் அழகிய இலக்கியங்கள் உடையதாயும் விளங்குவது தமிழ் மொழியே" என்றார்.
-
F. W. கெல்லட் என்பார், "எந்த நாட்டினரும் பெருமை கொள்ளக்கூடிய இலக்கியம் தமிழ் இலக்கியம்" என்று தமிழைப் பாராட்டியுள்ளார்.
-
சார்லஸ் கவர் என்பவர், "தெலுங்கு மொழியின் மெருகு நிலையும் அருந்தமிழ்ப்பா நலமும் ஐரோப்பாவில் மிகுதியாகத் தெரியப்படுத்துதல் வேண்டும்" என்றார்.
-
ஜெர்மனி நாட்டவரும் ஆங்கில நாட்டின் குடிமகனானவரும் அக்காலத்துத் தலை சிறந்த மொழி நூல் வல்லுநராய் விளங்கியவரும், இருக்கு வேதத்தைச் சாயனருடைய உரையுடன் பதிப்பித்தவருமாகிய மாக்ஸ் முல்லர் (Max Mueller), "தமிழ் மிகப் பண்பட்ட மொழி. தனக்கே உரியதாக இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி" என்றார்.
-
இன்றைய மொழி நூலறிஞரான திரு. கமில் சுவலபில் (Kamil Zvelebil), "தமிழ், உலகத்தில் இருக்கும் மிகப் பெரிய பண்பட்ட மொழிகளுள் ஒன்று. இஃது உண்மையிலேயே அச் சொற்றொடருக்கு ஏற்றவாறு உயர் தனிச் செம்மொழியாக (Classical Language) இருப்பதோடு கூட இன்றும் பேச்சு மொழியாகவும் இருக்கிறது" என்று தமது 'தமிழ் இலக்கண நெறி வரலாறு’ (Historical Grammar of Tamil) என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இனிப் பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் இருவர் தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றிக் கூறியுள்ளதைக் காண்போம்.
பேராசியர் மேய்ல் (Meil) என்பார் கூறியதாவது:
"தமிழர்கள் நல்ல பண்புடையவர்கள். இயற்கையாகவே இந்த நற்பண்பு அவர்களிடத்தில் அமைந்திருக்கிறது. இதற்காக வேனும் நாம் அவர்கள் மொழியாகிய தமிழைக் கற்பது நன்று... அவர்களுடைய மொழியாகிய தமிழ் இலக்கியம் விந்தையும் வியப்பும் தரத்தக்கதாய் வற்றாத உயர் எண்ணங்களின் ஊற்றாய் உள்ளது. தமிழ் மொழி இந்தியாவின் மொழிகளுள் மிகப் பழமையானது. அதுவே முதல் மொழியாயும் இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். அஃது உயர்தனிச் செம்மொழி. அம்மொழியை நெடுங்காலத்திற்கு முன்னரே பிரெஞ்சுக்காரர்கள் கற்றிருத்தல் வேண்டும். அப்படிச் செய்யாது போனது பெருங்குறையே ஆகும்."
மேய்ல் கூற்றிற்கு இணங்க அவருக்குச் சிறிது காலத்திற்கு முன்னரே இருந்த பியேர் லொத்தி (Pierre Loti) என்ற மற்றொரு பிரெஞ்சு அறிஞர் குறிப்பிட்டிருப்பதையும் பார்ப்போம். அது வருமாறு:
"இந்தியாவிற்குப் பிரெஞ்சுக்காரர்கள் வந்ததன் பின் அந்நாட்டின் மொழிகளுள் முதல் முதல் அவர்கள் கற்றுக் கொண்டது தமிழ் மொழியே. அந்த மொழி வாயிலாகவே தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்கள், சமூக அமைப்புகள், சமயக் கோட்பாடுகள் முதலியவற்றின் உண்மையான தத்துவங்களை அறிந்து கொள்ள வழி ஏற்பட்டது.
