Skip to main content

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act)

பின்னணி மற்றும் இயற்றப்படுதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, 2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் தகவல்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் 2004 டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005 மே 11 அன்று மக்களவையிலும், 2005 மே 12 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2005 ஜூன் 15 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. 2005 ஜூன் 21 அன்று அரசுப் பதிவிதழில் வெளியிடப்பட்டு 2005 அக்டோபர் 12 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிற பகுதிகள் அனைத்திற்கும் இச்சட்டம் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள். ஒவ்வொரு நாளும், 4800க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. சட்டம் தொடங்கிய முதல் பத்து ஆண்டுகளில் 17,500,000 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தின் கீழ், இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் ஒரு "பொது அதிகாரம்" (அரசாங்க அமைப்பு அல்லது "அரசின் கருவி") அமைப்பிலிருந்து தகவல்களைக் கோரலாம். உடனடியாகவோ அல்லது முப்பது நாட்களுக்குள்ளோ பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு பொது அதிகாரமும் தங்கள் பதிவுகளை பரந்த அளவில் பரப்புவதற்கும், சில வகை தகவல்களை முன்கூட்டியே கணினிமயமாக்குவதற்கும் இந்த சட்டம் தேவைப்படுகிறது, இதனால் குடிமக்களுக்கு முறைப்படி தகவல்களைக் கோர குறைந்தபட்ச உதவி தேவைப்படுகிறது.

இந்தியாவில், மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் என்ற அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் சூத்திரதாரி அருணா ராய் என்பராவார். தகவல் அறியும் உரிமை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டபூர்வமான உரிமை ஆகும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் உள்ள அதிகாரிகள் நீதித்துறை அதிகாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்திய அரசியலமைப்பில் 'பேச்சு சுதந்திரம்' என்ற அடிப்படை உரிமையை பலப்படுத்தும் பொருட்டு இந்த சட்டம் இயற்றப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் 1923 மற்றும் பல்வேறு சிறப்புச் சட்டங்களால் இந்தியாவில் தகவல் வெளிப்பாடு தடைசெய்யப்பட்டுள்ள தகவல்களைக் கோர வழியில்லை. தகவல் உரிமை என்பது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை குறிக்கிறது.

நோக்கம்

அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடைமையை மேம்படுத்தவும், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை பெற விரும்பும் குடிமக்களுக்கு, அதை வழங்க வகை செய்வதோடு ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும் இதன் நோக்கங்களாகும். அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காப்பதும் தகவல் பெறும் சட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

note

தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடமிருந்து அந்தத் தகவல்களைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் கூடாது. மேலும் அவரைத் தொடர்பு கொள்வதற்காகத் தேவையான விவரங்களைத் தவிர வேறு தனிப்பட்ட விவரங்களை கோரக்கூடாது.

முக்கிய விதிகள்

தகவல் என்பதன் வரையறை

பிரிவு 2(1) இன் படி, தகவல் என்பது பதிவேடுகள், ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துரைகள், அறிவுரைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், நாள்விவரக் குறிப்பேடுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், தாள்கள், மாதிரிகள், மற்றும் மின்னியக்க வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளத் தகவல்கள் ஆகும். நடைமுறையில் உள்ள வேறு சட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மேற்பார்வையிடும் அதிகார வரம்புக்குள் வரும் எவ்விதமான தனியார் குழுமமாக இருந்தாலும் அவைத் தொடர்பான செய்திகளும், தகவல்களும் இதில் அடங்கும்.

விண்ணப்ப செயல்முறை

தகவல் பெற விரும்பும் நபர் ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது விண்ணப்பம் செய்யப்படும் நிலப்பகுதியின் அலுவல் மொழியில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் மத்தியப் பொதுத் தகவல் அலுவலருக்கோ அல்லது மாநிலப் பொதுத் தகவல் அலுவலருக்கோ அல்லது மத்திய உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ அனுப்பலாம்.

கோரிக்கையின் மீதான விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதில் அளிக்கவேண்டும்.

note

அவசரத் தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர் பதிலளிக்கவேண்டும். கோரப்பட்ட தகவலானது, ஒருவருடைய உயிர் அல்லது சுதந்திரம் தொடர்புடையதாக இருப்பின், அதற்கான கோரிக்கை பெறப்பட்ட 48 மணிநேரத்திற்குள் தகவல்களாக அளிக்கப்படுதல் வேண்டும்.

விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்க மறுக்கும்போது தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவுகள் 8 மற்றும் 9 இல் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பொருத்தமான காரணத்தைச் சுட்டிக்காட்டி நிராகரிக்க வேண்டும். விண்ணப்பத்தை மறுப்பதற்கான காரணத்துடன், அக்கோரிக்கைக்கு எதிராக விண்ணப்பதாரர் மேல் முறையீடு எந்த காலக் கெடுவிற்குள் செய்யப்பட வேண்டும் என்பதையும் தெரிவிக்கவேண்டும்.

மனுதாரர் வறுமைக்கோட்டிற்கு, கீழுள்ள நபராக இருந்தால் எவ்வித கட்டணங்களையும் அவரிடமிருந்து வசூலிக்கக்கூடாது.