"தமிழிலக்கியம் மிகவும் பரந்துபட்டது; மிக்க தொன்மை வாய்ந்தது. மற்ற எந்த மொழியும் வரிவடிவம் அடைவதற்கு முன்னமே தமிழ் எழுதப்பட்டு வந்தது. தமிழின் நெடுங்கணக்கு (Tamil Alphabet) முழுத்தன்மையுடையது; முதல் தன்மையும் உடையது. இந்த நெடுங்கணக்கை அமைத்த முறை மிக்க அறிவு சான்ற தரத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நெடுங்கணக்கில் மிக நுண்ணியதும், மிக நியதியுள்ளதுமான கண்ணோட்டத்தினை நாம் காண்கிறோம். இந்த நெடுங்கணக்குத் திடீரென்று ஏற்பட்டதன்று. இலக்கணப் புலவர் ஒருவரின் அல்லது புலவர் கூட்டம் ஒன்றின் நெடுங்காலப் பணியின் பயனாய் அமைந்ததாகும்."
இப்பிரெஞ்சு நாட்டு அறிஞர்கள் தமிழைப் பற்றிப் பாராட்டியுள்ள செய்தியானது, புகழ்பெற்ற பிரெஞ்சு மொழி அறிஞரும் பல தமிழ் நூல்களைப் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்தவருமான ரா. தேசிகப் பிள்ளை அவர்கள் எழுதிய 'தமிழகமும் பிரெஞ்சுக் காரரும்' என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
இத்துணைத் தமிழ்க் கவிஞர்களும் மொழியறிஞர்களும் தமிழ் கற்ற ஐரோப்பிய அறிஞர் பெருமக்களும் தமிழ் மொழியின் இனிமையையும் தனித்தன்மையையும், அதன் இலக்கியச் சிறப்பினையும் நலம் மிக்க சொல் வளத்தினையும் அரிய வன்மையையும் மிகுந்த தொன்மையையும் எடுத்துக் கூறியிருப்பதைக் காணும்போது, தண்டமிழ் மொழியின் உண்மைத் தன்மையை நன்கு உணரலாம். கூறியவையனைத்தும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.
தமிழின் தனிப் பண்புகள்
இத்தகைய தொன்மையும் சிறப்பும் கொண்டதாயினும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வளரும் தனிச் சிறப்பு உடையது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும்.
இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக் கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச் சொல் என்று ஒரு பாகுபாடும் வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு தனிச் சிறப்பாகும்.
மொழி நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம். அவை:
- தனிநிலை: சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியே நின்று வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி. சீனமொழி, சயாம் மொழி, பர்மிய மொழி, திபெத்திய மொழி ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை.
- உட்பிணைப்பு நிலை: அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழி. ஐரோப்பிய மொழிகள் பலவும் வட மொழியும் இவ்வகையைச் சேர்ந்தனவாம். (எ.கா: ஆங்கிலத்தில்
so like
என்பதுsuch
என்றும்,who like
என்பதுwhich
என்றும் மாறியிருப்பது). - ஒட்டு நிலை: அடிச்சொற்கள் இரண்டும் பலவும் ஒட்டி நிற்கும் நிலை. தமிழ்மொழி இவ்வகையைச் சார்ந்தது. (எ.கா:
பார் + த் + த் + அன் + அன்
என்பவை ஒன்று சேர்ந்துபார்த்தனன்
என்றாவதைத் தமிழில் காணலாம்).
இதனால், தமிழைப் பயின்றவர் விகுதி, சாரியை, சந்தி, இடைநிலை, விகாரம் என்பவற்றை உணர்ந்து தவறின்றி எழுத முடியும். ஆங்கிலத்தைப் போல இறந்த காலத்தைக் காட்டத் தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் go
என்பதை இறந்த காலத்தைக் காட்ட went
என்று மாற்ற வேண்டும். அது போன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழில் செய்கிறான்
என்பதை செய்தான்
என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால் இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு தனிச் சிறப்பாகும்.
தமிழிலிருக்கும் தொகைகள் புதுச்சொற்களை ஆக்குவதற்குப் பெரிதும் பயன்படும்; சொற் சிக்கனத்திற்கும் உதவும். "Beware of Dogs' என்னும் ஆங்கிலத் தொடருக்கு, 'கடிநாய்' என்னும் சிறு வினைத் தொகை நிலைத் தொடரே போதுமானது. "இது நேற்றுக் கடித்த நாய், இன்று கடிக்கிற நாய்; நாளைக்கும் கடிக்கும் நாய்; ஆதலால், விழிப்பாய், இரு" என்னும் நீண்ட பொருள் இச்சிறு தொடரில் அமைந்திருத்தலை உணரலாம். தமிழ் அறிவு இருந்தால் நாம் சிக்கனமாகச் சொற்களைப் பயன்படுத்தலாம். சுடுகாடு
என்னும் வினைத்தொகை, விரிந்த தத்துவத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். சிந்தனை செய்து பாருங்கள். இதுவும் தமிழுக்குரிய தனிச்சிறப்பு என்று சொல்லத் தேவையில்லை.
தமிழ்மொழியின் இலக்கணமே தனிச்சிறப்புடையது; நுண்ணிய அறிவை உண்டாக்கவல்லது. முற்கூறிய F. W. கெல்லட் என்பார், "இதன் (தமிழ்) இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது" என்று கூறியிருக்கிறார். விருப்பம் வந்து விட்டால் தமிழ் இலக்கணம் அருமையாக இருக்கும். புணர்ச்சி யிலக்கணம் ஓரளவு அறிந்தால்தான் சில நுட்பங்களை அறிந்து பொருள் தெரிந்து கொள்வது இயலும்.
-
அலைகடல் என்னும் சொற்றொடருக்கும், அலைக்கடல் என்னும் சொற்றொடருக்கும் பொருள் வேறுபாடு உண்டு. முன் தொடருக்கு
அலைகின்ற கடல்
என்று பொருள் கூறவேண்டும்; பின்னுள்ள தொடருக்குஅலையையுடைய கடல்
என்று பொருள் கொள்ள வேண்டும். வல்லெழுத்து மிகுவதால் பொருளில் வெவ்வேறுபாடு தோன்றுகிறது. -
பெரியார் கண்டார், பெரியார்க் கண்டார் ஆகிய இவ் விரண்டு சொற்றொடர்களிலும் மிகுந்த பொருள் வேறுபாடு உண்டு. முன்னுள்ள சொற்றொடரில்
பெரியார் மற்றொருவரைக் கண்டார்
என்பது பொருள்; பின்னுள்ள சொற்றொடரில்மற்றொருவர் பெரியாரைக் கண்டார்
என்பது பொருள். இப்பொருள் வேறுபாடு எப்படி உண்டாகிறது? ஒன்றில் வல்லெழுத்து மிகவில்லை; மற்றொன்றில் வல்லெழுத்து மிகுந்திருக்கிறது. வல்லெழுத்து மிகுந்ததனால் வேறு பொருள் உண்டாகிறது. -
'பெண்மையுடைய பெண்கள் நடந்தார்கள்' என்பது ஒரு வாக்கியம். 'பெண்மையுடையப் பெண்கள் நடந்தார்கள்' என்பது மற்றொரு வாக்கியம். ஒன்றுக்கு மற்றொன்று எவ்வளவோ மாறு பாடான பொருளைக் கொடுப்பதைக் காணுங்கள். முதல் வாக்கியத்திற்குப்
பெண்தன்மை கொண்டுள்ள பெண்கள் அப்பெண்தன்மைக் குரிய முறையில் பண்பாட்டுடன் நடந்து சென்றார்கள்
என்பது பொருள். இரண்டாவது வாக்கியத்திற்குப்பெண்தன்மை அற்றுப் போகும்படியாய்ப் பெண்கள் பண்பாடற்ற வகையில் நடந்து சென்றார்கள்
என்பது பொருள். 'ப்' மிகுந்ததால் இம்மாறுபாட்டைக் காண்கிறோம்.
இந்த நுட்பங்களை அறிவதற்குத் தமிழ்த் தேர்ச்சி வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும். மேலும் தமிழ் இலக்கணம் கற்பதால் தமிழர் முன்னோரது தனிமேதைச் சிறப்பு (Tamil Genius) நமக்கு நன்கு புலனாகும். எடுத்துக்காட்டாக, இரண்டாம் வேற்றுமைக்குக் கூறிய நோக்கல் பொருள் இருவகைப்படும்:
- நோக்கிய நோக்கம் (கண்ணால் நோக்குதல்)
- நோக்கல் நோக்கம் (மனத்தால் நோக்குதல்)
"வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி."