தகவல் பெறுவதற்கான முறை

இச்சட்டப்பிரிவு 6-இன்படி, ஒரு பொதுத் தகவல் வழங்கும் அதிகாரியிடமிருந்து சில தகவல்களை பெற விரும்பும் ஒரு குடிமகன், உரிய அலுவலகத்தின் பொதுத் தகவல் அலுவலர் அல்லது உதவித் தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் இன்றைய கட்டணமாக ரூ. 10-க்கான பணமாகவோ, வங்கி வரைவோலை அல்லது அரசுச் செலுத்துச் சீட்டு மூலமாகவோ, விண்ணப்பிக்க வேண்டும்.

மூன்றாம் தரப்பினர் தகவல்

பொதுத் தகவல் அலுவலர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்புடைய அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட அல்லது மூன்றாம் தரப்பினரால் ரகசியம் எனக் கருதப்படுகிற தகவல்கள், பதிவுருகள் அல்லது அதன் பகுதிகள் எதனையும் வெளியிட வேண்டுமென்றால், அக்கோரிக்கை பெறப்பட்ட ஐந்து நாட்களுக்குள் அக்கோரிக்கையினைப் பற்றியும், அந்த தகவலை வெளியிட விரும்புகிறாரா என்றும் மூன்றாம் தரப்பினருக்கு எழுத்து வடிவிலான அறிவிப்பை அளிக்க வேண்டும்.

விலக்குகள் மற்றும் அபராதங்கள்

விலக்கு அளிக்கப்பட்ட தகவல்கள் (பிரிவு 8(1))

இந்தியக் குடிமக்கள் எவருக்கும் பிரிவு 8(1) இன் கீழ் பின்வரும் தகவல்களைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை:

  • (அ) இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, போர் யுக்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளி நாடுகளின் உறவு ஆகியவற்றைப் பாதிக்கும் அல்லது குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்கள்.
  • (ஆ) நீதிமன்றம், தீர்ப்பாயம் இவை வெளிப்படையாகத் தடை செய்துள்ள தகவல்கள் அல்லது நீதிமன்ற அவமதிப்பை உண்டாக்கும் தகவல்கள்.
  • (இ) நாடாளுமன்றம் மற்றும் மாநில சிறப்புரிமைகளை மீறும் தகவல்கள்.
  • (ஈ) வணிக நம்பகத்தன்மை, வியாபார இரகசியங்கள், அறிவுசார் சொத்துடைமை போன்றவை. இவை வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினரின் சந்தைப் போட்டிக்குக் குந்தகம் விளைவிக்கும். (பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமையாதது என்று தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி).
  • (உ) ஒருவருடைய பொறுப்புரிமை தொடர்பு உறவால் கிடைத்த தகவல். (பெரும்பான்மை மக்களின் நலனுக்கு இன்றியமையாதது என, தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி).
  • (ஊ) வெளிநாட்டு அரசுகளிடமிருந்து இரகசியமாகப் பெற்ற தகவல்கள்.
  • (எ) ஒரு நபரின் வாழ்வு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதை, தகவலின் மூலத்தை அடையாளப்படுத்துவதை அல்லது சட்ட அமலாக்கத்திற்கு இரகசியமாக கொடுக்கப்பட்ட உதவிக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்படுத்தும் தகவல்கள்.
  • (ஏ) புலனாய்வை அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதை அல்லது அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் தகவல்கள்.
  • (ஐ) அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் பிற அலுவலர்கள் கலந்தாய்வுகளின் பதிவேடுகள் உள்ளிட்ட அமைச்சரவை ஏடுகள்.
  • (ஓ) பொது செயல்பாட்டிற்கோ, பொது நலனிற்கோ தொடர்பில்லாத, தனி நபரின் அந்தரங்கத்தில் நியாமற்ற முறையில் தலையீடு செய்யும் தனிப்பட்ட தகவல்கள். (நாடாளுமன்றத்திற்கோ, மாநில சட்டப் பேரவைக்கோ மறுக்கப்படாத ஒரு தகவல் தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது).
note

அமைச்சரவை முடிவுகள் எடுத்த பின்னர், அம்முடிவுகள், அவற்றிற்கான காரணங்கள், பின்புலங்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட தகவல்களாக இல்லாதிருந்தால் பொது மக்களுக்குத் தெரிவிக்கலாம்.

அபராதம்

இச்சட்டத்தின்படி தவறு செய்யும் தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வழங்கும் அதிகாரம் மத்தியத் தகவல் ஆணையம் அல்லது மாநிலத் தகவல் ஆணையத்திடம் உள்ளது. குறித்த நேரத்தில் தகவல் அளிக்காமை, தவறான தகவல்கள் தருதல் அல்லது வேண்டுமென்றே திருத்தப்பட்ட தகவல்களைத் தருதல் ஆகியவற்றிற்காக துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கலாம். மேலும், தலா 250 ரூபாய் வீதம் 25,000 ரூபாய்க்கு மிகாமல் தகவல் அலுவலரிடமிருந்து அபராதம் வசூலிக்கவும் இச்சட்டம் வழிகோலுகின்றது. இருப்பினும், அபராதம் விதிக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்க வேண்டும். பொதுத் தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும் செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சாரும்.

2019 சட்டத் திருத்தங்கள்

2019 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன:

  • தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் சட்டப்படியான ஐந்து ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.
  • இதுவரை தேர்தல் ஆணையர்களுக்கு நிகராக ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்பட்ட நிலையில், இனி மத்திய அரசு அவ்வப்போது இதை தீர்மானிக்கும் என்று திருத்தப்பட்டுள்ளது.