வான்நோக்கி வாழும் உலகெல்லாம்
- உயிர்கள் எல்லாம் மழையை மனத்தால் எண்ணி வாழும். கோல்நோக்கி வாழும் குடி
- குடிமக்கள் மன்னவன் செங்கோல் ஆட்சியைக் கண்ணால் பார்த்து வாழ்வார்கள்.
தமிழில் மரபுத் தொடர்களும் (Idioms), சொற்றொடர்களும் (Phrases) உண்டு. அவற்றைப் பயன்படுத்தித் தமிழை அழகாக எழுதலாம். உவமைகளைப் பயன்படுத்த வசதிகள் தமிழில் மிகமிக உண்டு.
தமிழில் ஏறக்குறைய இரண்டு லட்சத்து எட்டாயிரத்துப் பத்துக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. சென்னைப் பல்கலைக் கழக அகராதியில் 2,08,010 தமிழ்ச் சொற்கள் இருக்கக் காணலாம். அரி
என்னும் ஒரு சொல்லுக்கு மட்டும் அகராதியில் 109 பொருள்களைக் காண்கிறோம். அந்த 109 பொருள்களில் 50 பொருள்கள் வடமொழிச் சொற்களைத் தழுவியவை; மற்ற 59 பொருள்கள் அரி
என்னும் தமிழ்ச் சொல்லுக்கே உண்டு. இப்படிப் பொருள் வளம் பெற்றுள்ள சிறப்பும் தமிழுக்குண்டு. 59 பொருள் தமிழ்மொழிக்கு வர வேண்டுமென்றால் அது நீண்ட காலமாய் மக்கள் புழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். இது தமிழ்மொழியின் தொன்மையையும் காட்டும்.
ஒன்றன் வெவ்வேறு நிலையை நன்கு காட்டுதற்கும், ஒன்றற்கும் மற்றொன்றிற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவதற்கும் தமிழ் மொழியில் சொற்கள் உண்டு.
-
அரும்பு, போது, மலர், அலர், வீ என்பவை ஒரு பூவின் வெவ்வேறு நிலையைக் காட்டும்.
அரும்பு
என்பது மொட்டு.போது
என்பது மலரும் நிலையில் இருப்பது.மலர்
என்பது விரிந்த பூ.அலர்
என்பது நன்றாக மலர்ந்த பூ. நன்றாக மலர்ந்து விழுந்ததுவீ
. இவை ஒரு பூவின் வெவ்வேறு நிலையைக் காட்டுகின்றன. -
ஈ, தா, கொடு இவற்றின் வேற்றுமையைப் பாருங்கள். யாசிப்பவன்
ஈ
எனக் கேட்க வேண்டும். சமநிலையில் உள்ளவன்தா
எனக் கூறவேண்டும். உயர்நிலையில் உள்ளவன் தன்னைவிடத் தாழ்நிலையில் இருப்பவனைக் கேட்கும்போதுகொடு
எனச் சொல்ல வேண்டும்.
இப்படியே உண்ணலுக்கும் தின்னலுக்கும் சொற்களைப் பயன்படுத்தும் முறையில் வேறுபாடு உண்டு. பசியடங்க வயிற்றை நிரப்புதலை உண்ணல்
என்றும், சிறிய அளவு உட்கொள்ளுதலைத் தின்னல்
என்றும் கூறவேண்டும். சோறு உண்டான் என்க. முறுக்குத் தின்றான் என்க.
அறிவியல் நூல்கள் எழுதலாம்
இவ்வளவு தனிச்சிறப்பும் சொல்வளமும் உள்ள தமிழ் மொழியில் அறிவியல் நூல்களை எழுத இயலாதா? ஏன் இயலாது? முயன்றால் முடியும். அறிவியல் தேர்ச்சியும் மொழித் திறனும் பெற்றுவிட்டால், எவரும் அறிவியல் நூலைத் தவறின்றி எழுத இயலும் என்று அஞ்சாமல் கூறலாம்.
இன்றைய நிலை
தமிழகத்தில் இன்றைய நிலை என்ன? பலர் தங்கள் பெயர்களைக் கூடத் தமிழில் பிழையின்றி எழுத இயலாதவர்களாய் இருக்கிறார்கள். ரங்கநாதன்
அல்லது அரங்கநாதன்
என்று எழுத வேண்டுவதை ரெங்கநாதன்
என்றும் இரங்கநாதன்
என்றும் பலர் எழுதுகின்றனர். வேங்கடசாமி
என்று எழுத வேண்டிய பெயரை வெங்கடசாமி
என்றும் வெங்கிடசாமி
என்றும், வேங்கடராமன்
என்று எழுத வேண்டிய பெயரை வெங்கடராமன்
என்றும் வெங்கட்ராமன்
என்றும், வேங்கடாசலம்
என்று எழுத வேண்டியதை வெங்கடாசலம்
என்றும் வெங்கிடாசலம்
என்றும், சீனிவாசன்
என்று எழுத வேண்டுவதைச் சீனிவாசகன்
என்றும் தவறாக எழுதுவதைப் பார்க்கிறோம். இந்த நிலையில் தமிழனுக்குந் தமிழ்த் தேர்ச்சி வேண்டுமா என்று ஒரு சிலர் வீண்வாதம் புரிகின்றனர். தமிழர்களாய் இருந்தாலும் தமிழில் ஓரளவு தேர்ச்சி பெற்றால்தான், இவர்கள் பிழையின்றித் தமிழ் எழுத முடியும். பலர், அரசியல் அறிவும், ஆங்கில அறிவும், பொது அறிவும் பெற்றிருந்தாலும் தமிழ்த் தேர்ச்சியின்மையால், நாளிதழ்களிலும், வார, மாத ஏடுகளிலும் நல்ல தமிழ் எழுத இயலாதவர்களாய் இருப்பதைக் காண்கிறோம்.
மொழித் தேர்ச்சியில்லாத எழுத்தாளர்கள் சிறுகதையும், புதினமும், நாடகமும் தவறான தமிழில் எழுதுகிறார்கள். இவர்கள் சிறிது மொழித் தேர்ச்சி பெற்று விட்டால், இவற்றை நல்ல தமிழில் எழுதலாம். இவர்கள் எழுதுபவையும் இலக்கியங்களாக இலங்கும். இப்பொழுதுள்ள எழுத்தாளர் பலர் நல்ல தமிழில் எழுதுகின்றனர். இனி நல்ல தமிழ் வளரும். இன்று தமிழ்மொழி அரசியல் மொழியாகிவிட்டது; அலுவல் மொழியாகிவிட்டது; ஆட்சி மொழியாகிவிட்டது; ஓரளவு கல்லூரிப் பாடமொழியாகவும் ஆகிவிட்டது. தமிழ்மொழி தனக்குரிய இடத்தை ஓரளவு அடைந்துவிட்டது. தமிழன்னை அரியணை ஏறிவிட்டாள். இன்று தமிழ் வெளியீடுகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர்களுக்கும் அலுவலகங்களில் பணி புரியும் அதிகாரிகளுக்கும் எழுத்தர்களுக்கும் நல்ல தமிழ் எழுத வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுவிட்டது. தமிழ் தெரியாது என்று சொல்லிப் பெருமைப்பட்ட நாள் மலையேறிவிட்டது. நல்ல தமிழ் எழுத இயலவில்லை என்றால், எவரும் நன்மதிப்படைய முடியாத நிலை இன்று வந்துவிட்டது. ஆதலால், எல்லாரும் வழுவின்றி நல்ல தமிழ் எழுத எளிதான வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். வழுவின்றி நல்ல தமிழ் எழுத எளிதான வழிகள் உண்டு. நன்னூலையோ தொல்காப்பியத்தையோ உருப் போட வேண்டும் என்பதில்லை. தன்னம்பிக்கையோடும் உண்மையான நோக்கத்தோடும் இந்நூலைப் பயின்றால் சில நாள்களில் இல்லாவிட்டால் சில வாரங்களில் எவருக்கும் நல்ல தமிழ் எழுதும் திறமை, வழுவின்றி எழுதும் அறிவு எளிதாக உண்டாகும் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. முயற்சி மட்டும் வேண்டும். முயற்சி செய்யுங்கள்! முயன்று பார்த்தால் முடியாதது உண்டோ?